
'கொரோனா வென்றான்' என்ற பட்டத்தோடு, நாசினி நாட்டை ஆண்டு வந்த, பயகுணபராக்கிரமன், தன் முக கவசத்துள், முக கலவரத்தை மறைத்தவனாய், ''வெறும், 'டை' என்றா போட்டுள்ளது... சரியாக, திரும்ப படித்து தொலையும்,'' என்று, தன் அமைச்சரிடம் சத்தம் போட்டான்.
அமைச்சரும் பெரும் குழப்பத்துடன், அந்த ஈரமான ஓலையில் அரையும் குறையுமாக அழிந்திருந்த வாசகங்களை திரும்பவும் மனதிற்குள் ஒருமுறை படித்து, உறுதி செய்த பின், மன்னன் காதில், உரக்க விழும்படி படித்தார்.
''வீரர்கள், 'டை' எடுத்து, தங்கள் நாட்டிற்கு வருகின்றனர் - இப்படிக்கு, புழுதிவளவன் என்று தான், இந்த ஓலையில் கண்டுள்ளது, மன்னா,'' என்று அமைச்சர் சொன்னார்.
உடனே, தன் கிரீடத்துள் புதைந்திருந்த இளம் நரைமுடி ரகசியத்தை அறிந்து தான், அண்டை நாட்டான், 'டை' எடுத்து வருவதாக ஏளனம் செய்கிறானோ என்று, எசகுபிசகாக ஓடிய தன் எண்ணத்தை, அடக்கிக் கொண்டான், பயகுணபராக்கிரமன்.
''என்ன அமைச்சரே... இந்த புழுதிவளவன், புதிராக இப்படி ஓலையை அனுப்பியுள்ளான்... 'டை' என்ற எழுத்திற்கு முன் ஏதோ ஒரு எழுத்து மறைந்திருக்க வேண்டும். ஒருவேளை, 'வடை'யாக இருக்குமோ... இல்லையில்லை, அது, 'விடை'யாகத்தான் இருக்கக் கூடும்,'' என்று  தனக்கு சாதகமாக, அந்த விடுபட்ட வார்த்தையை, நிறைவு செய்து சொன்னான், பயகுணன்.
பயந்த சுபாவம் கொண்ட மன்னனிடம், அது, 'படை'யை தவிர வேறொன்றாக இருக்க முடியாது என்று சொல்ல தயங்கினார், அமைச்சர்.
அவனுக்கு சமாதானமாக இருக்கட்டுமே என்று, ''ஆமாம், மன்னா... தாங்கள் எழுப்பிய சந்தேகத்திற்கான விடையை, இந்நாட்டில் எந்த புலவரும் தீர்த்து வைக்காததால், தன் நாட்டிலிருந்து, புழுதிவளவன், அதற்கான விடையை கொடுத்து அனுப்புகிறானோ என்னவோ,'' என்று, ஜால்ரா போட்டு சமாளித்தார்.
சென்ற வாரம் தான், அந்த அவலம், அந்தப்புரத்தில் அரங்கேறியிருந்தது. தொட்டதற்கெல்லாம், தொற்று வந்துவிடுமோ என்று பயந்தவனாக, அந்தப்புரத்தின் அரசிக்கும், அடிக்கடி கிருமிநாசினியால் கரங்களை கழுவும் கட்டளையை இட்டிருந்தான், பயகுணன்.
ரோஜா, பன்னீர் வாசத்துடன், தடாகத்தில் குளித்து வரும் ராணி, 'இப்படி ஒரு பயந்த பேமானியை மணந்தோமே...' என்று நொந்து கொண்டே, தன் நறுமணம் கமழும் கரங்களை அடிக்கடி கிருமி நாசினியில் நனைத்துக் கொண்டிருந்தாள்.
தன் கட்டளையை, அரசி கடைப்பிடிக்கிறாளா என்ற சந்தேகத்துடன், அந்தப்புரம் வந்தான், பயகுணன். அரசியின் கரங்களை பற்றி முகத்தருகே எடுத்து சென்று, முக கவசத்தை விலக்கி முகர்ந்து பார்த்தபோது, மூக்கை மறைத்த, 'மாஸ்க்'குக்கும் மேல், கோபம் பொத்துக் கொண்டு வந்தது, அரசிக்கு.
