
கடந்த, 1955ம் ஆண்டின் ஆரம்பத்தில் டி.ஆர்.சுந்தரம் புரட்சிகரமான ஒரு வங்காளக் கதையைத் தேர்ந்து எடுத்தார். அதற்கு, திரைக்கதை, வசனம் எழுத டைரக்டரும், எழுத்தாளருமான ஸ்ரீதரை ஒப்பந்தம் செய்தார். மகேஸ்வரி என்ற அப்படத்தில் நடித்தவர்கள் ஜெமினி கணேசன், சாவித்திரி, மனோகர், தங்கவேலு, எம்.என்.ராஜம் போன்றோர்.
பிரிட்டிஷ் ஆதிக்கம் நிறைந்திருந்த சமயத்தில், கடல் கொள்ளைகள் நிறைய நடந்தன. இதனால், மக்களுக்குப் பல தொல்லைகள். இந்த தொல்லைகளைத் தவிர்க்க, மக்களுக்குப் புனர்வாழ்வு கொடுக்க ஒரு பெண் தயாரானாள். அவள் தான், மகேஸ்வரி. தலைவியாக உருவெடுத்து தனக்கென்று ஒரு கும்பலைச் சேர்த்துக் கொண்டு போராட முன் வருகிறாள். அவளது கூட்டத்தை சேர்ந்தவர்கள், 500 பேருக்கு மேல்; ஆற்றின் இக்கரைக்கு வராவண்ணம் ஆங்கிலேயே கொள்ளையர்களை, அவள் தடுத்து நிறுத்த வேண்டும்- ஆங்கில சிப்பாய்கள், 500 பேர். அவர்கள் 100 படகுகளில் வர, ஆற்றின் நடுவே போர்க்களம்! பொங்கி வரும் காவிரி ஆற்றின் கரையில் இந்தக் களம் அமைக்கப்பட்டது. தொடர்ந்து பதினைந்து நாட்கள் படப்பிடிப்பு நடக்க இருந்ததால், நடிகர்கள், பரிசல்காரர்கள், படப்பிடிப்புக் குழுவினர், போர் வீரர்கள் என்று ஏறக்குறைய 2000 பேர் ஒகேனக்கல்லில் குழுமி இருந்தனர். இவர்களுக்கு ஒரு குறையும் இல்லாமல் சகல ஏற்பாடுகளும் செய்திருந்தார் டி.ஆர்.சுந்தரம்.
மகேஸ்வரி படம் வெளியாகி நன்றாக ஓடியது. புதிய கதை, பெரிய நடிகர்கள், பெரிய வசனகர்த்தாவான ஸ்ரீதர் ஆகியோரின் கூட்டு முயற்சியே இந்தப் படம். இதைத் தொடர்ந்து வெளிவந்தது தான், தமிழகத்தின் முதல் கேவா கலர் படம்- 1955ல் வெளியாகிய அலிபாபாவும் நாற்பது திருடர்களும்!
அலிபாபா படத்தை எடுப்பது என்று முடிவு செய்த டி.ஆர்.சுந்தரம் ஏற்கனவே இரண்டு வெற்றிப் படங்களைக் கொடுத்த எம்.ஜி.ஆரை கதாநாயகனாகப் போட்டார். கதாநாயகி பி.பானுமதி. வில்லனாக வீரப்பா, காமெடியன்களாக தங்கவேலு, கே.சாரங்கபாணி மற்றும் எம்.ஜி.சக்ரபாணி, எம்.என்.ராஜம் போன்றோர் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டனர்.
இந்தப்படம் கேவா கலரில் எடுக்கப்பட்டது புதுமை என்றாலும், அந்தப் புதுமையைச் செய்தவர் உள்ளூர்காரரான டபிள்யூ. ஆர்.சுப்பாராவ் என்னும் கேமரா நிபுணர். மாடர்ன் தியேட்டர்சில் தயாரானவர். இவர்தான் அப்போது எடுக்கப்பட்ட வீரபாண்டிய கட்ட பொம்மனுக்கும் புகைப்பட நிபுணராகப் பணியாற்றியவர்.
