sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

தனிமை இனிமை!

/

தனிமை இனிமை!

தனிமை இனிமை!

தனிமை இனிமை!


PUBLISHED ON : ஜன 20, 2019

Google News

PUBLISHED ON : ஜன 20, 2019


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்று சனிக்கிழமை -

கடிகார முள், காலை, 9:00 மணியை நெருங்கியது.

அவசர அவசரமாய் கொடியில் கிடந்த வெள்ளை வேட்டியையும், கசங்கியிருந்த ஜிப்பாவையும் எடுத்து உதறி, உடுத்திக் கொண்டார். ஒரு துணிப்பையில், ஓய்வூதிய அட்டையையும், வங்கிக் கணக்குப் புத்தகத்தையும் எடுத்து வைத்தார், ராகவன்.

புறப்படுவதற்கு முன், வழக்கம்போல, வீட்டின் கதவுகளையும், ஜன்னல்களையும் திறந்து வைத்து, செருப்பை மாட்டியபடி நகரத்தில் இருக்கும், வங்கிக்குப் புறப்பட்டார்.

பெரும்பாலான நகர பேருந்துகள் காலியாகவே இருந்தன. நிதானமாய் ஒரு பேருந்தில் ஏறியவர், ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தார். பேருந்தின் வேகத்தில், முகத்தில் அடித்த, 'ஜில்' காற்று, அவர் கண்களை இதமாய் மூடச் செய்தது.

பணி ஓய்வுபெற்று, ஒரு மாதத்தில், சொந்த வீட்டில் நடந்த சம்பவங்களை அசை போட்டார், ராகவன்.

'மழையில, குழந்தைய பள்ளிக்கு அனுப்ப வேண்டாம்ன்னு சொன்னேன்... கேட்கல; இப்போ, சளி, தும்மல்... வயசானவன், அனுபவத்துல சொல்றத, எங்க கேட்கறீங்க...'

'குழந்தையப் பார்த்துக்க பெத்தவங்களுக்குத் தெரியாதா... எது நல்லது, எது கெட்டதுன்னு எங்களுக்கும் தெரியும்... நீங்க தான், அவன் உடம்புக்கு ஒத்துக்காத ஐஸ்கிரீம் மற்றும் சாக்லெட் எல்லாம் வாங்கிக் கொடுத்து, கெடுத்து வச்சிருக்கீங்க...'

'நுாடுல்சையும், பீட்சாவையும் வாங்கி கொடுத்து கெடுக்கும்போது, அது தெரியலையா...'

இப்படியே ராகவனுக்கும், மருமகள் கல்பனாவுக்கும் வாக்குவாதம் தொடர்ந்தது.

சத்தம் கேட்டு அறையிலிருந்து வெளியே வந்த ரகு, 'ஏம்பா... கொஞ்சம் வாய வச்சுக்கிட்டு சும்மா இருக்க மாட்டீங்களா... எல்லாத்துக்கும் பதில் கொடுக்கணுமா...' என்றான், கோபமாக.

அறைக்குள் சென்று கதவை தாழிட்டு, அமைதியாக சிறிது நேரம் அழுது தீர்த்தார், ராகவன். இந்த வைத்தியம், அவர் மனைவி திலகா சொல்லிக் கொடுத்தது தான். அன்று இரவு முழுவதும் உறக்கமின்றி புரண்டு புரண்டு படுத்ததால், உடல்வலி வந்தது தான் மிச்சம்.

தினமும், இது போன்ற சண்டை சச்சரவுகள் தொடர்ந்தன.

சில நாட்களுக்குப் பின், வேலையிலிருந்து வீடு திரும்பிய கணவனிடம், 'என்னங்க... நான் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க... உங்க அப்பா செய்யறது, கொஞ்சம் கூட நல்லா இல்ல... நாம வேலைக்குப் போன பின், தெருவுல சும்மா இருக்குற வயசானவங்களை வீட்டுக்குள் அழைச்சு வந்து அரட்டை அடிக்கறாராம்... சத்தம் நாலு தெருவுக்கு கேட்குதாம்...