'ஆஹா... தேவி, உன் கரங்களில் வீசும், 'சானிடைசர்' வாசம், இத்தனை சுகந்தமாக உள்ளதே... ஒருவேளை, உன் கரத்திற்கு இயற்கையிலேயே இந்த வாசம் உள்ளதோ...' என்று, கேட்டு விட்டான், மன்னன்.
உடனே, கொதித்தெழுந்தாள், அரசி. 
'சானிடைசர்' கொண்டு அடிக்கடி கரங்களை கழுவுவதை நம்பாமல், இயற்கையிலேயே இப்படி ஒரு மனம் இருக்குமோ என்று கேவலமாக சந்தேகப்படும் புருஷனை, மன்னனென்றும் பாராமல், கழுத்தில் கை வைத்து, அந்தப்புரத்திலிருந்து வெளியே தள்ளி, தன்னை, 'குவாரன்டைன்' - தனிமைப்படுத்தி, அந்தப்புரத்துக்கு, 'லாக் டவுன்' அறிவித்து விட்டாள், அரசி.
இப்படி ஒரு அவமானத்துடன், அந்தப்புரத்திலிருந்து தள்ளப்பட்டதை, பயகுணன் பெரிதாக எண்ணாமல், அரசியின் கைகள் பதிந்த கழுத்தை சோப்பு போட்டு கழுவிய பின், 'பெண்களின் கரங்களுக்கு, இயற்கையாக நாசினி நறுமணம் உண்டா...' என்று, சந்தேகத்திற்கு விடை காண, புலவர்களுக்கு போட்டி வைத்து, பரிசையும் அறிவித்து விட்டான்.
எடக்கு மடக்கான மன்னனை பற்றி அறிந்திருந்த உள்நாட்டு புலவர்கள் யாரும், அவனின் சந்தேகத்திற்கு விடையான பாட்டை எழுதி, மாட்டிக்கொள்ள விரும்பவில்லை. ஆஸ்தான புலவர்களும், 'ஒர்க் - அட் - ஹோமில்' இருந்ததால், நல்லவேளை தப்பித்தோம் என்று, சபைக்கு வரவில்லை.
இந்நிலையில் தான், புழுதிவளவனின் ஓலையில் அழிந்திருந்த எழுத்திற்கு, 'டை' என்ற எழுத்துக்கு, 'விடை' என்று சொல்வதே மன்னனை சமாதானப்படுத்தும் என்று நினைத்தார், அமைச்சர்.
ஆனால், தனக்கும் அறிவுண்டு என, காட்டி விட்டான், பயகுணன்.
''நீரெல்லாம் ஒரு அமைச்சரென்று சொல்லிகொள்ள வெட்கமாயில்லை,'' என்று, திடீரென்று பாய்ந்தான், பயகுணன். 
''வீரர்கள் வருகின்றனர் என்று போட்டிருக்கிறதே. அதனால், அது விடையல்ல, படை என்று உங்கள் அறிவுக்கு எட்டவில்லையா,'' என்று எகிறினான்.
நல்ல வேளையாக மன்னனே தெரிந்து கொண்டு விட்டான் என்ற நிம்மதியுடன், ''என் மதிக்கு எட்டவில்லை பிரபோ,'' என்று சொல்லி சமாளித்தார், அமைச்சர்.
''அது, எட்டாமலேயே போகட்டும்... இப்போது, திடுதிப்பென்று இப்படி படையெடுத்து வருகிறானே, அதற்கு என்ன செய்யலாம் என்று, உங்கள் மூளைக்கு எட்டியதை சட்டென்று கூறும்,'' என்று கர்ஜித்தான், பயகுணன்.
