PUBLISHED ON : ஜூலை 18, 2010

சரியோ, தவறோ, தொலைபேசியைக் கையில் எடுத்ததும் முதலில் பேசுவது, "ஹலோ' தான்!
ஆனால், முதன் முதலில் தொலைபேசி கண்டுபிடிக்கப்பட்டபோது, கேட்ட குரல், "வலியால் ஏற்பட்ட அலறல்!' தான் என்றால், வியப்பாய் இருக்கிறதல்லவா?
தொலைபேசியைக் கண்டு பிடிக்கும் சோதனையில், தீவிரமாக ஈடுபட்டிருந்த கிரகாம்பெல், தோல்வியால் துவண்டிருந்த நேரம். அவர் கையிலிருந்த குடுவையிலிருந்து, அமிலம் கீழே சிதறியது. காலில் பட்ட இடம் நெருப்பாக எரிந்தது. வலியால் துடித்துக் கதற ஆரம்பித்தார்.
அடுத்த அறையிலிருந்த அவர் உதவியாளர் தாமஸ் வாட்சன், மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்தார். காரணம், "பெல்'லின் அலறல் அவருக்கு தொலைபேசியில் கேட்டு விட்டதே! அவர்கள் வெற்றி பெற்று விட்டனர்.
***
மத ஒற்றுமைக்கு இந்தியாவிலேயே தனிச்சிறப்பு பெற்றுள்ளது நெல்லையப்பர் கோவில். இங்கு, விடையேறிய பெருமான், இஸ்லாமிய அன்பரான, "அன்வருதீன்' என்பவரின் பெயரை ஏற்று, "அனவரத லிங்க'மாகக் காட்சி யளிக்கிறார்.
நவாப் அன்வருதீனின், மனைவி நோய் வாய்ப்பட்டாள். அவரது நண்பர்கள் நெல்லையப்பரை வேண்டிக் கொண்டால், நோய் தீரும் என்று கூறினர்; அன்வருதீன் அவ்விதமே செய்தார். அவன் மனைவியின் நோய் நீங்கப் பெற்றது.
அன்பர்கள் வேண்டியபடி சிவனாருக்கு, ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து, பூஜைக்குரிய மானியமும் அளித்தார் அன் வருதீன்.
அன்று தொட்டு அந்த இஸ்லாமிய அன்பர் அன்வருதீன் பிரதிஷ்டை செய்த லிங்கம், "அன்வருதீன் லிங்கம்' ஆயிற்று. காலப்போக்கில் மருவி, "அனவரதலிங்கம்' ஆகியது. அனவரதலிங்க வரலாற்றுக் குறிப்பு, நெல்லையப்பர் கோவில் பிரகாரச் சுவரில், எழுதி வைக்கப்பட்டுள்ளது.
***
"தட்டுங்கள் திறக்கப்படும்' படம் எடுத்தேன். தயாரிப்பாளர்கள் நல்ல விலைக்கு படத்தை விற்றனர்.
படத்தின் நீளம், கொஞ்சம் அதிகமாகி விடவே, சர்சார்ஜ் (வரி) அதிகம் கட்ட வேண்டி வரும் என்று, நீளத்தை குறைத்துவிட முடிவு செய்தனர்.
என் உழைப்பு, சிந்தனை, ரத்தம், அனுபவம் எல்லாவற்றையுமே இதில் நான் கொட்டி, ஒவ்வொரு காட்சியையும் எடுத்திருந்தேன். எனக்கு தெரிவிக்காமலேயே, நீளத்தை குறைக்கிறேன் என்று சொல்லி, "கிளைமாக்ஸ்' காட்சிகளை வெட்டியும், குறைத்தும் விட்டனர்.
படம் வெளிவந்தது; எதிர் பார்த்த வெற்றி கிடைக்கவில்லை.
வாழ்க்கையிலேயே, ஒரு வெறுப்பு ஏற்பட்டு விட்டது. இரண்டு வருடம், ஒரு புதுப் படத்திற்கும் நான் ஒப்பந்தமாகவில்லை.
ஒருவேளை சோற்றுக்கே தகராறு என்ற நிலை வந்து விட்டது. என் சொத்தை அடமானம் வைத்திருந்த நண்பர்களிடம் போய், பத்து ரூபாய் கடனாய் கேட்டேன்... "இல்லை' என்று அவர்கள் கூசாமல் சொல்லி விட்டனர்.
மின்சாரக் கட்டணம் கட்டாததால், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, முன்று நாட்கள், விளக்கு கூட இல்லாமல், பட்டினியாக வீட்டிலேயே சிறைபட்டுக் கிடந்தேன். சே... என்ன வாழ்க்கை!
— 1968ல், சந்திரபாபு ஒரு பத்திரிகையில் எழுதியது.
** ஒரு ஊரில் நடந்த கூட்டம் ஒன்றிற்கு தலைமை தாங்க அழைத்திருந்தனர். கி.வா.ஜகந்நாதனை, சிறப்பாக கூட்டத்தை நடத்திக் கொடுத்தார் கி.வா.ஜ.
கூட்டம் முடிந்த பின், கொஞ்சம் பழங்களையும், பிஸ்கட்டுகளையும் ஒரு பையில் போட்டு, அவரிடம் கொடுத்தனர்.
அந்தப் பையைப் பெற்றுக் கொண்ட கி.வா.ஜ., "என்னை, "தலைவனாக' தலைமை தாங்க அழைத்து, "பையனாக' அனுப்புகிறீர்களே?' என்றார்.
அவரின் சிலேடை நகைச்சுவையை அனைவரும் ரசித்தனர்.
