
'குழந்தையும், தெய்வமும் கொண்டாடும் இடத்தில்; எடுப்பார் கைகளில் தெய்வம், பிள்ளையாயிருக்கும்' இவையெல்லாம், நம்நாட்டில் சொல்லப்படும் பழமொழிகள். இப்பழமொழிக்கு எடுத்துக்காட்டாய் விளங்கிய சம்பவம் இது:
விஜயநகர சாம்ராஜ்யத்தில், ராமராயர் என்பவர் ஆட்சி செலுத்திய காலம் அது. ஒரு நாள், அரசவை நடைபெற்ற போது, பானுதாசர் எனும் பக்தர், பாண்டுரங்கன் கோவிலுக்காக நிதி உதவி கேட்டு வந்தார். மன்னரோ, 'அன்னை பவானியை தவிர, வேறு எந்த தெய்வத்தையும் வணங்காதவன் நான்; அதனால், உங்கள் பண்டரிநாதருக்கு பொருள் உதவி செய்ய மாட்டேன்...' என்று மறுத்து விட்டார்.
மன்னனின் இறை பேதமையை நினைத்து, மன வேதனையடைந்த பானுதாசர், 'மன்னா... என்ன பேசுகிறீர்கள்... உங்கள் செல்வத்தை விட, அங்கே பண்டரிநாதர், பல மடங்கு செல்வத்தால் ஜொலித்து கொண்டிருக்கிறார்...' என்று சொல்லி, பண்டரிபுரத்தைப் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.
மன்னருக்கு கோபம் வந்து, 'நானும் பண்டரிபுரத்தைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன்; ஆனால், நீங்கள் சொல்வது போல, பூலோக வைகுண்டமாய் அப்படியே தங்கத்தில் ஜொலிப்பதாக கேள்விப்பட்டதில்லை. நீங்கள் சொல்வது பொய் என தெரிய வந்தால், உமக்கு தண்டனை நிச்சயம்...' என்றார்; கூடவே, பண்டரிபுரம் செல்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.
இதனால், கவலையில் ஆழ்ந்தார் பானுதாசர். அக்கவலை தீரும்படியாக, அன்று இரவே பானுதாசர் கனவில், ருக்மணிதேவி தரிசனம் தந்து, 'பக்தா... நீ கூறியபடியே, ராமராயனுக்கு, வைகுண்டம் போலவே காட்சி அருளுவோம்...' என்று கூறி மறைந்தாள்.
மறுநாள், மன்னர் ராமராயருடன் அனைவரும் புறப்பட்டு, பண்டரிபுரத்தை அடைந்தனர். அங்கே, பண்டரிபுரம் தங்கமயமாக ஜொலித்து, பூலோக வைகுண்டமாய் தக தகத்தது.
மன்னர் ஆச்சரியப்பட்டு, அப்படியே தரையில் விழுந்து வணங்கினார். அதன்பின், கைகளை கூப்பியபடியே கோவிலினுள் நுழைந்து, பண்டரிநாதனை தரிசித்தவர், தன்னை மறந்த நிலையில் இருக்க, சிறிது நேரத்தில், பழையபடியே மாறியது பண்டரிபுரம்.
ஆச்சரியத்தில் ஆழ்ந்த மன்னர், பக்தன் ஒருவனுடைய பக்திக்காக, பாண்டுரங்கனே, பண்டரிபுரத்தை பூலோக வைகுண்டமாக ஜொலிக்க செய்திருக்கிறார் என்பது புரிந்து, உடல் சிலிர்த்தார்.
உடனே, கோவிலுக்குள் ஓடி, பாண்டுரங்கனின் பத்ம பாதங்களை கட்டி தழுவி, அழுதார்.
தூய்மையான பக்தி கொண்ட பக்தனுக்காகவும், பக்தியிலேயே பேதம் பார்த்த மன்னர் திருந்துவதற்காகவும், பாண்டுரங்கன் நடத்திய லீலை இது!
தூய்மையான, பேதமற்ற பக்தியை அருளுமாறு வேண்டுவோம்; பரமன் அருளுவார்!
பி.என்.பரசுராமன்
திருமந்திரம்!
கறுத்த இரும்பே கனகமது ஆனால்
மறித்து இரும்பாகா வகையது போலக்
குறித்த அப்போதே குருவருள் பெற்றால்
மறித்துப் பிறவியில் வந்து அணுகானே!
விளக்கம்: கறுப்பாக இருக்கக் கூடிய இரும்பு, ரசவாத வித்தை மூலம், தங்கமாக மாறும்; அவ்வாறு மாறிய தங்கம், பழையபடி இரும்பாக மாறாது. அதுபோல, தீயகுணங்கள் கொண்டவனாக இருந்தாலும், குருநாதருடைய அருளால் பக்குவம் பெற்றால், அவன் மறுபடியும் பூமியில் பிறக்க மாட்டான்!
கருத்து: குருவருள், குறை தீர்த்து முக்தி அளிக்கும்.