
பால்கனியில் நின்று, குழந்தைக்கு வேடிக்கை காட்டிக் கொண்டிருந்தபோது, எதிர் பிளாட் வாசலிலிருந்து சுற்றுமுற்றும் பார்த்தாள், மகி.
யாராவது தன்னை பார்க்கின்றனரோ என்ற கவலையோடு, யாரும் தன்னை பார்த்துவிடக் கூடாதே என்ற பயத்தோடு, இருந்தாள். நான் முகத்தை திருப்பிக் கொண்டேன்.
''மகிதானா அது... யாரோன்னு நினைச்சேன்,'' கையில் காபியுடன் வந்த, பக்கத்து பிளாட் சுசி, கிசுகிசுத்தாள். கணவர்களை அலுவலகம் அனுப்பிய பின், ஆற அமர, கையில் காபியுடன் அப்பார்ட்மென்ட் பெண்கள், 'ஹலோ' சொல்லிக் கொள்ளும் நேரம் அது.
''உஸ்... நேராக பார்க்காதே... தலையில, 'விக்' வெச்சுண்டிருக்கா பாவம்,'' என, விடாமல் ரகசியம் பேசினாள், சுசி.
அச்சமும், வேகமுமாக படியிறங்கிக் கொண்டிருந்தாள், மகி.
என் கண்கள் கரைந்தன.
'எத்தனை துணிச்சலான பெண், மகி... தனக்கு சரின்னு பட்டதை யார் தடுத்தாலும் தைரியமாக செய்வாள். மனுஷனுக்கு வேண்டியது நேர்மையும், உண்மையும் தான். பாரதிம்பா, நெஞ்சுக்கு நீதிம்பா...
'இவங்க சொல்வாங்க, அவங்க பேசுவாங்கன்னு கவலைப்பட்டா, யாராலயும் எதையும் சாதிக்க முடியாது. முத்துலட்சுமி மருத்துவம் படிச்சிருக்க முடியாது. சுதந்திரத்திற்காக, தில்லையாடி வள்ளியம்மை போராடியிருக்க முடியாதுன்னு அடிச்சு பேசுவா...
'இப்ப, மத்தவங்கள பார்க்க பயம். என்ன பேசுவாங்களோன்னு மூஞ்சி முழுக்க அப்பிக் கிடக்கிறதே...' என, நினைத்துக் கொண்டேன்.
''அந்தக் கால, கே.ஆர்.விஜயா மாதிரி என்ன அழகு அவ... எங்க போச்சு அத்தனை அழகும்,'' சாதாரணமாகத்தான் கேட்டாள், சுசி.
பன்னிரெண்டு வீடுகள் கொண்ட இந்த அப்பார்ட்மென்டிற்கு, சுசி குடித்தனம் வந்து, சில ஆண்டுகள் தான் இருக்கும். மகியை, உற்ற வயது தோழியாக, உதவி செய்யும் அண்டை வீட்டுக்காரியாக, கடன் தேவைப்படும்போதெல்லாம் கொடுக்கும், ஏ.டி.எம்.,மாக தான், அவளுக்கு தெரியும்.
ஆனால், குடும்ப நண்பியான எனக்கு, மகியை பெண் பார்த்த நாள் தொட்டே பழக்கம். சுசி சொன்னதுபோல, மகிக்கு லட்சணமான முகம். கால் மூட்டு வரை இடிக்கும் முடியை லுாசாக பின்னலிட்டு, முன்புறம் தவழ விடுவது, மகியின், 'ஸ்டைல்!'
'அம்மாடி... எத்தனை அழகு...' என, மகியின் முடியை பாராட்டுவோரும், பார்த்து பொறாமைப்படுவோரும், அவளிடம், கூந்தல் வளர்ச்சி, 'டிப்ஸ்' கேட்க தவற மாட்டார்கள்.