கேவா கலரில் அப்போது படம் எடுத்தது, ஒரு துணிச்சலான முயற்சி என்று தான் சொல்ல வேண்டும். ஆர்ட் டைரக்டராகப் பணியாற்றிய ஏ.ஜே.டோமினிக், மாடர்ன் தியேட்டர்சில் வளர்ந்த இன்னொரு அற்புதக் கலைஞர்.
அப்போது எடுக்கப்பட்ட எல்லாப் படங்களுக்கும் அவர்தான் ஆர்ட் டைரக்டர். அலிபாபா படத்தில் முக்கியமான காட்சியே, குகைதான். இந்தக் குகைக்குள் நாற்பது திருடர்கள் மற்றும் குதிரைகளில் வந்து செல்ல வேண்டும். இதற்கு நல்ல குதிரைகள் வேண்டும். குதிரை சம்பந்தமான சீன்களை டி.ஆர்.சுந்தரம் மைசூரில் எடுத்தார். அங்கே இருந்த ரிசர்வ் போலீஸ் அதிகாரிகளுடன் பேசி, அவர்களிடமிருந்து, குதிரைகளையும், ஆட்களையும் தயார் செய்து கொண்டார். குதிரைகள் பார்க்க கம்பீரமாக இருந்தன. வில்லன் வீரப்பா, குதிரை மீது, தன் ஆட்களுடன் வருவதாகக் காட்சி. வந்தபின் குகைக்குள் நுழைய வேண்டும், பத்து நாட்கள் நடந்த இந்த படப்பிடிப்புக்காக மைசூரில் எல்லாரும் தங்கினர்.
இதற்காக குகை 'செட்' இரண்டு இடங்களில் போடப்பட்டது. வீரப்பா, 'மந்திரத்தை சொன்னதும் குகையின் கதவு தானாகத் திறக்க வேண்டும். அதற்காக பெரிய முன் கதவு அமைத்து, 'செட்' போடப்பட்டு படப்பிடிப்பு நடந்தது. அதைப் போலவே சேலத்தில் ஏற்காடு மலை அடிவாரத்திலும் ஒரு, 'செட்' போடப்பட்டது. ஸ்டுடியோவிற்கு வெளியே மற்றும் உள்ளே படப்பிடிப்பு நடத்த, ஸ்டுடியோவிலும் இன்னொரு 'செட்' போடப்பட்டது. படத்திற்கு குதிரைகள் வேண்டுமே. டி.ஆர்.சுந்தரம் இருபது குதிரைகளை விலைக்கே வாங்கிக் கொண்டு வந்து விட்டார். அதற்குப் பின்தான், குகை சம்பந்தப்பட்ட வெளிப்புற காட்சிகள் தொடர்ந்து படமாக்கப்பட்டன.
அலிபாபாவில் சிக்கலான விஷயம், இந்த குகை காட்சிகள் மட்டுமல்ல, திருடர்கள் ஒளிந்திருந்த பீப்பாய்களை நீர் வீழ்ச்சியில் ஒவ்வொன்றாகத் தள்ளி விட வேண்டும். இதற்கு ஏற்ற இடம் ஒகேனக்கல் நீர் வீழ்ச்சி தான். கே.சாரங்கபாணியும், எம்.என்.ராஜமும் மிகவும் சிரமத்தோடு பீப்பாய்களைத் தள்ள வேண்டும். ஓரிரு பீப்பாய்களை அங்கே தள்ளுவது போல் படமெடுத்த பின், ஸ்டுடியோவில் அதற்கு 'மேட்சிங்காக' செட் போடப்பட்டது. அங்கிருந்து பீப்பாய்களை உருட்டுவது போலக் காட்சி அமைக்கப்பட்டது. ஏ.ஜே.டோமினிக் போட்ட செட்டுடன், ஒரிஜினல் நீர்வீழ்ச்சியை இணைத்து அருமையாகப் படப்பிடிப்பை நடத்தினார் சுப்பாராவ்.
