
சம்பூர்ண ராமாயணம் படத்தை தொடர்ந்து, வேணு எடுத்த படம், முதலாளி. தன் முதலாளியை மனதில் வைத்துக் கொண்டு தான், படத்திற்கு இந்த பெயரை வைத்தார் என்று பேசிக் கொண்டனர். இப்படத்திற்கு கதை, வசனம், டைரக்டர் அனைவரும் புதுமுகங்கள். டைரக்டராக உருவெடுத்தது முக்தா சீனிவாசன் என்பவர். இவர் ஆரம்பகாலத்தில், ஸ்டுடியோவில் அசிஸ்டெண்ட் டைரக்டராக பணியாற்றியவர். இவரது சகோதரர் முக்தா ராமசாமி, மாடர்ன் தியேட்டர்ஸ் காரியாலயத்தில் டைப்பிஸ்ட்டாக வேலை பார்த்தார். காரியாலயத்திலும் சரி, ஸ்டுடியோவிலும் சரி, யாரும் அவ்வளவு இலகுவாக வேலையில் சேர்ந்து விட முடியாது. சகோதரர்கள் இருவரும், தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர்கள். பெரியவர் ராமசாமிக்கு, மாடர்ன் தியேட்டர்ஸ் ஆபீசில் டைப்பிஸ்ட் வேலை கிடைத்தவுடன், சகோதரர் சீனிவாசனுக்கு ஸ்டுடியோவில் உதவி டைரக்டராக வேலை வாங்கி கொடுத்தார். அதற்கு பின், அவர்கள் சென்னைக்கு போனது தனிக் கதை!
மாடர்ன் தியேட்டர்ஸ் அலுவலகத்தில், ஐம்பதுக்கும் மேற்பட்ட படப் பிரதிநிதிகள் இருந்தனர். படம் வெளியிடும் போது, ஒவ்வொரு ஊருக்கும் இவர்கள் படப்பெட்டியோடு பயணப்படுவது வாடிக்கை. இவர்களை கண்காணிக்க, அலுவலகத்தில் தனியாக ஒரு மானேஜர் இருந்தார். இதைத் தவிர மதுரை, திருநெல்வேலி, கோவை, சென்னை போன்ற இடங்களில் மாடர்ன் தியேட்டர்சுக்கென்றே தனி அலுவலகங்கள் இருந்தன. பிரதிநிதிகள், அந்தந்த அலுவலகங்களில் தங்கி, தங்களது தினசரி வேலைகளை தொடர வேண்டும்.
சென்னையில் இருந்த கிளை, சரியாக செயல்படவில்லை என்று, முதலாளிக்கு தகவல் வர, சேலத்திலிருந்து இருவரை சென்னைக்கு அனுப்பி வைத்தார் டி.ஆர்.சுந்தரம். அவர்கள் தான், முக்தா சகோதரர்கள். முதலாளியின், நம்பிக்கைக்கு உகந்தவர்களான இவர்களை, சென்னை வரும்போதெல்லாம் சந்திப்பதை ஒரு வழக்கமாக வைத்திருந்தார் டி.ஆர்.சுந்தரம்.
சேலத்தில், அப்போது, 'டிரைகிளீனிங்' வசதி இல்லை. முதலாளியின் துணிகள் யாவும், விலை உயர்ந்தவை. அதனால், அவைகளை சலவைக்கு சென்னைக்கு கொண்டு வருவர். சகோதரர்கள் வீட்டில் கொடுத்து விட்டால், அவர்கள் உரிய இடத்தில் கொடுத்து, சலவை செய்து, அடுத்த தடவை முதலாளி வரும்போது, தயாராக வைத்திருப்பர். டி.ஆர்.சுந்தரம் துணிகளை, கொண்டு வந்து போட்டு விட்டால், அந்த துணிகளின், 'பாக்கெட்டு'களை சோதனை செய்து விட்டுதான், ராமசாமி சலவைக்கு போடுவது வழக்கம். அப்போது ஒரு தடவை, அவர் சலவைக்கு போடும் முன் சோதனை இட்ட போது, பையில் இருபத்தி ஐந்தாயிரம் ரூபாய் பணம் இருந்ததை கண்டார். அதை எடுத்து பத்திரமாக வைத்திருந்து, டி.ஆர்.சுந்தரம் சென்னை வந்தபோது, அவரிடம் கொடுத்த போது, அவர் அளவு கடந்த மகிழ்ச்சியடைந்தார் என்று, இந்நிகழ்ச்சியை முக்தா சீனிவாசன் ஒருமுறை குறிப்பிட்டிருந்தார்.