அப்பார்ட்மென்ட் பெண் குழந்தைகளுக்கு, மகி ஆன்ட்டி தான், 'பெஸ்ட் ப்ரெண்ட்!'
'ஆன்ட்டி... நான், 'டான்ஸ்'ல சேர்ந்திருக்கேன்... நாளைக்கு ஸ்கூல்ல பேன்சி டிரஸ்...' என, மகியிடம் சொல்லி, விதவிதமான தலை அலங்காரம் செய்து கொள்வர். அப்பார்ட்மென்டில், மகி என்றால் அனைவருக்கும் தங்கள் வீட்டு பெண் போல ஒரு நெருக்கம்.
அத்தனை அருமையான பெண்ணுக்கு, இத்தனை கஷ்டம் ஏன்... என்ன வாழ்க்கை, மனம் கசந்தது. மொட்டை மாடியில் போய் நிர்கதியாய் அமர்ந்து, எனக்குள் குமைந்தேன்.
ஒரு ஆண்டுக்கு முன், மகிக்கு அந்த பிரச்னை வந்தது. முறையற்ற மாதவிலக்குகள். தொடர்ச்சியாக, 8 - 10 நாட்கள் நீடித்த ரத்தப்போக்கு. சில சமயங்களில், தான் மாதவிலக்கு தள்ளிப் போவதற்காக உபயோகித்த மாத்திரைகளின் விளைவு என, பிரச்னையை பெரிதுபடுத்தவில்லை, மகி.
கழன்று விடுமோ என கால்கள் துவண்டபோதும், உடல் தளர்ந்து போனபோதும் கூட, மகள் ஆர்த்தி, பிளஸ் 2வும், கீர்த்தி, 10வதும் படிப்பதால், வசந்தண்ணா, பணிப்பெண் இருவரின் உதவியுடன் சமாளித்து விட்டாள். பத்தே நாட்களில் அடுத்தடுத்த சுழற்சி.
'மகி... தப்பு செய்யறயோன்னு தோணுது. கருப்பையில் பிரச்னை இருக்கக் கூடும். டாக்டரைப் பார்க்கலாம் வா...' என்றேன்.
'அக்கா... அதுக்கு இது நேரமில்ல. இப்ப டிசம்பர். மார்ச்ல பரிட்சை. அப்புறம் பார்த்துக்கறேன்...'
'மத்தவங்களுக்கு ஒண்ணுன்னா துரத்துவே. உனக்குன்னா பதுங்குவியா... இன்னைக்கு, டாக்டரை போய் பார்க்குறோம், நீயும், நானும்...' என்றேன்.
அவர், டாக்டர் என்பதை விட, மகியை புரிந்த தோழி.
'ஸ்கேன்' செய்ததில், திராட்சை பழ அளவில் ஒரு பெரிய கட்டியும், பூசணி விதை அளவில் சில சிறிய கட்டிகளும் கருப்பையில் இருந்தது தெரிய வந்தது.
'மாத்திரை குடுத்து, கரைக்க முடியாதா டாக்டர்...'
மகியின் வலது கரத்தை கைகளில் பற்றி, இதமாக தடவி, 'நீ ரொம்ப பிடிவாதம் பண்ணினா, மாத்திரை எழுதி குடுப்பேன். உன் உபாதையை சற்று குறைக்கலாமே தவிர, இத்தனை பெரிய கட்டியை மாத்திரையால் கரைக்க முடியாது.
'தவிர, கட்டி எப்போது வளருமோ, அது எத்தகைய கட்டியோன்னு, மனசுல ஒரு கரையான் அரிச்சுட்டே இருக்கும். சில சமயங்கள்ல இந்த முடிவு தப்பாயிடும். இரு...' என்றவாரே, மகியை படுக்க வைத்து, கையுறை மாட்டி, கருப்பையிலிருந்த சில திசுக்களை சேகரித்தாள்.
