PUBLISHED ON : ஜூலை 28, 2019

கனடா நாட்டில், வான்கோவர் நகரில், ஜூலை 25 முதல், ஆகஸ்ட் 3ம் தேதி வரை, விளக்கு திருவிழா நடக்கிறது. வாண வேடிக்கைகளை தான், விளக்கு திருவிழா என்ற பெயரில் அழைக்கின்றனர். கடந்த, 29 ஆண்டுகளாக நடக்கும் இத்திருவிழாவில், மூன்று நாடுகள் பங்கேற்று, வாண வேடிக்கையில் தங்கள் திறமையை வெளிப்படுத்தும். அவற்றில் சிறந்த பங்களிப்புக்கு, பரிசும் வழங்குவர்.
இந்த ஆண்டு, முதல் முறையாக, இந்தியாவும், மத்திய மற்றும் தென்கிழக்கு ஐரோப்பிய நாடான குரோஷியாவும் கலந்து கொள்கின்றன. 10 நாட்கள், வான்கோவர் நகரமே அமர்க்களப்படும். ஆட்டம், பாட்டம் மற்றும் விருந்து என, கோலாகலமாக இருக்கும்.
இவ்விழாவின் சிறப்பு அம்சமாக, ஜூலை 27, 31 மற்றும் ஆகஸ்ட் 3 ஆகிய மூன்று நாட்களுக்கு, பிரமாண்ட வாண வேடிக்கைகள் நிகழ்த்திக் காட்டப்படும்.
இந்திய வாண வேடிக்கை நிகழ்வை, மும்பை நகரின், 'அமர் மொரானி பயர் ஒர்க்ஸ்' நிறுவனம் நிகழ்த்த உள்ளது. இவர்கள், ஏற்கனவே, ராஜ குடும்ப திருமணங்கள் மற்றும் 2011ல் நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி நாளன்று நடந்த வாண வேடிக்கையை, சிறப்பாக நடத்திய அனுபவம் பெற்றவர்கள்.
வாண வேடிக்கைகளில் சித்திர பூ வேலைப்பாடுகள், மெல்லிய கிளை, சிறு சிறு கிளை கொண்ட மரம் அல்லது புதர்...
பனை மற்றும் தென்னை மரம், நீண்ட வால் ஜொலிப்புகள், மீன்கள், வால் நட்சத்திரம், தேனி, முத்து மற்றும் நட்சத்திரங்கள் என, பல உருவங்களை பட்டாசுகளில் வெளிப்படுத்துவதில், 'அமர் மொரானி பயர் ஒர்க்ஸ்' நிறுவனத்தினர், வல்லவர்கள்.
மேற்கண்ட மூன்று நாட்களும், இரவு, 10:00 மணிக்கு வாண வேடிக்கை துவங்கும். தெருக்களில் மக்கள், சாரை சாரையாக நின்று, இவற்றை கண்டுகளிப்பர்; கட்டணம் செலுத்தி, அருகில் இருந்தும் பார்க்கலாம்.
கடற்கரை சார்ந்த, 'பீச் அபேயின் இங்கிலீஷ் பே' என்ற இடத்தில், இந்த வாண வேடிக்கை நடைபெறும்.
முதல் தடவையாக கலந்துகொள்ளும் இந்தியா மற்றும் குரோஷியா நாடுகளிடையே, பரிசை வெல்ல, கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய வாண வேடிக்கை குழு வெல்ல, வாழ்த்துவோம்!
— ஜோல்னாபையன்.
