
நல்லாரைக் காண்பதும் நன்றே நலமிக்க
நல்லார் சொல் கேட்பதும் நன்றே- - நல்லார்
குணங்கள் உரைப்பதும் நன்றே அவரோடு
இணங்கி இருப்பதும் நன்றே.
-- அவ்வையார் சொன்னதற்கு ஏற்ப, நடந்த நிகழ்வு இது.
அவந்தி -- சுதாமா என்றழைக்கப்பட்ட குசேலர், இருந்த ஊர் இது. இங்கு, கோடிகர்ணர் என்பவர், உபன்யாசம் செய்து வந்தார். அவர் சொல்லும் தெய்வ கதைகளை கேட்க, ஏராளமானோர் கூடுவர். காத்யாயினி என்ற பெண்மணியும், தினமும், ஆர்வமாய் கதை கேட்டு வந்தார்.
நாள்தோறும், மாலை நேரத்தில் செல்லும் காத்யாயினி, இரவு திரும்புவதை, திருடர் கூட்டம் பார்த்தது. 'ஆஹா... நல்ல சந்தர்ப்பம்...' என தீர்மானித்து, காத்யாயினி போய் சற்றுநேரம் ஆனதும், வீட்டினுள் புகுந்தது.
அதேநேரம், கதை கேட்டுக் கொண்டிருந்த காத்யாயினி, தன்னுடன் இருந்த பணிப்பெண்ணிடம், 'நீ வீட்டுக்கு போய் எண்ணெய் எடுத்து வா. இங்குள்ள விளக்குகளுக்கு விட வேண்டும்...' என்றார்.
வீட்டிற்கு வந்த பணிப்பெண், திருடர்கள் இருப்பதைப் பார்த்தாள். அவ்வளவு தான்... வேகமாக ஓடி, எஜமானியிடம், 'அம்மா... அம்மா... திருடர்கள், வீட்டிற்குள் நுழைந்து விட்டனர்...' என்று படபடத்தாள்.
காத்யாயினியோ மிக அமைதியாக, 'கதை கேட்பதை கெடுக்காதே... திருட்டு போனால் அந்தப் பொருட்களை, திரும்ப சம்பாதித்து விடலாம். ஆனால், இப்படிப்பட்ட நல் உபதேசங்களைத் திரும்ப கேட்க முடியாது. இந்த பாக்கியம், இனிமேல் எப்போது கிடைக்குமோ; பேசாமல், நீயும் கதையை கேள்...' என்றார்.
திருடர்கள் உள்ளே புகுந்து திருட, யாராவது வருகின்றனரா என்று நோட்டமிட்டு நின்றிருந்த தலைவன், பணிப்பெண் வந்து, வேகமாக திரும்பி ஓடுவதைப் பார்த்தான். அவள் பின்னாலேயே வந்து, பணிப்பெண்ணும், காத்யாயினியும் பேசியதை கேட்டான்.
காத்யாயினியின் துாய உள்ளம், அவர் பேசிய வார்த்தைகளில் வெளிப்பட, அதைக் கேட்ட திருடர் தலைவன், 'இப்படிப்பட்ட உத்தமியின் வீட்டிலா, திருடத் துணிந்தோம்...' என, வருந்தினான்.
வேகமாக வீடு திரும்பி, தன் கூட்டத்தாரை தடுத்து நிறுத்தினான். இவ்வாறு, திருந்திய தலைவனால், அவன் கூட்டமும் திருந்தி, நல்வழிப்பட்டது.
தெய்வத்திடம், எதை கேட்கிறோமோ இல்லையோ, 'நல்லவர்களை என்னுடன் சேர்த்து வை...' என, கேட்க வேண்டும்.
உடல் பலம், படை பலம், அரசு பலம் என, எல்லாம் இருந்தும், நல்லவர்களின் தொடர்பு, வாலிக்கு இல்லை; அழிந்து போனான்.
ஆனால், அவை எதுவுமே இல்லாத சுக்ரீவன், ஆஞ்சநேயர் என்ற ஒரு நல்லவருடன் சேர்ந்தான்.
விளைவு... தெய்வமே, சுக்ரீவனை தேடி வந்தது. இழந்த அனைத்தையும் திரும்பப் பெற்றான், சுக்ரீவன்.
காத்யாயினியைப் போல, நல்லதை கேட்பதில் ஊக்கமாக இருப்போம். நல்லவர்களின் தொடர்பை வேண்டிக் கொள்வோம். துயரங்கள் நம்மை தீண்ட வழியே இருக்காது!
பி.என்.பரசுராமன்
கடவுளை வணங்கும் முறை பற்றி கூறவும்...
* சிவன், விஷ்ணு, பிரம்மாவை வணங்கும்போது, தலைக்கு மேல், 12 அங்குல உயரத்திற்கு, கைகளை உயர்த்தி, கைகூப்ப வேண்டும்
* பிற தெய்வங்களுக்கு, தலை மேல் கைகூப்ப வேண்டும்
* குருவை, நெற்றிக்கு நேர் கைகூப்பி வணங்க வேண்டும்
* தந்தைக்கும், அரசருக்கும் வாய்க்கு நேர் கைகூப்பி வணங்க வேண்டும்
* அறநெறியாளர்களை, மார்புக்கு நேர் கைகூப்பி வணங்க வேண்டும்
* அன்னையை வயிற்றுக்கு நேர் கைகூப்பி வணங்க வேண்டும்.