'எத்தகைய கட்டியோன்னு சொன்னீங்களே...' தயக்கமும், கொஞ்சம் கவலையுடன் கேட்டாள், மகி.
'நம் உடம்பில் ஜீரணிக்க முடியாத நச்சு சத்துக்கள், காலப்போக்கில் நச்சு நீராக மாறி, ரத்த ஓட்டத்தை தடை செய்தா, அது தான் கட்டி... இவற்றில் தொந்தரவு தராத நீர் கட்டி, நார் கட்டி, கொழுப்பு கட்டின்னு பல வகை. 'பைப்ராய்டு' கட்டிகள் உண்டு. உனக்கு இருப்பது புற்று கட்டிகளா, சாதாரண, 'பைப்ராய்டு' கட்டிகளான்னு பரிசோதனையின் முடிவுல தான் தெரிய வரும்...'
'டாக்டர், புற்றுநோய் ஏன் வருது?' அச்சத்துடன் கேட்டேன்.
'இன்ன காரணம்ன்னு குறிப்பிட்டு சொல்ல முடியாது. பரம்பரையில யாருக்கேனும் இருந்திருக்கலாம். பொதுவா நாம் உண்ணும் உணவு, வாழ்க்கை முறை, சிகரெட், புகையிலை இப்படி பல காரணங்கள். ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொண்ணு பொருந்திப் போகும். சில சமயம் காரணமே சொல்ல முடியாது...'
அன்று, டாக்டரை பார்த்து வரும்போது, தைரியமாகத்தான் இருந்தாள், மகி.
'உதவிக்கு?'
'மாமியார் வருவாங்க, சமாளிக்க வேண்டியது தான்...'
'மகி, உன்னை ஒண்ணு கேட்கலாமா?'
'உங்க குடும்பத்துல யாருக்கானும் புற்றுநோய் இருந்திருக்கா?'
'எனக்கு தெரிஞ்சு இல்ல...'
'அப்ப, உனக்கும் வராது. பயப்படாதே...'
ஆனால், மகிக்கு, புற்றுநோய் இருப்பதாகத் தான், 'ரிப்போர்ட்' வந்தது. கருப்பையில், புற்று நன்றாக பரவியிருந்தது. கருப்பையை எடுத்து விட்டாலும், புற்று, மூன்றாம் நிலையில் இருப்பதாக சொல்லப்பட்டது. மூன்று வார இடைவெளியில், ஆறு முறை, 'கீமோதெரபி' செய்து கொள்ள வேண்டும் என, டாக்டர் பரிந்துரைத்தார்.
மகி, பயந்தது அப்போது தான்.
'கீமோன்னா என்ன செய்வாங்க, மேடம்?' கேட்டாள், மகி.
'துணிவும், தன்னம்பிக்கையுமாக கணீரென பேசும் மகியா இவள். பயம், மனிதனை எத்தனை பலவீனமாக்கி விடுகிறது...' என, நினைத்து கொண்டேன்.
'ரசாயனங்களை உடலுக்குள் ஏற்றி, புற்றுநோய் செல்களை கொல்லும் முயற்சி தான், 'கீமோதெரபி!' உங்களுக்கு, கெட்ட நேரத்திலும் ஒரு நல்ல நேரம். நீக்கக்கூடிய உறுப்பில் புற்று ஏற்பட்டுள்ளது. கருப்பை நீக்கத்திலேயே பல பிரச்னைகளை தவிர்த்திடலாம். தலைக்கு வந்தது, தலைப்பாகையோடு போனதுன்னு, சந்தோஷம் தான் படணும்...'
கருப்பை ஆபரேஷன் செய்தபின், முதல், 'கீமோ'வின்போது ஒரு வாரம் ஆஸ்பத்திரியில் தங்க நேர்ந்தது. அப்போது, ஆர்த்திக்கு பள்ளி விடுமுறை விடப்பட்டிருந்தது. தன்னையும் கவனித்து, படித்துக் கொண்டுமிருந்த மகளை கண்டபோது தான், தன் விதியை எண்ணி நொந்து போனாள், மகி.
