/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
கவிதைச்சோலை! - இருவரை நினைவூட்டும் இனிய விழா!
/
கவிதைச்சோலை! - இருவரை நினைவூட்டும் இனிய விழா!
PUBLISHED ON : அக் 23, 2022

தீபங்களின் வரிசை
தீபாவளி என்கிறது
தீபாவளிக்கான விளக்கம்!
தீபாவளி
நரகாசுரன்
ஒருவன் மரணத்திற்கான
ஒரு விழா அல்ல
மகாபலியையும் சேர்த்தே
மனதில் நினைக்க வேண்டிய நாள்!
இருள் விலகி
ஒளி பிறக்கும்
விடிவெள்ளி வேளையே
தீபாவளித் திருநாள்
கொண்டாட உரிய வேளை!
விடியற்காலையில் நீராடி
விளக்கேற்றும் ஸ்தலங்கள் எங்கும்
தங்க வருவாள் மகாலட்சுமி என்கிறது
விஷ்ணு புராணம்!
மாலை வேளை ஏற்றும் விளக்கு
மனதில்
எம பயம் போக்குவதோடு
அகால மரணத்தை
அகற்றிக் காக்கிறது என்கிறது
பவிஷ்ய புராணம்!
தண்ணீரில் கங்கையும்
தலை முழுகும் நல்லெண்ணெயில்
திருமகளும் உறைவதாய்
பெரியோர் வாக்கு
பிரகடனப்படுத்துகிறது!
புராணங்களும், பெரியோர் வாக்கும்
பொருள் பொதிந்த
கருத்துக் களஞ்சியம்!
நீராடும் நீராட்டு
புறத்துாய்மைக்கும்
நீராடும் நேரத்து
ஆண்டவனிடம்
அகந்தையும், ஆணவத்தையும்
அகற்ற வேண்டிக் கொண்டு நீராடுவது
அகத்துாய்மைக்கும் சேர்த்தே
அஸ்திவாரமிடுகிறது!
உடலும், உள்ளமும்
துாய்மைப்படுகையில்
உலகில் ஒற்றுமை பலப்படும்!
அகமும், புறமும் துாய்மையானால்
ஒளிரும் ஒளி
மிளிரும், 'ஞான ஒளி'யாய்
நம்மை மகிழ்விக்கும்!
மனமது செம்மையானால்
மந்திரம் ஜெபிக்க வேண்டாம்
தீபாவளி முதல்
தழைத்துலகம் தலை நிமிரும்
இந்நந்நாளில்
இருவரையும் நினைத்து
இன்புற்று அகம் மகிழ்வோம்!
ஆனந்தத்தில் திளைக்கட்டும்
அனைவர் மனமும்!
— வளர்கவி, கோவை

