தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/ரத்தம் சிந்திய பூமி... (1)

ரத்தம் சிந்திய பூமி... (1)

ரத்தம் சிந்திய பூமி... (1)


PUBLISHED ON : மார் 17, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 17, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அலுவலக பணியில் இருந்த என்னை, 'இன்டர்காமில்' அழைத்தார், செய்தி ஆசிரியர். அவர் அறைக்குள் நுழைந்ததும், 'ஆறுமுகம்... உங்களை, பஞ்சாப் மாநிலம் போக வேண்டும் என, பாஸ் கூறியுள்ளார்...' என்றார்.

'மேடம், அலுவலக பணியாகவா அல்லது சுற்றுலா தொடர்பாகவா...' என, கேட்டேன்.

'பஞ்சாப் மாநிலம், ஜலந்தர், 'லவ்லி புரோபஷனல் பல்கலை'யில், 106வது, 'இந்திய அறிவியல் காங்கிரஸ்' மாநாடு நடக்கிறது. ஐந்து நாட்கள் தங்க வேண்டும்...' என, செய்தி ஆசிரியர் கூறியதும், பாதி மகிழ்ச்சியுடனும், பாதி பயத்துடனும், என் இருக்கைக்கு திரும்பினேன்.

பின், சென்னை, பி.ஐ.பி., - பத்திரிகை தகவல் மைய அலுவலகத்தில் இருந்து என்னை தொடர்பு கொண்ட பெண் ஒருவர், 'மாநிலத்திற்கு ஒரு பத்திரிகையாளர் என்ற வகையில், இந்தியாவின் அனைத்து மாநிலத்தில் இருந்தும் வரவுள்ளனர். தமிழகத்தின் சார்பில், 'தினமலர்' நாளிதழ் அழைக்கப்பட்டுள்ளது...' என்றார்; அது, எனக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

பயண நாள் வந்தது... சென்னையில் இருந்து, டில்லிக்கு விமான பயணம் மேற்கொண்டேன். அங்கிருந்து, மற்றொரு விமானத்தில், அமிர்தசரஸ் செல்ல, டில்லி விமான நிலையத்தில் காத்திருந்தேன்.

அப்போது, அதே விமானத்திற்காக, காத்திருந்த நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்களாக வந்த மற்ற பத்திரிகையாளர்கள் சிலரும், எனக்கு அறிமுகமாகினர். அவர்களுடன், ஆங்கிலத்தில் மட்டுமே உரையாட முடிந்தது. அவர்கள், ஹிந்தியில் சரளமாக பேசிக் கொண்டிருந்தனர்.

விமான நிலையத்திலிருந்து, ஜலந்தரில் உள்ள ஓட்டலுக்கு, வேனில் அழைத்து சென்றனர், ஏற்பட்டாளர்கள். அப்போது தான், என்னுடன், அந்த ஓட்டலில், 21 பத்திரிகையாளர்கள் தங்க உள்ளனர் என்பதை அறிந்தேன். அவர்களில், காஷ்மீர், சிக்கிம் உள்ளிட்ட வட மாநில பத்திரிகையாளர்களும் அடங்குவர்.

பத்திரிகையாளர் அனைவருக்கும், தனித்தனியே அறைகள் ஒதுக்கப்பட்டன. 'வாட்ஸ் ஆப் குரூப்' ஆக, பத்திரிகையாளர் ஒருங்கிணைக்கப்பட்டு, தகவல்கள் பரிமாறப்பட்டன.

மறுநாள் காலை, 8:00 மணிக்கு, அனைவரும் ஓட்டல் அறை முன் வரும்படி தகவல் வந்தது. விழாவில், பிரதமர் மோடி பங்கேற்பதால், பாதுகாப்பு காரணங்களுக்காகவே என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, அனைவரும் வர, பஸ்சில், பல்கலை அரங்கம் சென்றோம்.

போலீசாரின் கடும் சோதனைக்கு பின், விழா அரங்கிற்குள் சென்றோம். விழா நிறைவு பெற்றதும், பல்கலை வளாகத்திலுள்ள, அறிவியல் கண்காட்சியை சுற்றி பார்த்தோம். இந்திய ராணுவம், 'இஸ்ரோ' சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்கில் தான், மாணவ - மாணவியர் கூட்டம் அலைமோதியது. கண்காட்சியை பார்த்து முடித்தோம்.

