PUBLISHED ON : டிச 03, 2023

பட்டத்தி மைந்தன் எழுதிய, 'கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்' நுாலிலிருந்து:
ஒருசமயம், என்.எஸ்.கிருஷ்ணனின் எதிர் வீட்டில் தொங்கிக் கொண்டிருந்த பூட்டை எடுத்து, சட்டைப் பையில் போட்டுக் கொண்டு போக முயன்றான், ஒருவன்.
அதை பார்த்து, அவனை அழைத்தார், என்.எஸ்.கே.,
வந்து நின்றவனிடம், 'என்ன தம்பி சட்டைப் பையில...' என, ஒன்றும் தெரியாதது போல் கேட்டார்.
அவன் பயந்தபடி, 'ஒண்ணுமில்லையே...' என்றான்.
'காட்டுப் பார்க்கலாம்...' என்று, அவனது சட்டைப் பையில் கை விட்டு பூட்டை எடுத்ததும், பயந்து போய், மன்னிப்பு கேட்டான்.
'ஏன்டா பூட்டை எடுத்தே...' என்று, கோபமாக கேட்டார்.
'பசி அய்யா, பழைய சாமான் வாங்கும் கடையில் கொடுத்தால், ஏதாவது கொடுப்பர் என்பதால், இவ்வாறு செய்தேன்...' என்றான்.
அதற்குள் வீட்டுக்காரர் வந்து விட்டார்.
'தங்கள் வீட்டில் தொங்கிக் கொண்டிருந்த பூட்டை எடுத்து யாரோ ஓடவும், கலைவாணர் பிடித்து விட்டார். அதான் விசாரித்துக் கொண்டிருக்கிறார்...' என்று எண்ணியவராய், என்னவென்று கேட்டார். அந்த பையனோ பரிதாபமாக, என்.எஸ்.கே.,வை பார்த்தான்.
வீட்டுக்காரரிடம், 'வாங்க வாங்க, பூட்டைத்தானே தேடறீங்க... ஒரு சின்ன பையன், உங்க வீட்டுக் கதவில் தொங்கிக் கொண்டிருந்த பூட்டை எடுத்து ஓடுவதை பார்த்ததும், இவன், அவனை பிடித்து, இந்த பூட்டை வாங்கி விட்டான்; ஆனால், பையன் ஓடி விட்டான்.
'இவன், கஷ்டப்பட்டு அவனிடமிருந்து பூட்டை பறித்தான். நானும் சத்தம் கேட்டு, வெளியே வந்தேன்; நீங்களும் வந்துட்டீங்க. பாவம், இவனுக்கு ரெண்டோ, மூணோ கொடுங்க. எதையாவது வாங்கி சாப்பிட்டு போகட்டும்...' என்று கூறி, அந்த பையனின் பசியைப் போக்க உதவினார், என்.எஸ்.கே.,
சீதா கல்யாணம் என்ற படத்தில், கஞ்சிரா வாசிக்கும், குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர், வீணை எஸ்.பாலசந்தர். 38 ஆண்டுகள் திரைப்பட உலகில் இருந்தவர்; மொத்தம், 20 படங்களில் நடித்தவர்.
நடு இரவில் படத்துடன், திரை உலகை விட்டு விலகி, சங்கீதத்தில் முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார், பாலசந்தர்.
பிரபலமாக பேசப்பட்டவர், திடீரென திசை மாறியது குறித்து கேள்வி எழுப்பினர்.
'பல்வேறு திறமைகள் உள்ள இயக்குனரோ, நடிகரோ, இசையமைப்பாளரோ கொலை செய்யப்பட வேண்டும். அப்போது தான், வீணை வித்வான் உயிர் வாழ்வார்...' என்றார்.
பாலசந்தரின், நடு இரவில் படத்தில் நடித்திருந்தார், சோ.
படத்தின், 'ரஷ்'ஷை பார்க்க, சோவையும் அழைத்து, தன் பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டுள்ளார்.
படத்தின் இடையிடையே, 'ஆஹா... பாலசந்தர், எப்பேர்பட்ட ஜீனியஸ் நீ. இப்படி பிரமாதமான காட்சியை எப்படி உன்னால் எடுக்க முடிகிறது? ஓ... ஐ லவ் யூ மை டியர்...' என்று, தன்னையே பாராட்டிக் கொண்டுள்ளார், பாலசந்தர்.
'பக்கத்தில் யார் இருக்கின்றனர் என்பது பற்றியெல்லாம் அவருக்கு கவலையே கிடையாது...' என்றார், சோ.
பாலசந்தர், முன் கோபி. கோபத்திற்கிடையில், நகைச்சுவையும் துள்ளி விளையாடும்.
மே 5, 1955ல், அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. சுந்தரராமன் என, பெயர் வைத்து, செல்லமாக, ராமு என, அழைத்தனர்.
இதுபற்றி தன் டைரியில், 'ராமு பிறந்தது, 5.5.55 அன்று. அதுவும் வாரத்தின் ஐந்தாவது நாளான வியாழக்கிழமை. நல்லவேளை, 5 தலைகளுடனும், 55 கைகளுடனும், 5,555 பற்களுடனும் அவன் பிறக்கவில்லை...' என, குறிப்பிட்டிருந்தார்.
கடந்த, 1951ல், ராஜாம்பாள் என, ஒரு படம் வந்தது. அதில் வில்லனாக நடித்தார், பாலசந்தர். அந்த படத்தில், வில்லனுக்கே, 'பஞ்ச் டயலாக்' உண்டு. அது, 'இந்த நடேசனின் திட்டங்கள் எப்போதும் தோற்காது...' என்பது.
மாஜிஸ்திரேட்டுக்கு வில்லன் வேடம்.
'படம், நீதிபதிகளை தவறாக சித்தரிக்கிறது...' எனக் கூறி, அதிக கெடுபிடிகள் காட்டியது, தணிக்கை குழு. படத்தை திரையிடுவதை தியேட்டர்கள் நிறுத்திக் கொண்டன. ஆனால், பாலசந்தரின் வில்லன் நடிப்பு, ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.
- நடுத்தெரு நாராயணன்
