
மாடர்ன் தியேட்டர்ஸ் ஸ்டுடியோ அமைந்திருந்த இடம், சேலம்-ஏற்காடு போகும் பாதையில் இருந்தது. ஸ்டுடியோவை சுற்றிலும், மூன்று கிராமங்கள் இருந்தன. அந்த மூன்று கிராமங்களில் இருந்துதான், டி.ஆர்.சுந்தரம் தன் ஸ்டுடியோவுக்கு ஆட்களை தேர்ந்தெடுத்தார். அவர்கள் அனைவரும் என்று சொல்லாவிட்டாலும், பெரும்பாலானோர், படிப்பு வாசனை அற்றவர்கள். அவர்கள் வேலையும் செய்ய வேண்டும்; கொஞ்சம் எழுதப் படிக்கவும் தெரிய வேண்டும் என்ற எண்ணம், அவருக்கு ஆரம்ப காலத்திலேயே உதித்து விட்டது. இதற்காக, அவர் என்ன செய்தார் தெரியுமா? பள்ளிக்கூடம் ஒன்றை, ஸ்டுடியோவிற்குள்ளேயே கொண்டு வந்து விட்டார். முதல் வகுப்பிலிருந்து - ஐந்தாவது வகுப்பு வரை, பாடங்கள் சொல்லித் தரப்படும். இதற்காக, வெளியில் இருந்து ஆசிரியர்கள் வரவழைக்கப்பட்டனர்.
காலை 8:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை வேலை செய்த தொழிலாளர்களில், படிப்பு வாசனை இல்லாதவர்கள், நேராக வகுப்பிற்குப் போக வேண்டும். ஒரு மணி நேரப் படிப்பிற்குப் பின் தான், அவர்கள் வீட்டிற்குச் செல்ல அனுமதி கிடைக்கும். பள்ளிக்குச் செல்லாமல், எந்த தொழிலாளியும் வெளியே போக அனுமதி கிடையாது!
படிக்காதவர்களுக்குத்தான் படிப்பு... ஆனால், மற்ற டெக்னிஷியன்களும் வெளியில், 6:00 மணிக்கு முன் போக முடியாத வண்ணம், அவர்களுக்கும் ஒரு ஏற்பாடு செய்து கொடுத்தார்.
டென்னிஸ் கோர்ட், பேட்மின்ட்டன் கோர்ட், வாலிபால் கிரவுண்டு, டென்னிகாய்ட், டேபிள் டென்னிஸ், கேரம் போர்டு, சடுகுடு கிரவுண்டு மற்றும் ரீடிங் ரூம் போன்ற பல வசதிகள் ஸ்டுடியோவிற்குள் இருக்க, எந்தத் தொழிலாளிக்குத்தான் வீட்டிற்குப் போக மனம் வரும்?
ஒரு தந்தை, தன் குழந்தைகளை எப்படிக் கவனித்துக் கொள்வாரோ, அதைப் போல், ஸ்டுடியோவில் உள்ள தொழிலாளர்களை அவர் கவனித்துக் கொண்டார். அப்போது, அங்கே வேலை செய்த தொழிலாளர்கள், 220 பேர்களுக்கு மேல்!
சில நாட்களில், ஸ்டுடியோவில் இருக்கும் மினி தியேட்டரில், ஆங்கிலப் படங்களும் திரையிடப்படும். அதையும் தொழிலாளர்கள் பார்க்கலாம். மதிய உணவு முடித்து, ஸ்டுடியோவிற்குள் நுழையும் சக தொழிலாளர்களுக்கு சத்துணவாக, ஒவ்வொருவருக்கும் இரண்டு மலைவாழைப்பழம் கொடுக்கப்படும். இவற்றிற்கு அப்பால், இன்னொரு வேலையும் நடந்தது. ஆர்ட் டைரக்டர், பெயின்டர், காஸ்ட்யூமர், மேக்கப்மேன் போன்றோருக்கு, தனியாக ஒரு ஆசிரியர் பாடம் எடுத்தார். அவர், டிராயிங் மாஸ்டர்! இவர்கள் எல்லாரும், முறைப்படி படம் வரைவதில் தேர்ச்சி பெறவேண்டும் என்று விரும்பினார் டி.ஆர்.சுந்தரம்.
