
அன்புள்ள அம்மா —
நான், வீட்டுக்கு ஒரே செல்லப் பெண். என், 17வது வயதில், சாலை விபத்து ஒன்றில், பெற்றோரை இழந்தேன். உறவினர்கள் கூடி, 20வது வயதில் எனக்கு திருமணம் செய்து வைத்தனர்.
என்னை அன்பால் குளிர வைத்தார், கணவர். மண வாழ்க்கையில் எனக்கு இரு ஆண் குழந்தைகள் பிறந்தனர்.
மகிழ்ச்சியாக சென்று கொண்டிருந்த வாழ்வில் இடி விழுந்தது. சாலை விபத்தில், கணவர் இறந்து விட, 25 வயதில் ஆதரவற்றவளாக நின்றேன். ஒரு ஆண்டுக்கு மன நல சிகிச்சை பெறும் அளவுக்கு, மனதளவில் பாதிக்கப்பட்டேன். பிறகு, ஒரு வழியாக சரியாகியது.
இரு மகன்களுக்காக வாழ ஆரம்பித்தேன். கணவரின் அரசு பணி, எனக்கு கிடைத்தது.
வீடு, வேலை, குழந்தைகள் என, பொறுப்புடன் வாழ்வு சென்றது. தனிமையில் வாடினேன். இச்சூழ்நிலையில், என்னுடன் பணிபுரிபவரின் நட்பும், அக்கறையும் ஆறுதலாக இருந்தது. என்னை திருமணம் செய்து கொள்ள விரும்பினார்.
அவருக்கு ஏற்கனவே திருமணமாகி, குழந்தைகளும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக, அவர் மனைவி பிரிந்து சென்று விட்டார். 
என் குழந்தைகள், அவரை, அப்பாவாக ஏற்றுக் கொண்டனர். மீண்டும் ஒரு புது வாழ்க்கை வாழத் துவங்கினோம்.
அவருக்கும், அவர் மனைவிக்கும் இடையே இருந்த பிரச்னைகள், உறவினர்களால் தீர்த்து வைக்கப்பட, சட்டென மனம் மாறி, எங்களை விட்டு பிரிந்து சென்று விட்டார்.
தொலைபேசியில் அவருடன் தொடர்பு கொண்டால், பேச மறுக்கிறார். என் குழந்தைகளின் நிலையோ மிகவும் மோசமாக உள்ளது. இப்போது நான் என்ன செய்ய வேண்டும் அம்மா.
இப்படிக்கு,பெயர் வெளியிட விரும்பாத மகள்.
அன்பு மகளுக்கு —
சாலை விபத்தால், உன் வாழ்க்கை, தடம் புரண்டு விட்டது. தடம் புரண்ட வாழ்க்கையை சரி செய்வதற்கு பதில், மேலும் சிக்கல் கொண்ட நுால்கண்டாய் மாற்றியுள்ளாய்.
கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்த ஆணை, நீ விரும்பியது தப்பில்லை. அவன் முறைப்படி மனைவியிடமிருந்து விவாகரத்து பெற்று வந்தபின், நீ மறுமணம் செய்திருக்க வேண்டும். இப்போது விஷயம் கை மீறி விட்டது.
சரி, இனி நீ என்ன செய்ய வேண்டும்...
வேறொரு ஊருக்கு பணி மாற்றம் கேட்டு செல். உன் மொபைல் எண்ணை மாற்று. உன் மகன்களை பற்றி கவலைப்படாதே. வெகு சீக்கிரம் அந்த ஆசாமியை மறந்து விடுவர். 'கிட்டதாயின் வெட்டென மற' என்ற பழமொழிக்கு ஏற்ப, அவனை நீயும் முற்றிலும் மறந்து விடு.
நீ கர்ப்பமாக இல்லை என்பதை உறுதி செய்து கொள். அப்படி நீ கர்ப்பமாக இருந்தால், மூன்று மாதத்திற்கு உட்பட்ட கரு என்றால், தயங்காமல் அரசு மருத்துவமனையில் கருச்சிதைவு செய்து கொள். 
மனநல மருத்துவரிடம் சென்று பழைய பிரச்னை மீண்டும் தலை துாக்காமலிருக்க ஆலோசனை பெறு. இப்போதெல்லாம் பெண்கள் பெரும்பாலும், 30 வயதில் தான் திருமணமே செய்து கொள்கின்றனர்.
தற்சமயம், 30 வயதாகும் நீ, ஆண் துணை இல்லாமல் மீதி வாழ்நாளை கழிப்பது கடினம் தான். மீண்டும் முறைகேடான உறவுகள் பக்கம் நீ போக, நிறைய வாய்ப்புகள் உள்ளன. முறைகேடான உறவுகளில் ருசி கண்டுவிட்டால், உன் மகன்களின் எதிர்காலம் பாழாகி விடும்.
தகுதியான நபரை நீ மறுமணம் செய்து, வாழ்க்கையில், 'செட்டில்' ஆகு.
உன் இரு மகன்களை, தன் மகன்களாக பாவிப்பவரே, தகுதியான நபர். உன் கடந்த கால வாழ்க்கையை கிளறாத நபராக  இருத்தல் வேண்டும். அவருக்கு, 40 வயது இருக்கலாம். மனைவியை இழந்த குழந்தை பாக்கியம் இல்லாத விதவனாக இருத்தல் நலம்.
நீ மறுமணம் செய்து கொண்டால், உன் வேலை பறிபோய் விடுமோ என பயப்படாதே. 
இரு மகன்களின் எதிர்காலத்துக்காக நீ, ஒரு கண்ணியமான வாழ்க்கையை வாழ்வது சிறப்பு.  தொலைதுார கல்வி இயக்ககம் மூலம், கல்வி தகுதியை உயர்த்தி, பதவி உயர்வு பெறு.
— என்றென்றும் தாய்மையுடன், 
சகுந்தலா கோபிநாத்.

