தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அதைப் பத்தியே பேசாதீங்க.. என்பதா?

அதைப் பத்தியே பேசாதீங்க.. என்பதா?

அதைப் பத்தியே பேசாதீங்க.. என்பதா?


PUBLISHED ON : ஏப் 02, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 02, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தோல்விகளை அலசும் பழக்கம், நம்மவர்களிடம் அதிகமாக இல்லை என்பது, ஒப்புக் கொள்ளப்பட வேண்டிய உண்மை.

மேலை நாடுகளில், தோல்வியை அலசுதல் என்பதை, தொழில் சார்ந்த விஷயத்தில், அதிகமாக கடைப்பிடிப்பதோடு, மிகுந்த முக்கியத்துவமும் கொடுக்கின்றனர்.

முதல் திருமணம், தோல்வியில் முடிந்த நிலையில், இரண்டாவது திருமணம், பலரது வாழ்க்கையில், வெற்றியாக அமைய என்ன காரணம்?

'முதல் திருமணம் ஏன் தோற்றது; நாம் என்ன தவறு செய்தோம்; எந்த இடத்தில், அந்த அச்சு முறிந்து போனது...' என்று, பலமுறை சிந்தித்து,'இத்தகைய தவறுகள், புது வாழ்வில் நடந்து விடக் கூடாது...' என்று, கவனமாக இருப்பதினாலும், 'குறை காணும் வாழ்க்கையை விட, குறைகளோடு, வாழ்க்கை துணையை ஏற்று, அன்பு காட்டி வாழும் வாழ்க்கையே, வெற்றிகரமாகவும், மகிழ்ச்சிகரமாகவும் அமையும்...' என்று, புதிதாய் கற்றுணர்ந்த பாடமுமே, மறுமண வாழ்வை வெற்றிகரமாக்கியுள்ளது.

'அப்பேச்சையே எடுக்காதீங்க; எனக்கு, 'மூட் அவுட்' ஆகிடும்...' என்பவர்களும், 'எனக்கு கெட்ட கோபம் வரும்...' என்பவர்களும், தவறுகளை மீண்டும் செய்ய போகின்றனர் என்று பொருள்.

நம் இழப்புகளை பற்றி பேசுவோர், நம் தோல்வியை சுட்டிக்காட்டி மகிழ்கின்றனர்; அதில், மனம் லயிக்கின்றனர் என்று மட்டுமே பார்க்க கூடாது.

மரண செய்தியை கேள்விப்பட்டு, ஒருவர் அது பற்றி துக்கம் விசாரிக்கிறார் என்றால், நம் துன்பத்தை கிளறி விடுகிறார் என்றா பொருள்... அப்படியானால், 'பகிர்ந்து கொள்ளும் போது துன்பம் பாதியாகிறது' என்ற முதுமொழி முற்றிலும் பொய்யாகி விடாதா?

பிறரது இவ்விசாரிப்புகள், சில நேரங்களில் தீர்வுகளாகவும் அமைந்து விடுவது உண்டு. 'இனி, இப்படி நிகழாதிருக்க என்ன செய்யலாம்...' என்று, ஒரே வாக்கியத்தில், அருமையாக தீர்வு சொல்லி விட்டு போய் விடுவர்.

'அட... இந்த தீர்வும், இக்கோணமும் நமக்கு ஏன் தோன்றாமல் போயிற்று...' என்று, அப்போது தான் உள்ளுக்குள் உதிக்கும்.

நம் பழைய விஷயங்களை கிளறி, அதில், சந்தோஷம் காண்பவர்களாகவே இருந்து விட்டு போகட்டும். ஆனால், நமக்கு அவர்கள் என்ன செய்திகளை விட்டு செல்கின்றனர் என்பதை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.

'அவர்கிட்ட அதை பத்தி யாருமே பேசாதீங்கப்பா... சரியான டென்ஷன் பார்ட்டி... என்ன சொன்னாலும், காதிலேயே வாங்கிக்க மாட்டார்; சொன்னாலும் திருந்தாத ஜென்மம். அவராகவே முட்டி, மோதி தெரிஞ்சுக்கட்டும்; நமக்கெதற்கு வம்பு...' என, நம்மை சுற்றியுள்ளவர்கள், தீர்மானம் செய்து ஒதுங்கி விட்டனர் என்று, ஒரு பேச்சிற்கு வைத்துக் கொள்வோம்...

அதன்பின், என்ன நடக்கும் என, நீங்களே கற்பனை செய்து பாருங்கள்...

ஒரே பாடத்தை, முட்டி மோதி தெரிந்து கொள்வதை விட, பிறர் வழியே தெரிந்து, நடந்து கொள்வது புத்திசாலித்தனம்!

லேனா தமிழ்வாணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us