ஸ்டுடியோவில் ஹுட்டிங் நடக்கும் நாட்களில், எல்லாருக்கும் சாப்பாடு அங்கேயே பரிமாறப்படும்.
கதாநாயகிக்கும், நாயகனுக்கும் அதே சாப்பாடுதான். அந்த உணவை சாப்பிட அவர்களுக்கு விருப்பம் இல்லையெனில், வெளியில் இருந்து, அவர்களுக்குத் தேவையான உணவு வரவழைத்துத் தரப்படும். இதற்கு, சம்பந்தப்பட்டவர்கள் தான் பணம் தர வேண்டும். இன்னொரு விஷயம், இன்றைக்கு நூறு சாப்பாடு என்றால், அவ்வளவு பேருக்குத்தான் உணவு. அதிகப்படியாக இரண்டொருவர் சாப்பிட்டால், அவர்கள் யார் என்கிற விவரம், டி.ஆர்.சுந்தரத்தின் கவனத்திற்கு போய் விடவேண்டும். ரிகர்சல் ஹாலில் சமையல் வேலை நடக்கும். அங்கிருந்துதான் சாப்பாடு, ஸ்டுடியோவிற்கு வேனில் போகும்.
டிபன் விஷயத்தில், சற்றே மாறுதலை விரும்பிய ஒருவர், டி.ஆர்.சுந்தரத்திடம் போய்க் கேட்ட சம்பவம் ஒன்று, இங்கே ஞாபகத்திற்கு வருகிறது. மாலை வேளைகளில், எல்லாருக்கும் மிக்சரும்-காபியோ அல்லது டீயோ வழங்கப்படும். ஒரு கதாசிரியர், இவற்றுடன், ஒரு ஸ்வீட்டும் கொடுத்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்தார். நிர்வாகியிடம் விண்ணப்பத்தை சமர்பித்த போது, அவர் நேராக டி.ஆர்.சுந்தரம் அறையின் பக்கம் கையைக் காட்டி விட்டார். தைரியமாக போனார் கதாசிரியர்.
'முதலாளி... மாலை வேளையில், மிக்சர் - காபி தருகிறீர்களே, அதனுடன் ஒரு ஸ்வீட்டையும் சேர்த்துக் கொண்டால் நன்றாக இருக்குமே...' என்றார். ஒரு வினாடி கூடத் தயங்காமல், முதலாளி பதில் கொடுத்தார்...
'நீ கேட்ட ஸ்வீட் தானப்பா எனக்கு லாபம்...' என்றார்.
ஸ்வீட் போட்டால், அதிக செலவு என்பதை, அவர் மிகவும் நாசூக்காகச் சொல்லி விட்டார்.
கதாசிரியர் யார் என்கிறீர்களா? அவர் தான், ஸ்டுடியோ முதலாளியாகவும், 'இயக்குனர் திலகம்' என்ற பட்டப் பெயரையும் பெற்ற கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். 'குமுதம்' படத்திற்கு அவர் வசனம் எழுத வந்தபோது நடந்த சம்பவம் இது.
ஸ்டுடியோ விஷயத்திற்கே மீண்டும் வருவோம். அங்கே பணிபுரியும் அவ்வளவு முக்கியமான டெக்னிஷியன்களும், நகரில் ரிலீஸ் ஆகும் ஆங்கில, இந்தி மற்றும் தமிழ்ப்படங்களைப் பார்த்துவிட்டு, தங்களுடைய எண்ணங்களை எழுதி, டி.ஆர்.சுந்தரம் மேஜையின் மீது வைக்க வேண்டும். கதைச் சுருக்கத்தோடு, அந்த படங்களில் இருக்கும் சிறந்த அம்சங்களையும் குறிப்பிட வேண்டும். இந்தப் படங்களைப் பார்க்க அவர்களுக்கு, ஏற்படும் டிக்கெட் செலவை ஸ்டுடியோவே ஏற்றுக் கொள்ளும். அவர்கள் கொடுத்த விமர்சனத்தை, டி.ஆர்.சுந்தரம் மிகவும் கவனமாகப் பரிசீலிப்பார். தேவையான கருத்துகளை மட்டும் எடுத்துக் கொள்வார்.
