தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இலக்கு!

இலக்கு!

இலக்கு!


PUBLISHED ON : மார் 17, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 17, 2019


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'ஆண்டவன் அறிய நெஞ்சில், ஒரு துளி வஞ்சமில்லை; அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை. மனிதனம்மா... மயங்குகிறேன்!'- கண்ணதாசனின் கவித்துவமான வரிகளை, கணீரென்ற குரலில், டி.எம்.எஸ்., பாடிக் கொண்டிருந்ததை கேட்ட கணபதிக்கு, தன்னையும் அறியாமல், கண்களில் கண்ணீர் கசிந்தது.

இரவு நேர நிசப்தம், இதமான தென்றல் காற்று வீசும் மொட்டை மாடியில், நிலா காய்ந்து கொண்டிருந்த வேளையில், சுவரில் அமர்ந்து, துாரத்தில் எங்கேயோ ஒலிபெருக்கியிலிருந்து, காற்றில் கலந்து வரும் பாடலை ரசிப்பது, 40 வயதை தாண்டிய நபர்களுக்கு, சுகமான அனுபவம் தான்.

ஆனால், அந்த இன்பத்தை, ரசித்து அனுபவிக்கும் மனநிலையில் தற்போது அவன் இல்லை.

குடும்ப பாரத்தை சுமக்க, வீட்டில் அவன் ஒருவன் மட்டுமே உழைத்துக் கொண்டிருந்தான். மனைவியை வேலைக்கு அனுப்புவதில் அவனுக்கு விருப்பமில்லை.

'உத்யோகம் புருஷ லட்சணம்' என்பதற்கேற்ப, குடும்பத்தில், ஆண் மகன் உழைத்து, பொருள் ஈட்ட வேண்டும்; மனைவி, குடும்பத்தை நிர்வகித்து, கணவனையும், பிள்ளைகளையும் கவனிக்க வேண்டும். அப்போது தான் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும் என்ற, கொள்கை முடிவுள்ளவன் அவன்.

அதற்காக, அவன் ஒன்றும் ஆணாதிக்க மனப்பான்மை உள்ளவன் அல்ல.

அந்த காலத்தில், 10 பிள்ளைகள் பெற்றாலும், கணவன் மட்டுமே, வெளியில் சம்பாதிக்க செல்வான். அப்போதெல்லாம், 'டென்ஷன்' என்ற சொல்லை யாரும் அறிந்திருக்க மாட்டார்கள்.

அதிகாலையில், சேவல் கூவுகையில், வீட்டு பெண்கள் எழுந்து, வாசல் தெளித்து, கோலம் போட்டு, அடுப்படியில் காலை உணவை தயாரிப்பர். அதில் எந்த பரபரப்பும் இருக்காது.

கணவனை பணிக்கும், பிள்ளைகளை பள்ளிக்கும் அனுப்பிய பின், தெருவில் கூவியபடி வரும் காய்கறிகாரரிடம், காய்களை வாங்கி, மதிய உணவை தயாரித்து முடிப்பர்; உணவு இடைவேளையில், பிள்ளைகள் வந்து உணவருந்தி, மீண்டும் பள்ளிக்கு செல்வர்.

மதியம், 2:00 மணி வாக்கில், கணவர் வந்து உணவருந்திய பின், பெண்களும் உணவருந்தி, சற்று கண் அயர்வர். இப்படி, எந்த ஒரு பரபரப்பும் இல்லாமல், குடும்பத்தை நிர்வகிப்பது எவ்வளவு சுகமான அனுபவம்.

இதையெல்லாம், தன் பெற்றோர் மூலம் அனுபவித்த காரணத்தால், தன் மனைவி, படித்து, வேலைக்கு செல்ல தகுதியுள்ளவளாய் இருந்தாலும், அவளை வீட்டிலேயே இருந்து குடும்ப நிர்வாகம் செய்ய பணித்தான்.

ஆனால், இன்றைய காலகட்டத்தில், விலைவாசி உயர்வு, ஆடம்பர வாழ்க்கை, அவசியமற்ற அத்தியாவசிய பொருட்களின் வரவு போன்றவற்றால் விழி பிதுங்க வேண்டிய நிலை.

அலுவலகத்தில், பதவி உயர்வு கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில், ஐந்து ஆண்டுகளாக, இலவு காத்த கிளியை போல காத்துக் கொண்டிருந்தான். ஒவ்வொரு முறையும், பதவி உயர்வு பட்டியலில், அவன் பெயர் இடம்பெறும். ஆனால், கடைசி நிமிடத்தில் அந்த வாய்ப்பு அவனுக்கு கிட்டாது.