சென்னைக்கு வரும்போது, முக்தா சகோதரர்களின் தாய் போட்டு கொடுக்கும் காபியை டி.ஆர்.சுந்தரம் சுவைக்க தவறுவதில்லை. இதற்கு பின், சகோதரர்கள் சொந்தப்படக் கம்பெனி ஆரம்பித்து, பல படங்களை எடுத்து, சினிமா உலகில் ஒரு நிரந்தர இடத்தை பிடித்தனர். அவர்களின் இந்த வளமான வாழ்வுக்கு வித்திட்டவர், டி.ஆர்.சுந்தரம் தான்! இதைப்போல பலர் செழித்து வளரவும், அவர் பாதை அமைத்துக் கொடுத்தார். இப்போதும் உயிரோடு இருக்கும் சிலர், மனநெகிழ்ச்சியுடன் டி.ஆர்.சுந்தரம் அவர்களை நினைவு கூருகின்றனர் என்றால், அவர், அவர்களுக்கு செய்த மறக்க முடியாத உதவிகளே காரணம். நடிகர் மனோகர், நடிகை மனோரமா, பின்னணிப் பாடகர் டி.எம்.சவுந்திரராஜன் ஆகியோர், அவரை பற்றி மனமுருக எழுதியிருக்கும் நினைவுகளே அதற்கு சாட்சி...
டைரக்டர் கே.வி.சீனிவாசன் 1963ம் ஆண்டு, மாடர்ன் தியேட்டர்சுக்காக டைரக்ட் செய்த படம் யாருக்கு சொந்தம்.
இந்த சமயத்தில், உடல் நலக் குறைவினால் பாதிக்கப்பட்டு, நர்சிங் ஹோமில் சேர்க்கப்பட்டுவிட்ட ஆர்.வி.சொக்கலிங்கம், முன்னைப் போல் தீவிரமாக, ஸ்டுடியோ நிர்வாகத்தில் ஈடுபட முடியாது என்பதை உணர்ந்த டி.ஆர்.சுந்தரம், நிர்வாகத்தை கவனித்துக் கொள்ள, தன் நெருங்கிய நண்பர்கள் மூவர் அடங்கிய கமிட்டி ஒன்றை நியமித்தார். தினசரி நிர்வாகத்திற்கு இந்த நடைமுறை ஒத்து வந்தாலும், தனது எதிர்பார்ப்பு, நம்பிக்கை எல்லாம் வீணாக போய்விட்டதே என்று மிகவும் வருந்தினார் டி.ஆர்.சுந்தரம். இதனால், அவர் பல இரவுகளில் சரியாகத் தூங்கவில்லை. இரவு, குறித்த நேரத்தில் சாப்பிட மறுத்தார். ஸ்டுடியோவை தனக்கு பின்னால் நன்றாக கவனித்துக் கொள்வார் என்று நம்பி, சொக்கலிங்கத்தை அங்கு கொண்டு வந்து அமர்த்தினார்.
தன் மகன் ராமசுந்தரம், கோவையில் இன்ஜினியரிங் படிப்பை முடித்து வந்தவுடன், அவரை ஒரு தொழிற்சாலைக்கு அதிபராக்க வேண்டும் என்று திட்டம் போட்டு வைத்து இருந்தார். அதற்காக, ஜப்பானில் இருந்து மெஷின்களை வரவழைக்க, ஸ்டுடியோவிற்கு அருகாமையில் தொழிற்சாலை கட்ட, நிலத்தை வாங்கி வைத்திருந்தார். சொக்கலிங்கத்தின் உடல்நலக்குறைவால், அவரது எதிர்பார்ப்புகளில் ஒரு பகுதி சிதைந்து போனது.
யாருக்கு சொந்தம் என்ற படம் தயாராவதற்கு முன், 1962 நவம்பர் மாதம் தன் மூத்த மகன் ராமசுந்தரத்திற்கு பழநியில் திருமணம் செய்து வைத்தார். மணப்பெண் கலைவாணி, டி.ஆர்.சுந்தரத்தின் நெருங்கிய குடும்பத்தை சேர்ந்தவர். மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் வீட்டுத் திருமணம் என்பதால், கருணாநிதி பழநிக்கே வந்து இருந்தார். உடன் முரசொலி மாறனும், மற்ற நண்பர்களும் வந்து இருந்தனர். பெரியவர் முருகேச முதலியாரின் மேற்பார்வையில் நடந்த இந்த திருமணம், மிகவும் சிறப்பாக நடைபெற்றது. தன் வீட்டை கவனித்து கொள்ள ஒரு மருமகள் வந்துவிட்டதால், அவருக்கு மிகவும் திருப்தி. அவரது தேவைகளையும் கவனித்துக் கொள்ள, வீட்டிற்கு ஒரு பெண் தேவை தானே?