இப்படித்தான், டி.ஆர்.சுந்தரம் தன் ஸ்டுடியோ நிர்வாகத்தை நன்றாக நடத்தி வந்தார். அவரே எல்லாப் படங்களையும் டைரக்ட் செய்தார் - செய்ய விரும்பினார் என்று சொல்ல முடியாது. பிரபல டைரக்டர்கள் பலர் மாடர்ன் தியேட்டர்சில் வந்து டி.ஆர்.சுந்தரத்திற்காக பணியாற்றி இருக்கின்றனர். அவர்கள், படத்தை எடுத்து முடிக்கும் வரை, இவரது தலையீடு இருக்காது. முடிவில், இங்கே - இப்படிச் செய்யலாம், கொஞ்சம் மாற்றலாம் என்பது போல் யோசனை சொல்வார். அவையும் ஏற்றுக் கொள்ளப்படும்.
இரண்டாவது உலக யுத்தம் முடிந்த நேரம். அப்போது உணவுப்பொருட்களும், உடுக்க துணிகளும், கிடைக்காத காலம். அந்த நேரத்தில், டி.ஆர்.சுந்தரம் பெரும் புரட்சி ஒன்றைச் செய்தார். அரசின் உதவியுடன், எல்லாப் பொருட்களும் நியாய விலைக்கே கிடைக்கும் வகையில், கூட்டுறவு பண்டகசாலை ஒன்றை ஸ்டுடியோவில் நிறுவினார். ஸ்டுடியோ தொழிலாளர்களுக்கு மட்டும் அது மிகவும் உபயோகமாக இருந்தது. தொழிலாளர் நலனில் அக்கறை கொண்டவர் டி.ஆர்.சுந்தரம் என்பதற்கு இதை விட வேறு என்ன அத்தாட்சி வேண்டும்?
அதனால், நன்றியுடன் இருந்த அத்தொழிலாளர்களின் உதவியினால், அவரால் சிறந்த திரைப்படங்களைக் கொடுக்க முடிந்தது.
'மாயா மாயவன்' படத்துக்கு பின், டி.ஆர்.சுந்தரம் தொடர்ந்து படங்கள் எடுத்தார்.
'தாயுமானவர்' படத்துக்கு பின் வந்த படம், 'சந்தனத் தேவன்' ஜி.எம்.பஷீர் கதாநாயகனாக நடித்தது. இந்த படத்தின் கதை ராபின்ஹுட் கதையைத் தழுவியது. தொடர்ந்து, 'ஆனந்த ஆஸ்ரமம்' கதாநாயகன் வி.வி பந்துலு, கதாநாயகி ஆர்.பி.லட்சுமி தேவி. இதில், என்.எஸ்.கிருஷ்ணன் டி.ஏ.மதுரம் ஆகியோரும் நடித்தனர். இதற்குப் பின், டி.ஆர்.சுந்தரம் இயக்கிய படம், 'சத்யவாணி!' இதில், எம்.ஆர்.ராதா, கே.எல்.வி.வசந்தா ஆகியோர் நடித்தனர்.
இந்த படங்களைப் பற்றியெல்லாம் பெரிதாகச் செய்திகள் வெளியிட எந்த பத்திரிகையும் இல்லை. சிறு சிறு செய்திகள் மட்டும் அவ்வப்போது சில தினசரிகளில் வந்தன. ஆனால், அப்போது செய்திகளை ஒழுங்காக வெளியிட்டுக் கொண்டிருந்த ஒரே பத்திரிகை, 'சினிமா உலகம்' எனும் வாரப்பத்திரிகை தான். அந்த பத்திரிகையை, பண்டிதர் பி.எஸ்.செட்டியார் நடத்தி வந்தார். ஏராளமான சினிமாச் செய்திகள், விளம்பரங்கள் மற்றும் சிறுகதைகள் அடங்கிய அந்த பத்திரிகை, அந்தக் காலத்தில் மிகவும் பிரபலமானது.
கடந்த, 1934ல் துவங்கிய இப்பத்திரிகை, வாரம் ஒரு முறைதான் வரும். 1940ல் நடந்த இப்பத்திரிகையின் ஆறாவது ஆண்டு விழாவிற்கு, டி.ஆர்.சுந்தரம் அனுப்பிய கடிதம் இதோ:
சினிமாக் கலையின் முன்னேற்றத்திற்கென்று, சிறந்த தொண்டாற்றி, உறங்கிக் கிடந்த கலை உணர்ச்சியாளர்களுக்கு உத்வேகத்தைக் கிளப்பி, இன்று அதே துறையில் அரும்பெரும் சேவை செய்து வரும், 'சினிமா உலகம்' பத்திரிகையின் ஆறாவது வருட ஆரம்ப மலர் வெளிவரப் போவது கேட்டு, நான் பெரிதும் மகிழ்வெய்துகிறேன்.