மிகவும் போரடிக்கிறதே என்ற கவலையுடன், ஓட்டல் அறைக்கு மதியம் திரும்பினேன். 'யாராவது, என்னுடன் பொற்கோவிலுக்கு வருகிறீர்களா...' என, கேட்டேன். உடன் வந்த பத்திரிகை நண்பர்கள், 'ரொம்ப களைப்பாக உள்ளது; ஓய்வு எடுக்க போகிறோம்...' என்றனர்.

கடுப்பான நான், ஓட்டல் அறைக்கு வெளியே வந்து, டாக்சியை வரவழைத்து, பொற்கோவிலுக்கு தனியே சென்றேன். மாலை, 6:20 மணிக்கு, பொற்கோவில் வாசலை அடைந்த போது, மின்னொளியில் ஒளிர்ந்த, கோவிலை பார்த்து, பரவசம் அடைந்தேன்.

ஆனால், இரவுக்குள், ஓட்டலுக்கு செல்ல வேண்டும் என்ற அச்சத்தில், மறுபடியும், வாடகை காரில், ஜலந்தர் திரும்பினேன். இரவு, 9:30 மணிக்கு, ஓட்டல் அறைக்கு செல்ல, அனைவரும், சாப்பிட்டு கொண்டிருந்தனர். அவர்களுடன் நானும் பங்கேற்றேன்.

இரவு, 11:00 மணிக்கு, 'வாட்ஸ் ஆப்'பில், 'நாளை காலை, 8:30 மணிக்கு, அனைவரும் தயாராக இருங்கள். பொற்கோவில் மற்றும் வாகா போகிறோம்...' என்ற, பி.ஐ.பி., ஏற்பாட்டாளர்களின் அழைப்பை பார்த்ததும், எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி ஏற்பட்டது.

மறுநாள் காலை, அனைவரும் கிளம்பி வர, சற்று தாமதம் என்றாலும், ஒரு வழியாக, 10:00 மணிக்கு, அமிர்தசரசை நோக்கி, சுற்றுலா பஸ்சில் புறப்பட்டோம்.

அப்போது, ஆந்திராவில் இருந்து வந்த பத்திரிகையாளர் ஒருவர், 'பொற்கோவில் போகிறோம்... அதன் வரலாறு தெரியுமா...' என கூற, மற்றவர்கள் எல்லாம், 'சீக்கியர்களின் புனிதமான இடம்...' என, பதில் கூறினர்.

— தொடரும்

இந்தியாவின் வடமேற்கு மாநிலமாக, பஞ்சாப் உள்ளது. அம்மாநிலத்திற்கு மேற்கே, பாகிஸ்தானும், வடக்கே, காஷ்மீரும் உள்ளன. வடகிழக்கில், இமாசல பிரதேசமும், தென் கிழக்கில், ஹரியானா மாநிலமும் அமைந்துள்ளன. தென்மேற்கில், ராஜஸ்தான் மாநிலம் உள்ளது.

பஞ்சாப்பில், 22 மாவட்டங்கள் உள்ளன. இங்கு, ராவி, பியாஸ், சட்லெஜ் ஆகிய மூன்று நதிகள் பாய்கின்றன. ஒன்றுபட்ட இந்தியாவில், பஞ்சாப் இருந்தபோது, ஜீலம், செனாப் போன்ற நதிகளும் இருந்தன. ஐந்து நதிகள் பாய்வதால், அதற்கு பஞ்சாப் என்ற பெயர் வந்ததாக கூறப்படுகிறது

சுதந்திரத்திற்கு பின், இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் போது, கிழக்கு பஞ்சாப், இந்தியாவிற்கு தரப்பட்டது. மேற்கு பஞ்சாப், பாகிஸ்தான் மாநிலத்திற்கு வழங்கப்பட்டது

கிழக்கு பஞ்சாப், இந்தியாவின் மாநிலமாக மாறிய பின், பஞ்சாப் என்றே அழைக்கப்படுகிறது. இந்தியாவில், கோதுமை அதிகம் விளையும் மாநிலம், பஞ்சாப். இங்குள்ள மக்கள், பஞ்சாபி மொழியை தவிர, ஹிந்தி, ஆங்கிலம் பேசுகின்றனர். குர்தா ஆடைகளை, ஆண்கள் விரும்பி அணிகின்றனர்.

எம்.ஆறுமுகம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us