PUBLISHED ON : டிச 21, 2014

இத்தாலியின் தலைநகரான ரோம் நகருக்கு செல்பவர்கள், கட்டாயம் பார்க்க வேண்டிய இடம், கோவாடிஸ்!
இங்கு தான் இயேசுவின் முதல் சீடர் பீட்டர், இயேசு கிறிஸ்துவின் தோற்றத்தை கண்டதாக நம்புகின்றனர்.
ஒருசமயம், ரோம் நகர் தீப்பிடித்து எரிந்த போது, அதைப்பற்றி கவலைப்படாமல் இருந்த மன்னன் நீரோ மீது, மக்கள் கடும் கோபம் கொண்டனர். இதை திசை திருப்ப, கிறிஸ்தவர்களை கொல்ல ஆரம்பித்ததுடன், கிறிஸ்தவர் களின் குருவாக இருந்த செயின்ட் பீட்டரையும் கொல்ல முயற்சித்தான் நீரோ மன்னன். அதனால், பயந்து போன கிறிஸ்தவர்கள், பீட்டரை நகரைவிட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொண்டனர். பீட்டரும் ரோமை விட்டு வெளியேறி சென்று கொண்டிருந்த போது, திடீரென அவர்முன் வந்தார் இயேசு.
அவரைப் பார்த்து திகைத்த பீட்டர், 'ஆண்டவரே... எங்கே செல்கிறீர்கள்?' எனக் கேட்டார். அதற்கு இயேசு, 'மீண்டும் சிலுவையில் அறையப்பட ரோம் செல்கிறேன்...' என்றவர், அடுத்த நொடி மறைந்து விட்டார். அவர் நின்ற இடத்தில், இயேசுவின் பாதங்கள் பதிந்திருப்பதை கண்டார். இதனால், மனம் மாறிய பீட்டர், மீண்டும் ரோமுக்கு திரும்பினார்.
பீட்டரை தலைகீழாக தொங்கவிட்டு, சிலுவையில் அறைந்து கொன்றான் நீரோ மன்னன்.
அதன்பின், இயேசு காட்சி தந்தார். அவர் பாதத்தை பதித்த இடத்தில், 'தி சர்ச் ஆப் டோமினிக் கோவாடிஸ்' ஆலயம் கட்டப்பட்டது. இதன் உள்ளே, இன்றும் இயேசுவின் பாதங்களை காணலாம்.
இச்சம்பவத்தை வைத்து, ஹென்ரிக் சியான்கீ வியோஸ், 'தி நரேட்டிவ் ஆப் தி டைம் ஆப் நீரோ இன் 1095' என்ற பெயரில் நாவல் எழுதினார். இவரைத் தொடர்ந்து, இச்சம்பவத்தை அடிப்படையாக வைத்து பல்வேறு திரைப்படங்கள் எடுக்கப்பட்டாலும், 1951ல் எடுத்த திரைப்படம் மிக பிரபலமாக பேசப்பட்டு, எட்டு அகாடமி விருதுகளுக்கும் பரிந்துரை செய்யப்பட்டது.
இந்த நாவலுக்காக, அதன் ஆசிரியருக்கு, 1965ல் இலக்கியத்திற்கான நோபல் பரிசு கிடைத்தது.
— ஜோல்னாபையன்.
