/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
சீனாவை சுற்றிப் பார்க்க போனேன்... (3)
/
சீனாவை சுற்றிப் பார்க்க போனேன்... (3)
PUBLISHED ON : ஜன 20, 2019

'குரூஸ்' கப்பலில், 'குபீர்' சிரிப்பை வரவழைத்த விஷயத்தை பற்றி சொல்வதாக, கடந்த வாரம் எழுதியிருந்தேன்.
அது வேறு ஒன்றும் இல்லை... 'இங்கே, 'ஷாப்பிங்' பண்ணலாம். காபி கடை அங்கே இருக்கிறது. மேலே போனால் காற்று வாங்கியபடியே கட்டடங்களை பார்க்கலாம். 'பாத்ரூம்' போக விரும்புபவர்கள், அதோ அங்கே போகலாம்...' என்றார், வழிகாட்டி.
ஒரு பயணி, மிக சீரியசாக, 'பாத்ரூமிற்கு எப்போது போகலாம்...' என்று கேட்டார்.
சிரிக்காமல், 'அது உங்களது விருப்பம் மற்றும் நெருக்கடியை பொறுத்தது...' என்றார், வழிகாட்டி. அனைவரும், வாய் விட்டே சிரித்து விட்டனர்.
மூன்றாவது நாள், ஆதி சீனர்கள் வாழ்ந்த ஆற்றங்கரை நகரமான, 'வாட்டர் டவுன்'க்கு அழைத்துச் சென்றனர். ஒரு சிறிய ஆற்றங்கரையொட்டி, நிறைய பெட்டிக்கடைகள், விதவிதமான உணவுகள். பெரும்பாலும், அசைவம் தான். நன்றாக ரசித்து சாப்பிடுகின்றனர். சீன உணவை சாப்பிடவும், ஆற்றில் படகு பயணம் செல்லவும் ஏற்ற இடம். ஆனால், 'இதற்காகவா இவ்வளவு துாரம் பஸ்சில் பயணித்து வந்தோம்...' என்று சிலர் அலுத்துக் கொள்ளவும் செய்தனர்.
மாலை, 6:00 மணிக்கு ரயிலை பிடித்து, மறுநாள் காலை, 9:00 மணிக்கு, 'எக்சீயன்' நகரை அடையும்படியான பயணத் திட்டம்.
அங்குள்ள ரயில் நிலையம், பிரமாதமாக பராமரிக்கப்படுகிறது. நம்மூர் விமான நிலையத்துடன் கூட ஒப்பிட முடியாது; அதேபோல், ரயிலும் சூப்பர்.
அங்குள்ள ரயிலில், 'அன் ரிசர்வ்டு' அதாவது, முன்பதிவு இல்லாத பயணியர்களுக்கான பெட்டியே கிடையாது. யாராக இருந்தாலும், முன்பதிவு செய்திருக்க வேண்டும். ரயில், சரியான நேரத்திற்கு வந்து செல்கிறது. ரயில் வருவதற்கு, 20 நிமிடத்திற்கு முன் தான், பிளாட்பாரத்திற்குள் அனுமதிக்கின்றனர்.
ரயில், புறப்படும் நேரம் வந்ததும், எலெக்ட்ரானிக் கதவு மூடிக்கொள்கிறது. பின், அடுத்த நிலையம் வந்தால் மட்டுமே திறக்கிறது.
ஒவ்வொரு பெட்டிக்கும், ஒரு பெண் அதிகாரி உண்டு. பிரமாதமான உடையில் இருக்கும் அவர் தான் டிக்கெட்டை, 'செக்' செய்கிறார். ரயிலை கூட்டி, சுத்தம் செய்கிறார். பயணியரிடம் இருந்து குப்பையை சேகரிக்கிறார். இரவெல்லாம் துாங்காமல், அவருக்கான இடத்தில் பயணிக்கிறார்.
பயணியர், அழைப்பு மணி கொடுத்தால், உடனே வந்து, தேவைகளை தீர்க்கிறார். பயணியர் இறங்கவும், அவர்களது, 'லக்கேஜ்'களை இறக்கி வைத்து உதவுகிறார்; எல்லாவற்றையும் ஒரு சின்ன புன்னகையுடன் செய்கிறார்.
நம்மூரில் கொஞ்சமும் எதிர்பார்க்க முடியாத சேவை இது.
ரயிலே, நட்சத்திர ஓட்டல் அளவுக்கு இருந்ததால், அனைவரும் அதிலேயே முகம் கழுவி, தங்களை அலங்கரித்துக் கொண்டனர். ரயிலிலிருந்து இறங்கியதும், அங்கிருந்து, புது வழிகாட்டி ஸ்நோவுடன், புது பஸ்சில், 'டெரகோட்டா' பொம்மைகளை பார்க்க பயணித்தோம்.