நிமிடத்திற்கு ஒரு பத்திரிகை தோன்றி, நினைப்பவையெல்லாம் கலை நுணுக்கம் என்று கருத்தில் தோன்றியவற்றை கட்டுரை என எழுதி, தமிழகத்தில் உலவவிட்டு, அவைகள் மணிக்கணக்கில் மறைந்து விடுகின்றன. நம், 'சினிமா உலகம்' அப்படி இல்லாமல், விஷயம் நிறைந்து, நடுநிலைமையோடு நாகரிக முறை தவறாமல், அரிய கட்டுரைகள் பல நிறைந்து, தெள்ளிய உருவத்தில் சிறிய தாமதமுமின்றி வெளிவந்து, மக்களின் அவசியத்தை பூர்த்தி செய்கிறது.
இவ்வளவு பெருமையும், 'சினிமா உலகம்' பெறுவதற்குக் காரணஸ்தர் ஆசிரியர் பண்டித பி.எஸ்.செட்டியாராவார். அவரது திறமையே பத்திரிகை உருவில் வெளி வருகிறது என்றாலும் மிகையாகாது. கலைத்தொண்டு செய்யும் இப்பத்திரிகை, இன்னும் உயர்ந்த மேம்பாடுற்று விளங்க இறைவன் அருள் புரிவாராக.
- இப்படி வாழ்த்து செய்தி அனுப்பியிருந்தார் டி.ஆர்.சுந்தரம்.
தன் ஸ்டுடியோ செய்திகளை முக்கியத்துவம் கொடுத்து வெளியிடும் பத்திரிகை ஒன்று தேவை என்பதை, அவர் ஸ்டுடியோ ஆரம்ப காலத்திலிருந்தே உணர்ந்தார். 'ராமலிங்க விலாஸ்' எனும் மாளிகைக்கு பின்னால் இருந்த பரந்த இடத்தில், முதலில் ஒரு பெரிய கட்டடத்தை நிறுவி, அங்கே ஒரு அச்சகத்தை நிறுவினார். சேலத்தில் அப்போது விரல் விட்டு எண்ணக்கூடிய அச்சகங்கள் தான் இருந்தன. ஸ்டுடியோ, ஆபீஸ் சம்பந்தமான எல்லா வேலைகளுக்கும், இந்த அச்சகத்தை உபயோகித்துக் கொண்டாலும், வெளியார் வேலைகளுக்கும் இந்த அச்சகம் பயன்பட்டது.
வெளியிலிருந்து வரும் நபர்கள், உள்ளே வர வேண்டும் என்றால், வாயிலில் இருக்கும் வாட்ச்மேனிடம் உத்தரவு பெற்று தான் உள்ளே வர வேண்டும். வெளியாட்கள் யாரும், 'சட்'டென்று உள்ளே நுழைந்து விட முடியாது. அந்த அச்சகத்தின் பெயர்: கெஜலட்சுமி பவர்பிரஸ்.
அச்சகம் இருக்கிறது, பத்திரிகையை ஆரம்பித்து விடலாம் என்ற எண்ணத்தைச் செயலாக்க விரும்பிய டி.ஆர்.சுந்தரம் பத்திரிகை ஆரம்பிக்கும் போதே, அதற்கு வேல்சாமி கவியைத் தான் ஆசிரியராக நியமித்தார். வேல்சாமி கவிக்குப் பின், எஸ்.எஸ்.சண்முக சுந்தர நாயனார் என்பவரை பத்திரிகை ஆசிரியராக நியமித்தார். பிரபல நாவலாசிரியர் கோ.தா.சண்முகசுந்தரம் (மேதாவி) கூட, இதன் ஆசிரியராக இருந்தார் என்று சொல்லப்படுகிறது. ஆனால், நாயனார்தான் பல வருடங்கள் பத்திரிகையைப் பார்த்துக் கொண்டார்.
