PUBLISHED ON : டிச 03, 2023

'இன்டர்வியூ ஹாலில்' நல்ல கூட்டம். வாட்ட சாட்டமாய், வாளிப்பாய், மிடுக்காய் என்று, பல ரூபங்களில் இளைஞர்கள் காத்திருக்க, அவர்களை எல்லாம் பார்த்தவாறே உள்ளே நுழைந்தாள், கார்த்திகா.
'கார்த்திகா இண்டஸ்டிரீஸ்' என்ற, பல நுாறு கோடி மதிப்பிலான நிறுவனங்களின், 'ஜாயின்ட் மேனேஜிங் டைரக்டர்' அவள். 24 வயது, அழகான பெண்ணிற்கு, இப்படி ஒரு பெரும் பதவி வாய்ப்பது, நிச்சயம் சாதக விஷயமே...
வேறு சில ஆச்சரியங்களும் அளித்தாள், கார்த்திகா.
தலை வாரி பின்னி, கூந்தலில் பூ சூடியிருந்த நிலையில், நெற்றியில் இக்கால பெண்களைப் போல முற்றுப்புள்ளி இல்லாமல், பட்டாணி அளவுக்கு, 'ஸ்டிக்கர்' பொட்டும் வைத்திருந்தாள்.
அவளை பார்த்த சில இளைஞர்கள், அவளும், 'இன்டர்வியூ'விற்கு வந்திருப்பதாகத் தான் முதலில் நினைத்தனர். அவள் பின்னால், ஒருவர், 'பிரிப்கேஸ்' உடன் போவதைப் பார்த்த பின், அவள் தான், ஜே.எம்.டி., என்ற முடிவுக்கு வந்தனர். பின்னாலேயே, 'வீல் சேரில்' ஒருவரை உள்ளே அழைத்துச் சென்றனர்.
அந்த, 'இன்டர்வியூ ஹால்' மிக நவீனமாக இருந்தது. குடிக்க குடிக்க காபியை தந்தபடி இருந்தது, 'ஆட்டோமெடிக் காபி மிஷின்!' பக்கத்திலேயே, 'வாட்டர் பில்டர்' அதில், 'ஹாட், கோல்ட்' பிரிவுகள். ஒரு டேபிள் மேல் பிஸ்கெட்டுகள் வரிசையாக வட்டமாக அடுக்கப்பட்டிருந்தன.
இதமான மையப்படுத்தப்பட்ட, 'ஏசி' குளிர். ஒருபுறம் பெரிய கண்ணாடி தடுப்பு. அதற்கு அப்பால், சென்னை நகரின் விரிந்த தோற்றம். அதில், துார்தர்ஷனின் உயர்ந்த டவரிலிருந்து, ஓமந்துாரார் மருத்துவமனை வரை எல்லாம், 'பளீச்'சென்று தெரிந்தது.
அழகான அந்த சென்னை நகர கட்டடங்களை பார்த்தபடியே அமர்ந்திருந்தான், தனஞ்ஜெயன். முகத்தில் ஒரு வாரத்து தாடி. தலையில் அழகான, அடக்கமான கிராப்.
ஆனால், மற்ற எல்லா இளைஞர்களும் அம்மன் கோவில் முளைப்பாரி கணக்கில் நட்டுக்குத்தலான கிராப்புத் தலையோடு தான் அமர்ந்திருந்தனர். மிக இறுக்கமான, பேன்ட், ஷர்ட்டில், பெல்ட் அணிந்து, 'இன்' செய்திருந்தனர். எல்லார் கையிலும் ஒரு பைல் இருந்தது.
ஒரு பாலித்தீன் பை வைத்திருந்தான், தனஞ்ஜெயன். அதற்குள் தான் அவனது, எம்.ஏ., சைக்காலஜி டிகிரி சர்டிபிகேட் முதல் ஏனைய ஸ்போர்ட்ஸ் சர்டிபிகேட்களும் இருந்தன. அவன் அணிந்திருந்த பேன்ட், சட்டையிலும் அத்தனை நவீனமில்லை. நான்கு நாட்களாய் அதை அவன் கழற்றாமலே அணிந்திருப்பது போல் தெரிந்தது.
கார்த்திகா வந்த ஐந்தாவது நிமிடம், வரிசையாக எல்லாரும் அழைக்கப்பட்டனர். போன வேகத்தில் எல்லாரும் திரும்பிச் சென்றனர். சிலர் முகத்தில் கோபம், சிலர் முகத்தில் ஏமாற்றம் என்று பலவிதமான உணர்வுகள்.
