தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/தொடர்கதை - எல்லாப் பூக்களும் எனக்கே- பகுதி -(28) - மதுனிகா ராணி

தொடர்கதை - எல்லாப் பூக்களும் எனக்கே- பகுதி -(28) - மதுனிகா ராணி

தொடர்கதை - எல்லாப் பூக்களும் எனக்கே- பகுதி -(28) - மதுனிகா ராணி


PUBLISHED ON : ஜூலை 18, 2010

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 18, 2010


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முன்கதைச் சுருக்கம்!

காடு பற்றி ஆவணப் படம் எடுக்க சத்தியமங்கலம் காட்டுக்குச் சென்ற யாத்ராவை, விஷ அம்பு எய்து கொல்ல ஏற்பாடு செய்தாள் சித்தி துர்கா. ஆனால், அந்த விபத்திலிருந்து தப்பினான் யாத்ரா. சித்தி துர்காவின் பிசினசை குலைக்கவும், அவளது கொட்டத்தை அடக்கவும், நண்பன் ஆசைதம்பி மூலமாக முயன்றான் யாத்ரா. ஆனால், விஷயம் அறிந்த சித்தி துர்கா, ஆசை தம்பியை ஒழித்து விடுவதாக சவால்

விட்டாள் —



இனி -

சென்னை சில்க்ஸ் விளம்பரப் பெண்கள் போல, சகோதரிகள் மூவரும், பட்டுப்புடவை உடுத்தி, டாலடித்தனர்.

அம்பதாயிரம் ரூபாய் பட்டுப்புடவை கட்டியிருந்தாள் நேசிகா. தலையில் கூடை மல்லிகைப் பூ. விரல் நகங்களிலும், முழங்கைகளிலும் மெஹந்தி. உதடுகளில், கண்ணை உறுத்தாத லிப்ஸ்டிக். கறுப்பு பட்டாம்பூச்சிகளாய், மை பூசிய, பொய் பூசிய கண்கள். மூக்கில் ஒற்றைப்புள்ளி மூக்குத்தி, நெற்றியில் நெற்றிச்சூடி. இரு புஜங்களில் வங்கி. குட்டைக்கை ஜாக்கெட். கழுத்தில் நெக்லசும், டாலர் கூடிய நீண்ட செயினும்.

நீலக்கடல், நீலநிற பட்டுப் புடவையில்; செண்பக குழல்வாய் மொழி, ரோஸ் நிற பட்டுப் புடவையில்.

பட்டுப்புடவைகள் சரசரக்க மூவரும் ஒன்றாய், ராஜகுமாரனை நோக்கி நடந்து வந்தனர். அறைக் குள் மல்லிகை, சென்ட் மற்றும் பட்டுப் புடவைகளின் பிரத்யேக வாசனைகள் சுழன்றடித்தன.

ராஜகுமாரனை நெருங்கியதும், மூவரும் ஒரே சமயத்தில், ""எங்களை அசீர்வாதம் பண்ணுங்க மாமோய்!'' என கூவியபடி, அவரது கால்களில் விழுந்து சேவித்தனர். மூவரின் முகங்களும், அவரின் கால்களில் ஈரமாய் புதைத்து அழுதன.

""எந்திரிங்க கழுதை களா...!

""ம்ஹும்... நீங்க எங்களை மன்னிச்சதா சொன்னாதான் எந்திரிப் பம் மாம்ஸ்!''

""மாம்சா!''

""மாமனார், வாழ நாரை கல்யாணமான வுடன் வேற பெயர்களால் கூப்பிடுவோம். யோவ் பெருசு, ஓல்டு மேன், ப்ளாஷ் பேக் பார்ட்டி, சின்ன சிவாஜிகணேசன் இப்படி!'' என்றாள் செண்பக குழல்வாய் மொழி.

""எந்திரிங்க மொதல்ல,'' எழுந்தனர்.

""ஒவ்வொருத்தியும் பேர் சொல்லுங்க!'' சொன்னார்கள்.

""அம்மாடி... நீதான் பேபே செண்பகராமனா? டென்மார்க் ரீனாவா?''

""ஹி... ஹி... ஆமா!''

