PUBLISHED ON : அக் 23, 2022

தீபாவளி கொண்டாடிய, சிவன் கோவில்!
திருவாரூர் மாவட்டம், திருவாரூர் - திருத்துறைப்பூண்டி சாலையில் உள்ளது, ஆலத்தம்பாடி. அங்கிருந்து, 3 கி.மீ., தொலைவில் சித்தாய்மூர் எனும் ஊர் உள்ளது. இங்குள்ளது பாடல் பெற்ற தலங்களில், 106வது சிவத் தலமான, பொன் வைத்த நாதர் சிவன் கோவில். இத்தல இறைவன், பக்தை ஒருவருக்கு தினமும் பொன் வைத்ததால், இப்பெயர் என்கின்றனர்.
கடந்த, 16ம் நுாற்றாண்டில், தீபாவளி அன்று, இத்தல ஈசன் பொன் வைத்த நாதருக்கு, அதிரசம் படைத்து வழிபட்டதாக, செப்பு பட்டய ஆதாரம் உள்ளது.
தமிழகத்தில், தீபாவளி கொண்டாடியதற்கு ஆதாரம் உள்ள ஒரே சிவன் கோவில் இதுதான். இந்த செப்பு பட்டயத்தை, 1753ம் ஆண்டு, தஞ்சாவூரை ஆண்ட, பிரதாப சிம்மன் என்ற மராட்டிய மன்னன் வழங்கியுள்ளார்.
இவ்வூர் கிராம மக்களும், அரசாங்க அதிகாரிகளும், தங்களது சொந்த பணத்தைக் கொண்டு இத்தல சுயம்பு மூர்த்தியான சொர்ண ஸ்தாபனேஸ்வரரை வணங்கி, தீபாவளி பண்டிகையை கொண்டாடியதாக, இங்குள்ள செப்பு பட்டய குறிப்பில் உள்ளதாம்.
குபேரன் பொக்கிஷம் பெற்ற தலம்!
சிவ பெருமானை வழிபட்டு, குபேர பகவான், பொக்கிஷங்களை பெற்றது, தீபாவளி நாளில் தான். நாகப்பட்டினத்திலிருந்து, 12 கி.மீ., துாரத்தில், சிக்கல் என்று ஊர் அருகே கீழ்வேளூரில் இருக்கும், கேடிலியப்பர் கோவிலில் அது நடந்ததாக கூறுகின்றனர். இதனால், குபேர பகவானுக்கு இங்கு தனி சன்னதி உள்ளது.
தீபாவளி அன்று பலவிதமான பட்சணங்களுடன், இங்கு குபேர பூஜை நடக்கிறது. பாடல் பெற்ற சிவ தலங்களின் வரிசையில், இத்தலம், 84வது சிவ தலம்.
இத்தல சிவனான கேடிலியப்பரை வழிபட்டால், வளமான வாழ்வு கிடைக்கும் என்பது நம்பிக்கை. அதுவும், தீபாவளி நாளில் வழிபட்டால், சகலவிதமான செல்வங்களும் கிடைக்கும் என்பது, பக்தர்களின் நம்பிக்கை.
தீபாவளியை கொண்டாடும் கேரள கோவில்!
கேரள மாநில கோவில்களில், ஓணம் பண்டிகை தான் விசேஷமாக கொண்டாடப்படும். ஆனால், விதிவிலக்காக, கொச்சி ஆலப்புழை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள துறவூர் நரசிம்ம பெருமாள் கோவிலில் மட்டும், தீபாவளி விசேஷமாக கொண்டாடப்படுகிறது.
இங்கு தீபாவளி அன்று, முதல் ஒன்பது நாட்களுக்கு, கோவிலைச் சுற்றி தீபங்களை ஏற்றி வளாகமே ஒளிமயமாக விளங்கும். இந்த தீபாவளி கொண்டாட்டத்தில் யானைகளின் அணிவகுப்பு விசேஷமாக இருக்கும்.
தங்கத்தை பிரசாதமாக வழங்கும் கோவில்!
மத்திய பிரதேசம் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ளது, ரத்னபுரி எனும் ஸ்தலம். இங்கு, புகழ்பெற்ற மகாலட்சுமி கோவில் உள்ளது.
இங்கு வரும் பக்தர்கள், தங்களது வேண்டுதல் நிறைவேற, தங்கம் மற்றும் வெள்ளியை காணிக்கையாக மகாலட்சுமிக்கு செலுத்துகின்றனர். அப்படி சேர்ந்த தங்கத்தை தான் தீபாவளி திருநாள் அன்று, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குகின்றனர்.
கோவிலில் வழங்கப்படும் தங்கத்தை, பக்தர்கள் யாரும் விற்பது கிடையாது. தங்களது பூஜை அறையில் வைத்து பாதுகாக்கின்றனர்.
அண்ணனுடன் அன்னபூரணி!
தீபாவளி அன்று வணங்கப்படும் தெய்வங்களுள் ஒன்று, அன்னபூரணி. இவர், தனியாக அருள்பாலிப்பார். ஆனால், துாத்துக்குடியிலிருந்து திருநெல்வேலி செல்லும் சாலையில், 15 கி.மீ., தொலைவில் உள்ள அங்கமங்கலம் எனும் ஊரில் உள்ள நரசிம்ம சாஸ்தா கோவிலில், தன் அண்ணனான நரசிம்மருடன், மானிட வடிவில் அருள்பாலிக்கிறார், அன்னபூரணி. இப்படி ஓர் அமைப்பு வேறு எங்குமில்லை.
தீபாவளி அன்று அன்னபூரணிக்கு, இங்கு லட்டு அலங்காரம் செய்யப்படுகிறது.
காசியில் உள்ளது போல் அன்னபூரணி!
விருதுநகர் மாவட்டம் சாத்துாரிலிருந்து, சங்கரன் கோவில் செல்லும் வழியில், சத்திரம் எனும் ஊரில், மிகவும் பழமையான காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. இங்கு, காசியில் உள்ளது போன்று, தெற்கே பார்த்தவாறு தனி சன்னதியில் அன்னபூரணி அருள்பாலிக்கிறார். இப்படியோர் அமைப்பு தமிழகத்தில் வேறு எந்த சிவன் கோவிலிலும் இல்லை.
இங்குள்ள நந்தி, அன்னபூரணி அம்மனை பார்த்தவாறு அமைக்கப்பட்டிருப்பது தனிச்சிறப்பு. தீபாவளி நாளில் இங்கு வந்து வழிபட, வாழ்வில் உணவுக்கு பிரச்னை எதுவும் வராது என்பது ஐதீகம்.
கோவீ.ராஜேந்திரன்

