sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அரிய ஆளுமைகளுடன் அழுத்தமான பதிவுகள்: என்னை ஈர்த்த கவியரசரின் மிச்சம் மீதி மது!

/

அரிய ஆளுமைகளுடன் அழுத்தமான பதிவுகள்: என்னை ஈர்த்த கவியரசரின் மிச்சம் மீதி மது!

அரிய ஆளுமைகளுடன் அழுத்தமான பதிவுகள்: என்னை ஈர்த்த கவியரசரின் மிச்சம் மீதி மது!

அரிய ஆளுமைகளுடன் அழுத்தமான பதிவுகள்: என்னை ஈர்த்த கவியரசரின் மிச்சம் மீதி மது!


PUBLISHED ON : மே 11, 2025

Google News

PUBLISHED ON : மே 11, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கவியரசு கண்ணதாசன் உறவுமுறையில் எனக்கு, சின்ன மாமனார் என, நான் உரிமை கொண்டாடினால் நம்புவீர்களா? பொதுவெளியில், இப்படி ஒன்றை ஆதாரமின்றி சொல்லிவிட்டு, நான் ஒளிந்து ஓடத்தான் முடியுமா?

கண்ணதாசன், சுவீகார புத்திரராகி, வாழ வந்த ஊர், காரைக்குடி. பன்னெடுங் காலத்திற்கு முன், ஒரு பெரியவரின் வழித்தோன்றல்களை, உறவுமுறையில், 'ஐயாக்கள் வீட்டினர்' என, அழைப்பர்.

இந்த வகையில், என் மாமனார் முத்துப்பட்டினம், சித.நா.ராமனாதன், கண்ணதாசனுக்கு அண்ணன் ஆவார்.

இந்த உறவுமுறை எல்லாம் பின்னால் வந்தது.

இதற்கு வெகுகாலம் முன்பே, என், 12வது வயது முதல், கண்ணதாசனின் மகன்கள் அனைவரும், என் தோழர்கள். இதற்கான சூழலையும் சொல்லி விடுகிறேன்.

கண்ணதாசனும், என் தந்தை தமிழ்வாணனும் ஒரே சமூகத்தையும், ஒரே பகுதியையும் சேர்ந்தவர்கள். கிட்டத்தட்ட ஒரே வயதினர். (1927, 1926) என்றும் சொல்லலாம். இவர்கள் இருவரும் ஒரே குறிக்கோள்களுடன், ஒரே காலகட்டத்தில் சென்னை நோக்கி பயணித்தவர்கள். இருவரும் தத்தம் துறைகளில் உச்சம் தொட்டவர்கள் என்பது வரலாறு.

இந்த ஒற்றுமைகள் எல்லாம் போதாவென்று, சென்னை, தியாகராய நகரில் அடுத்தடுத்த தெருக்காரர்கள் என்ற வியப்பு வேறு. இப்படியான பலதரப்பட்ட ஒற்றுமைகள், இவர்களுக்குள் அளவு கடந்த நெருக்கத்தை ஏற்படுத்தியது.

நல்ல நெருக்கம்; ஆனால், இந்த நட்பிற்கும் பங்கம் வந்தது என்பது, தனிக்கதை. இதை விவரிக்கும் முன் -

என் பால்ய சிநேகிதம் பற்றி சில விஷயங்களை சொல்லி விடுகிறேன்.

காந்தி, டாக்டர் கமலநாதன், அண்ணாதுரை, சீனு, கோபி, கண்மணி சுப்பு, டாக்டர் ராமசாமி, கலைவாணன் ஆகிய, கண்ணதாசனின் ஆண் மக்கள் அனைவரும், என் இனிய நண்பர்கள். மறைந்து விட்ட கலைவாணன் தவிர, மற்ற அனைவரோடும் இன்றும் நட்பு பராமரிக்கிறோம்.

இந்த நட்பு காரணமாக, கண்ணதாசன் வீட்டிற்குள் எங்கும் நடமாடலாம் என்ற உரிமையை எனக்கு தந்திருந்தார், பார்வதி கண்ணதாசன்.

இன்ன இடம் தான் என்றில்லை. அடுக்களை, சாப்பாட்டு மேஜை, ஏன்... கண்ணதாசன் படுக்கையறை வரை, எங்கும் சுதந்திரமாக வலம் வருவேன்.

ஒருமுறை இப்படி, படுக்கை அறைக்குள் போன போது, கண்ணதாசன் அருந்தி விட்டு, படுக்கை கட்டிலுக்கு கீழே தங்கி விட்ட சிறு மது பாட்டில், என் மூக்கைத் துளைத்தது.

கேட்பார் இல்லை; பார்ப்பாரும் இல்லை; எடுத்துக் குடித்து விட்டால், சாட்சி சொல்வார் இல்லை. எடுத்து முகர்ந்து பார்த்தேன். அழுகிய பழத்தின் நாற்றம். சே! எப்படித்தான் குடிக்கின்றனரோ!

சிறு வயது தானே? நல்லது, கெட்டது தெரியாத பருவம் தானே? எடுத்து குடித்து விடலாமா என, என் மனம் தள்ளாட்டம் போட்டது.

இன்று வரை மது என்பது, என் நுனி நாக்கில் கூடப் பட்டது இல்லை என்றால், நம்புவீர்களா? பத்திரிகை துறையில் இருந்து கொண்டு, இந்த பத்தினித்தனத்தை காப்பது, அவ்வளவு சுலபமல்ல. விடிந்தால், எழுந்தால், 'காக்டெய்ல்' (எல்லா மதுக்களின் கலவை) பார்ட்டி சகஜம். விடுங்கள். இதற்குள் ஏன் நாம் விரிவாக போக வேண்டும்? தவிர்க்கிறேன்.

