தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/பகல் கனவு பலிக்கும்!

பகல் கனவு பலிக்கும்!

பகல் கனவு பலிக்கும்!


PUBLISHED ON : மே 31, 2015

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 31, 2015


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜூன் 1 வைகாசி விசாகம்



முருகன் அவதரித்தது விசாக நட்சத்திரம்; இந்த நட்சத்திரத்திற்கென்றே உரியது திருநெல்வேலி மாவட்டம் குற்றாலம் அருகிலுள்ள திருமலைக் கோவில்.

இம்மலையில், ஓடவள்ளி, நள மூலிகை மற்றும் திருமலைச் செடி ஆகிய மூலிகைகள் உள்ளன. முருகனுக்கு உரிய விசாக நட்சத்திர நாளில், இம்மூலிகைகள் தங்கள் ஆதிக்கத்தை வெளிப்படுத்தும். இதில், திருமலைச் செடியின் காற்றுப் பட்டாலே உற்சாகம் அதிகமாகி, சோம்பேறி கூட கடுமையாக உழைத்து, செல்வந்தன் ஆவான் என்ற நம்பிக்கை உள்ளது.

ஒரு காலத்தில், செல்வ விருத்திக்காக, இச்செடியின் வேரையும், தன கர்ஷண யந்திரத்தையும் இணைத்து, இக்கோவிலில் பூஜை செய்துள்ளனர். இன்று, இந்த மூலிககைளை அடையாளம் காண முடியாவிட்டாலும், இங்கு சென்று வந்தவர்களின் வாழ்வில், திருப்பம் ஏற்படும் என்பது உண்மை.

'வி' என்றால், மேலான; 'சாகம்' என்றால், ஜோதி. சிவனின் நெற்றிக்கண்ணாகிய ஜோதியில் இருந்து பிறந்தவர் முருகப் பெருமான். விமலசாகம், விபவசாகம் மற்றும் விபுலசாகம் என்ற மூவகை ஒளிக்கிரணங்களைக் கொண்டது விசாக நட்சத்திரம். இந்த கிரணங்கள் அனைத்தும் இம்மலையில் படுவதால், விசாக நட்சத்திரத்தினர் தங்கள் ஆயுள் முழுவதும் சென்று வழிபடுவதற்கு ஏற்றது இம்மலை என்று சித்தர்கள் கூறியுள்ளனர்.

முன்பு இங்கு வேல் மட்டுமே இருந்தது. பூவன்பட்டர் என்ற அர்ச்சகர், வேலுக்கு பூஜை செய்து வந்தார். ஒருநாள் பகல் பூஜையை முடித்து, புளியமரத்தடியில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது, அவரது கனவில் முருகப்பெருமான் எழுந்தருளி, 'பட்டரே... இம்மலை எனக்குச் சொந்தமானது; இங்கிருந்து சற்று தொலைவிலுள்ள, கோட்டைத்திரடு என்ற இடத்தில், சிலை வடிவில் நான் இருக்கிறேன். நீர் அங்கு சென்று, எறும்புகள் சாரை சாரையாக செல்லும் ஒரு குழியை தோண்டிப் பாரும். அதற்குள் சிலை இருக்கும். அதை எடுத்து வந்து இங்கே பிரதிஷ்டை செய்...' என்றார்.

அதன்படியே, முருகன் சிலையை எடுத்து வந்து பிரதிஷ்டை செய்தார் பூவன்பட்டர். சுவாமிக்கு, திருமலை குமாரசுவாமி என பெயரிட்டனர்.

பண்பொழி அருகிலுள்ள அச்சன்புதூரில் வசித்து வந்த சிவகாமி அம்மையாருக்கு குழந்தை இல்லை. அதனால், திருமலை முருகனை வணங்கி குழந்தை வரம் கோரி, கோவிலில் கல் மண்டபம் அமைப்பதாக வேண்டிக் கொண்டார்.

கல்மண்டபம் அமைப்பதற்காக, கற்களை வாழை மட்டையில் ஏற்றி, அடிவாரத்தில் இருந்து மேலே இழுத்துச் சென்று மண்டபம் அமைத்தார். இருப்பினும், அவருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. தான் கட்டிய கல்மண்டபத்தில் வந்து தங்கிய வரதர் மஸ்தான் என்ற மகானிடம் தன் குறையைத் தெரிவித்தார் சிவகாமி அம்மையார்.

'இந்த திருமலை முருகனையே குழந்தையாக ஏற்றுக்கொள்...' என்று அந்த மகான் கூறியதும், தன் சொத்துக்களை எல்லாம் முருகனுக்கு எழுதி வைத்தார். இந்த அம்மையார் முருகனுக்கு தொண்டு செய்து, துறவு பூண்டதால், 'சிவகாமி பரதேசி அம்மையார்' எனப்பட்டார்.

இக்கோவில், குற்றாலத்தில் இருந்து, 16 கி.மீ., தூரத்தில் உள்ளது. வைகாசி விசாகத்தை ஒட்டி, இந்த அற்புதமான கோவிலுக்கு சென்று வாருங்கள். 544 படிகள் ஏற வேண்டும்; முடியாதவர்கள் வாகனங்களில் செல்லலாம்.

தி.செல்லப்பா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us