'போதாக்குறைக்கு, அவங்களோட சேர்ந்து, 'மூத்த குடிமக்கள் நலச்சங்கம்'ன்னு ஒண்ணு ஆரம்பிக்கப் போறாங்களாம்... தெருவுல இருக்குற என் தோழிங்க, சொல்லி வருத்தப்படறாங்க. இவருக்கு ஏங்க இந்த வீண் வேலை... அவரை கொஞ்சம் அடங்கி இருக்கச் சொல்லுங்க...' என்றாள், கல்பனா.

நண்பர்களோடு நடை பயிற்சிக்குச் சென்றிருந்த ராகவன், வீட்டுக்குள் நுழைந்தார்.

'ஏம்பா... சும்மாவே இருக்க மாட்டீங்களா... உங்களால தினமும் ஏதாவது ஒரு பிரச்னை. மூணு வேள சாப்பாடு கிடைக்குதுல்ல... வயசான காலத்துல, போடறத சாப்பிட்டுட்டு, ஒரு மூலையில கிடக்கறத விட்டுட்டு, ஏன் வீண் வேலையெல்லாம் பாக்கறீங்க... ஓய்வுப்பெற்ற பின், உங்களால என் நிம்மதியே போச்சு...' என்று கத்தினான், ரகு.

சில நாட்களாகவே, பெரும் கவலையிலும், குழப்பத்திலும் இருந்த ராகவன், அன்று நிதானமாய் யோசித்து ஒரு முடிவுக்கு வந்தார். 'இதற்கு மேலும் இந்த வீட்டிலிருப்பது நல்லதல்ல...' என்று தீர்க்கமாக, அன்றே வீட்டை விட்டு வெளியேறியவர் தான். இப்போது இருக்கும் வீட்டில் தனியாக குடியேறி, இரண்டு மாதங்கள் கடந்து விட்டது.

பேருந்து ஓட்டுனர் திடீரென போட்ட பிரேக், உறக்கத்தில் இருந்தவர்களை உலுக்கி எழுப்பியது. கண் விழித்த ராகவன், தவறி கீழே விழுந்த பையை கையில் எடுத்து, அவர் இறங்க வேண்டிய நிறுத்தத்தில் இறங்கினார்.

வங்கியில், 60 வயதைக் கடந்த பலரும், இருக்கையில் வரிசையாய் அமர்ந்திருந்தனர்.

வரிசையில் அமர்ந்திருந்த ராகவன், கைத்தடியோடு வந்த முதியவருக்கு இடம் கொடுத்து அமர வைத்தார். மேலும், அவருக்குத் தேவையான உதவிகளையும் செய்து கொடுத்து, அனுப்பி வைத்தார்.

இதையெல்லாம் துாரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த ஒருவர், வேகமாய் ராகவனை நோக்கி வந்தார்.

''டேய் ராகவா... நீ இன்னும் மாறவே இல்லடா,'' என்ற குரல் கேட்டு, ராகவன் திரும்ப, அவரின் நெருங்கிய நண்பர், தியாகராஜன் நின்றிருந்தார்.

''எப்படிடா இருக்கே... இரண்டு முறை உன் வீட்டுக்கு வந்தேன்... உன் மகனும், மருமகளும் சரியா பதில் சொல்லல... ஏதோ பிரச்னைன்னு தெரிஞ்சிக்கிட்டேன். பிறகு, பலமுறை உன்னைத் தொடர்பு கொள்ள முயற்சித்தேன். ஆனா, முடியலடா ராகவா,'' என்றார், வருத்தமாய்.

''அது கிடக்கட்டும்... நீ எப்படி இருக்கே,'' என்றார், ராகவன்.

''ஏதோ இருக்கேன்... மாடிப்படி ஏற முடியல, மூட்டு வலி, ஜவ்வு தேஞ்சிடுச்சாம்... 'பிரஷர், சுகர்' எல்லாம் இருக்கு... வேளா வேளைக்கு மாத்திரை மருந்துன்னு காலம் போகுது,'' என்றார், சலிப்பாக.

ஓய்வூதிய பணம், வங்கி புத்தகத்தில் பதிவானதும், செலவுக்கு, சிறிது பணம் பெற்றுக் கொண்டார், ராகவன்.

இருவரின் வங்கி வேலையும் முடிந்தது.

''டேய் தியாகு... வீட்டுக்கு வந்துட்டு போடா... நகர பேருந்தை பிடிச்சா, அரைமணி நேரம் தான் ஆகும்,'' என்றார், ராகவன்.