மொத்த குடும்பமும் ஆறுதல் சொன்னாலும், 'என்னை யாரும் பார்க்க வேண்டாம்...' என, தன்னிரக்கத்தில் வீட்டினுள் சிறை வைத்துக் கொண்டாள்.
வைத்திய செலவு, வீட்டு செலவு, நாளை மகளின் கல்லுாரி செலவு. ஊதியத்தை இழந்து எத்தனை நாள் தான் வீட்டில் அடைபடுவது... உத்தியோகம் பார்த்தே ஆகவேண்டிய நிலையில், இதோ அலுவலகம் செல்ல ஆரம்பித்திருந்தாள், மகி.
'வயதும், வியாதியும் உருவ அமைப்பில் சில மாறுதல்களை கொண்டு வரத்தான் செய்யும். அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தையும், தைரியத்தையும் நாம்தான் வளர்த்துக் கொள்ள வேண்டும். மகிக்கு அவசியம் ஆறுதலும், தைரியமும் சொல்லணும்...' என, எனக்குள் உறுதி எடுத்துக் கொண்டேன்.
இரண்டு நாட்களுக்கு பிறகு, அந்த சந்தர்ப்பம் தானாக வாய்த்தது. வசந்தண்ணாவை விசாரிக்க போனபோது, மகியை பார்த்தேன். குளமான கண்களுடன், சிவந்த முகத்தை அழுத்தி துடைத்துக் கொண்டிருந்தாள்.
''என்னாச்சு?''
''யாரோ கிண்டல் பண்ணினாங்களாம். 'எனக்கு கூட தலை முடி கொட்டுது. இது எங்க விக்குது, என்ன விலை'ன்னு கேட்டாங்களாம்,'' என்றார், மகியின் மாமியார்.
''நீ அவளை சும்மா விட்டியா... கை எங்க போச்சு, ஒண்ணு குடுக்கறதுக்கென்ன?'' கத்திக் கொண்டிருந்தார், வசந்தண்ணா.
''நாளைக்கு இன்னொருத்தி இன்னொண்ணு சொல்வா, அவளுக்கும் குடுப்பீங்களா... அப்புறம் நாளன்னிக்கு இன்னொருத்தி, அவளுக்குமா... அதைவிட, அவங்க பேசினதை அலட்சியம் செய்ய பழகலாமே,'' என்றேன்.
''வலிக்குது, பாரதி... என் கண்ணு முன்னாடி அவங்க ஜாடை காட்டி பேசினது, யார்கிட்டயோ கேட்குற மாதிரி கிண்டல் செஞ்சது எல்லாம், ரொம்ப வலிக்குது.''
''பேசறவங்களுக்கெல்லாம் ஏன் பதில் சொல்லணும், மகி... கடைசியில நீயும் எங்களை போலதானா, அவ்வளவு, 'வீ'க்கா?''
''ஆர்த்தியிடம், 'என்ன உங்கம்மா, 'விக்'கெல்லாம் வெச்சுகிட்டு அசிங்கமா இருக்கா'ன்னு, பள்ளி நண்பர்கள் சொன்னதை, என் காதால கேட்டேன், பாரதி. உடம்பு ஒரு பிரச்னைன்னா, ஜனங்கள் இன்னொரு பிரச்னை.''
அவளிடமிருந்து விம்மல் வெடித்தது.
''குப்பைன்னு விட்டுத்தள்ளிட்டு போயேன். யார் அழகை யார் பாராட்டணும்... சமுதாயத்தை பார்த்து பயப்படாதே; 'மோதி மிதித்து விடு பாப்பா... அவர் முகத்தில் உமிழ்ந்து விடு பாப்பா'ன்னு, குழந்தைகளுக்கு மகாகவியின் பாட்டை சொல்லிக் குடுத்த நீயா குமைஞ்சு போறே...