இந்த இடத்தில், ஒரு முக்கியமான விஷயத்தை குறிப்பிட வேண்டும். டி.ஆர்.சுந்தரம் திருமணம் செய்து கொண்டு வந்த இங்கிலாந்தைச் சேர்ந்த, 'கிளாடிஸ்' அம்மையார், டி.ஆர்.சுந்தரத்திற்கு இரண்டு வாரிசுகளை பெற்றுத் தந்து விட்டு, மறுபடியும் லண்டனுக்கே போய் விட்டார். மகனுக்கு திருமணம் நடந்த பின், டி.ஆர்.சுந்தரம் சகஜமான பழைய வாழ்க்கைக்கு திரும்பி விட்டார் என்று சொல்ல முடியாது. அதனால் தான், வெளியில் இருந்து வந்த டைரக்டர், யாருக்கு சொந்தம் படத்தை டைரக்ட் செய்தார்.
தன் எதிர்பார்ப்புகள் எதுவும் தோல்வியடையாது என்ற நம்பிக்கையில், முன்னோக்கி நடைபோட்டு கொண்டிருந்த டி.ஆர்.சுந்தரத்திற்கு, சொக்கலிங்கத்தின் சுகவீனம் ஒரு பின்னடைவு. இருந்தாலும், எத்தனை நாட்களுக்கு அதைப்பற்றியே நினைத்துக் கொண்டிருக்க முடியும்.
அடுத்த படமான, கொஞ்சும் குமரிக்கு பூஜை போட்டார். மெனி ரிவர்ஸ் டூ க்ராஸ் எனும் ஆங்கில படத்தை தழுவிய கதை அது! அந்தப் படத்தின் கதாநாயகி, ஒரு, 'ரவுடி டைப்'. ஹீரோவை முரட்டுத் தனமாக காதலிக்க, கதாநாயகன் மறுக்க, அவனைத் துப்பாக்கி முனையில் தன் சகோதரர்களின் ஆதரவில் மணக்கிறாள். இது தான் அந்தக் கதை!. இந்த கதைக்கு மனோரமா தான், மிகவும் பொருத்தமாக இருப்பார் என்று நினைத்த டி.ஆர்.சுந்தரம் முதன் முதலாக, ஒரு காமெடி நடிகையை கதாநாயகி ஆக்கினார்.
முரட்டு வில்லன் பாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்த மனோகரை, இந்த படத்தில் கதாநாயகனாக்கினார். இந்தப்படத்தில் டி.ஆர்.சுந்தரம் பல புதுமைகளை செய்தார். அவைகளை சொல்லும் முன், ஒரு புதிய செய்தி!
கொஞ்சும் குமரிக்கு வேதா தான் சங்கீத டைரக்டர். இப்போது மிகவும் பிரபலமாக இருக்கும் பாடகர் ஜேசுதாஸ், மாடர்ன் தியேட்டர்சுக்கு பாட வந்தார். 'வாய்ஸ் டெஸ்ட்' எடுத்துப் பாருங்கள் என்று டி.ஆர்.சுந்தரம் சொல்லி விடவே, ஜேசுதாசின் வாய்ஸ் டெஸ்ட் எடுக்கப்பட்டு, ஓ.கே., ஆனவுடன், கொஞ்சும் குமரியில் ஜேசுதாஸ் பாடல்களை பாடினார். மாடர்ன் தியேட்டர்சுக்காக பாடியது தான் ஜேசுதாஸின் முதல் பாட்டு. பாடல்களை வாலியும், ஓட்டலில் வேலை செய்து கொண்டிருந்த கருணைதாசன் என்பவரும், வசனத்தை மாறனும் எழுதினர்.
இந்தப்படத்தின் ஷூட்டிங் நடந்து கொண்டு இருக்கையில், அவசர வேலையாக, இரண்டு தினங்கள் டி.ஆர்.சுந்தரம் சென்னை போக வேண்டியிருந்தது. படத்தை, ஜி.விஸ்வநாதனைத் தொடர்ந்து டைரக்ட் செய்ய சொல்லிய பின், கதாநாயகன் மனோகரை அழைத்து, தான் சென்னைக்கு சென்று வருவதாக, அவரிடம் மட்டும் சொல்லி விட்டு, புறப்பட்டார்.
அன்று இரவு, படுக்கையில் படுத்த டி.ஆர்.சுந்தரத்திற்கு திடீரென உடல் நலக்கோளாறு ஏற்பட்டது. பிரபல டாக்டர்கள் அவரை கவனித்தும் பயனில்லை. மறுநாள் மாலை டி.ஆர்.சுந்தரம் அமரராகிவிட்டார். நிறைவேறாத பல கனவுகளை, நெஞ்சில் சுமந்தபடி!
— தொடரும்.
ரா. வேங்கடசாமி