உடன்பட்ட நண்பனுடன் பேசியபடியே வந்ததில், கடலை உருண்டையையும், கமர்கட்டையும் மறந்து விட்டார். உடனே, அருகில் இருந்த ஒரு கடைக்கு ஓடிச் சென்று, வாங்கி வந்தார்.

''டேய் ராகவா... இந்த வயசுல உன்னால இதையெல்லாம் கடிச்சு சாப்பிட முடியுதா,'' என்றார், தியாகராஜன்.

அதற்கு பதில் ஏதும் சொல்லாமல் சிரித்தார், ராகவன்.

சிறிது நேரத்தில் இருவரும், பேருந்து நிறுத்தம் வந்தனர். கூட்டம் குறைவாக இருக்கும் பேருந்துக்காக காத்திருந்து, அதில் ஏறி அமர்ந்தனர்.

''என்னடா வாழ்க்கை இது... ஏன்டா இப்படி தனியா... என்ன ஆச்சு,'' என்று ஆரம்பித்தார், தியாகு.

''அப்பவே என் ஆபீசர் சொன்னாருடா... 'யாரையும் நம்பாதீங்க... பணி ஓய்வுக்கு பிறகு வர்ற பணத்தை முழுசா கொடுத்து ஏமாந்துடாதீங்க... அப்புறம், உங்கள கவனிக்காம, அவங்க தேவைக்கு மட்டுமே வருவாங்க... பேரப்பிள்ளைங்க விஷயத்துல எல்லாம் அதிகம் தலையிடாதீங்க... அது, மருமகளுக்குப் பெரும்பாலும் பிடிக்காது...' இப்படி, நிறைய, அறிவுரை சொல்லி தான் அனுப்பினார். ஆனா, நான் தான் கேட்கல,'' என்றார், ராகவன்.

கலங்கியிருந்த கண்களைத் துடைத்து, மீண்டும் பேசினார்...

''வதவதன்னு இல்லாம, வாழ ஒண்ணே ஒண்ணுன்னு பெத்து வளர்த்து, அவனுக்காகவே வாழ்ந்து போய்ச் சேர்ந்துட்டா, என் திலகம். உயிர் பிரியற நேரத்துல, வீட்டை அவன் பேருக்கு, உடனே எழுதச் சொல்லி சத்தியம் வாங்கிட்டா... நானும், தெய்வ வாக்கா எடுத்து, அப்படியே செய்தேன். அது போதாதுன்னு, பணி ஓய்வின் போது வந்த பணத்த, அவனுக்கும், பேரனுக்கும் பிரிச்சு வங்கியில போட்டுட்டேன்.''

பழங்கதைகளை பேசியபடியே வந்ததில், அவர்கள் இறங்க வேண்டிய இடம் வந்தது. பேருந்தில் இருந்து இறங்கி, சில நிமிடத்தில் இருவரும், வீடு வந்து சேர்ந்தனர்.

'மூத்த குடிமக்கள் நலச் சங்கம்' என்ற பெயர்ப்பலகை மாட்டப்படிருந்த அந்த வீடு, திறந்தே கிடந்தது. வீட்டினுள், வயதான சிலரும், சிறுவர்கள் பலரும் அமைதியாக விளையாடிக் கொண்டிருந்தனர்.

''ராகவா... இவங்க எல்லாம் யாருடா... வீடு திறந்தே கிடக்கு,'' என்றார், தியாகராஜன்.

ராகவனைக் கண்டதும் வேகமாய் ஓடி வந்த, இரு சிறுவர்கள், ''தாத்தா... இன்னக்கி, 'கேரம்'ல நாங்க தான் ஜெயிச்சோம்,'' என்றனர்.

சிரித்த ராகவன், கடலை உருண்டை, கமர்கட் பாக்கெட்டைப் பிரித்து, விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களுக்குக் கொடுத்தார். பின், வீட்டிலிருந்தவர்களுக்கு தியாகராஜனை அறிமுகம் செய்து வைத்தார்.

''இவங்க எல்லாருமே, என் உறவுகள் தான். எப்போ வேணும்னாலும் வருவாங்க, போவாங்க... இந்த வீடு எப்பவும் திறந்தே இருக்கும். இங்க யாரிடமும் மொபைல் போன் இல்ல. ஓய்வு நேரத்துல, இங்க வருகிற பிள்ளைங்களுக்குப் பாடங்களைக் கற்றுக் கொடுக்கிறோம்... விளையாடறோம்...