படத்தை முடித்த பிறகு போட்டுப் பார்த்தவுடன் எல்லாருக்கும் பரம திருப்தி. அதே போல் படமும் மிகவும் நன்றாக ஓடியது. இந்த சமயத்தில் டி.ஆர்.சுந்தரம் செய்த ஒரு துணிச்சலான காரியத்தை இங்கே சொல்லியாக வேண்டும்.
மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டுடியோவைப் பொறுத்த வரையில் யாருக்காகவும், எதற்காகவும் காத்துக் கொண்டு இருக்கும் பழக்கமே இல்லை. இதை ஏற்கனவே, சுலோச்சனா படத்தில் பி.யூ.சின்னப்பாவிற்கு பதில் டி.ஆர்.சுந்தரமே, இந்திரஜித்தாக வேடமேற்றார் என்பதைக் குறிப்பிட்டு இருக்கிறேன். அப்படி ஒரு சம்பவம், அலிபாபா பட சமயத்திலும் நடந்தது. படம் எல்லாம் முடிந்து விட்ட நிலையில், ஒரு பாட்டும், ஒரு சண்டைக்காட்சியும் மட்டும் பாக்கி இருந்தது. பாட்டு டூயட், எம்.ஜி.ஆர்., மற்றும் பானுமதி சேர்ந்து நடிக்க வேண்டும். சண்டைக் காட்சியில் எம்.ஜி.ஆர்., மட்டும் தேவை.
ஆக, எம்.ஜி.ஆர்., வந்தால் தான் படப்பிடிப்பு நடக்கும் என்ற நிலை. நாள் குறித்தாயிற்று. கதாநாயகன் படப்பிடிப்புக்கு வரவில்லை. படப்பிடிப்பை ஒத்தி வைத்து விடுவர் என்று எல்லாரும் நம்பினர்; ஆனால் நடந்ததோ வேறு.
எம்.ஜி.ஆருக்குப் பதிலாக, ஒரு 'டூப்' நடிகரைப் போட்டு பாட்டையும், சண்டைக் காட்சியையும் டி.ஆர்.சுந்தரம் எடுத்து, படத்தை முடித்து விட்டார். 'டூப்' காட்சியில் நடித்தவர், மாடர்ன் தியேட்டர்சின் நிரந்தர நடிகர், 'கரடி முத்து' என்பவர். இரண்டு மூன்று நாட்களுக்கு பிறகு, படப்பிடிப்புக்கு வந்தார் எம்.ஜி.ஆர்., படப்பிடிப்பு நடைபெறும் அறிகுறியே தெரியவில்லை. உண்மையைத் தெரிந்து கொள்ள டி.ஆர்.சுந்தரம் எதிரில் போய் நின்றார் எம்.ஜி.ஆர்.,
'என்ன ராமச்சந்திரன்? படப்பிடிப்பு முடிந்து விட்டது. முடிந்த படத்தை ஒரு தடவை பார்த்து விட்டுப்போ' என்றார் டி.ஆர்.சுந்தரம்.
எம்.ஜி.ஆர்., படத்தைப் பார்த்தார். டூப் நடிகர் எங்கே நடித்திருந்தார் என்றே தெரியவில்லை. அவ்வளவு கச்சிதமாகப் படம் எடுக்கப்பட்டு இருந்தது.
இதனால்தான் மாடர்ன் தியேட்டர்சுக்கும், எம்.ஜி.ஆருக்கும் உள்ள தொடர்பு விட்டுப் போயிற்று. மனக்கசப்புடன்தான் அவர் வெளியேறினார்.
