
காலை நேரம் -
நடைபயிற்சி சென்றோர், விளையாட்டில் ஈடுபட்டோர் மற்றும் உடற்பயிற்சி செய்தோர் என, பலரும், விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் உள்ள, தாய் வழி இயற்கை, உணவகத்தில் கூடியிருந்தனர்.
கடையில், முளை கட்டிய பயறு, வெந்தயக் களி மற்றும் வரகரசி கஞ்சி என்று இயற்கை உணவை சாப்பிட்டு, மூலிகை, 'சூப்'புகளை குடித்து, தெம்பாக சென்றனர்.
சிரித்த முகத்துடன், சில பெண்கள், சுறுசுறுப்பாக வாடிக்கையாளர்களை கவனித்துக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர் தான், ஈஸ்வரி.
'தினமலர் நாளிதழில் இருந்து வருகிறேன்...' என்று கூறினேன்.
அவரது முகத்தில் அப்படி ஒரு பிரகாசம்.
'அவசியம்... அந்துமணி சாரை பத்தி, ஒரு அஞ்சு நிமிஷம் பேசணும்... காத்திருக்க முடியுமா...' என்றார்.
'எவ்வளவு நேரமானாலும் காத்திருக்கிறேன்...' என்றேன்.
வாடிக்கையாளர்களுக்கு தேவையானதை கொடுத்து, சிறிது நேரத்தில் வந்தார்.
பேச ஆரம்பித்ததுமே, 'என்னோட சந்தோஷமே, அந்துமணி சார் தான்...' என்று சொல்லி, பின், தன் கதையை கூற ஆரம்பித்தார்...
'ரொம்ப கஷ்டப்படற குடும்பத்துல இருந்து வந்தவ... 8ம் வகுப்புக்கு மேல வீட்டுல படிக்க வைக்கல... தினக்கூலிக்கு, தீப்பெட்டி ஒட்டுற கம்பெனிக்கு அனுப்பிட்டாங்க...
'என்னோட சந்தோஷமெல்லாம், பேப்பர் படிக்கறது தான்... ஆனா, தினமும் பேப்பர் வாங்க முடியாது. அதனால, வாரா வாரம், ஞாயிற்றுக் கிழமை மட்டும் வாங்கி படிப்பேன்... அதிலும், 'வாரமலர்'ன்னா எனக்கு ரொம்ப உயிர்... அந்துமணியோட கேள்வி - பதிலையும், பா.கே.ப., பகுதியையும் படித்து விட்டு தான், அடுத்த வேலையை தொடருவேன்...
'அவர் எழுத்தின் மீதான பாசம், பல ஆண்டுகளாக இருக்கிறது. அவரை வாழ்த்தி, அவர் மீது அக்கறைப்பட்டு, கோபப்பட்டு என்று இதுவரை, ஆறு முறை கடிதம் எழுதியுள்ளேன். என் ஆறு கடிதத்திற்கும், அவர் பதில் தந்துள்ளார் என்பது தான், எனக்கு பெருமை.
'ஒரே மகன், படிக்கிறான். பிளாஸ்டிக் பொருள் சேகரித்து, வியாபாரம் செய்கிறார், கணவர். அவர் வருமானத்தில் தான், குடும்ப வண்டி ஓடிக்கொண்டிருந்தது. 'பிளாஸ்டிக், சுற்றுச்சூழலுக்கு கெடுதி...' என்று, அந்துமணி சார் தொடர்ந்து எழுதி வருவதால், 'அந்த தொழில் வேண்டாம்யா...' என்று சொன்னேன். அவரும், விட்டு விட்டார்.
'வேறு தொழில் பார்க்கும் வரை, குடும்ப வண்டி ஓட வேண்டுமே என்ற நிலையில் தான், என்னைப் போலவே, அந்துமணியை நேசிக்க கூடிய, 'தாய் வழி இயற்கை உணவக' உரிமையாளர் மாறனை சந்தித்தேன். 'நீ அந்துமணி வாசகியாம்மா... அந்த ஒரு தகுதி போதும்மா...' என்று சொல்லி, என்னை வேலைக்கு சேர்த்துக் கொண்டார், மாறன்.
'இப்ப, நானும், என் குடும்பமும் நன்றாக இருக்கோம்... ஆனா, எனக்கு ஒரு சந்தேகம்... நாங்கல்லாம் நினைக்கிற மாதிரி, அந்துமணி சார், சாதாரண ஆள் இல்லீயாமே... எல்லாரும் பேசிக்கறாங்க...
'உங்கள கேட்டா, நீங்க கரெக்டா சொல்வீங்கன்னு தான், உங்கள காக்க வச்சுட்டேன், மன்னிக்கணும்... சொல்லுங்க, அவர் முதலாளியா...' என்று கேட்டார்.
'எவ்வளவு சிரமப்பட்டாலும், தொடர்ந்து, 'தினமலர் - வாரமலர்' இதழ் வாங்கும் நீங்கள் தான், அவருக்கு, முதலாளியம்மா!' என்று கூறி, விடை பெற்றேன்.
- எல்.எம்.ராஜ்

