PUBLISHED ON : ஜன 30, 2022

க.அருச்சுனன் எழுதிய, 'பெரியோர் வாழ்வில் சுவையானவை' நுாலிலிருந்து:உ.பி. மாநிலம், வாரணாசி, காசி இந்து பல்கலை கழகத்தில், காந்திஜி ஆற்றிய உரை:நண்பர்களே, பல்கலை கழகம் என்ற போர்வையின் கீழ், நான் மிகவும் அவமானப்படுத்தப் பட்டேன். இப்புனித நகரத்தில், என் நாட்டு மக்களிடத்தில், அந்நிய நாட்டு மொழியில் பேச வேண்டுமாம்; நம் தாய்மொழியின் மூலம் சிறந்த கருத்தை வெளிப்படுத்த முடியாதாம். நாம் வாழ்வதை விட அழிவதே மேல் என, நான் சொல்வேன். இருந்தும், அவமானப்பட்டும் நண்பர்களை காண வேண்டும், உங்கள் முன் வேறொரு காட்சியும் கூற வேண்டும் என, விரும்புகிறேன்.மேன்மை தாங்கிய மகாராஜா, நேற்று தலைமை தாங்கி, தம் உரையில், இந்தியாவின் வறுமையை பற்றி குறிப்பிட்டார். மற்ற சொற்பொழிவாளர்களும் அக்கருத்தை வலியுறுத்தி, வரவேற்றுப் பேசினர்.இப்பெரும் விழாவில் அமைக்கப்பட்ட பந்தலில் எதைக் காண்கிறோம். உண்மையிலேயே மிகப்பெரிய பகட்டான விழா, ஐரோப்பிய நாடான, பிரான்ஸ் தலைநகர், பாரீஸ் நகரிலிருந்து வரவழைக்கப்பட்ட நகைகள் கண்காட்சியை காண்பது போன்ற உணர்ச்சியை தான் தோற்றுவிக்கிறது.பகட்டான ஆடைகளையும், ஆபரணங்களையும் அணிந்து மகாராஜாக்களும், பிரபுக்களும் காட்சி தருகின்றனர். வறுமையில் வாடும் பல லட்சக்கணக்கான ஏழை, எளிய மக்களுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது, 'நீங்கள், இந்த தங்க, வைர ஆடை ஆபரணங்களை மக்கள் நல்வாழ்விற்காக எடுத்துக் கொடுத்து, அவர்களுக்கு பாதுகாவலர்களாக இருந்தாலொழிய இந்தியாவிற்கு விமோசனம் ஏற்பட வேறு வழியே இல்லை...' என, அவர்களிடம் கூறிக்கொள்கிறேன். இப்படி தைரியமாக, ஆணித்தரமாக, நேருக்கு நேர் பேசினார். மகளிர் இல்லத்தில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தவர், சாரதாதேவி வர்மா என்ற பெண்மணி. தன் மகனின் நலத்தில் அக்கறையும், பாசமும் கொண்டவர்.ஒருமுறை அவனை அழைத்து, காந்திஜியிடம் சென்றார். அச்சமயம், ஏதோ எழுதிக் கொண்டிருந்தார், காந்திஜி. பக்கத்திலே பனை ஓலை விசிறி இருந்தது.சாரதா தேவியின் மகனை பார்த்து, விசிறியை எடுக்குமாறு ஜாடை செய்தார், காந்திஜி. அவரின் குறிப்பை புரிந்து கொண்ட பெண்மணியின் மகன், விசிறியை எடுத்து விசிற ஆரம்பித்தான். சில நிமிடங்களுக்கு பிறகு, குளிர்ந்த காற்று வீசியவுடன், லேசாக துாக்கம் வர, அப்படியே சாய்ந்தார், காந்திஜி.இதை பார்த்து, மகனிடமிருந்து விசிறியை வாங்கி, தானே விசிற ஆரம்பித்தார், சாரதாதேவி. சிறிது நேரத்தில் விழித்தார், காந்திஜி. 'தாய் அன்பு, மகன் பணிபுரிவதை தடுத்து விட்டது. சிறுவனாயிற்றே, மேலும், பலவீனமானவன் விசிறுவதால் அவன் களைத்தல்லவா போய் விடுவான்...' என, புன்முறுவலுடன் கேட்டார், காந்திஜி.அதற்கு, 'தாய் இல்லை பாபு, விசிறிக் கொண்டிருக்கையில், விசிறி தவறி உங்கள் உடம்பின் மீது பட்டுவிடக் கூடாதே என்பதற்காகவே, அவனிடமிருந்து வாங்கி விசிற ஆரம்பித்தேன்...' என்றார், சாரதா தேவி.'இல்லை. இது, பொய்யான விவாதம். தாயன்பு, குழந்தைக்கு தன்னம்பிக்கையை கற்பிக்காது. பெற்றோர், வழிகாட்டி மரமாக இருக்கலாம். ஆனால், அவர்களும் உடன் பயணிக்காமல் இருப்பது நல்லது...' என்றார், காந்திஜி. ஆட்சி அதிகாரத்தை அறவே விரும்பாத காந்திஜி, 'ஒரே ஒரு மணி நேரம் நான் ஆட்சி நாற்காலியில் அமர்ந்தால், நம் நாட்டிலுள்ள அனைத்து அன்னச் சத்திரங்களையும் உடனே இழுத்து மூடும்படி ஆணை பிறப்பிப்பேன்...' என்றார்.தன் ஆசிரமத்தில், எவ்வளவு பெரிய மனிதராயினும், உழைக்காமல் உணவு உண்ண ஒரு நாளும் அனுமதித்ததில்லை, காந்திஜி. நடுத்தெரு நாராயணன்
