PUBLISHED ON : ஏப் 02, 2017

அன்புள்ள அம்மாவுக்கு —
எனக்கு திருமணமாகி, 12 மற்றும் 8 வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
என் கணவர், தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார். வேலை விஷயமாக, அடிக்கடி வெளியூர் செல்வார். அமைதியாக சென்று கொண்டிருந்த எங்கள் வாழ்க்கையில், கடந்த மூன்று மாதங்களாக, அவரது போக்கில், மாற்றம்.
அவர் பர்சில், ஒரு பெண்ணின் பெயர் மற்றும் முகவரி இருந்தது. அடிக்கடி இரவு, 11:00 மணிக்கு மேல், வெளியே சென்று, போன் பேசிய பின், ஒரு மணி நேரம் கழித்து வருவார். இது பற்றி, அவரிடம் கேட்டதற்கு, அப்பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக ஒத்துக் கொண்டார்.
அவள் திருமணம் ஆனவள்; அவளுக்கு ஒரு பையன் உள்ளான். என் கணவரை காட்டிலும், மூன்று வயது மூத்தவள். கணவரை பிரிந்து வாழ்கிறாள். பெரிய பதவியில் இருக்கிறாள்.
'எனக்கு அவங்களும் வேணும்; நீ, உன் முடிவை சொல்...' என்றார், என் கணவர். எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. இருவருமே கவுரவமானவர்கள். இவ்விஷயம் வெளியே தெரிந்தால் அசிங்கம் என நினைத்து, இவற்றையெல்லாம் மனதிற்குள் வைத்து பூட்டியதில், இப்போது, மனநோயாளியாகவே ஆகிவிட்டேன்.
அப்பெண்ணிடம் ஒருமுறை போனில் பேசிய போது, நான், என் கணவரிடம், அன்பாக இல்லை; மற்ற ஆண்களுடன் நான் பேசுவது பிடிக்கவில்லை; அவரிடம், பிடிக்காமல் தான் நான் குடும்பம் நடத்தியதாக என் கணவர் கூறியதாக சொன்னாள். ஆனால், என்னிடமோ, அப்பெண்ணுடன் எப்படியோ தொடர்பு ஏற்பட்டு விட்டது. அவளை
பிரிய முடியவில்லை என, மன்னிப்பு கேட்கிறார், என் கணவர்.
இதில் யார் கூறுவது உண்மை
என்று தெரியவில்லை.
இந்நிலையில், ஒருநாள் இரவு, அவளிடம் போனில் பேசி கொண்டிருந்த என் கணவர், என்னிடம் கொடுத்து பேசச் சொன்னார். நான் பக்கத்தில் தான் இருக்கிறேன் என்று தெரிந்ததும், அவளுக்கு கோபம் வந்து, 'உன் கணவரை நீயே வெச்சுக்க; எனக்கு வேணாம். நான் இப்படியே இருந்துக்கிறேன்...' என்று சொல்லி, தொடர்பை துண்டித்து விட்டாள்.
ஆனால், என் கணவரிடம், 'உங்களுக்கு என்ன வேண்டுமானாலும் செய்கிறேன்; என்னுடன் இருந்து விடுங்கள்...' என்று கூறியிருக்கிறாள். அப்பெண்ணிடமிருந்து, இரண்டு நாள் போன் வரவில்லை என்றால், எதையோ இழந்த மாதிரி அரற்றுகிறார், என் கணவர்.
எனக்கு என்ன முடிவெடுப்பது என்று தெரியவில்லை. 'என் நகை, பணத்தை எல்லாம் திருப்பி கொடுத் துடுங்கள்; உங்களிடமிருந்து விலகி போயிடுறேன்...' என்றும், 'இவ்விஷயம், குழந்தைகளுக்கு தெரியக் கூடாது; தெரிந்தால், செத்து விடுவேன்...' என்றும் கூறியுள்ளேன்.
இதற்கு, நீங்கள் தான் நல்ல பதிலை சொல்ல வேண்டும்.
— இப்படிக்கு
உங்கள் மகள்.
அன்பு மகளுக்கு —
கணவனின் கள்ள உறவை கண்டிக்காமல், அவனின் கள்ளக் காதலியுடன் நீ நட்பு பாராட்டியது, உன் பலவீனத்தையே காட்டுகிறது. அவளோ, உன் கணவன் மீது மட்டுமல்ல, உன் மீதும் ஆதிக்கம் செலுத்த விரும்புகிறாள். அவள், உன்னிடம் கனிவாக பேசுவது நாடகம்.
