sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அந்துமணி பா.கே.ப.,

/

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : மே 11, 2025

Google News

PUBLISHED ON : மே 11, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பா - கே

ஆசிரியருக்கு தெரிந்த அன்பர் ஒருவர், ஏதோ வேலை விஷயமாக மதுரையிலிருந்து, சென்னை வந்திருந்தார். சாயந்திரம், அவருடன் சென்று, வேலையை முடித்து கொடுக்க பணித்தார், ஆசிரியர்.

'லென்ஸ் மாமாவுக்கும், இவருக்கும் ஏழாம் பொருத்தம். நீ பெரியவனா, நான் பெரியவனா என, மோதிக் கொள்வர். எனவே, நீ மட்டும் அவருடன் சென்று வா...' என்றார், ஆசிரியர்.

மாமாவிடம், ஏதேதோ சாக்கு போக்கு சொல்லி, அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்து, அந்த அன்பருடன் சென்றேன்.

அன்பர் குறிப்பிட்ட இடத்துக்கு செல்ல, சென்னை மயிலாப்பூர் வழியாக சென்றோம். அப்பர்சாமி கோவில் எதிரே, திருவள்ளுவர் சிலை ஒன்று உள்ளது. அதன் அருகில் இருந்த மணி கூண்டிலிருந்து சரியாக, 6:00 மணிக்கு, ஆறு முறை மணி ஒலித்தது. கூடவே, பதிவு செய்யப்பட்ட திருக்குறள் ஒன்றும், அதற்கான பொருளும் ஒலித்தது.

'இதெல்லாம் கேட்கும் போது, மனதுக்கு இதமாக இருக்கிறது. நான் சென்னையில் வேலை பார்த்த போது, முன்பெல்லாம், மெரினா கடற்கரையில், 'ஸ்பீக்கர்' பொருத்தப்பட்டு, மாலை நேரத்தில் வானொலி செய்திகளை ஒலிப்பரப்புவர்.

'பீச்சுக்கு வந்தவர்கள், அதை ஆர்வமுடன் கேட்டு செல்வர். செய்தி கேட்பதற்காகவே நானும், இன்னும் சிலரும் கடற்கரைக்கு போவதுண்டு. உம்... அதெல்லாம் ஒரு பொற்காலம்.

'அது சரி, மணி... உனக்கு ரேடியோ கேட்கும் வழக்கம் உண்டு என அறிந்துள்ளேன். இப்போதும் கேட்கிறாயா?' என்றார்.

'ஆமாம், தொடர்ந்து கேட்டு வருகிறேன்...' என்றேன்.

'ரேடியோ என்றதும், ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. சொல்லலாமா?' என்றார்.

'அதிலென்ன தயக்கம். தாராளமாக சொல்லுங்க...' என்றதும், கூற ஆரம்பித்தார்:

நான் மதுரைக்கு சென்ற பின், சிறிது காலம், வானொலி நிலையத்தில், பகுதி நேர நிகழ்ச்சி தயாரிப்பாளராக இருந்துள்ளேன். அப்போது நடந்த நிகழ்வு இது. வானொலி நிகழ்ச்சி ஒன்று தயாரிப்பதற்காக, நானும், வானொலி நிருபர் ஒருவரும், காரில் சென்று கொண்டிருந்தோம்.

கிராமம் ஒன்றின் வழியாக செல்லும் போது, தலையில் உருமால் கட்டிக்கொண்டு விவசாயி ஒருவர் வந்து கொண்டிருந்தார். அவரைப் பார்த்து, 'இவரிடம் ஒரு பேட்டி எடுத்தால் என்ன...' எனக் கேட்டார், வானொலி நிருபர்.

கார் நின்றது. ஒலிப்பதிவு பெட்டியுடன் இறங்கிய வானொலி நிருபர், அந்த விவசாயியை நெருங்கினார்.

'ஐயா, நாங்க வானொலி நிலையத்தில் இருந்து வர்றோம். உங்ககிட்ட ஒரு பேட்டி எடுக்கலாமா?' என்றார், நிருபர்.

'எதுக்கு பேட்டி, என்னத்தைப் பத்தி பேட்டி?' என்றார், விவசாயி.

'விவசாயத்தை பத்தித்தான் பேட்டி. மத்த விவசாயிகளுக்கு உங்க அனுபவம் உதவியா இருக்கலாம், இல்லையா?'

'என் அனுபவத்தை பத்தி கேட்க, உங்களுக்கு அனுபவம் இருக்கா. உங்க அனுபவம் என்ன?'

'என்ன இப்படி பேசுறீங்க, ஐயா. எனக்கும் கொஞ்சம் விபரம் தெரியும் என, அதிகாரிகள் அறிஞ்சதாலே தான், இந்த வேலையிலே என்னை வைச்சிருக்காங்க...' என்றார், நிருபர்.

'அவங்க வைச்சிருப்பாங்களாய் இருக்கும். ஆனா, நான் தெரிஞ்சுக்கணுமே?'

'என்ன தெரியணும்? கேளுங்க...' என்றார், நிருபர்.