""எங்க... ஊமை செண்பகராமன் மாதிரி பேசு!''

""பேபே... மாம்பே!'' சிரித்தார் ராஜகுமாரன்.

""ஏண்டியம்மா... சென்னைல வேற பசங்களே கிடைக்கலையா? அக்கா தங்கச்சி மூணு பேருமே என் பையனை பிராக்கெட் போடப் பாக்கறீங்க... அப்படியென்ன கோடியில் இல்லாத விசேஷம் அவனிடம்?''

""தம்பி ராஜகுமாரா... இப்படி பக்கத்துல வந்து காதை நீட்டு!'' என்றாள் மொழி.

நீட்டினான்.

""அந்த விசேஷங்களை பெத்த அப்பன்கிட்ட பட்டியலிட லஜ்ஜையா இருக்கு நைனா. இக்கட சூடு நைனா... அது ரொம்ப ரொம்ப பேடு நைனா!''

""லைக் பாதர், லைக் சன் தியரில நான் பிடிவாத நம்பிக்கை உள்ளவன். அழகான பொண்ணுக சுத்தி நின்று மாமா மாமான்னு கொஞ்சினா, நான் மனம் மாறிட மாட்டேன். நீங்க மூவருமே யாத்ராவை திருமணம் செய்து கொள்ளும் தகுதியை இழக்கிறீர்கள். வேறு வேறு மாப்பிள்ளை பார்த்து கல்யாணம் பண்ணிக் கொள்ளுங்கள். பெஸ்ட் ஆப் லக் மை குட்டீஸ்!''

மொழி ஒரு கத்தி எடுத்து நீட்டி, முகத்தை விவேக் போல் கோணங்கித்தனம் பண்ணினாள். ""காஸ்மோபாலிட்டன் ஆமை! என்ன பாக்ற... நாட்டாமைக்கு எதிர்பதம் இது... தீர்ப்பை மாத்தி எழுது!''

""பேசாம, நாங்க மூணு பேருமே யாத்ராவை திருமணம் பண்ணிக்கிறோமே!'' என்றாள் நீலக்கடல்.

""மாமா... நான்தான் சீனியர் மோஸ்ட்... நான்தான் உங்க மருமகள். ஒருத்திய அன்டார்டிக்காவுக்கும், ஒருத்திய ஆர்டிக் துருவப் பகுதிக்கும் விரட்டி விட்டுரலாம்.''

""மாமு...பேசாம எங்களுக்கு பல டெஸ்ட்கள் வையுங்க. நீளம் தாண்டுதல், ஓடுதல், ஸ்விம்மிங், கேட்-வாக்குன்னு வச்சு மார்க் போடுங்க. அதிக மார்க் எடுக்கும் பெண்ணுக்கு, யாத்ரா கப் குடுத்திரலாம்!'' என்றாள் மொழி.

""அய்யய்யோ... இந்த மூணு பொண்ணுக அலும்பு தாங்கலையே... யாராவது காப்பாத்துங்களேன்!''

ஜீவிதா, இசையுடன், யாத்ரா பிரவேசித்தான்.

""மாமியா மாமியா... எனக்கு சிபாரிசு பண்ணு மாமியா... லலித்மோடி மாதிரியே முழிக்ற. உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. மாமியா... நாத்து! என்ன பாக்ற... நாத்தனாரை சுருக்கிட்டேன்... உன் மூஜிக் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்!'' என்றாள் மொழி.

""ஓவரா பேசுரா இவ... தாங்கல...''

""யாத்ரா... இதெல்லாம் என்னப்பா... எனக்கு குடுத்த வாக்குறுதிய மீறிட்டல்ல...'' என்றார் ராஜகுமாரன்.

""என் சூழ்நிலையில நின்னு யோசிச்சுப் பாருங்கப்பா... என் நியாயம் புரியும். நான் யாரையும் காதலிக்கறேன்னு அதிகாரப்பூர்வமா அறிவிக்கல... என் அறிவிப்பு, உங்க தியரிக்கு பாதகமா இல்லாம இருக்கும்னு நம்புறேன். எந்த நோய்க்கும் மருந்து உண்டு; எந்த தியரிக்கும் தீர்வும் உண்டு!''