''இங்க நடக்கறதுக்கு பேர், 'இன்டர்வியூ' இல்ல. கேலிக்கூத்து,'' என்று சொல்லி, தலையிலடித்தபடி போனான், ஒருவன்.
சொல்லி வைத்தாற் போல் இறுதியாக அழைக்கப்பட்டான், தனஞ்ஜெயன்.
மிக நிதானமாக நடந்து, உள்ளே சென்றான். ஒரு வயதான மனிதரோடு அமர்ந்திருந்தாள், கார்த்திகா.
'வீல் சேரில்' அமர்ந்திருந்த அவர் கையில், 'வென்ட்ப்ளோ' எனப்படும், திரவ மருந்து செலுத்துவதற்கான ஊசி செருகப்பட்டு பிளாஸ்திரி போடப்பட்டிருந்தது. அதுவே அவர் ஒரு நோயாளி என்பதை புரிய வைத்தது. அவர் கண்களிலும் ஒரு அசாத்திய சோர்வு. அவர்களைப் பார்த்தபடியே அமர்ந்தான், தனஞ்ஜெயன்.
''ஆர் யூ மிஸ்டர் தனஞ்ஜெயன்?'' என்றாள், கார்த்திகா.
''யெஸ், மேடம்!''
''எம்.ஏ., சைக்காலஜியா?''
''ஆமாம்.''
''சர்டிபிகேட்சை அழகா, பைல்ல போட்டு கொண்டு வராம, இதென்ன பாலித்தீன் பைல?''
''ஒரு நல்ல, பைல் வாங்க கூட என்கிட்ட காசில்ல மேடம். ஐ ஆம் சாரி.''
தன் முகத்தில் லேசாக அதிர்வை காட்டி, ''ரியலி?'' என்றாள், கார்த்திகா.
''பைல் வாங்க என்ன, 100 ரூபாய் ஆகுமா? அது கூட இல்லாம எப்படி, எம்.ஏ., வரை படிச்சீங்க?''
''அவ்வளவும், 'ஸ்காலர்ஷிப்'ல மேடம்... எனக்கு, மூன்று சகோதரிகள். அப்பா, இறந்துட்டார். அம்மா, சுகர் பேஷன்ட். தினமும் இன்சுலின் எடுத்துக்கிட்டா தான், உயிர் வாழ முடியும்.
''பழைய சினிமாக்களில் வர்ற மாதிரி தையல் மிஷின்ல ஜாக்கெட் தைக்கறதையே வாழ்வா கொண்டவ, அக்கா; இன்னும் கல்யாணமாகலை. கழுத்துல ஒரு பொட்டு நகை கிடையாது. பாசி மாலை தான் போட்டிருக்கா...
''ரெண்டு தங்கைகள், 'டுவின்ஸ்!' பிளஸ் 2 படிச்சிக்கிட்டு இருக்காங்க. எது வாங்கினாலும் ரெண்டு ரெண்டா வாங்கியாக வேண்டிய கட்டாயம். நான் டெய்லி பேப்பர் போடறேன். ஊறுகாய், அப்பளம்ன்னு அம்மா செய்து தர்றத விக்கிறேன்,'' என, மூச்சு விடாதபடி தன்னை பற்றியும், தன் குடும்பம் பற்றியும் சொல்லி முடித்தான், தனஞ்ஜெயன்.
அவனை குறுஞ்சிரிப்போடு பார்த்த கார்த்திகா, அப்படியே திரும்பி, 'வீல் சேர்' மனிதரைப் பார்த்தாள்.
சற்று பெரு மூச்சோடு, ''நீ, 'இன்டர்வியூ' ஆரம்பி...'' என்றார்.
சிறு மணல் கிண்ணம் ஒன்றை தனஞ்ஜெயன் முன் வைத்து, ''இதுல எவ்வளவு மண் துகள்கள் இருக்குன்னு துல்லியமா சொல்லணும்... எண்ணி சொல்றது கஷ்டம். எடை போட்டு சொல்லலாம். ஆனா, எண்ணிக்கை சரியா இருக்குமான்னு உறுதியா சொல்ல முடியாது. நீங்க என்ன பண்ணுவீங்க?'' என்று, கேட்டாள்.