சீனாவை ஆண்ட அரசர் ஒருவர், செய்து வைத்த போர் வீரர்கள் வடிவிலான, சுடு மண் பொம்மைகள் தான், இங்கு முக்கியம். உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த சுடு மண் பொம்மைகளை, பார்க்க, சுற்றுலா பயணியர் வருகின்றனர்.
சீனப் பெருஞ்சுவர் போல, இந்நகரை சுற்றி கட்டியுள்ள சுவர், ஒரு சுற்றுலா தலமாக பயணியர்களுக்கு காட்டப்படுகிறது. அங்கு போகும்போது, நல்ல மழை. மழையில் ஆனந்தமாக நனைந்தபடி, சைக்கிளில் உலா வருகின்றனர், சீனர்கள்.
சீனாவின் அரச வம்சத்து வளர்ச்சியை விளக்கும் வகையில், இரவு, பிரமாண்டமாக ஒரு காட்சி நடந்தது. ஷாங்காய் நகரத்தில் இருந்தது போல இல்லை; என்றாலும், இசையும் - நடனமுமாக வேறு விதமான காட்சி. நிறைய செலவு செய்து நடத்துகின்றனர்.
இரவு, ஓட்டலில் தங்கல். மறுநாள் காலை, 'பகோடா' என்று சொல்லப்படும், புத்தர் கோவிலுக்கு சென்றோம்.
மதியம், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புல்லட் ரயில் பயணம். புறப்பட்ட இரண்டு நிமிடத்திற்குள், 300 கி.மீ., வேகத்தை ரயில் எட்டிப் பிடிக்கிறது. ஆனால், அந்த வேகம் எதுவுமே உள்ளே இருப்பவர்களுக்கு தெரியவில்லை. 'டிஸ்பிளே போர்டை' பார்த்து தான், ரயில் போகும் வேகத்தை புரிந்து கொள்ள முடிகிறது.
ஜன்னல் வழியாக பார்க்கும்போது தான், சீனாவின் விவசாய உலகம் புரிகிறது. காய்ந்த பூமியை எங்கும் காண முடியவில்லை. எல்லா பகுதியும் பசுமையாக இருக்கிறது. ஏதோ ஒன்று விளைந்து கொண்டிருக்கிறது.
இரண்டு மணி நேரத்தில், 'லுாயிங்' வந்து விட்டது.
லுாயிங்கின், பிரபலமான புத்தர் கோவிலை பார்த்துவிட்டு, நீண்ட பஸ் பயணத்திற்கு பின், செங்காவ்விற்கு இரவு வந்து சேர்ந்தோம். அந்த மாநிலத்திலேயே சிறப்பான, 'யுடா' ஐந்து நட்சத்திர ஓட்டலில் இரவு தங்கல். மாளிகையை போல இருந்த அந்த நட்சத்திர ஓட்டலில், காலை உணவு மட்டுமே, 200 வகை. ஆனால், இதெல்லாவற்றையும் மிஞ்சக்கூடிய வகையில், ஒருவரை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது; யார் அவர் என்பதை, அடுத்த வாரம் சொல்கிறேன்.
— தொடரும்
'லுாயிங்' புத்தர் கோவில்!
சமீபகாலமாக, பிரபலமாகி வரும், புத்தர் கோவில் இது. ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள மலையில், இயற்கையாகவும், செயற்கையாகவும் அமைக்கப்பட்ட, 'லுாயிங்' என்ற இடத்திலுள்ள, ஆயிரக்கணக்கான புத்தர் சிலைகளின் அழகையும், அமைதியையும் ரசிக்க, லட்சக்கணக்கில் பயணியர் வருகின்றனர்.
புத்தர் சிற்பங்கள், 3 கி.மீ., துாரத்திற்கு அமைந்திருந்ததை, நடந்தே சுற்றிப் பார்த்தோம்; அருமையான இடம்; நேரம் போனதே தெரியவில்லை. சீனாவில், 'மிஸ்' பண்ணக்கூடாத இடங்களில், இந்த லுாயிங் ஆற்றங்கரையும் ஒன்று.
இரண்டாம் உலகப்போரின் போது, குறி வைத்து, இந்த இடத்தை ஜப்பானியர் சேதப்படுத்தினராம்! சேதத்திலிருந்து தப்பிய புத்தர் சிலைகளுடன், சேதப்பட்ட சிலைகளும் இருக்கின்றன; இவை, போரின் கொடூரத்தை எடுத்துக் கூறியபடி உள்ளன.
நடக்க முடியாதவர்களுக்கு, 'பேட்டரி' கார் இருக்கிறது; படகு இருக்கிறது. அமைதியான காற்றில், ரம்மியமான சூழலில், படகில் பயணித்தபடியே, புத்தரின் அழகை ரசிக்கலாம்.
- கலைச்செல்வி

