PUBLISHED ON : ஜூன் 28, 2020

ஜூலை 1 - சர்வதேச நகைச்சுவை தினம்!
சிரிக்காதவனையும் சிரிக்க வைப்பது, ஒரு நல்ல நகைச்சுவை. தென் மாநிலங்களில், சர்தார்ஜி ஜோக்ஸ், வட மாநிலங்களில், மதராசி ஜோக்ஸ். சமீப காலமாக, ரஜினி கிண்டல் ஜோக்ஸ், அகில இந்திய அளவில் உலா வருகிறது.
வெளிநாடுகளிலும், ஒரு நாட்டை மற்றொரு நாடு மட்டம் தட்டுவது சகஜம்.
* அமெரிக்காவுக்கு, மெக்சிகோ என்றால் மட்டம்
* இங்கிலாந்துக்கு, அர்ஜென்டினா என்றால் மட்டம்
* கனடா, பிரேசில் நாடுகள், கஞ்ச பிசினாறி. மூளையை உபயோகிப்பது மிகவும் குறைவு
* கம்யூனிசத்தை, சோஷலிச நாடுகள் கிண்டலடிப்பதை வாழ்நாள் சாதனையாக செய்கின்றன. இந்த வகையில், அனைவரையும் இணைப்பது நகைச்சுவை. இதனால், சர்வதேச நகைச்சுவை தினம், ஜூலை 1ம் தேதி கொண்டாடப்படுகிறது.
பல நாட்டு நகைச்சுவைகளை பற்றி அறிந்து கொள்ள, நாம் ஒரு வலம் வருவோம்:
* 'மெக்சிகோ, இதுவரையில், ஒலிம்பிக் ஓட்டப்பந்தயத்தில், ஒரு பதக்கம் கூட வென்றதில்லை!'
'ஏன்?'
'நல்லா ஓடறவங்களெல்லாம், அமெரிக்காவுக்கு ஓடிப் போயிடறாங்களே!'
* 'மெக்சிகோகாரங்க, அமெரிக்காவுக்கு ஓடி விடுவது போல், கனடாவுக்கு போவதில்லையே... ஏன்?'
'அது, ரொம்ப துாரம்!'
* ஒரு பாகிஸ்தானியர் மற்றும் ஒரு இந்தியர், லாகூரில், மது கடையில் சேர்ந்து மது அருந்தியபோது, அவர்களிடையே சண்டை வந்தது. நீதிபதியிடம் அழைத்துச் சென்றது, போலீஸ்.
நீதிபதி: இன்று, ஜின்னா நினைவு நாள். அதனால், கசையடியை, 20 ஆக குறைக்கிறேன். உங்களுக்கு, ஏதாவது ஆசை இருந்தால் கூறுங்கள்?
பாகிஸ்தானி: என் பின்னால், இரண்டு தலையணைகளை கட்டி விட்டு அடியுங்கள்!
தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இந்தியர்: நான், 100 கசையடி கூட வாங்க தயார்!
நீதிபதி: நல்லது... உன் ஆசை என்ன?
இந்தியர்: என் முதுகில், அந்த பாகிஸ்தானியை கட்டிவிட்டு அடியுங்கள்!
* ஒரு அமெரிக்கனும், ரஷ்யனும், தங்கள் நாடுகளில் எதில் சுதந்திரம் அதிகம் என, பேசிக் கொண்டிருந்தனர்.
அமெரிக்கன்: நான், இப்போ நேரா வெள்ளை மாளிகை வாசலுக்கு போய், 'டொனால்ட் டிரம்ப் ஒழிக'ன்னு கத்தினாலும் எனக்கு ஒன்றும் நடக்காது'
ரஷ்யன்: நானும், இப்போதே நேராக, கிரெம்ளின் மாளிகை முன் நின்று, 'டொனால்ட் டிரம்ப் ஒழிக'ன்னு, கத்தினால், எனக்கும், ஒன்றும் நடந்து விடாது!
* ஒரு சீனாக்காரரும், ஒரு பிரிட்டிஷ்காரரும், ஹாங்காங்கில் ஒரு பெரிய வணிக வளாகத்துக்கு சென்றிருந்தனர். அங்கு, மையத்தில் ஏராளமான கொடிகள் கட்டப்பட்டிருந்தன.
'இந்த கொடிகளையெல்லாம் பார்த்தா, எனக்கு பெருமையாக இருக்கு...' என்றார், சீனாக்காரர்.