'எருமை மாட்டுக்கும், பசு மாட்டுக்கும், 10 வித்தியாசம் இருக்கு. எங்கே அதைச் சொல்லுங்க பார்ப்போம்?' எனக் கேட்டார், அந்த விவசாயி.

'10 வித்தியாசமா? சரி சொல்றேன். எண்ணிக்கங்க...

* எருமை மாடு தண்ணியக் கண்டா போய் படுத்துக்கும்; பசு மாடு அப்படி படுக்காது

* எருமைப் பாலிலே கொழுப்பு சத்து அதிகம்; பசும்பாலிலே அது குறைவு

* எருமை மாட்டுக்கு கொம்பு சைடுலே வளரும்; பசு மாட்டுக் கொம்பு, மேல் நோக்கி வளரும்

* என்ன தீவனம் குடுத்தாலும், எருமை மாடு தின்னும்; பசு மாடு நல்லதா பார்த்துத்தான் தின்னும்

* எருமை மாட்டுக்கு உடம்பு வேர்க்கும்; பசு மாட்டுக்கு வேர்க்காது

*    எருமை மாட்டிலே, காளைக்கு விடணும்ங்கிற அறிகுறி தெரியாது; பசு மாட்டிலே அது தெரியும்

அப்புறம் வந்து...' என, வானொலி நிருபர் அண்ணாந்து பார்த்தவாறு யோசிக்க, 'அப்புறம் என்ன சொல்லுங்க...' என்றார், விவசாயி.

'இருங்க சொல்லுறேன். யோசிக்கறேன்...' என்றார், நிருபர்.

'உங்க தாமதத்திற்கு என்னாலே இங்கே நிற்க முடியாது. நீங்க புறப்படுங்க. நான் வருகிறேன்...' என, புறப்பட்டார், அந்த விவசாயி.

போகிற போக்கில், 'இந்தச் சின்ன விஷயம் கூட தெரியாத நீங்க, விவசாயத்தை பத்திப் பேச வந்தீட்டீங்க... நீங்க சொல்லுறதைக் கேட்டு, நாங்க நடந்துக்கணுமா, நல்ல கதை தான்...' என, சொல்லம்பு வீசி விட்டு சென்றார், அந்த விவசாயி.

நானும், நிருபரும் செய்வதறியாது திகைத்து நின்று விட்டோம்.

- என்று கூறி சிரித்தார், அந்த அன்பர்.

அந்த காட்சியை அப்படியே கற்பனை செய்து பார்க்க, எனக்கும் சிரிப்பு வந்து விட்டது.

போன வேலை முடிந்ததா என்கிறீர்களா?

வேலை முடிந்து, அவருக்கு ஹோட்டலில் சாப்பாடு வாங்கிக் கொடுத்து, மதுரைக்கு ரயில் ஏற்றி அனுப்பிய பின் தான் வீட்டுக்கு சென்றேன்.





அமெரிக்க நாட்டை சொல்லும் போது, இது, வர்த்தகர்களின் தேசம் என்பர். அரபு நாட்டை, பெட்ரோலியத்தின் தேசம் என்பர். ஆனால், இந்தியாவை சொல்லும் போது மட்டும் தான் இது, சிறந்த கலாசாரம் மற்றும் பாரம்பரியம் மிக்க நாடு என்பர்.

நம் ஊரின் வயது முதிர்ந்த தம்பதி, ஒருமுறை லண்டன் சென்றனர். அங்கு ஒரு வெளிநாட்டவர், அந்த பெண்மணியை சுட்டிக்காட்டி, 'யார் இவர்?' என கேட்டபோது, 'என் மனைவி...' என்றார்.

'எத்தனை வருஷமாக?' என்றதற்கு, 'கடந்த, 50 ஆண்டுகளாக...' என்றார்.

மிகவும் வியந்து, 'இது எப்படி சாத்தியம்?' என்றார், வெளிநாட்டவர்.

'ஏன் முடியாது. எங்கள் கலாசாரமும், பாரம்பரியமும் இது...' என்றார், முதியவர்.

வெளிநாட்டவர் வியந்து, அந்த முதியவரின் மனைவியிடம் கைகுலுக்க, தன் கையை நீட்டினார். அப்போது, அந்த பெண்மணி கைகூப்பி வணக்கம் சொன்னார்.

'ஏன் உங்கள் நாட்டு பெண்மணிகள், பிறருக்கு கை கொடுக்க மாட்டார்களா?' எனக் கேட்டார், வெளிநாட்டவர்.

'உங்கள் எலிசபெத் ராணி, எல்லாருக்கும் கை கொடுப்பாரா?' எனக் கேட்டார், முதியவர்.

'அதெப்படி, அவர் பெரிய மகாராணி. அவர் யாருக்கும் கை கொடுக்க மாட்டார்...' என்றார்.

'எங்கள் வீட்டு பெண்கள் ஒவ்வொரு வரையும், நாங்கள் மகாராணிகளாகத் தான் பார்க்கிறோம். எனவே, அவர்களும் யாருக்கும் கை கொடுக்க மாட்டார்கள்...' என்றார், முதியவர்.

- எங்கோ, எதிலோ, எப்போதோ படித்தது!






      Dinamalar
      Follow us