இப்படி பிறர் நடுங்க, பயகுணன் சத்தமிட்டாலும், பிறப்பிலிருந்தே அவன் பயத்தை பாலாடையில் குடித்தவன். புலியை முறத்தால் விரட்டிய பரம்பரையில் இவனை பெற்ற தாய் வந்திருந்தாலும், இவனை வயிற்றில் சுமந்த காலகட்டத்தில், நாடு வேறொரு வைரசை சுமந்த அச்சத்தில் இருந்தது. அதனால், தாய் பாலிலும் கிருமி இருக்கலாம் என்ற பயத்தில், அதை அப்படியே அருந்த விடாமல், பாலாடையில் பிடித்து, ஒரு சிட்டிகை மஞ்சள் பொடியை கலந்து தான் மகவுக்கு ஊட்டுவாளாம், அவன் அம்மா.
இதன் பயனாக, தொட்டில் பழக்கமாக தொன்றுதொட்டே, பயகுணனின் ரத்தத்தில் நோய் தொற்று பயம் குடிகொண்டு விட, அதன் இன்னொரு பயனாக இவனுக்கு, பயகுணபராக்கிரமன் என்ற பெயரும் அமைந்து விட்டது.
விருப்ப ஓய்வு என்ற வசதிகள் இல்லாத அந்த கால கட்டத்தில், சிம்மாசன பதவியை உதறி தள்ளி, ஓட முடியாமல், எல்லாவற்றுக்கும் பயந்து, ஒருவித உதறலோடு தான் ஆட்சி புரிந்து வந்தான், பயகுணன்.
இவனுடைய இந்த பயந்த சுபாவத்தை அறிந்திருந்த, அண்டை நாட்டு அரசர்கள், இவனை ஒரு பொருட்டாக நினைத்து படையெடுப்பதை, தங்களின் கவுரவத்திற்கு இழுக்காக நினைத்தனர். அதனால், இவன், தன் நாட்டை எந்த சண்டையிலும் இழக்கும் சந்தர்ப்பமே கிட்டாமல் இருந்தது.
இந்நிலையில் தான், உலகத்தையே உலுக்கி எடுக்கும், 'கொரோனா' தெனாவெட்டுடன், இவன் நாட்டில் ஒற்றன் ஒருவன் மூலம், மற்றவர்களுக்கும் தொற்ற நுழைந்தது. ஆனால், வருமுன் காக்கும், பயகுணனின் எல்லை மீறிய எச்சரிக்கை நடவடிக்கையால், எளிதில் பரவ முடியாமல், அந்த, 'கோவிட் - 19' திணறியது.
நாட்டை சுற்றி, 40 அடி ஆழ அகலத்திற்கு ஒரு அகழியை வெட்டிய பயகுணன், அதில், நீருக்கு சம பங்கில், கிருமி நாசினியை கலக்கும்படி கட்டளையிட்டான்.
நாட்டிற்குள் நுழைபவர்கள் யாராக இருந்தாலும், அந்த நாசினி அகழியில் நீந்தி தான் உள்ளே வர வேண்டும். அப்படி வந்தவர்களையும், உள்ளே விடாமல், ஒரு மண்டலம், 'குவாரன்டைன்' என்று குடிலில் வைத்து, சகல வகையான கஷாயங்களையும் குடிக்க வைத்து, பராமரித்த பின் தான், நாட்டுக்குள் அனுமதிப்பான்.
மேலும், வீதிக்கு ஒரு வைத்தியர் என ஒதுக்கி, வீதிகளில் எந்த வீட்டிலிருந்து தாளிப்பால் வரும் இருமல், துாசியினால் வரும் தும்மல் ஓசைகள் கேட்டாலும், உடனுக்குடன் கவனித்து, அதை ஓசை படாமல் ஓடச் செய்யும் நடவடிக்கை எடுத்திருந்தான்.
தன் கிரீடம், செங்கோல், உபயோகத்திற்கு உட்படுத்தாத உடைவாள் அத்தனையையும், தினமும் கொதிக்கும் நீரில் முக்கி எடுத்த பின்பே அணிவான். அந்த சூடான அணிகலன்களால் வியர்த்து கொட்டுவதையும் பொருட்படுத்தாமல், சாமரம் வீசும் பணி பெண்களை, துாரத்தில் நிற்க வைத்து, 'கீப் டிஸ்டன்ஸ்' கோட்பாட்டை கடைப்பிடிக்க தவறவில்லை.