ஸ்டுடியோ செய்திகள் மட்டுமல்ல, படங்களின் ஸ்டில்கள், கதைச் சுருக்கம், சிறுகதை, அரசியல் என்று, அப்பத்திரிகையில் எல்லாமே வரும். அதே சமயத்தில், வெளி நபர்களின் படத் தயாரிப்புச் செய்திகளையும் அப்பத்திரிகை வெளியிட்டது. மாதம் இருமுறை தவறாமல் வெளிவந்து கொண்டிருந்த அப்பத்திரிகையின் பெயர் தான், 'சண்டமாருதம்!'
இதைப் போல், ஒரு பெயரை டி.ஆர்.சுந்தரம் ஒருவரால் தான் வைக்க முடியும். இந்த பத்திரிகை அச்சடிப்பில் எந்தவிதமான தாமதமும் ஏற்படக்கூடாதென்றே டி.ஆர்.சுந்தரம், 'லிட்டில் ஜெயன்ட்' என்ற ஒரு நவீன அச்சு இயந்திரத்தை அயல் நாட்டிலிருந்து வரவழைத்தார். இதனால், பத்திரிகை வேகமாக அச்சடிக்கப்பட்டது. நவீன வசதிகளுடன் இருந்த அந்த அச்சகம், சேலத்தில் மிகச் சிறந்த அச்சகம் எனப் பெயர் பெற்று இருந்தது.
'சண்டமாருதம்' பத்திரிகை, சினிமா உலகத்தாரிடையேயும், வாசகர்களிடமும், அமோக வெற்றி பெற்றது. இதில் தான், 'ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி' எனும் திரைப்படத்தின் கதை, தொடராக வந்தது. மக்கள் எல்லாரும் விரும்பிப் படித்தனர். பத்திரிகையின் சர்க்குலேஷனும் அதிகமாகியது.
எல்லா பகுதிகளையும் ஒழுங்குபடுத்தி விட்டு, அவர் தயாரிப்பில் முழு கவனம் செலுத்த ஆரம்பித்தார். ஸ்டுடியோவில் இருந்த முக்கிய டெக்னிஷியன்கள் எல்லாரும், எவ்வாறு ஒவ்வொரு துறையையும் சிறப்பாக நடத்தலாம் என்பதற்கான யோசனைகளை சனிக்கிழமையன்று ஒன்று கூடி பேசி, எழுதித்தர, அது ஸ்டுடியோவின் காரியதரிசியின் கவனத்திற்கு வரும். அவர் அதை முழுமையாக கவனித்து, தனியாக எழுதி, தன் நோட் புத்தகத்தை டி.ஆர்.சுந்தரத்திடம் சமர்ப்பிப்பார்.
இதுதான் ஒவ்வொரு வாரமும் நடைமுறையில் இருந்த வழக்கம். கேமரா, சவுண்டு என்று ஒவ்வொரு பகுதியும் காலத்திற்கேற்ப விருத்தியடைந்தது, இந்தக் கூட்டு முயற்சியால் தான், மாடர்ன் தியேட்டர்ஸ் படங்களைப் பொறுத்தவரை சவுண்டும், கேமராவும் பேசத் தகுந்த அளவுக்கு அவ்வளவு சிறப்பாக இருக்கும். இதற்கு காரணம், வாரந்தோறும் நடக்கும் அந்த ஆலோசனைக் கூட்டத்தின் விளைவு என்று தான் சொல்ல வேண்டும்.
அப்போது, மாடர்ன் தியேட்டர்சின் காரியதரிசியாக இருந்தவர், டி.ஆர்.சுந்தரத்தின் சகோதரர் கந்தப்ப முதலியாரின் புதல்வர் ஆர்.கே.சித்தையன். தன் படிப்பை முடித்தவுடன் உதவியாளராக வந்து சேர்ந்து விட்டார். இவரது மூத்த சகோதரர்தான் ஆர்.கே.பாலு. ஏறக்குறைய அவருக்கும் டி.ஆர்.சுந்தரம் வயதுதான் இருக்கும். அவர் தனக்கென்று ஒரு படக்கம்பெனியை துவங்கி, அதற்கு, 'பரிமளா பிக்சர்ஸ்' எனப் பெயரிட்டு, மாடர்ன் தியேட்டர்சுடன் கூட்டுச் சேர்ந்து படங்கள் எடுத்தார். அவற்றில் முக்கியமானவை விக்ரம ஊர்வசி, ஹரிஹரமாயா, சிவலிங்க சாட்சி ஆகியவை.
— தொடரும்.
ரா. வேங்கடசாமி