''போட்டிகள் நடத்தி பரிசு கொடுக்கிறோம்... இலவச மருத்துவ முகாம் நடத்தறோம்... இந்த தனிமை பயனுள்ளதா இருக்குடா தியாகு,'' என்றார், ராகவன்.

''பெத்த பிள்ளைகளோட எதிர்காலத்துக்காக, ஓடி ஓடி உழைத்தே, நாட்களைக் கழித்த எங்களைப் போன்றவர்களுக்கெல்லாம், இந்த இடம் ஒரு சரணாலயமா இருக்கு... சந்தோஷமா இருக்கோம்... 'பிரஷர்' இல்ல... 'சுகர்' இல்ல,'' என்றார், அங்கிருந்த ஒரு பெரியவர்.

''மொபைல்போன் ஆதிக்கம் செலுத்தற இந்த கால கட்டத்துல... 'பேஸ் புக், வாட்ஸ்- ஆப்' வாயிலாகக் கிடைக்கும், முகம் தெரியாத உறவுகளுக்கு தரும் முக்கியத்துவத்தை கூட, வீட்டில் நம்மைச் சுற்றியுள்ள உண்மையான உறவுகளுக்கு இன்றைய இளம் தலைமுறை கொடுக்கறதில்ல...

''இதனால, பல உறவு முறைகளின் அருமை பெருமை தெரியாமலேயே போய்விட்டது. இந்த நிலையில், வீட்டில் இருக்கறதும் ஒண்ணு தான்; இல்லாததும் ஒண்ணு தான்,'' கண்கள் கலங்கிய நிலையில் பேசினார், மற்றொருவர்.

''டேய் ராகவா... இப்போ இருக்குற சட்டத்துல, பெத்தவங்கள கவனிக்காம தன்னந்தனியா கைவிட்டா, பிள்ளைங்களுக்கு மூணு மாச சிறை தண்டனையும், 3,000 ரூபாய் அபராதமும் உண்டு... நீ, சரின்னு ஒரு வார்த்தை சொல்லு... வழக்கு பதிவு பண்ணி, தண்டனை வாங்கிக் கொடுக்கலாம்,'' என்றார், தியாகு.

''அதெல்லாம் வேண்டாம்டா தியாகு... சூழல், சில விஷயங்களத் தானாவே சரி செஞ்சிடும்... நம் வாழ்க்கை, யார் கையில் இருக்கணும்ங்கறத விட, எப்படி சிறப்பா போகுதுங்கறது தான் முக்கியம். நான் இங்க சந்தோஷமா தான் இருக்கேன்... மகிழ்ச்சி என்பது ஒரு மன நிலைடா...

''அதிகாலையில நடை பயிற்சி செய்யறேன்... சரியான நேரத்துல துாங்கறேன்... சரியான நேரத்துல எழுந்துடறேன்... நினைச்சத சாப்பிடறேன்... கடந்த காலம் போய் விட்டது... வருங்காலம் என்பது நிச்சயம் இல்லை. எனவே, இந்த கனப்பொழுதை எப்படி பயனுள்ளதா வாழணும்ன்னு பழகிக் கொண்டேன். இந்தத் தனிமை எனக்கு இனிக்குதுடா தியாகு,'' என்றார், ராகவன்.

சிறிது நேரம் வாயடைத்து நின்ற தியாகராஜன், விடைபெறுவதற்கு முன், மூத்த குடிமக்கள் நலச்சங்க உறுப்பினர் படிவத்தைப் பெற்று, வாசலில் வைக்கப்பட்டிருந்த கரும்பலகையைக் கவனித்தார்.

அதில், 'இன்றைய சிந்தனை' என்ற தலைப்பில், 'உறவுகளோடு இருக்கும்போது, இறைவனின் பார்வை மட்டும் உன் மீது இருக்கும். ஆனால், தன்னந்தனியே நிற்கும்போது, இறைவனே உன்னோடு இருப்பான்...' என்று எழுதப்பட்டிருந்தது.

பூபதி பெரியசாமி






      Dinamalar
      Follow us