
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
யார் வரப் போகிறீர்கள்!
வறுமையின் சுவடுகளாக
வறண்டு போனவர்களுக்கு
ஆறுதல் சொல்ல
யார் வரப் போகிறீர்கள்...
தேயும் நம்பிக்கையை
உயிரில் தேக்கி
திண்டாட்டங்களுக்கு மத்தியில்
புதைந்து போகும் புனிதர்களுக்கு
கை கொடுக்க
யார் வரப் போகிறீர்கள்...
காந்தீய போராட்டங்களை
ஆயுதங்களாக ஏந்தியும்
அரண்மனை வாசல்கள்
அடைக்கப்பட்டே கிடப்பதால்
சமாதிகளாகும் சக்கரவர்த்திகளுக்கு
சரித்திரம் எழுத
யார் வரப் போகிறீர்கள்...
வள்ளுவனின் எழுதுகோலுக்கு
வல்லமை சேர்த்த
உழவனின் ஏர்முனைக்கு
ஏற்பட்டுள்ள புற்றுநோய்க்கு
வைத்தியம் செய்ய
யார் வரப் போகிறீர்கள்...
தேர்தல் தோறும்
வாக்குறுதிகள் அணிவகுப்பில் மயங்கி
கட்டியிருந்த கோவணத்தை
கழற்றிக் கொடுத்துவிட்டு
நிர்வாணமாக நிற்கும் உழவர்களின்
மானத்தை காக்கும்
அவதாரம் எடுக்க
யார் வரப் போகிறீர்கள்!
- கவிதாசன், கோவை.