உடனே, 'இன்டர்வியூவை' கேலிக்கூத்து என்று ஒருவன் சொல்லிக்கொண்டே போனது தான் ஞாபகத்துக்கு வந்தது, தனஞ்ஜெயனுக்குள். அதன் எதிரொலியாய், தன் பத்து நாள் சிரைக்கப்படாத தாடையில், ஒரு குறுஞ்சிரிப்பும் தோன்றிற்று,
''என்ன மிஸ்டர்... கேலிக்கூத்துன்னு, 'பீல்' பண்ணி சிரிச்சீங்களா?'' சரியாகவே கேட்டாள், கார்த்திகா.
ஆனால், தனஞ்ஜெயனோ, கப்பை கையில் எடுத்து கனம் பார்த்தபடியே, ''நோ... நோ... இது ஒரு, 'சைக்கலாஜிகல் டெஸ்ட்!' கேள்விகள் விசித்திரமா தான் இருக்கும். நான், உங்க புத்திசாலித்தனத்தை நினைச்சும், இவ்வளவு சுலபமான கேள்வியா இருக்கேன்னு நினைச்சும் தான் சிரிச்சேன்.
''நல்லவேளை, 'பானிபட் யுத்தம் எப்ப நடந்தது? கென்னடிய சுட்டுக் கொன்னவன் பேர் என்ன'ன்னு, வழக்கமான கேள்வி கேட்கல... தேங்க்ஸ்,'' என்றான்.
வெகு ஆச்சரியமாக பார்த்த கார்த்திகா, ''அப்ப இந்த கப்ல எவ்வளவு மண் துகள் இருக்குன்னு நீங்க கரெக்டா சொல்லிடுவீங்களா?'' என்றாள்.
''இதுல, 3 லட்சத்து, 40 ஆயிரத்து, 340 மண் துகள்கள் இருக்கு. சந்தேகமா இருந்தா நீங்களே எண்ணிப் பார்த்துக்குங்க,'' என்ற பதிலோடு, அவளை ஊன்றிப் பார்த்தான், தனஞ்ஜெயன்.
ஒரு வினாடி விக்கித்துத் தான் போனாள், கார்த்திகா. பின் சுதாரித்து, ''எண்ணாமல் எப்படி சொன்னீங்க?'' என்று, கேட்டாள்.
''இல்ல... எண்ணிப் பார்த்து தான் சொல்லியிருக்கேன். எண்ணின்னா மண் துகளை எண்ணி இல்ல, உங்க சாதுர்யத்தை எண்ணி... இதை எண்ணிப் பார்த்து சரியான எண்ணிக்கையை சொல்றதால உங்களுக்கு எதுவும் கிடைக்கப் போறதில்ல.
''இது, 'கேன்டிடேட்'டோட நுண்ணறிவுக்கான சோதனை. இக்கட்டான தருணங்களை, 'சைக்கலாஜிஸ்ட்' எப்படி கையாளுவான்னு தெரிஞ்சிக்கணும்ன்னா இப்படி தான் கேள்விகள் கேட்க முடியும். இது ஒண்ணும் புதுசு இல்லை.
''இதைவிட தர்மசங்கடமான கேள்விகளை, தெனாலி ராமன் என்ற, 'ஹிஸ்டாரிக் கேரக்டர்'கிட்ட கேட்டு, அவரும் பதில் சொல்லி இருக்காரு. மகாபாரதத்துல, யட்சகர்களும் இந்த சாயல்ல பல கேள்விகளை கேட்டு, சாதுர்யமா பதில் சொல்லி இருக்கான், தர்மன்.''
தனஞ்ஜெயன் விரிவாக சொன்ன பதிலில் அவனுக்கு வாசிப்பு பழக்கம் இருப்பதை கார்த்திகாவால் உணர முடிந்தது.
''சரியா சொன்னீங்க. நீங்க, வேலையில் சேரலாம். ஆனா, நீங்க இங்க தொடர்ந்து வேலை செய்யறது கஷ்டம்,'' என்று சொல்லி, அடுத்த வினாடியே தனஞ்ஜெயனுக்கு ஒரு இன்ப அதிர்வோடு துன்ப அதிர்வையும் அளித்தாள், கார்த்திகா.
''கஷ்டமா... இப்ப நான் பட்டுகிட்டு இருக்கிறத விடவா?'' பதிலுக்கு கூர்மையாக கேட்டான், தனஞ்ஜெயன்.