கணவனின் கள்ளக்காதலை கேள்விப்பட்டதும், அணுகுண்டாய்
வெடிப்பாய் என, உன் கணவன் பயந்திருக்கிறான்; ஆனால், நீயோ, எளிதாக சமாதானம் ஆகி விட்டாய்.
ஏன்... கணவனை பிரிந்தால், பிறந்த வீட்டில் உன்னை ஆதரிக்க மாட்டார்கள் என பயப்படுகிறாயா அல்லது பெரிதாய் படிக்கவில்லை, வேலைக்கு போய் சம்பாதிக்கவும் இல்லை, கணவனை பிரிந்தால் பொருளாதார ரீதியாய் அல்லறுவோம் என திகைக்கிறாயா அல்லது கணவனின் கள்ளக்காதலி பணக்காரி; அவளுடன் கணவனை பங்கு போட்டுக் கொண்டால், ராஜவாழ்வு வாழ்வோம் என, கணக்கு போடுகிறாயா...
கள்ளக்காதலி, உன் கணவனோடு தாலி கட்டாமல், சேர்ந்து வாழவே விரும்புவாள். அப்படி, அவள் உன் கணவரோடு வாழும் போது, நீ வேலைக்காரி ஆக்கப்படுவாய்; பணத்துக்கும், நகைக்கும் ஆசைப்பட்டு, கணவனை விட்டு கொடுத்தவள் என்கிற அவச்சொல்லுக்கு ஆளாவாய். உன் குழந்தைகளே, உன்னை மதிக்க மாட்டார்கள்.
உன் சுய மரியாதையையும், மனைவி என்கிற ஸ்தானத்தையும் பாதுகாத்து கொள்ளாமல், 'என் நகை, பணத்தை கொடுத்து விடுங்கள்; நான் போய் விடுகிறேன்...' என்று கூறுகிறாயே... என்ன
பெண் நீ?
'உன் கள்ளக்காதலை, ஒருநாளும் அங்கீகரிக்கமாட்டேன்; இனி அவளுடன் போனிலோ, நேரிலோ நீங்களும் பேசக் கூடாது; நானும் பேச மாட்டேன். கள்ளக்காதலிக்கு, 'செக்ஸ்' அடிமையாக இருக்க போகிறாயா அல்லது எனக்கு கண்ணியமான கணவனாக இருக்க விரும்புகிறாயா... நீ, அலுத்து போய் விட்டால், அவள் உன்னை அடித்து விரட்டி விடுவாள். அப்போது, அனைத்தையும் இழந்து, யாரும் இல்லாமல் நடுத்தெருவில் நிற்பாய். என்னை பற்றி, குறை கூறி தான், கள்ளக்காதலியை பிடித்துள்ளாய். 13 ஆண்டு தாம்பத்யத்தையும், என் காதலையும் புறந்தள்ளி, நன்றி கெட்டவன் ஆகி விட்டாயே...' என்று இடித்துக் கூறு.
இருதரப்பு பெரியவர்களை அழைத்து, பஞ்சாயத்து செய்து, கள்ளக்காதலை கத்தரிக்க வை. கள்ளக்காதலி மீது, மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய். உன் கணவனை நிம்மதியாக
வாழ விடாதே!
தொண்டையில் மீன் முள் சிக்கி கொண்டது போல், உன் மூலம் பிரச்னைகளும், அவஸ்தைகளும் உன் கணவனுக்கு தொடர வேண்டும். கோழிக்குஞ்சை கவ்வ வரும் கழுகை விரட்டும் தாய்க்கோழி போல, அவளை விரட்டு.
'மனைவி ஏமாளி இல்லை; ரகளை செய்து நம்மை உண்டு இல்லை என்று செய்து விடுவாள்...' என, உன்னை பார்த்து, உன் கணவன், ஏகத்துக்கு அலற வேண்டும்.
எமனிடமிருந்து, கணவனை காப்பாற்ற சாவித்திரி போராடியது போல, கள்ளக்காதலியிடமிருந்து, உன் கணவனை பாதுக்கப் பார்.
அடிமேல் அடி வைத்தால், அம்மியும் நகரும் மகளே!
-— என்றென்றும் தாய்மையுடன்
சகுந்தலா கோபிநாத்.
