
நண்பரின் நல்லெண்ணம்!
நெருங்கிய நண்பர் ஒருவருக்கு, ஒரு மகன், ஒரு மகள். அரசு பணிக்கான தேர்வெழுத வழிகாட்டி, இருவரையுமே, அரசு ஊழியர் என்ற கவுரவத்தை பெற வைத்து விட்டார். சமீபத்தில் மகளின் திருமண அழைப்பிதழை கொடுக்க வந்தார்.
அழைப்பிதழில், அவருடைய முழு முகவரி மற்றும் மொபைல் எண்ணையும் அச்சிட்டு, 'அரசுத் தேர்வுகள் எழுத தேவைப்படும் ஆலோசனைகள் மற்றும் 'ஸ்டடி மெட்டீரியல்'களுக்கு, எப்போது வேண்டுமானாலும் என்னை தொடர்பு கொள்ளுங்கள்; உங்கள் குடும்பத்திலும் அரசு ஊழியர்களை உருவாக்குவோம்...' என, குறிப்பிட்டிருந்தார்.
அதுபற்றி அவரிடம் கேட்டேன்.
'யாம் பெற்ற இன்பம், பெறுக இவ்வையகம் என்பதை, அனுபவ ரீதியாக செயல்படுத்தி பார்க்கும்போது, கிடைக்கும் மன நிறைவும், மகிழ்ச்சியும், அளப்பரியது. அதற்காகவே இந்த முயற்சி...' என்றார், நண்பர்.
தன் வீட்டு பிள்ளைகளைப் போலவே, உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டு பிள்ளைகளும், அரசு பணியில் சேர்வதற்கு வழிகாட்டி உதவ, வலிந்து முயற்சி செய்கிறார். அது மட்டுமின்றி, அதற்காக, தன் மகள் திருமண அழைப்பிதழை பயன்படுத்திக் கொண்டவரின் நல்லெண்ணத்தை மனதார வாழ்த்தினேன்.
- சி.அருள்மொழி, கோவை.
'கான்டாக்ட் லென்ஸ்' பயன்படுத்துபவரா, உஷார்!
தோழி ஒருத்தி, மூக்கு கண்ணாடி அணிவதற்கு பதிலாக, 'கான்டாக்ட் லென்ஸ்' அணிந்திருந்தாள்.
ஒருநாள் காலை, வாணலியில் தாளிக்கும்போது, கடுகு தெறித்து, வலது கண்ணில் பொருத்தியிருந்த, 'கான்டாக்ட் லென்சில்' பட்டுள்ளது. சூடான எண்ணெயிலிருந்த கடுகு, லென்சில் ஒட்டி, லென்ஸ் சுருங்கி, கண்ணிலேயே ஒட்டிக்கொண்டது.
வலி தாங்காமல் துடித்த தோழி, கண்ணிலிருந்து, 'கான்டாக்ட் லென்சை' கழற்ற முயற்சித்தும் முடியவில்லை. பயந்து, போனில் அழைத்து, விஷயத்தை கூறினாள். உடனே, அவளை அழைத்து தனியார் கண் மருத்துவமனைக்கு சென்றேன். பல ஆயிரம் செலவு செய்தபின், அவள் கண்ணில் ஒட்டியிருந்த, 'லென்ஸ்' அகற்றப்பட்டது.
அதன்பின், சமையல் செய்யும்போது, மூக்கு கண்ணாடி பயன்படுத்தி வருகிறாள், என் தோழி. 'கான்டாக்ட் லென்ஸ்' பயன்படுத்துபவர்களுக்கு, இந்த செய்தி ஒரு எச்சரிக்கையாகவும், பாடமாகவும் இருக்கும்.
- என். லதா, சென்னை.
தீபாவளி தினத்தில், தீபம் ஏற்றுங்கள்!
அண்மையில், மருத்துவர் ஒருவரை பார்க்க சென்றிருந்தேன். எனக்கான மருத்துவ ஆலோசனைகள் முடிந்து, பொதுவாக அவருடன் பேசிக் கொண்டிருந்த போது, தீபாவளி பற்றிய பேச்சு வந்தது.
'தீபாவளியன்று, மக்களின் உடல்நலனையும், சுற்றுச்சூழலையும் கெடுக்கும் பட்டாசுகளை வெடிப்பதை விட, வீடுகள் தோறும் அகல் விளக்கில் தீபம் ஏற்றி வைக்கலாம்...' என்றார். அப்படி அவர் கூறுவதற்கான அறிவியல் காரணத்தை கேட்டேன்.
'தீபாவளி வருவது, குளிர் காலமாக இருக்கும். அப்போது கணக்கற்ற விஷ பூச்சிகள் பெருகிவிடும். இதனால், மக்களுக்கு நோய்த்தொற்று ஏற்படக்கூடும். இதைத் தடுக்க வெப்பம் அவசியம். அதற்காகவே, வீடுகளில் வரிசையாக தீபம் ஏற்றி வைக்குமாறு, நம் முன்னோர் அறிவுறுத்தியுள்ளனர்...' என்றார்.
இந்த முறை, தீபாவளி தினத்தில், தீபங்கள் ஏற்றுவது என, முடிவு செய்து விட்டேன். தீபங்களின் வரிசை என்பது தானே, 'தீப ஆவளி!'வாசகர்களே... உங்கள் வீட்டிலும், தீபாவளியன்று, தீபங்களை ஏற்றுங்கள்!
- கே.கல்யாணி, விக்கிரவாண்டி

