PUBLISHED ON : ஜன 15, 2017

பஞ்சாப் மாநிலம், அமிர்தசரசிலுள்ள பொற்கோவிலுக்கு தினமும் லட்சக்கணக்கானோர் வருகை புரிகின்றனர். ஜாதி, மத வேற்றுமை பாராமல், அனைவருக்கும் இலவசமாக உணவு வழங்கப்படுகிறது.
தட்டு மற்றும் கிண்ணத்தை எடுத்து, வரிசையில் நின்றால், ஒவ்வொருவருக்கும் இரண்டு கோதுமை ரொட்டிகளும், பருப்பு குழம்பும் தருவர். அத்துடன், பாயசம் போன்ற இனிப்பும் வழங்கப்படுகிறது. சாப்பிடுபவர் அருகே வந்து ஒருவர், 'காவோ... குதா தேதோ ஹே...' என்று சொல்வார். அதற்கு, 'சாப்பிடுங்கள்; இது, கடவுள் அளிப்பது...' என்று பொருள்.
உணவு தயாரிக்கும் பிரமாண்டமான கட்டடம், மூன்று மாடிகளில் அமைந்துள்ளன. இதை, 'லங்கார்' என்று அழைக்கின்றனர். 'லங்கார்' என்றால், பஞ்சாபி மொழியில், 'அடுக்களை' என்று பொருள். இங்கு, பாத்திரம் கழுவுதல், காய்கறி நறுக்குதல் போன்ற எல்லா வேலைகளையும், பக்தர்களே செய்கின்றனர்; சிலர், தாங்கள் செய்த தவறுக்கு பிராயச்சித்தமாக, இந்த வேலைகளை செய்கின்றனர்.
— ஜோல்னாபையன்
