PUBLISHED ON : ஜூலை 28, 2019

அன்றைய மின்னஞ்சலை பிரித்து பார்ப்பதற்கே, அச்சமாக இருந்தது, வாசுவுக்கு.
கம்பெனி ஒன்றில், நேர்காணல் போய் ஒரு மாதம் ஆகிறது. அவர்கள் முடிவு சொல்லியிருப்பர். 'ஸ்டார்ட் - அப்' கம்பெனிக்காக, ஒரு யோசனையை, தனியார் வங்கிக்கு அனுப்பி இருந்தான். அதற்கும் பதில் தெரிய வேண்டிய நேரம் நெருங்கி விட்டது.
கண்களை மூடினான், அப்பாவின் முகம் மனதில் வந்தது.
'அப்பா... உங்கள் வசதிக்கு மீறி, என்னை, பி.டெக்., படிக்க வைச்சீங்க... நிலைமை உணர்ந்து, படித்து, என்னால் முடிந்த மதிப்பெண் வாங்கி, தேர்ச்சி பெற்றேன். ஆனால், இக்கால அசுர ஓட்டப்பந்தயத்தில், என்னால் வெற்றி பெற முடியவில்லையே...
'உங்கள் கடைசி கால செலவுகளை கூட, கடன் வாங்கி தான் செய்ய முடிந்தது. நானும் நம்பிக்கையை விடாமல் தான் முயற்சிக்கிறேன்... ஒரு சிறு, ஒளி இழை கூட தெரியவில்லை. வேலை தேடுவதை கூட விட்டு விட்டேன். சிறு தொழில் முயற்சி தான் மேற்கொள்கிறேன்.
'ஆனால், எதுவுமே வசப்படவில்லை... எதிர்காலம் என்ன, நிகழ்காலமே அச்சுறுத்தக் கூடியதாக இருக்கிறதே...' அவன் பயந்தது போலவே, மின்னஞ்சல்கள், தலையில் மண்ணை வாரிக் கொட்டியிருந்தன.
''வெச்ச காபி அப்படியே இருக்கு... முகம் வெளுத்து கிடக்கு... என்னப்பா?'' என்று, அவன் தலையை வருடினாள், அம்மா.
''புதுசா ஒண்ணுமில்லம்மா!''
''இதோ பாருப்பா... காலம் இப்படியே போயிடாது. சீக்கிரமே நல்லது நடக்கும். முயற்சி பண்ணிகிட்டே இரு,'' என்று புன்னகைத்தாள்.
''அதெல்லாம் ஒண்ணும் இல்லம்மா... நாலு வருஷமா நடக்காதது, இனி எப்படி நல்லா நடந்துடும். எனக்கு நம்பிக்கை விட்டுப் போச்சு... கை வலிக்க வலிக்க, பள்ளிக்கூடம், சமையல் வேலை செஞ்சு, எடுத்து வர்ற சொற்ப சம்பளத்துல உக்காந்து சாப்பிடற போக்கிரிம்மா,'' என்றான்.
''அய்யோ... என்னப்பா... என்னெல்லாமோ பேசுறே?'' என்று பதறினாள்.
புடவைத் தலைப்பால், முகம் துடைத்து விட்டாள்.
''மறந்துட்டியா... சின்ன வயசுல, எவ்வளவு அறிவா இருப்பே தெரியுமா... எல்லாரும் அரச மர இலைல, பீப்பீ செஞ்சா, நீ தென்னை ஓலை, வாழை இலைன்னு செய்வே... பம்பரத்த, தரையில சுத்த விடும்போது, நீ காத்துல, 'விர்'ருன்னு சுத்த வெப்பே... 'கேரம் போர்டு'ல முதல் அடிலயே, நாலு ஓட்டைலயும் காய் விழும்...
''எனக்காக, வண்டலுார் காட்டுல இருந்து பெரிய மூங்கில் குழாயை எடுத்துட்டு வந்து, நம் வீட்டு கிச்சன்ல புகை போக்க வெச்சு கொடுத்தே... இந்த மாதிரி, சின்ன சின்ன ஆராய்ச்சி எம்புட்டு செஞ்சே தெரியுமா... எல்லாரும் சொல்லுவாங்க, 'உன் பையன், பெரிய கண்டுபிடிப்பாளன் ஆகப் போறான்; பரிசெல்லாம் வாங்கப் போறான்...'னு, எனக்கு, அவ்ளோ பெருமையா இருக்கும்.''
விரக்தியுடன் சிரித்தான்.