இப்படி முழு மூச்சாக, 'கொரோனா' மிரட்டல் யுக்திகளை கையாண்டதோடு, எல்லா விளைநிலங்களிலும், மஞ்சள் பயிரிட்டு, கொஞ்ச நஞ்ச, 'கோவிட் - 19' கிருமிகளையும் அண்டவிடாமல் செய்தான். இதனால், இவன் நாட்டிற்கு பச்சை அந்தஸ்து, 'பர்மனென்ட்' ஆக வழங்கப்பட்டு, அண்டை நாட்டு அரசர்களின் ஒப்புதலோடு, 'கொரோனா வென்றான்' என்ற பட்டமும் அளிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தான், சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டிருந்த, ஊழலுார் மன்னன், இப்போது, ஓலை அனுப்பியிருக்கிறான்.
அமைச்சர் பதில் சொல்ல தயங்கி நிற்பதை பார்த்த மன்னன், ''சேனாதிபதியாரே... என் ராஜ்யத்தில் ஒரு வேலையும் பார்க்காமல் சம்பளம் வாங்கும் ஒரே ஆசாமி, நீங்கள் தான். இப்போது, ஒட்டுமொத்தமாக செயல்படும் சந்தர்ப்பம் வந்துள்ளது. தங்களின் ஆலோசனையையும், திட்டத்தையும் கூறலாம்,'' என்றான்.
'லாக் டவுன்' முடிந்து, ஆபீஸ் செல்லும் அரசாங்க அலுவலரை போல், திடு திப்பென்று, தன் துரு பிடித்த வாளுக்கு வேலை வந்திருக்க, தான் மட்டுமே போர்க்களம் சென்று, எதிரி படைகளை தாக்க வேண்டிய அவல நிலை நிலவுகிறது. இதை, மன்னனுக்கு எப்படி எடுத்துரைப்பது என்று தயங்கி நின்றான், சேனாதிபதி.
சேனாதிபதி எத்தனை முறை எடுத்துரைத்தும், நாட்டில் இருந்த வீரர்களுக்கு வேலை கொடுத்து, ஒரு படையை உருவாக்க இசையவில்லை, பயகுணன். அதனால், போர் வீரர்களோ, போர்க்களமோ காணாத நாடாக, நாசினி நாடு தனி சிறப்போடு திகழ்ந்தது.
ஒருமுறை, சேனாதிபதி என்ற ஒரு, பதவியே, 'வேஸ்ட்' என்று கருதிய, பயகுணன், அதை துாக்க நினைத்ததுண்டு. சொந்த மைத்துனனே அந்த பதவியை அலங்கரித்ததால், அதை துாக்கும்பட்சத்தில், அரசியின் தாக்குதல் இருக்குமென்ற அச்சத்தில் அதை தவிர்த்திருந்தான், பயகுணன்.
சேனாதிபதியும் அதே தைரியத்தோடு, தன் தமக்கையின் புருஷனான, பயகுணனிடம் பயமில்லாமல் பேசினான்.
''மன்னா... இதில் என் தவறு ஒன்றுமில்லை. நான் எத்தனை முறை எடுத்துரைத்தும், போர் படையை உருவாக்க, தாங்கள் ஒப்புதல் அளிக்காமல் வாளா இருந்து விட்டீர்கள். இப்போது, உங்களிடமும், என்னிடமும் உள்ள உடை வாளை தவிர, கூடுதலாக ஒரு வாளுமில்லை. பகைவனை எதிர்கொள்ள ஆளுமில்லை,'' என்று, எதுகை மோனையோடு ஏடாகூடமாக பேசினான்.
மந்திரி எதிரில் மைத்துனன் இப்படி எகத்தாளமாக பேசுவது, தன் காதில் விழுந்ததாக காட்டிக்கொள்ளாமல், பயகுணனுக்கு, அரண்மனை வாசலில் எழுந்த கூச்சல் ஒத்தாசை செய்தது.
வாயிலில் சிப்பாயோடு வாக்குவாதம் செய்து கொண்டிருந்தான், ஒருவன்.
''யாரங்கே, என்ன கூச்சல்...'' என்று, மன்னன் கேட்க, வாயிலிலிருந்த அந்த சிப்பாய் வந்து நின்றான்.