பயம் தொற்றிக் கொண்டது. சிறு வயதில் எனக்கு ஒரு நம்பிக்கை. இந்த நம்பிக்கை தான், நான் எந்த கெட்ட பழக்கத்திலும் வீழ்ந்து விடாதிருக்க காரணமாக இருந்தது என்பேன்.

நான் செய்யும் ஒவ்வொரு செயலையும், கடவுள், மேலே இருந்து பார்த்துக் கொண்டே இருக்கிறார். அவர் நம்மை தண்டித்து விடுவார்; கண்ணை குத்தி விடுவார் என, நம்பிய காலம் அது.

பதின் பருவத்தில் நான், எதிலும் சிக்கிவிடாமல் இருக்க, இந்த எண்ணத் துளியே காரணம் என்றால், நம்ப கடினமாக இருக்கும் உங்களுக்கு.

அட! ரொம்பவும் விலகி போய் விட்டேனோ?

கவியரசரின் மேன்மையையும், அவரது அருமையையும் உணராமல், அவரது கண் பார்வையிலேயே சுற்றித் திரிந்தவன், நான். இந்த வாய்ப்பை இப்போது எண்ணி பெருமை கொள்கிறேன்.

'தமிழ்வாணன் புள்ளப்பா...' என, துரை கண்ணதாசன், ஒருமுறை என்னை காண்பித்து, கவியரசரிடம் சொன்ன போது, 'டேய்! எனக்கு சொல்றியா நீ?' என்றார். நன்கு தெரியும் போல!

அவர் நடந்தபடி, கவிதை - கட்டுரைகளை சொல்ல, ராம கண்ணப்பனும், பஞ்சு அருணாசலமும் வேகமாக குறிப்பெடுப்பதை, கண்ணாற கண்டவன் என்ற அபூர்வ பதிவும், எனக்குள் உண்டு.

என்னை காணோம் என, என் தாய் தேடினால், 'கழுதை கெட்டால் குட்டிச் சுவரு, லேனா கெட்டால் (?) கண்ணதாசன் வீடு...' என, என் இளவல் ரவி தமிழ்வாணன், என்னை தேடி, கவியரசர் வீட்டிற்கு தான் வருவார்.

'டேய்! அம்மா சாப்பிடக் கூப்பிடுறாங்க உன்னை...' என்பார்.

எப்போது பார்த்தாலும், கவியரசர் பிள்ளைகளுடன் பம்பரம், கோலி, காற்றாடி தான். காற்றாடி டீலில், நான் கில்லாடி. எனவே, கண்ணதாசனின் பிள்ளைகள் மத்தியில், நான் ஒரு ஹீரோ போலவும் வலம் வந்தேன்.

இப்படியாக சென்று கொண்டிருந்த இந்த இனிய நட்பிற்கு, எங்கள் பெற்றோரால் எதிர்பாராத ஒரு புதுவித இடையூறு வந்தது.

கவியரசரின் வீரியமற்ற சில பாடல் வரிகளை கிண்டல் செய்தும், கவியரசருக்கு, எந்த பிள்ளை என்ன படிக்கிறது என்பதே தெரியாது என்றும், என் தந்தை தமிழ்வாணன் விமர்சிக்க, விஷ பயிர் விளைய ஆரம்பித்தது.

ஆரம்பத்தில் இந்த விமர்சனங்களை பொருட்படுத்தாத பெரும் உயரத்தில் இருந்த கவியரசர், 'என்ன இந்த தமிழ்வாணன்! சும்மா சும்மா நம்மை சீண்டுகிறாரே...' என, ஒரு கட்டத்தில் எண்ணியிருக்க வேண்டும்.

அப்போது, அவர் கையிலும், 'தென்றல்' பத்திரிகை இருந்தது. அதை களமாக்கி, என் தந்தை தமிழ்வாணனை ஒரு பிடி பிடித்தார்.

என் தந்தைக்கு ஒரே உற்சாகம். கவியரசர், நம் விமர்சனங்களை ஒரு பொருட்டாக கருதுகிறார் என்றதும், முன்னிலும் விமர்சித்து எழுத ஆரம்பித்து விட்டார். அரசியல் களத்திற்கு அப்பாற்பட்டு கண்ணதாசனை, தமிழ்வாணன் தவிர, யாரேனும் இப்படிக் கூட கேலி செய்திருப்பரா என்பதை, நான் அறியேன்.

இப்படியாக இவர்களுக்குள் தீப்பொறிகள் பறக்க, 1977ல், என் திருமணம் நிகழ இருந்தது. என் மாமனார், தன் தம்பி என்ற வகையில், கண்ணதாசனிடம் தன் தரப்பு அழைப்பிதழ் கொடுத்து, முறைப்படி அழைத்து, அவசியம் வரவேண்டும் என, அழுத்தமும் கொடுத்து விட்டார்.

ஆனால், தமிழ்வாணனிடமிருந்து அழைப்பு இல்லை. விரோதம் வேறு முட்டிக் கொண்டு நிற்கிறது. இது, பொதுவெளிக்கே தெரிந்து விட்ட பகை!

இந்நிலையில், கவியரசர் எடுத்த முடிவு என்ன? என் திருமணத்திற்கு அவர் வந்தாரா, புறக்கணித்தாரா?

வரும் வாரம் சொல்கிறேனே!



அடுத்த வாரம் நிறைவுறும்.லேனா தமிழ்வாணன்






      Dinamalar
      Follow us