''இளமையில் வறுமை, கொடுமையானது தான். ஆனா, இங்க நாங்க தரப்போற, 'அசைன்மென்ட்' எல்லாம் அதைவிட ரொம்பவே கொடுமையானது. அதனால தான் அப்படி சொன்னேன்.''
''அப்படி என்ன அசைன்மென்ட் அது?''
''சொல்லத்தானே போறேன். பலர்கிட்ட சொல்லியும் இருக்கேன். யோசிச்சு சொல்றேன்னுட்டு போனவங்க, அதன்பின் திரும்பவே இல்லை. நீங்களும் அந்த, 'லிஸ்ட்'ல சேரலாம்ன்னு நினைக்கிறேன்.''
''முதல்ல அது என்னன்னு சொல்லுங்களேன்.''
''நீங்க தான் இனி, எங்க அப்பா கிருஷ்ணராஜோட அந்தரங்க உதவியாளர். எனக்கும் தான்...''
''அது, பதவி. 'அசைன்மென்ட்' சொல்லலியே?''
''சொல்றேன். ஒரு அந்தரங்க உதவியாளர் பணி எப்படிப்பட்டதுன்னு உங்களுக்கு தெரியும் தானே?''
''ஓரளவு தெரியும். தன் பாசோட அந்தரங்க விஷயங்களை புரிஞ்சும், தெரிஞ்சும் செயல்படணும்; எல்லா விஷயத்துலயும் வேகமாகவும், விவேகமாகவும் நடந்துக்கணும்; உயிரே போனாலும், பாசோட விஷயங்களை, வெளில யார்கிட்டயும் பேசக் கூடாது. சுருக்கமா சொல்லப் போனா பாசோட காப்பாளன் மாதிரி நடந்துக்கணும். சரி தானே?''
''என்னமோ பல, பாஸ்கள்கிட்ட உதவியாளரா இருந்த மாதிரியே பேசிட்டீங்களே... நீங்க சொன்ன எல்லாமே ரொம்ப சரி. உங்களால அப்படி இருக்க முடியுமா?''
''இருக்க முடியும்கிறதால தான், 'இன்டர்வியூ'க்கு வந்திருக்கேன். அதுல என்ன சந்தேகம் உங்களுக்கு?''
''நான் இன்னும் உங்க பாஸ் ஆன, எங்க அப்பா பத்தி சொல்லவே இல்லையே?'' என்ற பதிலோடு தன் அருகில் அமர்ந்திருந்த கிருஷ்ணராஜை பார்த்தாள், கார்த்திகா.
அதுவரை எதுவும் பேசாமல் கார்த்திகா பேசுவதையும், தனஞ்ஜெயன் பதில் சொல்வதையும் கேட்டபடியே அமர்ந்திருந்த கிருஷ்ணராஜ், ''அம்மாடி, முதல்ல, 'இன்சுலின்' போடு. லேசா மயக்கமா இருக்கு,'' என்றார்.
மேஜை டிராயரை திறந்து, அழகான சில்வர் பெட்டியை எடுத்தாள், கார்த்திகா. அதனுள், ஊசி, 'டிள்போசபிள் இஞ்ஜெக்ஷன் சிரிஞ்சு'டன், இன்சுலின் குப்பிகளும் இருந்தன. மின்னல் வேகத்தில் சிரிஞ்சில், இன்சுலினை ஏற்றி, அவரது இடுப்பில் ஊசியை போட்டாள். அவள் ஊசியை செருகும் போது, கிருஷ்ணராஜ் முகத்தில் எந்த வலி உணர்வுமில்லை.
சிரிஞ்சை குப்பை கூடையில் போட்டு விட்டு, கார்த்திகா அமரவும், கிருஷ்ணராஜ் ஆரம்பித்தார்.
''மிஸ்டர் தனஞ்ஜெயன்... இதுவரை நுாற்றுக்கணக்கானோரை, 'இன்டர்வியூ' பண்ணிட்டோம். எனக்கு தோதா ஒரு ஆள் கூட கிடைக்கலை. மணல் கிண்ணத்தை கொடுத்து எண்ணச் சொல்லும் போதே, பாதி பேர், 'இது சரிப்பட்டு வராது'ன்னு எழுந்து போயிட்டாங்க.