''மன்னா... சற்று முன் ஓலை எடுத்து வந்த அண்டை நாட்டு துாதுவன், திரும்பவும் உள்ளே வந்து உங்களை பார்க்க வேண்டுமென்று அனுமதி கேட்டு அடம் பிடிக்கிறான். நீங்கள் மூவரும், முக்கிய ஆலோசனையில் இருப்பதாக கூறியும், உங்களை உடனடியாக பார்த்தேயாக வேண்டும் என்று தகராறு செய்கிறான். அதுதான் மன்னா கூச்சல்,'' என்றான், சிப்பாய்.
மைத்துனனின் அலட்சிய பேச்சை கேட்டு நிற்கும் அமைச்சரின் கவனத்தை திருப்ப நல்ல சந்தர்ப்பம் கிடைத்தது. உடனே அந்த துாதுவனை உள்ளே விடுமாறு உத்தரவிட்டான், பயகுணன்.
ஆவலோடு ஓடி வந்த துாதுவன், தன் இடுப்பில் கட்டியிருந்த துண்டிலிருந்து, ஒரு ஈரமான ஓலையை எடுத்தான்.
''அரசே... உங்கள் நாட்டிற்குள் நுழைய நாசினி அகழியில் நீந்தி வந்தபோது, எங்கள் மன்னர் உங்களுக்கு கொடுத்து அனுப்பிய ஓலை நனைந்து போய் விட்டது. அதனால், அதில் கீழ் பாதியை தான் முதலில் தந்திருந்தேன். அந்த ஓலையின் மேல் பாதி, என் துண்டிலேயே இருப்பதை பார்த்து, அதையும் கொடுத்து விட்டு போகலாமென்று வந்தேன்...
''உள்ளே விட மறுத்ததால், தர்க்கம் செய்ய வேண்டியதாயிற்று. மன்னிக்கவும் மன்னா,'' என்று, அந்த முதல் பாதி ஓலையை அமைச்சரிடம் நீட்டினான்.
நீட்டிய ஓலையில், நாட்டின் மானம் காப்பாற்றப்பட இருப்பதை அறியாத, 'சஸ்பென்ஸ்'சோடு,  அதை படித்தார், அமைச்சர்.
'பெருமதிப்பிற்குரிய, பயகுணபராக்கிரமன் அவர்களுக்கு, ஊழலுார் ராஜா எழுதுவது. தங்கள் நாட்டிலிருந்து புலம்பெயர்ந்து, என் நாட்டில் படை வீரர்களாக வேலை செய்வோர், 'கொரோனா' பயமில்லாத பச்சை நாடான தங்கள் நாட்டிற்கே திரும்பி வர விருப்பம் தெரிவித்தனர்.
'இந்த சூழலில், எங்கள் நாட்டிலும் அவர்களை பராமரிப்பது பெரும்பாடாக இருப்பதால், அவர்களை நாசினி தேசத்துக்கே அனுப்பி விடுகிறேன். கூட்டமாக வருகின்றனரே என்று, நீங்கள் அஞ்ச வேண்டாம். போதிய இடைவெளியோடு அவர்கள் வர, ஆளுக்கு ஒரு குடையை கொடுத்துள்ளேன். குடை எடுத்து, வீரர்கள் தங்கள் நாட்டிற்கு வருகின்றனர். இப்படிக்கு, புழுதிவளவன்...'
ஒருவழியாக, அதுவரை குடைந்தெடுத்துக் கொண்டிருந்த விவகாரத்திற்கு, 'குடை' என்பதே விடை என்ற ஓலை வாசகங்கள், வயிற்றில் பாலை வார்த்தது.
மூவரிடமிருந்து கிளம்பிய நிம்மதி பெருமூச்சு, துாதுவனாக கிளம்பிய அவனை, அவன் நாட்டிற்கே அடித்துக் கொண்டு போய் தள்ளிவிடும் போலிருந்தது.
அதன்பின், இந்நாள் வரை, குடிமகன்களுக்கு குடை தான், 'கீப் டிஸ்டன்ஸு'க்கு உபாயமாக திகழ்கிறது.                 
அகிலா கார்த்திகேயன்

