/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
நூற்றாண்டு விழா நாயகன் - பி.யு. சின்னப்பா
/
நூற்றாண்டு விழா நாயகன் - பி.யு. சின்னப்பா
PUBLISHED ON : மே 01, 2016

மே 6, 1916ல் பிறந்த நடிகர் பி.யு.சின்னப்பாவின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
அன்று, புதுக்கோட்டையில் உள்ள சாமியார் மடத்தின் வாசலில், கார் ஒன்று வந்து நின்றது. அதிலிருந்து, கோட்டும், சூட்டுமாக ஒரு மனிதர் இறங்கினார். அவர் தேடி வந்த சாமியார், மூலையில் மவுனமாக அமர்ந்திருந்தார். அவர் கையை பிடித்து, 'சின்னசாமி... நீ இருக்க வேண்டிய இடம் இந்த சாமியார் மடம் இல்ல; கலை உலகம். மேன் இன் த அயர்ன் மாஸ்க் என்ற கதைய தழுவி, உத்தம புத்திரன்ங்கிற படத்தை எடுக்கப் போறேன். அதில், நீ தான், கதாநாயக மற்றும் வில்லன். என்னோடு புறப்பட்டு சேலம் மாடர்ன் தியேட்டர்சுக்கு வா...' என்றார், ஐரோப்பிய உடையில் இருந்த அந்த மனிதர். சின்னசாமி என்று அழைக்கப்பட்டவர், பி.யு.சின்னப்பா; அவரை அழைத்தவர்,
டி.ஆர்.சுந்தரம்!
முதல் படத்தில் வில்லனாக நடித்த பி.யு.சின்னப்பா, அடுத்தடுத்த படங்களில், சரியான வேடங்கள் கிடைக்காததால், விரக்தி அடைந்து, சாமியார் ஆகி, புதுக்கோட்டை சாமியார் மடத்தில் தஞ்சம் புகுந்தார். அவர் சாமியாராக நீடித்து இருந்தால், தமிழகம் உன்னதமான ஒரு கலைஞனை இழந்திருக்கும்.
மதுரை, 'ஒரிஜனல் பாய்ஸ் கம்பெனி' என்ற நாடக மன்றம் தந்த கலைமாமணி, பி.யு. சின்னப்பா, சிறந்த பக்திமான். 'பக்தி கொண்டாடுவோம்...' என்ற பாடலை பாடிய படி தான், மேடையில் ஏறுவார்.
மேடையில் அவர் பாடிய தத்துவ பாடல்களும், ஏற்று நடித்த புராண கதாபாத்திரங்களும் அவருள் ஆன்மிக உணர்வுகளை, தட்டி எழுப்பியதால், சினிமாவில், புகழ் அடைந்த பின்பும் கூட, ஆண்டுக்கு ஒருமுறை என, தொடர்ந்தாற் போல், 40 நாட்கள் மவுன விரதம் இருப்பார்.
கிருஷ்ணபக்தி படத்தில், சில காட்சிகளில், இவர் முகத்தில் அருள் ஒளி வீசுவதை பார்க்கலாம். ஆண்டவனை பற்றி பாடும் போது, மெய் மறந்து பாடுவார்.
தமிழ் சினிமாவில், முதன் முதலில் மகாகவி பாரதியின் பாடலை பாடியவர், சின்னப்பா. 'செந்தமிழ் நாடெனும் போதினிலே... இன்ப தேன் வந்து பாயுது காதினிலே...' என்ற பாடலை, உத்தமபுத்திரன் படத்தில் பாடினார்.
எப்போதும், கதர் ஆடை அணியும் இவர், காங்கிரஸ் அனுதாபி. பாரதியாருக்கு மணிமண்டபம் கட்ட, கல்கி நிதி திரட்டிய போது, 200 ரூபாய் கொடுத்தார். அந்நாளில் அது பெரிய தொகை!
பாடுவதுடன், நடிப்பாற்றல், சிலம்பம் மற்றும் சுருள் பட்டா போன்ற வீர விளையாட்டுகளில் தேர்ச்சி பெற்று, மற்ற நடிகர்கள் எட்ட முடியாத உயரத்தில் இருந்தவர், சின்னப்பா.
ஆர்யமாலா படத்தில், சின்னப்பா, சிலம்பம் ஆடுவதையும், ஜகதலப் பிரதாபன் படத்தில், மல்யுத்தம் செய்யும் காட்சிகளின் மூலம் இதை அறியலாம். பிரித்விராஜன் படத்தில், இவர் வாள் வீசும் காட்சிகள் வெகு சிறப்பாக அமைந்திருக்கும். இப்படம், புனே தேசிய திரைப்பட காப்பகத்தில் பாதுகாக்கப் படுகிறது.
மங்கையர்க்கரசி படத்தில் சிலம்பம் ஆடும் காட்சிகள் வெட்டப்பட்டு விட்டன.
மஹாமாயா, குபேர குசேலா, தயாளன், சவுக்கடி சந்திர காந்தா மற்றும் யயாதி போன்ற படங்கள் இன்று இல்லை என்றாலும், கண்ணகி, ஆர்யமாலா மற்றும் ஜகதலப்பிரதாபன் போன்ற படங்கள், கால வெள்ளத்தை நீந்தி, கரை சேர்ந்து விட்டன.
எஸ்.குரு

