PUBLISHED ON : ஜன 30, 2022

பெரும் செல்வந்தர் ஒருவர், தேரில் ஏறி வெகு வேகமாக போய் கொண்டிருந்தார். செல்வத்தை விட, அவரிடம் கர்வம் ஏராளமாக இருந்தது. போகும் வேகத்தில் அந்தச் செல்வந்தர், முனிவரின் பிள்ளையான காசியபன் என்பவனை மோதி, கீழே தள்ளி விட்டுப் போனார்.கீழே விழுந்த காசியபன் வலி தாங்காமல், கோபத்தில் தன்னை நொந்து, 'சீ என்ன வாழ்வு இது; பணத்திமிரில் என்னைக் கீழே தள்ளிவிட்டுப் போய் விட்டான். என்னிடம் செல்வமில்லை. அதனால் தான், இந்த இழிவான நிலை. இனி நான் வாழ்வதை விட, சாவதே மேல். நான் தற்கொலை செய்து கொள்கிறேன்...' என்று கூறியபடி, அங்கேயே படுத்து விட்டான். செல்வமில்லாத நிலை, அடுத்தவரால் ஏற்பட்ட அவமானம் ஆகியவை, அவனை அந்த நிலைக்குத் துாண்டி விட்டது.தற்கொலையில் தீவிரமாக இருந்த காசியபனின் நிலை கண்ட இந்திரன், நரி வடிவில் அவனை நெருங்கினார்.'காசியபா... பிறவிகளில் உயர்ந்ததான மனிதப்பிறவி கிடைத்தும், தற்கொலை முயற்சியில் ஈடுபடலாமா... உடலில் எந்தவிதமான ஊனமும் இல்லாமல், நீ லட்சணமாக-, ஆரோக்கியமாகத்தானே இருக்கிறாய்... அப்படியிருக்க, தற்கொலை செய்து கொள்ளத் துணியலாமா?'கைகள் உள்ளவர்கள், இந்த உலகில் காரியங்களைச் சாதிக்கலாம். கை உள்ளவனாக இருப்பதை விட, பெரிய லாபம் என்ன இருக்கிறது? தெய்வம் தந்த, 10 விரல்களைக் கொண்ட இரண்டு கைகளைக் கொண்டவர்கள், மழை, பனி, வெயில் ஆகியவைகளிலிருந்து, கைகளால் தங்களை காத்துக் கொள்கின்றனர்; ஆடை, சுவையான உணவு, படுக்கை, காற்று என, பலவற்றையும் உருவாக்கி அனுபவிக்கின்றனர். 'ஆனால், வாய், கை இல்லாமல் அல்ப பலம் கொண்ட பல உயிரினங்கள், துன்பப்பட்டு துயரைப் பொறுத்துக் கொள்கின்றன. இதோ என்னை பார்... புழு, பூச்சிகள் கடிக்கின்றன. அவற்றைப் பிடுங்கி எறிய என்னால் முடியவில்லை... கைகள் இல்லாததால் எனக்கு வந்த தொல்லையைக்கூட நீக்க முடியாதவனாக இருக்கிறேன்.'இருந்தும் நான், தற்கொலை செய்து கொள்ளவில்லை. ஏன்? தற்கொலை செய்து கொள்வது பெரும் பாவம். மனிதனான உனக்கு அங்கக்குறைவு ஏதுமில்லை; நோயில்லை; முழுமையான மனிதனாக, நன்றாகப் படித்தவனாக இருக்கிறாய். இருப்பதைக் கொண்டு, முன்னேறும் வழியைப் பார்...' என்றார், நரி வடிவில் வந்த, இந்திரன். அதைக்கேட்ட காசியபன், தற்கொலை எண்ணத்தை கை விட்டு ஊக்கத்தோடும், உற்சாகத்தோடும் வாழத் துவங்கினான்.குறையில்லாத உடல், ஆரோக்கியம், கல்வியறிவு என, பலவற்றைப் பெற்றிருந்தாலும், அவற்றைக் கொண்டு முன்னேற வேண்டும். இதைவிடுத்து, எடுத்ததற்கெல்லாம் மனம் சலிப்பதோ, தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதோ பெரும்பாவம் எனும் இக்கதை, பீஷ்மர், தர்மருக்குச் சொன்னது.
பி. என். பரசுராமன்