''உன் அனுமதியில்லாம உன்னை யாரும் காயப்படுத்த முடியாதுன்னு, அடிக்கடி சொல்லுவியே, மகி. நீயா அவங்களோட அநாகரிக பேச்சை பொருட்படுத்தறே... விட்டுட்டு போ, இல்ல நல்லா திட்டிட்டு போ.''
''சாரி, பாரதி... கஷ்டம். என் உணர்வுகளை அனுபவிச்சா தான் புரிஞ்சுக்க முடியும். அனுபவம் இல்லாதவர்களுக்கு பேச உரிமை இல்லை,'' தன் உணர்வுகளிலிருந்து விடுபட முடியாமல், என்னை நிராகரித்தாள், மகி.
''நிச்சயமா... 'யூ ஆர் ரைட்' நான் அனுபவத்தோட தான் சொல்றேன், மகி. வித்யா பிறந்த சில மாதங்கள்ல, என் கணவருக்கு மாற்றலாயிடுத்துன்னு நாங்க வீட்டை வாடகைக்கு விட்டுட்டு போனோமே, நினைவிருக்கா... அது, மாற்றலில்லை.
''என்னை அறிந்தவர்கள் யாரும், பார்த்து விடக்கூடாதுன்னு, நான் ஓடி ஒளிஞ்சுண்டு இருந்த நேரம். கருப்பைல பெரிய கட்டி. அதை கர்ப்பம்ன்னு நினைச்சு கொண்டாடினேன். 'கீமோதெரபி' பண்ண ஆரம்பிச்ச உடனே, தண்ணியில சோப் நழுவற மாதிரி தலையிலிருந்து முடி நழுவி விட, மொட்டையா நின்னேன்.
''என்னை கண்டாலே, குழந்தை அலறினா. பால் குடிக்கும் குழந்தை என்னை பார்த்துவிடாதபடி, முக்காடிட்டு பால் கொடுப்பது எவ்வளவு அவலம், மகி. உடைஞ்சு அழுதேன். யாரும் என்னை பார்த்துடக் கூடாதுன்னு ஓடி ஒளிஞ்சேன்.
''தெரிஞ்சவங்க முன் வரத்தான் சங்கோஜமா இருக்கும். தெரியாதவங்க முன், அந்த சங்கடம் இருக்காதுன்னு, அவர் ஆபிசில் மாறுதல் கிடைச்சதா சொல்லி, ஆஸ்பத்திரி பக்கத்துலயே வீட்டை மாற்றினார். ரெண்டு ஆண்டுகளுக்கு பின், பழைய நிலைக்கு திரும்பினேன். அப்பார்ட்மென்டுக்கு திரும்ப வந்துட்டேன். இன்று வரை, யாரும் அறியாத ரகசியம் இது...
''அன்னைக்கு நீ வெளியே போன போது, நான் உன்னை பார்க்கல, மகி. என்னைத்தான் பார்த்தேன். அன்று நான் அனுபவித்த பயம், நடுக்கம், பரிதவிப்பு, அழுகை, அவநம்பிக்கை, அத்தனையையும் உங்கிட்ட பார்த்தேன். அன்னைக்கு நம்பிக்கை தர, தோளோடு தோள் அணைத்து ஆறுதல் சொல்ல எனக்கு யாரும் இல்லை, மகி. அதை உனக்கு தரணும்ன்னு தான், நான் ஓடி வந்தேன்.
''புற அழகுதான் பெண்களா, மகி. நாம, 40 - 50 வருஷம் வாழ்ந்துட்டோம். இத்தனை வருஷத்துக்கப்புறம் நம் மரியாதை, மதிப்பெல்லாம் புற அழகுல தான் இருக்குன்னா, நமக்கும், சேலை கட்டிட்டு, கண்ணாடிக்குள்ள நிற்கிற பொம்மைகளுக்கும் வேறுபாடு என்ன...