''சொல்லுவாங்களே, கழுதை கூட பிறக்கும்போது, அழகாகத்தான் இருக்கும்ன்னு... அப்படித்தாம்மா இருந்திருக்கேன். இப்ப, பொதி சுமக்கக் கூட லாயக்கு இல்லாத கழுதையா மாறிட்டேன்.''
''அய்யோ... என்னப்பா இதெல்லாம்... காலம் கை கூடி வரும்பா. நான் இருக்கேன்ல, தைரியமா முயற்சி பண்ணு. டிபன் செய்யலே, சோறும், வெண்டக்கா காரக்குழம்பும், அப்பளமும் தான். சாப்பிட்டு வேல செய்... வரேம்பா,'' என்று, அவன் தலையைக் கோதியபடியே கிளம்பினாள்.
கம்பெனி நேர்காணலுக்கு போன போது, அங்கே, 'கடினமான நேரங்களில், ஏதாவது செய்யுங்கள். அது செயல்பட்டால், இன்னும் சிலவற்றை செய்யுங்கள். அது செயல்படவில்லை என்றால், வேறு ஏதாவது செய்யுங்கள். ஆனால், தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டே இருங்கள்...' என்று உணர்ந்தான்.
தனக்காகவே சொல்லப்பட்டதைப் போல இருந்தது.
அப்படித்தான் செய்து கொண்டிருக்கிறான்... நான்கு ஆண்டுகளாக, எவ்வளவு முயற்சி, அனுபவங்கள்... அத்தனையிலும் எஞ்சி நிற்பது கசப்பு தான். வெறும், 6,000 ரூபாய் சம்பளத்திற்குக் கூட வேலைக்கு போனான். நஷ்டக் கணக்கு சொல்லி நிறுத்தினர்.
பாதி நிறுவனங்கள், நேர்காணலுடன் மறைந்து போயின. பல நிறுவனங்கள், சுயவிபரங்களை பார்த்துவிட்டு, 'எம்.டெக்., படிக்கவில்லையா, சி.எஸ்., டிப்ளமா இல்லையா, கிராஷ் கோர்ஸ் செய்யவில்லையா...' என்று குறுக்கு விசாரணை செய்கின்றன.
அவனோ, பி.டெக்., பட்டதாரி. எத்தனை விலாவாரியான படிப்பு அது. இந்த வெள்ளை காலர் வேலைகளே வேண்டாம்டா சாமி என்ற முடிவுக்கு வந்தான். படிப்பு, அனுபவத்தை வைத்து, கார்களில், 'பிரேக்கிங் சிஸ்டம்' இன்னும் பாதுகாப்பாக எப்படி இருக்கலாம்...
'டேஷ்போர்டில்' இணைய வசதி எப்படி ஏற்படுத்தலாம், தரைப்பகுதிகளை தெளிவாக பார்க்கும், 'கிரவுண்ட் வியூ சிஸ்டம்' எப்படி மேம்படுத்தலாம் என்று, தன் தொழில்நுட்ப அறிவை கசக்கி கசக்கித்தான், ஒவ்வொரு அம்சத்தையும் உருவாக்கினான்.
ஆனால், எந்த கார் கம்பெனியும் திரும்பிக் கூட பார்க்கவில்லை. அடுத்ததாக, திரைப்படங்களை திருட்டுத்தனமாக வெளியிடும், 'பைரசி'யை தடுக்கும் நுட்பம் ஒன்றை, மென்பொருளாக எழுதினான். படிகளில் ஏறி சுத்தம் செய்யும், 'வாக்குவம் கிளீனர்' மாடல், பேட்டரிகளை இன்னும் மேம்பாட்டுத் திறனுடன் வடிவமைப்பது...
சைக்கிள்களுக்கான தனிவழி எப்படி என்று, எவ்வளவு திட்டங்களை எழுதினான். ஆதரவும் கிடைக்கவில்லை; ஒரு நிறுவனமும் கை நீட்டவில்லை. 'ஸ்டார்ட் - அப்' யோசனைகளை வைத்து, நெஞ்சில் பாரத்துடன் கண்ணீர் வடிக்க மட்டும் தான் முடிந்தது.
ரப்பர் செருப்பை தேய்த்து நடந்து வரும் சத்தத்திலேயே, அம்மா வருவது தெரியும்.
இன்று, கூடவே ஒரு புதிய ஓசை.
''வாசு... வந்துருக்கிறது யாருன்னு பாரேன்,'' என்று, முகமெல்லாம் சிரிப்பாக வந்தாள், அம்மா.
''நம்ம நளினிப்பா... அப்பா கூட வேல செஞ்சாரே, காசி மாமா, அவங்க பொண்ணு... உன் கூட அஞ்சாம் வகுப்பு வரை படிச்சுதே.''