ராஜகுமாரன் தலையாட்டினார்.

பின் திரும்பி, ""கிளம்புறீங்களா காரிகைகளா?''

""வந்தது வந்துட்டோம். இன்னைக்கு பூராவும் இங்க தங்கி தான் கொட்டமடிக்கப் போகிறோம். அத்தேய்... உங்க கையால தான் எங்களுக்கு சாப்பூடு.''

மூவரும் பாய்ந்து ஜீவிதாவை கட்டிக் கொண்டனர். இரு கன்னங் களிலும் முத்தமழை பொழிந்தனர்.

""என்ன நினைப்புல குடுக்கறீங்கடி?''

""கூரியர் லேடி... எங்க உம்மாக்களை, யாத்ரா அட்ரஸ்ல டெலிவரி பண்ணிடு!'' என்றாள் மொழி.

சிரித்தாள் ஜீவிதா.

""இவளு களை ஜாக்கிரதையா ஹாண்டில் பண்ணுங்க... என்ன பிடிக்கும்ன்னு கேட்டு சமையல் செஞ்சு போடுங்க. எனக்கு வெளில கொஞ்சம் வேலை இருக்கு... கிளம்புறேன்!''

"என்னை இன்னும் ஏன் தவிக்க வைக்கிறாய் மன்னவனே!' என்ற முறையீட்டை முகத்தில் தேக்கினாள் நேசிகா. பார்த்தும் பாக்காதவனாய் போனான் யாத்ரா.

காரை நிறுத்தி இறங்கினான் யாத்ரா. உடன் ஆசைதம்பியும், அனிதா ரெட்டியும். காலிங்பெல்லை அழுத்தினான். கதவு திறந்து வரவேற்றாள் பியூலா. அவளது முகத்தில் தெய்வீகம் பொலிந்தது. ""குட்மார்னிங் பியூலா!''

""மார்னிங்!''

""எப்படி இருக்கே?''

""உன் மீதான நினைவு என்னை சிறப்பாக இயக்கி வருகிறது.''

""உன் தொழில்?''

""எல்லாவற்றையும் துறந்து விட்டேன். பாம்பு சட்டையை கழற்றிப் போடுவது போல, இப்பதான் புதுப்பிறவி எடுத்திருக்கேன்; இனி எனக்கு சகலமும் யாத்ராதான்!''

""செய்து வந்த தொழில் தப்புதான்; ஆனா, இப்ப அதையும் விட்டுட்டு, சாப்பாட்டுக்கு என்ன செய்வ?''

""நீ இருக்கியே!''

""எத்தன நாளைக்கு?''

""நம் வாழ்நாள் முழுக்க?''

""பக்கத்தில் வா... என் கண்ணைப் பார்... என்னை நீ காதலிக்கிறாயா?''

""என் காதலை மகிமைபடுத்தும் வார்த்தை ஒன்றை இனிதான் கண்டுபிடிக்க வேண்டும். நான் 21ம் நூற்றாண்டு ஆண்டாள். காட்டுக்குள் சூர்ப்பனகையின் மூக்கை அரிந்தான் ராமன்; நீயோ என் கசடுகளை அரிந்தாய். காகிதப்பூவாக இருந்த நான், யாத்ரா தேன் துளிர்க்கும் செடிப்பூ ஆகிவிட்டேன். இதுவரை, பலர் என் உடலை தொட்டு விட்டு போயினர்; யாத்ரா என் ஆன்மாவை தொட்டு விட்டான். யாத்ரா... என்னை மணம் செய்து கொள் என கேக்க மாட்டேன். அவனது நினைவுடனேயே வாழ்ந்து மரிப்பேன்!''

எதிர்மறையாய் தலையாட்டிக் கொண்டான் யாத்ரா.