''மனுஷனை அறிமுகப்படுத்த தான், 'லுக்ஸ்' வேணும், மகி. அப்புறம் அவங்க இயல்புதான் அடையாளம். இவர் உபகாரி. அவர் படித்தவர். இவர் நல்ல மனுஷன். இவர் உழைப்பாளி. அவர் புத்திசாலின்னு, இயல்பை தான் மனிதனின் அடையாளமா நினைவில் வைக்கிறோம்.
''நல்ல குடிமகளா, பெண்ணா, மனுஷியா, அம்மாவா, மனைவியா வாழ்ந்திருக்கோமா, அதுதான் அழகு. குழந்தைகளை பொறுப்பான குடிமக்களா வளர்த்தோமா, அது அழகு. உன் அதிகப்படி புத்திசாலித்தனத்தால, புரிதலால, இரக்க சுபாவத்தால, உதவி புரிய ஓடி வரும் இயல்பால, எல்லாரையும் விட அழகு, நீ.
''செல்வி வீட்டுக்காரர் இறந்துபோன அன்னிக்கு, சாவித்திரி நோன்பா இருந்தாலும், 'அவங்க உறவுக்காரங்க வரும் வரை, செல்வியை தனியா விட்டுட்டு வரமாட்டேன்'னு, நகராம நின்னியே, அது அழகு. ராகவை நாய் கடிச்சப்ப, அவங்க அம்மாவுக்கு தகவல் தெரிவிச்சு, ஆபிசிலிருந்து வரும் முன், உயிருக்கு ஆபத்துன்னு ஆஸ்பத்திரிக்கு துாக்கிண்டு ஓடினியே, அந்த பொறுப்புணர்வு அழகு.
''கல்யாணம்னாலே தனிக்குடித்தனம்ன்னு மொழி பெயர்க்கும் இந்த நாளில், உடல் நலமில்லாத உன் மாமியாரின் அப்பாவையும் கூடவே வெச்சுண்டு கவனிச்சியே, அது பேரழகு. இதெல்லாம் உனக்கு தராத அழகையா, இந்த செயற்கை கூந்தல் உனக்கு தரப்போகுது?
''பிரதமர் இந்திராவை சந்திக்க, 'எனக்கு கோட் இல்லையே'ன்னு தயங்கின, அப்துல் கலாமை, 'நீங்க செஞ்சது தான் உங்களுக்கு கோட். உங்க அர்ப்பணிப்பு தான் அழகு'ன்னு, விக்ரம் சாராபாய் சொன்னாராம்.
''படிச்சிருக்கேல்ல... நாமே புற அழகை புனிதம்ன்னு நினைக்கிறதால தான், இத்தனை கண்ணீரும், கஷ்டமும். நம் எண்ணங்களை மாற்றுவோம். அழகை நம் வாழ்வால, செயல்களால் கட்டமைப்போம். நமக்கான வாழ்வை அழகாக வாழ்வோம்,'' என்றபடி, மகியை அணைத்து, அவள் கண்ணீரை துடைத்தேன்.
''பாரதீ...'' என்னை இறுக்கிக் கொண்டாள், மகி.
குணநலம் சான்றோர் அழகு என, புரிந்துகொண்ட தெளிவு அது!
ஜனனி ராம்
சிறுவயதிலிருந்தே வாசிப்பை நேசிப்பவர். இதுவரை பல கதைகள் எழுதி இருந்தாலும், பரிசு பெறுவது இதுவே முதல் முறை. முதன்முதலாக, நான் விரும்பும் இதழில் வெளியானது, மிக மகிழ்ச்சி அளிக்கிறது. நிறைய எழுத வேண்டும் என்ற ஊக்கத்தையும், முதல் பரிசு பெற முயற்சிக்க வேண்டும் என்ற உற்சாகத்தையும் இந்த வெற்றி தந்துள்ளது.