'நளினியா...' சட்டென்று, உள்ளே ஒரு தீபம், சுடர் போல தெரிந்தது. எவ்வளவு அன்பான சிறுமி, விழிகளின் மென்மையும், கனிவும், இன்னும் நினைவிலேயே இருக்கின்றன.
வாசலில் மிகப்பெரிய, 'டிஸ்கவரி ஸ்போர்ட்' கார்; அடர் சிகப்பு நிறம். காரிலிருந்து இறங்கி, வீட்டுக்குள் அவள் நுழையும் காட்சி தெரிய, வியப்புடன் எழுந்து வந்தான்.
நீல வண்ண உடையும், நீல கற்கள் பதித்த ஜிமிக்கியும், பளீர் சிரிப்பும், திருப்தியான வாழ்வை பறை சாற்றின.
''வாசு... எப்படி இருக்கே?''
கடல் தேவதை போல இருந்தாள்.
''நளினி... எப்படி இருக்கே... நம்பவே முடியலே... வா வா... ஏதோ இருக்கேன்... உக்காரு,'' என்றான்.
''அம்மா, சொன்னாங்க... பி.டெக்.,ன்னு, சூப்பர் வாசு,'' என்றபடியே வந்தமர்ந்தாள்.
''பெண்கள் அமைப்பு சார்புல, என்னை சிறப்பு விருந்தினரா அழைச்சு, பள்ளிக்கூடத்துல, ஒரு விழா நடத்துனாங்க... அங்க தான், அம்மாவ பாத்தேன்... ஏன், வாசு, 'டல்'லா இருக்கே... உடம்பு சரியில்லயா?''
''இல்ல, நளினி... அதை விடு,'' என்றான்.
''வேலை, சுயதொழில் எதுவும் சரியா அமையலேன்னு, அம்மா சொன்னாங்க... சொல்லேன் என்ன பிரச்னை, வாசு?'' என்றாள்.
அந்த தொனியும், அக்கறையும், நேரிடையாக மனதை தொட்டதில், சடாரென்று உடைந்து, கொட்டித் தீர்த்தான்.
''நாம எப்பவும் நம்புகிற விஷயம், நடந்தே தீரும்னு சொல்லுவாங்க... ஆனா, எப்போ நடக்கும் நளினி?''
''கொஞ்சம் புத்தியை, கூர் தீட்டினா நடக்கும், வாசு!''
''என்ன சொல்றே?''
''நீ செஞ்சதெல்லாம் சரி தான்... அதாவது, உன் அனுபவங்கள், படிப்பு, தொழில்நுட்ப திறமை, உன் தேவை, வரையறை இப்படித்தான் இருக்கு... ஆனால், 'ஸ்டார்ட் - அப்' மாதிரி கம்பெனி துவங்கணும்ன்னா, முக்கியமான தகுதி வேற ஒண்ணு, வாசு!'' என்றாள்.
''புரியலே, நளினி!''
''இதுல, உன்னை விட, வாடிக்கையாளர் தான் முக்கியம். அவங்களுடைய தேவையை, உன் பொருள் தீர்த்து வைக்கிறதா என்பது முக்கியம்... அந்த தேவை என்னன்னு நீதான் கண்டுபிடிக்கணும்.''
''என்ன?'' திகைத்தான்.
''ஆம்... உன்னை பாதிக்கிற விஷயங்களை, நீதான் கூர்ந்து கவனிக்கணும். ஒரு உதாரணம் சொல்றேன்... தினமும் அலாரம் வைக்கிறோம். அது, காலை, 5:00 மணிக்கு அடிக்கும். எழ மனம் வராது. அது தலைல அடிச்சு, அணைத்து விடுவோம். பிறகு, தாமதமா எழுந்து, அவதி அவதியா ஓடி, அரைகுறையா போகும் அந்த நாள்.
''ஆனால், அமெரிக்கால படிச்சுக்கிட்டிருந்த, இந்திய பொண்ணு, நந்தா, இதை ஒரு சவாலா எடுத்துகிட்டு, 'கிளாக்கி' என்ற அலார கடிகாரத்தை வடிவமைச்சா... அதுல, வெறும் அலாரம் மட்டும் அடிச்சுட்டு இருக்காது; அடிச்சுகிட்டே தரையில குதிச்சு ஓடும், கட்டில் கீழ ஒளிஞ்சுக்கும், டேபிள்ல இருந்து குதிக்கும்... சத்தம் தாங்க முடியாது...
''ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு திசையில, வெவ்வேறு வேகத்துல ஓடும்... அப்படி ஒரு, 'மைக்ரோ பிராசசர்' செஞ்சு வெச்சுட்டா, அந்த குட்டி பொண்ணு... இப்போ, அவளோட, 'ஸ்டார்ட் - அப்' கம்பெனியில, பல கோடி ரூபாய்க்கு விற்பனை,'' என்றாள்.
