
ஜவஹர்லால் நேரு எழுதுகிறார்:
நான் இங்கிலாந்திலிருந்து படிப்பு முடித்து இந்தியா திரும்பியதும், உயர் நீதிமன்ற வழக்கறிஞரானேன். ஆனால், நாட்கள் செல்லச் செல்ல, வாழ்க்கை எந்த நோக்கமும், பயனும் இன்றி, மந்தமான இயந்திர வாழ்க்கையாகப்பட்டது. வாழ்க்கை, தன் பொலிவை இழந்து விட்டது. அதன் மீது எனக்கு வெறுப்பு ஏற்பட்டது. ஒருவேளை, நான் பல துறையையும் பற்றி கற்ற என் கலப்புக் கல்வி தான், இதற்கு காரணமாக இருக்குமோ என்று நினைக்கிறேன்.
வீட்டில் இருந்த நேரம் போக, மற்ற நேரத்தை, நீதிமன்ற நூல் நிலையத்திலும், பொழுது போக்கு மன்றத்திலும் கழித்தேன். இந்த இரண்டு இடங்களிலும், தினம் தினம் பார்த்தவர்களையே தான், மீண்டும் மீண்டும் பார்க்க முடியும். ஒரே பொருளைப் பற்றி, அதுவும் வழக்கமாக வழக்குத் துறையைப் பற்றி, திரும்பத் திரும்ப பேசுவதைக் கேட்டு, காதும் புளித்து விட்டது. இப்படியான சூழ்நிலை, எவ்வாறு அறிவு வளர்ச்சிக்குத் தூண்டுதலாக அமைய முடியும்?
வக்கீல் தொழிலிலும் எனக்கு ஆர்வம் ஏற்படவில்லை. அந்நிய ஆட்சியை வலிய எதிர்க்கும் வெறும் தேசியச் செயலாகத் தோன்றிய அரசியலும், எனக்கு ஏற்றதாக இல்லை. எனினும், காங்கிரசில் சேர்ந்தேன். அவ்வப்போது நடந்த கூட்டங்களில் கலந்து கொண்டேன்.
ஆனால், இவையெல்லாம் தற்காலிகமானது.
வேட்டையாடுதல் போன்ற செயல்களில் மனதைத் திருப்பினேன். விலங்கினங்களைக் கொல்வதில் எனக்கு விருப்பம் இல்லை. வெறும் பொழுதுபோக்குக்காக காடுகளுக்குச் சென்றேன். 'சுடத் தெரியாத வேட்டைக்காரன்' என்று எல்லாரும் என்னைக் கேலியாகக் குறிப்பிடுவர்.
ஒரு நாள் தற்செயலாக, என் துப்பாக்கியிலிருந்து ஒரு குண்டு பாய்ந்ததில், ஒரு மான் குட்டி இறந்து விட்டது. ஒரு பாவமும் அறியாத மான் குட்டி அடிபட்டு, என் காலடியில் வீழ்ந்து இறந்தது.
அது குற்றுயிராக, கலங்கிய கண்களுடன் என்னை பார்த்த பார்வை, என் உள்ளத்தை ஊடுருவித் தைத்தது. கள்ளங்கபடமற்ற ஒரு உயிரைக் கொன்று விட்டோமே என்று கலங்கினேன்.
வேட்டையாடுவதில் எனக்கு இருந்த சிறிய ஆர்வம் கூட அன்றோடு ஒழிந்தது.
— நேருவின், 'என் இளமை நாட்கள்' நூலிலிருந்து...
***
நடிகர் கே.ஆர்.ராமசாமி, தஞ்சையில் நாடகம் நடத்திக் கொண்டிருந்தார். நாடகக் கம்பெனியில் நஷ்டம் ஏற்பட்டு விட்டது. இனி, நாடகமே நடத்த முடியாது என்ற நிலைமை. அந்தக் கம்பெனியில் சிவாஜி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், டி.வி.நாராயணசாமி போன்றோர் நடிகராக இருந்தவர்கள். கம்பெனி மீண்டும் நாடகம் நடத்த முடியாதவாறு, 'சீன்'களை எல்லாம் விற்று விட்டனர். கம்பெனியை விட்டுப் போன நடிகர்கள் போக, சிலர் மட்டுமே இருந்தனர்.
கம்பெனி மேனேஜர் பொன்னுசாமி பிள்ளை, அண்ணாதுரையிடம் வந்து, ஏதாவது வழி செய்து, மீண்டும் கம்பெனியை நடத்திட உதவி கேட்டார்.
அண்ணாதுரை, 'இப்போது என்ன என்ன சீன்கள் கைவசம் இருக்கின்றன என்று அவரைக் கேட்டு, அதையெல்லாம் ஒரு குறிப்பு எடுத்துக் கொண்டார். எந்தெந்த நடிகர்கள் இருக்கின்றனர் என்பதையும் கேட்டு, 'சரி, போங்கள்...' என்று அனுப்பி விட்டார்.
அன்று இரவு 10:00 மணிக்கு உட்கார்ந்து, விடிவதற்குள் ஒரு நாடகத்தை எழுதி முடித்து விட்டார்.
ஒரு இரவுக்குள் ஒரு நாடகத்தை எழுதி முடித்தது கூட அதிசயமல்ல. எழுதப் போகும் தன் நாடகத்திற்கு ஏற்ப, சீன்களை உருவாக்காமல், கே.ஆர்.ராமசாமி விற்று சாப்பிட்டு விட்ட சீன்கள் போக, கைவசமுள்ள மீதி சீன்களுக்கு ஏற்றபடி நாடகத்தை எழுதி முடித்தாரே... அது தான் அதிசயம்.
தன் நாடகத்திற்கு ஏற்றவாறு, பாத்திரங்களை உருவாக்கி, ஆட்களைத் தேடாமல், போய் விட்ட நடிகர்கள் போக, மீதியாக உள்ள நடிகர்களுக்கு ஏற்ப நாடகத்தை உருவாக்கியது தான் அதிசயம்.
அந்தக் கதையைத் தான், 'கல்கி' வெகுவாகப் பாராட்டி, அண்ணாதுரையை, 'தென்னாட்டு பெர்னாட்ஷா' என்று பெயரிட்டு அழைத்தது.
அந்த கதை தான் பிரபலமான, 'ஓர் இரவு' நாடகம்.
— காஞ்சிபுரம் முன்னாள் நகரமன்ற தலைவர் கோடி.எஸ்.மணி, ஒரு கட்டுரையில்...