'அதெல்லாம் வேற நாட்டு கொடிகள்!'
'இருக்கலாம். அதில், லேபிளை பாருங்க... எல்லாம் சீனாவில், 'பிரின்ட்' ஆனது!'
* 'பேசும் நாய் விற்பனைக்கு' என, ஒரு வீட்டு வாசலில் எழுதியிருந்தது.
ஆச்சரியமடைந்த ஒருவர், உள்ளே சென்று, 'உங்க நாயுடன் பேசலாமா...' என, கேட்டார்.
'ஆஹா...' என்றார், வீட்டுக்காரர்.
'நீ... உன் வாழ்க்கையில் செய்த சாதனைகளை சொல்?'
'எங்க தெருவில் பல மாடி கட்டடம் ஒன்று இருந்தது. திடீரென ஒருநாள், அது இடிந்து விழுந்து, பலர் சிக்கிக் கொண்டனர். உடனே அங்கு சென்று, மோப்பம் பிடித்து, பலரை காப்பாற்றினேன்!'
'பிறகு...'
'ஒரு சமயம், என் முதலாளியின் மனைவியிடம், ஒரு திருடன் கத்தியை காட்டி மிரட்டி, பணம், நகைகளை பறித்துக் ஓடினான். உடனே, அவனை துரத்திச் சென்று, கவ்வி, பறித்த நகை, பணத்தை கீழே போடச் சொன்னேன்!'
திகைத்தவர், வீட்டுக்காரரிடம், 'பிறகு ஏன் சார், இந்த நாயை விற்கறீங்க?'
'அது, வாயை திறந்தாலே பொய்... உங்ககிட்ட கூறின எதுவும் நடக்கவேயில்லை; போதுமா...' என்றார், வீட்டுக்காரர்.
* டாக்டரிடம், ஒருவன்: எப்பவும், 'உலகம் பிறந்தது எனக்காக... ஓடும் நதிகளும் எனக்காக'ன்னு, பாடிக்கிட்டே இருக்கேன்... ஒருவேளை, எம்.ஜி.ஆர்., என் உடம்பில் புகுந்திருப்பாரா?
டாக்டர்: டி.எம்.சவுந்தர்ராஜனாகவும் இருக்கலாமே!
* விமானத்தில், ஒருவர், தனக்கு இரண்டு சாப்பாடு வேணும்ன்னு கத்திக்கிட்டிருந்தார்.
'அது, கனடாக்காரர்!'
'எப்படி கண்டுபிடிச்சே?'
'குண்டா இருக்கார்னு இரண்டு சீட்டு வாங்கினாராம். அதுக்கு, இரண்டு சாப்பாடு கொடுன்னு கேட்கிறார்!'
* நடு தெருவில் ஒரு ஆள் மீது, ஒரு கார் பயங்கரமாய் மோதியது. திகைத்த சொந்தக்காரர், போராடி, மோதிய ஆளை வெளியே இழுத்து, 'எங்கே இருக்கீங்க'ன்னு கேட்டார்...
'சொர்க்கத்துக்கு போய், கால் மணி நேரமாச்சு...' என, பதில் வந்தது.
* ஒரு தீவில் மூன்று பேர் பேசிக் கொண்டனர். ஒரு விளக்கு இருந்தது.
முதலாமவர் அதை கையில் எடுத்தபோது, 'உனக்கு, என்ன வேண்டும் கேள்... செய்கிறேன்...' என்றது.
'நான், என் வீட்டிற்கு உடனே திரும்பிச் செல்ல வேண்டும்!'
உடனே, அந்த ஆள் மறைந்து போனான்.
அடுத்தவன் விளக்கை எடுத்து, 'நானும், அவனை போல், என் வீட்டிற்கு செல்ல வேண்டும்...'
அவனும் மறைந்து போனான்.
மூன்றாவது நபர், விளக்கை எடுத்து, 'எனக்கு, தனியா போரடிக்குது... அந்த இரண்டு பேரையும் இங்கே திரும்ப கொண்டு வந்தா போதும்!'
- இதுபோல், உங்களுக்கு தெரிந்த நகைச்சுவைகளை நண்பர் மற்றும் உறவினர்களுடன் பகிர்ந்து, நகைச்சுவை தினத்தை கொண்டாடி மகிழுங்கள்.
ஆர். திலீப்