கண்கள் விரிய கவனித்தான்.
''அதே போல, இங்கிலாந்துல, ஒரு இளம்பெண்ணுக்கு, மலைல சைக்கிள் ஓட்டணும்ன்னு ஆசை... ஆனா, சந்தையில, ஆண்களுக்கு மட்டும் தான் அதற்கான பிரத்யேக உடை இருக்குன்னு தெரிஞ்சுது... பொறுமையா, தானே ஒரு உடையை வடிவமைச்சா...
''மற்ற பெண்களும் அதை கேட்க, உடனே, தொழிலாக்கி, இப்போ, மிகப்பெரிய அளவில் பண்ணுறா... 'மொபைல்போன் கூடவே சின்னதா, 'ரீடிங் கிளாஸ்' இருந்தால் நல்லா இருக்கும்...'ன்னு நெனச்ச ஒருத்தர், அந்த யோசனையை செயல்படுத்தி, அதே கண்ணாடிய வெச்சு, இப்போ வெற்றிகரமா தொழில் பண்ணுறார்,'' என, தொடர்ந்தாள்...
காபியை வைத்துவிட்டு, புன்னகைத்தாள், அம்மா.
''ஒண்ணு, மக்கள் பிரச்னை அல்லது நீ சந்திக்கிற பிரச்னை... இதை, எளிமையா தீர்க்கறது எப்படின்னு யோசிச்சு, குறைவான முதலீடுல அதை சந்தைப்படுத்தணும்... அது தான் இதன் சூட்சுமம்... வெளில இருந்து பார்க்கும்போது, தொழிலதிபர்களின் வெற்றி, பெரிய மர்மமா இருக்கும்...
''இப்படி எல்லாம் நம்மால செய்ய முடியுமான்னு பயமா கூட இருக்கும். ஆனால், மக்களுக்கு தேவையான ஒரு பொருளை செய்து, அதை நியாயமான விலையில விற்று, தொழிலை விரிவாக்கியவர்கள் தான், வெற்றியாளர்கள்... உன்னால கண்டிப்பா யோசிச்சு செய்ய முடியும்,'' புன்சிரிப்பு மாறாத மென்குரலில் சொன்னாள்.
''உன்னை போல, தொழில் படிப்பு படிக்கலே, வாசு... அப்பா போன பிறகு, அண்ணா கூட, ராஜஸ்தான் போயிட்டோம்... அங்கே, ஒரு தமிழ் குடும்பம் நட்பானாங்க... அவங்க வீட்டுல கல்யாணம் வந்தது... பட்டுப் புடவை, கரை வேட்டியெல்லாம் அங்கே சரியா கிடைக்கலே... 'ஆன்லைன்'ல வாங்கிக் கொடுத்தேன்...
''மெல்ல ஆர்வம் வந்து, 'ஆன்லைனில்' ஆடை விற்பனை ஆரம்பிச்சேன். முகநுால், 'வாட்ஸ் ஆப், டுவிட்டர்'னு, இந்தியா முழுக்க வாடிக்கையாளர்கள்... இந்த ஊர் பொண்ணுன்னு, எனக்கு, விருது தருகிற அளவுக்கு பெருகிட்டது தொழில்,'' என முடித்தாள்.
அவள் வந்தது, பேசியது எல்லாமே கனவு போல இருந்தது.
''அம்மா,'' என்று அழைத்தான்.
''நம் ரோடு வழியாத்தானே மலையடிவாரம் வரை நடை பயிற்சி போகின்றனர். திரும்பி வரும்போது, மூச்சு வாங்கி, நின்னு, நம் வீட்டுல தண்ணி வாங்கி குடிச்சுட்டு போவாங்க இல்லையா... அவர்களுக்காக, கெமிக்கல் இல்லாத, நன்னாரி வேர், ரோஜா இதழ்கள், மாம்பழம், பைனாப்பிள், ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை...''தக்காளி, நெல்லிக்காய்னு, அந்தந்த பருவத்துல கிடைக்கிறதை வெச்சு, 'சர்பத்' கடை துவங்கலாம்... நிச்சயமா மக்களுக்கும் உபயோகமா இருக்கும், நமக்கும் லாபமா இருக்கும்,'' என்று உற்சாகமாக சொல்லிக் கொண்டே போனான்.
ஆனந்தக் கண்ணீருடன், நளினி வந்த திசையையே பார்த்துக் கொண்டிருந்தன, அம்மாவின் விழிகள்.
வி. சாருலதா
