தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/சக்தி இல்லையேல்...

சக்தி இல்லையேல்...

சக்தி இல்லையேல்...


PUBLISHED ON : ஏப் 02, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 02, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சக்தியின் அருள் இல்லையெனில், இவ்வுலகில் எந்த உயிரும் இயங்க முடியாது. அத்தகைய சக்தி தேவியான அன்னையின் அருளை பெற்ற சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்து சுவாமி தீட்சிதரின் வாழ்வில், நடந்த நிகழ்வு இது!

அம்பிகையை நேரில் தரிசித்து, தேவியின் ஷோடசாட்சர மந்திரங்களையும், அம்மந்திர தேவதைகளின் தரிசனமும் பெற்றவர், முத்து சுவாமி தீட்சிதர். அத்துடன், திருத்தணியில், முருகப் பெருமானே இவருக்கு காட்சியளித்து, வாயில் கற்கண்டு இட்டு அருள் புரிந்திருக்கிறார்.

செல்வத்தின் மீது பற்றில்லாமல், அம்பாள் அருளே, பெரும் செல்வம் என, இறை சிந்தனையில் வாழ்ந்திருந்தார், தீட்சிதர். ஆனால், அவர் மனைவியோ, 'அம்பாள் அருள் இவருக்கு பரிபூரணமாக இருக்கையில், இவர் போய் நின்றாலே போதுமே அரசர்கள் அள்ளிக் கொடுப்பரே... அதை வாங்கி வந்து, எனக்கு நகை, நட்டுகள் செய்து போடக் கூடாதா...' என, நினைத்தாள்.

ஒருநாள், தன் எண்ணத்தை தீட்சிதரிடம் கூறினாள். ஆனால், அவர் அம்பிகையின் நினைவில் ஆழ்ந்திருந்ததால், அதை செவி மடுக்கவில்லை. அதனால், அவரது சீடர் ஒருவர், 'குருநாதா... தாங்கள் அனைத்தையும் துறந்தவர்; அதனால், தங்களுக்கு வேண்டுமானால் எதுவும் தேவையிருக்காது. ஆனால், தங்கள் மனைவி அப்படியில்லையே... அவரது ஆசையை நிறைவேற்றி வைக்கக் கூடாதா... ஒருமுறை தஞ்சாவூர் அரசரை, தாங்கள் போய் பார்த்தாலே போதுமே... குரு பத்தினி வேண்டுவதெல்லாம், குறைவில்லாமல் கிடைத்து விடுமே...' எனக் கூறினார்.

அதற்கும் பதில் சொல்லவில்லை, தீட்சிதர். அன்றிரவு, நவாவரணப் பூஜை முடித்து, வழக்கம் போல, பாடத் துவங்கினார், தீட்சிதர்.

இந்நிலையில், அவரது மனைவி கனவில், சர்வ அலங்கார பூஷிதையாக தோன்றிய லட்சுமி தேவி, தன் திருமேனியில் இருந்து, ஒவ்வொரு ஆபரணமாக கழற்றி, தீட்சிதரின் மனைவிக்கு அணிவித்தவள், 'போதுமா... இன்னும் வேண்டுமா...' எனக் கேட்டாள்.

மெய் சிலிர்த்து, விழித்தெழுந்தாள், தீட்சிதரின் மனைவி. நகை மேல் அவளுக்கு இருந்த நாட்டமும் கலைந்தது.

அம்பிகையை துதித்து, தீட்சிதர் பாடிய கீர்த்தனைகள், இன்றும், கர்நாடக சங்கீத மேடைகளில் பாடப்படுகின்றன.

இறையருள் பெற்றவர்களின் உள்ளம், வேறெதிலும் பற்றாது என்பதை விளக்கும் வரலாறு இது!

பி.என்.பரசுராமன்

தெரிந்ததும் தெரியாததும்!

கர்ப்பிணி பெண்கள் மலை மீது ஏறி சாமி கும்பிட போகக் கூடாது என்கின்றனரே... ஏன்?

மலையேற அதிக சக்தி தேவைப்படும். மேலும், மலை ஏறும் போது ஏற்படும் உடல் இயக்கத்தால், கருப்பையில் உள்ள குழந்தை நிலை பிறழவோ, சேதமடையவோ வாய்ப்புண்டு. அதனால், கர்ப்பிணிகள் கீழே நின்று மானசீகமாக தரிசித்தாலே, உரிய பலன் கிடைக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us