PUBLISHED ON : டிச 21, 2014

மறைந்த பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் வாழ்க்கை வரலாற்றை அவரே சொல்லக் கேட்டு, கவிதா ஆல்பர்ட் என்ற பெண்மணி, 'ஒரு குயிலின் வாழ்க்கைச் சங்கீதம்...' என்ற நூலை வெளியிட்டிருக்கிறார். அதில்...
எம்.ஜி.ஆருக்காக, அடிமைப் பெண் படத்தில், 'ஆயிரம் நிலவே வா...' என்ற பாடலை டி.எம்.எஸ்., பாடி, ஒலிப்பதிவு செய்ய ஏற்பாடாகி இருந்தது. பாடல் ஒலிப்பதிவு செய்ய வேண்டிய நாளில், டி.எம்.எஸ்., தன் மகளின் திருமண ஏற்பாடுகளைக் கவனிக்க, சென்னையிலிருந்து மதுரைக்கு செல்ல மதியம், 2:00 மணிக்கு காரில் புறப்பட தயாராக இருந்தார்.
அப்போது எம்.ஜி.ஆர்., பட நிறுவனத்திலிருந்து அழைப்பு வந்தது. அடிமைப் பெண் படத்தில், ஏற்கனவே முடிவு செய்தபடி, 'ஆயிரம் நிலவே வா...' பாடலை, பி. சுசீலா - டி.எம்.எஸ்., பாட வேண்டும் என்றும், இன்று மதியம் ஒலிப்பதிவு என்றும் கூறினர்.
'நாளை மறுநாள், என் மகளின் திருமணம்; அதனால், இன்று மதியம் கண்டிப்பாகப் புறப்பட வேண்டும். நான் போய் தான் திருமண ஏற்பாடுகளை கவனிக்கணும் என்பதால், இப்போது பாட வர முடியாது; திருமணம் முடிந்து, மறுநாள் வந்து பாடிக் கொடுக்கிறேன்...' என்றார், டி.எம்.எஸ்.,
செய்தி எம்.ஜி.ஆருக்கு தெரிவிக்கப்பட்டதும், எம்.ஜி.ஆர்., டி.எம்.சவுந்தரராஜனை அழைத் தார். சென்னை, தி.நகர் அலுவலகத்தில்
எம்.ஜி.ஆரை சந்தித்து, தன் நிலையை எடுத்துச் சொன்னார் டி.எம்.எஸ்.,
ஆனால், எம்.ஜி.ஆரோ, 'இன்று பாடலை ஒலிப்பதிவு செய்து விட்டு, நான் ஜெய்ப்பூருக்குச் சென்று, அடிமைப் பெண் பாடல் காட்சியைப் படமாக்க வேண்டும்; எனவே, எப்படி யாவது பாடிக் கொடுங்கள்...' என்றார்.
ஆனால், டி.எம்.எஸ்., 'மதுரை புறப்பட்டே ஆக வேண்டும்...' என்று சொல்ல, எம்.ஜி.ஆர்., கோபத்தோடு, 'சரி, நீங்கள் புறப்படலாம்...' என்றார்.
மதுரையில் திருமணம் முடிந்த பின், மாலை, 4:00 மணி அளவில், மாலை தினசரி பத்திரிகை ஒன்றை எடுத்துக் கொண்டு, சிலர் அவசரமாக டி.எம்.எஸ்சை தேடி வந்தனர். அதில், முழுப் பக்க அளவில், எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை, எம்.ஜி.ஆர்., கட்டித் தழுவுவது போன்ற புகைப்படத்தைப் போட்டு, 'எம்.ஜி.ஆர்., புது பின்னணி பாடகரை அறிமுகப்படுத்துகிறார்...' என, விளம்பரம் செய்யப்பட்டிருந்தது.
எம்.ஜி.ஆருக்காக, 'ஆயிரம் நிலவே வா...' பாடலைப் பாடினார், எஸ்.பி.பி.,
எஸ்.பி.பி.,யை தனக்காக பாடுவதற்கு, சில கம்பெனிகளுக்கு சிபாரிசு செய்து பாட வைத்தார் எம்.ஜி.ஆர்.,.
பின், அடிமைப் பெண் படத்தில், 'தாயில்லாமல் நானில்லை...' என்ற பாடலை பாட வைத்தார். பாடலைக் கேட்ட வினியோகஸ்தர்கள், 'சவுந்தரராஜன் குரல் தான் உங்களுக்குப் பொருத்தம்...' என்று கூறி வருத்தப்பட்டனர்.
மீண்டும் டி.எம்.எஸ்சை பாட அழைத்தனர். அப்போது டி.எம்.எஸ்., 'இதுவரை எம்.ஜி.ஆருக்காகப் பாட, 500 ரூபாய் தான் வாங்கினேன்; இனி, 1,500 ரூபாய் கொடுத்தால் தான் பாட வருவேன்...' என்றார். அவ்வாறே தந்து, டி.எம்.எஸ்ஸை பாட வைத்தனர்.
'தென்னகத் திருத்தலங்கள்' நூலிலிருந்து: கேரளாவில் புகழ் மிக்க திருத்தலம் பழையனூர், பகவதி அம்மன் கோவில். இக்கோவில் பிரகாரத்துக்குள் கணக்கற்ற சேவல்கள் அலைந்து திரிவதை பார்க்கலாம். இச்சேவல்களை தங்கள் பிரார்த்தனை நிறைவேறிட வேண்டி, அம்பாள் சன்னிதியில் கொண்டு வந்து விடுகின்றனர். இவ்வாறு பிரார்த்தனை காணிக்கையாக விடப்படும் சேவல்களை, ஏலம் விடுவது இல்லை என்பதால், இவை அனைத்தும் இயற்கையாகத் தான் இறக்கின்றன.
நடுத்தெரு நாராயணன்