இதில் ஆச்சரியம் என்னவென்றால், பதவி உயர்வுக்காக, தன் பெயரை நிர்வாகத்திடம் பரிந்துரைக்கும்படி, யாரிடம் போய் நிற்கிறானோ, அவர்களே அந்த பதவியை பெற்று விடுவர். அவனது காத்திருப்பு, இந்த ஆண்டும் பொய்த்து போனது. பதவி உயர்வு கிட்டவில்லை என்பதை விட, அது பிறரால் தட்டிப் பறிக்கப்படுகிறது என்பதே, வேதனைக்குரிய விஷயமாக இருந்தது.

இந்நிலையில், மூத்த மகன் இளங்கோ, பொறுப்பில்லாமல், தேர்வு நெருங்கும் வேளையில் கூட படிக்காமல், மொபைல் போனில் கவனம் செலுத்தியது, கோபத்தை வரவழைத்தது. அதனால் தான், விரக்தியின் உச்சத்திற்கே போய், மொட்டை மாடியில் வந்தமர்ந்தான்.

''அப்பா!'' என்ற குரல் கேட்டு, அவசரமாய் தன் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்தபடி பார்த்தான்.

''ஏன் டல்லா இருக்கீங்க... உங்களுக்கு என்ன தான் பிரச்னை...''

தோளுக்கு மீறிய மகன், தன்னிடம் கேள்வி கேட்பதை, வேறொரு சமயமாய் இருந்திருந்தால், இறுமாந்து போயிருப்பான். இப்போதோ, 'நயவஞ்சகர், ஏமாற்று பேர்வழிகள் நிறைந்த இந்த உலகத்தில், நல்லவர்களுக்கு இடமில்லாத, வாய்ப்பில்லாத சூழ்நிலையில், மகன் படித்து, நல்ல உத்தியோகத்திற்கு எப்படி செல்வான்; அவன் எதிர்காலம் எப்படி இருக்கப் போகிறதோ... இதை உணராமல், இவன் இன்னும் சிறு பிள்ளைத்தனமாகவே இருக்கிறானே...' என்பன போன்ற எண்ணங்கள் மனதில் ஓடின.

''அப்பா!'' என, தோளை தொட்டு, மகன் உலுக்கியபோது, 'பேசுவதற்கு ஒன்றுமில்லை...' என்பது போல பார்த்தான்.

''ஏதாவது பேசுங்கப்பா... நான் நல்லா தான் படிக்கிறேன்; நீங்க நினைக்கிற மாதிரியெல்லாம் இல்லை,'' என்றான்.

''நல்லா படிச்சா, மார்க் வரணுமே; 75 சதவீதம் கூட தாண்டலை. பரீட்சைக்கு இன்னும் முழுசா ஒரு மாசம் கூட இல்லை; இப்ப கூட நீ படிக்காம, மொபைல் போனில் என்ன செய்யறே,'' என்றார்.

''அப்பா... 24 மணி நேரமும் படிச்சுகிட்டே இருக்க முடியாது. படிச்சு முடிச்ச பின், கொஞ்சம், 'ரிலாக்ஸா' இருக்க தான் போனை பார்க்கிறேன். அதிலும், 'சோஷியல் மீடியா' எதையும் பார்க்க மாட்டேன். 'கேண்டி கிரஷ்' விளையாட்டு மட்டும் விளையாடுவேன். அந்த விளையாட்டும், மனசை ஒருமுகப்படுத்த தான்,'' என்றான்.

''ஆபீஸ் முடிஞ்சு வர்றப்ப எல்லாம், நீ விளையாடிட்டு தானே இருக்க... என் கண் எதிரிலேயே விளையாடுற நீ, நான் இல்லாதப்ப என்ன செய்வ,'' என்றார்.

''அப்பா... நான் சொல்றது நிஜம். உங்களை ஏமாத்தணும், உங்ககிட்ட நல்ல பேர் எடுக்கணும்ன்னு நினைச்சா, நீங்க வர்றப்ப, உங்க எதிர்ல படிக்கிற மாதிரி நடிக்கலாம்; உங்களிடம் உண்மையா இருக்க விரும்புறேன்...

''படிக்கும்போது எப்போ சலிப்பு வருதோ அல்லது சப்ஜெக்ட் மாத்த போறேனோ, அப்ப தான் நான் மொபைல் போனை கையில் எடுப்பேன்; கொஞ்ச நேரம் விளையாடினா, எனக்கு, 'மைண்ட் ரிலாக்ஸ்' ஆயிடும்... 'டென்ஷனா' இருக்கற நீங்க வேணா, ஒரு ஐந்து நிமிடம் இந்த விளையாட்டை விளையாடி பாருங்க,'' என்று மொபைல் போனை நீட்டினான்.