""உன் காதல் என்னை மகிழ்வூட்டுகிறது. நானும் கூட உன்னை காதலிக்கிறேன். காதல் ஆயிரம் பெண்கள் மீது வரலாம்; ஆனால், அனைவரையும் மணம் செய்து கொள்ள முடியுமா? ஒருவனுக்கு ஒருத்தி தான் சரி. அதனால்தான், கடவுள் ஆயிரம் ஆண் குழந்தைகள், ஆயிரம் பெண் குழந்தைகள் பிறக்க இயற்கையிலேயே வழி செய்துள்ளான். "நீ என்னை மணம் செய்ய வேண்டாம். நான் உன் நினைவுடனேயே இருந்து மரிக்கிறேன்...' என நீ சொல்வது அபத்தம்; அதை நான் அனுமதிப்பது சுயநலம். உனக்காக நான் இரு ஏற்பாடுகள் யோசித்து வைத்திருக்கிறேன். இரண்டுக்கும் நீ ஒப்புக்கொள்ள வேண்டும்!''

ஏறிட்டாள் பியூலா.

""எனக்கு, குருவாயூரப்பன் என்ற டீச்சர் பாட்னி சொல்லிக் கொடுத்தார். அவர் அளவுக்கு உனக்கு பாட்னி அறிவு இருக்கு. ஈரோட்ல இருக்ற ரெசிடென்ஷியல் ஸ்கூல்ல உனக்கு, பிஜி டீச்சர் போஸ்ட் ரெடி பண்ணிருக்கேன். லேடீஸ் ஹால்டலுக்கு நீ துணை வார்டனாகவும் இருக்கலாம். சம்பளம் மாதம் பனிரெண்டாயிரம் ரூபாய். உணவும், தங்குமிடமும் இலவசம். நாலு நாள் அவகாசத்துக்குள் நீ பணியில் சேர வேண்டும்!''

அனிதா ரெட்டி குறுக்கிட்டாள்.

""யோசிக்காதே பியூலா... பொருளாதார சுதந்திரம் நமக்கு ஆக்சிஜன் போல... தனிமையும், சோம்பலும் தான் நமக்கு எதிரி. ப்ளஸ் 2 மாணவியருக்காக நீ 24 மணிநேரமும் இயங்குவது தெய்வகாரியமாயிருக்கும். வேலையை ஒப்புக் கொள்.''

""செக்சியான பிஜி டீச்சர், பியூலா! க்ளாஸ் எடுக்கப் போகும்போது லோஹிப் கட்டாதே. மாணவிகளே செத்திடுவாங்க!'' கிண்டல் செய்தான் ஆசைதம்பி.

""ஒரு தடவை நீயும், நானும் அந்தரங்கமா இருக்றப்ப, மகிழம்பூ கிளாஸ் எடுத்து கொன்னியே... ஞாபகமிருக்கா?''

முகபாவம் காட்டாமல் மவுனித்தாள் பியூலா. தம்பியை முறைத்தான் யாத்ரா.

""எந்த நேரத்துல, என்ன பேசிக்கிட்ருக்க படுவா?''

""அடுத்து நாம் பேசப் போறதே ஆசைதம்பி மேட்டர் தானே?'' என்றாள் அனிதா ரெட்டி.

""பியூலா... ஆசைதம்பி பத்தி உன் அபிப்ராயம் என்ன?''

புதிதாய் அவனை பார்ப்பது போல பார்த்தாள். ""சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஹி இஸ் நோபடி டு மீ!''

""நன்றிகெட்ட உலகமடா, நானறிந்த பாடமடா!'' முணுமுணுத்தான் ஆசை.

""அவன் மீது உனக்கு வெறுப்பு உண்டா?''

""உன்னை எனக்கு அறிமுகப்படுத்தியதே அவன்தானே! வெறுப்பில்லை... நன்றியுணர்ச்சி இருக்கிறது!''

""நல்லது. ஆசைதம்பி... உனக்கு கல்யாணமாயிருச்சா?''

""இன்னும் ஒரு கல்யாணம் கூட ஆகல பிரதர்!''

""கல்யாணம் பண்ணிக்க தயாராய் தானே இருக்க?''

""ஏன்... நீ பொண்ணு பாத்து வச்சிருக்கியா?''

""ஆமா... ஆளை காமிச்சா கட்டிப்பியா?''

""யாரு... அனிதா ரெட்டிய சொல்றியா? அது எனக்கு அக்கா மாதிரிப்பா. தவிர, அதுக்கு பீர் வாங்கிக்  குடுத்தே சொத்து அழிஞ்சிடும்!''