''சிலர், ஒரு ஸ்பூன் மண்ணை எடுத்து அதை எண்ணிப் பார்த்து, அப்புறம் எடை போட்டு பார்த்து கூட்டி, கழிச்சா எவ்வளவுன்னு தெரிய வரும்ன்னு சொல்லியிருக்காங்க. ஆனா, அவங்க கூட, நான் ஒரு, 'லெப்ரசி பேஷன்ட்'டுன்ன உடனே, பயந்து பின் வாங்கிட்டாங்க.
''ஒருத்தன் மட்டும் சம்மதிச்சு வேலைக்கு சேர்ந்தான். ஆனா, என் முதல், 'அசைன்மென்ட்'லயே, 'அவுட்' ஆயிட்டான். இது தான் இந்த, 'இன்டர்வியூ'வோட பின்புலம். எனக்கென்னவோ நீங்க எனக்கு, 'செட்' ஆகக்கூடும்ன்னு தோணுது,'' என்றார்.
அருகிலுள்ள ஜக்கிலிருந்து, தண்ணீர் தரச்சொல்லி வாங்கிக் குடித்தார். அப்போது, அவர் கையை பார்த்தான், தனஞ்ஜெயன்.
ரப்பர் கிளவுஸ் அணிந்திருந்தார், கிருஷ்ணராஜ். தலையை தாழ்த்தி குடித்தபோது கழுத்துப்பக்கம் எல்லாம் செதில் செதிலாக தெரிந்தது. தண்ணீரை குடித்து முடித்ததும், தனஞ்ஜெயன் பக்கம் திரும்பி, ''அம்மாடி, அந்த சூட்கேசை எடு...'' என்றார், கிருஷ்ணராஜ்.
எடுத்து வந்து அதை திறந்தாள், கார்த்திகா.
உள்ளே ஒரு கோடி ரூபாய் நோட்டு கட்டுகள்!
''இந்த பணத்தை, நீ கொண்டு போய் திருப்பதி உண்டியல்ல போடணும். ஆனா, உன்னை போட விடாதபடி, ஒரு கூட்டம் தடுக்கும். அவங்களைத் தாண்டிப் போய் உண்டியல்ல சேர்க்கணும். இது தான் உன் முதல், 'அசைன்மென்ட்!' உன்னால முடியுமா?'' என்று கேட்டார், கிருஷ்ணராஜ்.
வியப்பு மற்றும் அதிர்ச்சி கலவையான உணர்வோடு, ''யார் அப்படி தடுப்பாங்க?'' என்று கேட்டான், தனஞ்ஜெயன்.
''சொல்றேன், அவங்க உன்னை கொலை கூட செய்யலாம். உயிருக்கு பயந்தா இதை செய்ய முடியாது. இப்ப சொல், இந்த வேலையில சேர சம்மதமா?'' என்றார், கிருஷ்ணராஜ்.
கொஞ்சமும் யோசிக்காமல், ''தாராளமாக செய்கிறேன் சார். இப்ப மட்டும் நான் என்ன சந்தோஷமாவா இருக்கேன். ஒரு நடை பிணமாதானே இருக்கேன். அதுக்கு, ஒரு நல்ல காரியத்தை செய்யும் போது, நிஜமா செத்தா சந்தோஷம் தான்,'' என்றான், தனஞ்ஜெயன்.
''நீ சாகக் கூடாது. வாழ்ந்து காட்டணும். அந்த தைரியம் உனக்கிருக்கா?'' என்று கேட்டார், கிருஷ்ணராஜ்.
''ஒரு பேச்சுக்கு சொன்னேன் சார். என்னை அப்படி எல்லாம் ஒருத்தரால கொல்ல முடியாது,'' என்றான், தனஞ்ஜெயன்.
''இந்த தைரியம் தான் எனக்கு தேவை. அடுத்தடுத்த, 'அசைன்மென்ட்ஸ்' எல்லாம் இதை விட கடுமையானது. அதையும் செய்வ தானே?'' என்றார், கிருஷ்ணராஜ்.
''கடமைன்னா அது கஷ்டமா இருந்தாலும் செய்து தானே சார் தீரணும்?'' என்றான்.
''குட்... உனக்கு, குடியிருக்க ஒரு, 'அபார்ட்மென்ட்' மற்றும் டிரைவரோட ஒரு கார். அதுபோக, மாசம், மூன்று லட்சம் ரூபாய் சம்பளம். சம்மதம் தானே!''
இன்ப மயக்கம் வர ஆரம்பித்தது, தனஞ்ஜெயனுக்கு.
- தொடரும்
இந்திரா சவுந்தர்ராஜன்