'படி என்று சொன்னால், என்னிடமே வந்து, தன் செயலுக்கு நியாயம் கற்பிக்க பார்க்கிறான். இளைய சமுதாயம் குறிப்பாக, பதின்ம பருவத்திற்கே உரிய, தான் செய்வது சரி என்ற நிலைப்பாடு இவனுள்ளும் வந்து விட்டது...' என எண்ணினார்.

''முப்பது நகர்வுகளில், எட்டு பொம்மைகளை கண்டுபிடிக்க வேண்டும்; ஒரே வண்ணமுடைய மூன்று பந்துகளை சேர்த்தால், அவை சிதறும்; ஐந்து பந்துகளை சேர்த்தால், 'கலர் பால்' ஒன்று கிடைக்கும்.

''அதை வைத்து, எந்த வண்ணத்தை அடிக்கிறோமோ, அந்த வண்ண பந்துகள் எல்லாம் சிதறி, ஒளிந்திருக்கும் பொம்மைகளை கண்டுபிடிக்க உதவியாய் இருக்கும்; இவை அனைத்தையும், குறிப்பிட்ட நகர்வுகளுக்குள் முடித்து விடவேண்டும்,'' என, விளையாட்டின் விதிமுறைகளையும், அதன் நுணுக்கங்களையும் சிறிது நேரம், தந்தைக்கு விளக்கினான்.

கொஞ்சம் புரிந்தும், புரியாமலும் இருந்தது. ஒரு சாதாரண விளையாட்டில், இத்தனை விஷயங்களா என்ற பிரமிப்பும் தோன்றியது.

'பரவாயில்லை, நாமும் ஒருமுறை விளையாடி பார்ப்போம்...' என நினைத்து, ஐந்து பந்துகளை சேர்க்க வேண்டும்; நான்கு பந்துகளை சேர்க்க வேண்டும் என்ற நினைப்பிலேயே விளையாடினான். துவங்கிய சிறிது நேரத்திலேயே, ஒரு பொம்மையை கூட கண்டுபிடிக்காமல், 'அவுட் ஆப் மூவ்ஸ்' என்று வந்ததும், செய்வதறியாமல் மகனை பார்த்தான்.

''அப்பா... நம் இலக்கு, எட்டு பொம்மைகளை தேடி கண்டுபிடிப்பது தான். அதுக்கு, இந்த பந்துகளை பயன்படுத்துகிறோம். ஆனால், நீங்க, 5, 3, 4 என, பந்துகளை சேர்க்கிறதுல மட்டும் தான் குறியா இருந்தீங்க; பொம்மைகளை கண்டுபிடிக்கலை; அதனால் தான் தோத்துட்டீங்க... இந்த, விளையாட்டு மாதிரி தான், படிக்கணும், மார்க் வாங்கணும்ன்னு மட்டும் தான் நினைக்கிறீங்க...

''நான் இப்படி படிக்கிறதை வெச்சு, பெரிசா ஏதாவது சாதிக்கணும்; இந்த உலகத்துக்கு பயன்படுகிற மாதிரி ஏதாவது செய்யணும்ன்னு நினைக்கிறேன்... சாதனை மட்டும் தான் என் இலக்கு... அதனால, இப்ப நான் வாங்குற மார்க் பத்தி யோசிச்சு, நேரத்தை வீணடிக்க விரும்பலை... பாடத்தோட பொருளை மட்டும் தான் ஆழ்ந்து யோசிக்கிறேன்,'' என்ற மகனை பார்த்து, பிரமித்தான், கணபதி.

'வாழ்க்கை பாடத்தை, மகன் எவ்வளவு எளிதாக விளக்கி விட்டான்...' என நினைத்து, மனதில் உவகை ஏற்பட்டது. 'அவன் சொல்வது முற்றிலும் சரி. நாம், எதை இலக்காக கொண்டோமோ, அதை நோக்கி பயணப்படாமல், இடையில் ஏற்படும் தாக்கங்களால், திசை மாறி போய் விடுகிறோம்.

'அதனால் தான், எத்தனையோ ஏமாற்றங்களும், இழப்புகளும் நம் வாழ்வில் ஏற்படுகிறது. நாம் நினைப்பது ஒன்றாகவும், நடப்பது வேறாகவும் ஆகி விடுகிறது.

'எனக்கு, பதவி உயர்வு கிடைக்காததன் காரணமும், இப்போது தான் புரிந்தது. நிர்வாகத்தை, நானே நேரடியாக அணுகாமல், பிறரை நம்பியதால், வந்த வாய்ப்புகள் எல்லாம், கை நழுவிப் போனது.

'இலக்கை நோக்கி பயணிக்கும்போது, நாம் சிலவற்றை உத்திகளாக மட்டுமே கொள்ள வேண்டும்; அவையே தீர்வுகள் அல்ல...' என்ற பால பாடத்தை மகனிடமிருந்து கற்றுக் கொண்டான்.

எஸ்.ஆர்.சாந்தி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us