""இல்லை!''

""யப்பா தப்பிச்சேன்!'' ஆசைதம்பி.

""நானும் தப்பிச்சேன்!'' ரெட்டி.

""வேற யாரு?''

""பியூலாடா!''

""இந்த பியூலாவா? விழுந்து விழுந்து சிரித்தான்.

""இவளையா, நானா...? உன் தோள்ல சுமையா இருக்றதை, என் தோள்ல ஏத்தி விடுறியா நண்பா... இவள கட்டிக்கிட்டு ரோட்ல நடமாட முடியுமா...? "மாமா மாமா'ன்னு கூப்பிட்டு, நம்ம மானத்தை கப்பலேத்திடும் பப்ளிக். இரு திருடர்கள், நேர்மையான தொழில் பார்ட்னர் ஆக முடியாதுப்பா. இப்ப அவ உன் நினைவாகவே இருக்கா. நா தொட்டா அவளுக்கு, யாத்ரா தொட்ட மாதிரி இருக்கும். நான் ஒரு ஜொள்ளன்தான். அதுக்கு இவ்வளவு பெரிய தண்டனையா?''

""தீர யோசிச்சுதான் இந்த முடிவுக்கு வந்தேன். பியூலாவை கல்யாணம் பண்ணிக்கிட்டு, ஈரோட்ல செட்டில் ஆய்டு ஆசை. அமெரிக்க நேரம் காட்டும் கடிகாரத்தை, இந்தியா வந்தவுடன், இந்திய நேரத்துக்கு மாற்றி வைப்பது போல, ஆசை நினைப்புக்கு பியூலாவை மாற்றி விடலாம்!''

""கடிகாரமும், பெண்ணும் ஒண்ணாடா?''

""என்னுடைய சம்மதத்தை நீ கேக்கலையே யாத்ரா?'' என்றாள் பியூலா.

""என்னை நீ மதிக்கிறாய் என்பது உண்மையானால், இந்த இரட்டை ஏற்பாடுக்கு சம்மதி. சில கதவுகளை மூடிய இறைவன், உனக்கு புதிய கதவை திறந்து வைத்துள்ளான். திருமணத்திற்கு முன், நீயும், ஆசையும் எப்படி இருந்தீர்கள் என்பது முக்கியமில்லை; திருமணத்திற்கு பின் எப்படி வாழப் போகிறீர்கள் என்பதுதான் முக்கியம். குழப்பத்திற்கு பிறகு தான், ஒழுங்குக்கு வந்திருக்கிறது பிரபஞ்சம். உன் வாழ்க்கையும், ஒழுங்கு நோக்கி பாய்கிறது!''

""உன்னின் மீதான என் காதல்...?''

""தேவைப்படாதோருக்கு, கேட்காதோருக்கு ஏன் காதலை கொடுக்கிறாய்? சேமித்து வை... திருமணத்திற்கு பின், ஆசைதம்பிக்கு வாரி வழங்கு. நாம் தொடர்ந்து நட்பாய் இருப்போம்!''

""உங்களிருவரையும் தனிமையில் ஒரு மணி நேரம் விடுகிறேன். பேசி ஒரு முடிவுக்கு வாருங்கள்!''

ஒரு மணி நேரம் கரைந்தது. ஆசையும், பியூலாவும் சேர்ந்ததே வெளிப்பட்டனர்.

""நாங்க கண்ணாலத்துக்கு தயார்பா!''

அனிதா ரெட்டி, யாத்ராவை இறுக்கி கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தம் கொடுத்தாள். ""இரு விடுகதைகளை ஒரே விடையால் விடுவித்து விட்டாயே...''

மொபைல்போன் சிணுங்கியது. எடுத்து காதில் இணைத்தான்.

""சந்தனப்பொட்டு நர்ஸ் ரஞ்சனி, உடல் முழுக்க ரத்தக் காயங்களுடன் ஐ.சி.யூ.,வில் அட்மிட் ஆகியுள்ளாள். உடன் கிளம்பி வா!'' என்றான் சமர்.                      

— தொடர்ந்து பூக்கும்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us