இதற்கு முன் படப்பிடிப்பு சமயத்திலும் ஒரு சின்ன சிக்கல். எம்.ஜி.ஆர்., அதை மிகவும் சாதாரணமாக நினைத்து விட்டார்.
அலிபாபாவில் ஒரு வசனம், 'அல்லா மீது ஆணையாக' என்று ஆரம்பிக்கும் அந்த வசனத்தைப் பேசத் தயங்கினார் எம்.ஜி.ஆர்., தி.மு.க.,வில் அவர் சேர்ந்திருந்த காலம் அது. வசனகர்த்தாவிடம், 'அம்மாவின் மீது ஆணையாக' என்று மாற்றித் தரச் சொன்னார். வசனகர்த்தா ஏ.எல்.நாராயணன் அதற்கு உடன்படவில்லை.
'எதற்கும் முதலாளியைக் கேட்டு விடுங்கள்...' என்று அவர் நழுவி விட்டார். படப்பிடிப்பு தினம், எம்.ஜி.ஆர்., நடிக்கத் துவங்கியதும், 'அம்மாவின் மீது ஆணையாக இந்த அலிபாபா...' என்று வசனத்தை ஆரம்பிக்க, டி.ஆர்.சுந்தரம் 'கட் கட்' என்று சொல்லி விட்டார்.
'இங்கே பேச வேண்டிய வசனம், 'அம்மா'வில் ஆரம்பிக்காது. அல்லாவில் தான் ஆரம்பிக்க வேண்டும். அலிபாபாவுக்கு அல்லாதான் தேவை...' என்று கறாராக சொல்லி விட்டார். டி.ஆர்.சுந்தரத்திற்கு இருந்த அந்தத் துணிச்சல், வேறு எந்த இயக்குனரிடமும் இல்லாதது. இந்தப்படம் மிகப் பெரிய வெற்றியைக் கண்டது. அதனால், இதைத் தெலுங்கிலும் எடுக்க டி.ஆர்.சுந்தரம் விரும்பினார். 1955ல் தெலுங்கு படமும் ஆரம்பிக்கப்பட்டது. ஏற்கனவே பல விஷயங்கள் பழகிப் போனதால், தெலுங்குப் படப்பிடிப்பு மிகவும் வேகமாக நடந்தது.
இந்தப் படத்தின் தமிழ், தெலுங்கு பதிப்புகளில் டைரக்டர் செய்த புரட்சிகரமான செயல் ஒன்றுண்டு அது -
படத்தில் ஒரு கிளப் டான்ஸ் இடம் பெறும். அப்போது மும்பையில் இந்திப் படங்களில் ஹீரோயினாக நடித்துக் கொண்டு இருந்த வஹிதா ரெஹ்மானை சேலத்திற்கு வரவழைத்து, 'கிளப்'பில் டான்ஸ் ஆட வைத்தார். ஒரு பாட்டிற்காக வடமாநிலத்தில் இருந்து ஒரு நடிகையை இறக்குமதி செய்த வகையில், முன்னோடி இவர் தான்.
படங்களின், வெற்றி தோல்விகளைப் பற்றி அவர் சிந்திப்பதே இல்லை. ஏனெனில், திட்டமிட்டு தான் எடுக்கும் படங்கள் நிச்சயம் தோல்வியைத் தழுவாது என்பது அவரது தீர்மானமான முடிவு. இப்போதெல்லாம் மும்பையிலிருந்து சென்னை வந்து போவது மிகவும் சர்வ சாதாரணமாகி விட்டது. ஆனால், 1955ம் ஆண்டு மும்பையில் இருந்து சேலத்திற்கு ஒரு நடிகையை வரவழைப்பது என்றால், அதற்கு துணிச்சல் வேண்டும்; அது அவரிடம் நிறையவே இருந்தது.
— தொடரும்.
ரா.வேங்கடசாமி