தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அன்ப(ளி)ழிப்பு!

அன்ப(ளி)ழிப்பு!

அன்ப(ளி)ழிப்பு!


PUBLISHED ON : செப் 01, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 01, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பஸ்சை பிடித்து, விழி பிதுங்க வீடு வந்து சேர்ந்த போது, 7:00 மணியைத் தாண்டியிருந்தது. வீட்டுக்குள் நுழைந்ததும், டீபாயில் கிடந்த திருமண பத்திரிகைகளை பார்த்ததும், கடுப்பு வந்தது.

''ஏய் லீலா... யார் வீட்டு, 'இன்விடேஷன்' இதெல்லாம்?'' என்றான் எரிச்சலுடன் ஸ்ரீவத்சன். வாயெல்லாம் பல்லாக லீலா வருவதில் இருந்தே, அது, அவள் வீட்டு உறவு முறை என்று, சொல்லாமல் புரிந்தது.

''உங்க கையில இருக்கிறது... எங்க மங்களா அத்தையோட, மூத்த பொண்ணோட மருமகளோட தம்பி கல்யாண பத்திரிகை; டீபாயில இருக்கிற பிள்ளையார் படம் போட்ட பத்திரிகை, என் தம்பி பொண்டாட்டியோட தங்கச்சி பையனோடது. மூணாவது நாம பெசன்ட் நகர்ல இருந்தோமே... அந்த வீட்டு ஓனர், அகிலா மாமி பொண்ணுது!''

தலை சுற்றியது ஸ்ரீவத்சனுக்கு.

''ஏன் லீலா, இதுக்கெல்லாம் போகணுமா?''

''பின்ன போகாம! ரெண்டு நெருங்கின சொந்தங்க. அகிலா மாமி, அதை விட உயிரா பழகினவங்க.''

''அது சரி. உங்க அத்தை பொண்ணோட மருமகளோட தம்பியும், உன் தம்பி பொண்டாட்டியோட, தங்கச்சி மகனும், உனக்கு நெருங்கின சொந்தம். அப்ப தூரத்து சொந்தம்ன்னா யாரு, எங்கம்மாவும், அக்காவுமா?''

''ஏன்... அவுங்க வீட்டு விசேஷத்திற்கு, நாம போகாமலா இருந்தோம்... உங்க அக்கா பேத்தியோட , காது குத்துக்கு நாம போய், அஞ்சு தட்டு வரிசை வைக்கல. அதுக்கு பதிலா, நம்ம பொண்ணோட மஞ்சத் தண்ணிக்கு வந்து, நூத்தி ஒரு ரூபா மொய் எழுதிட்டு போனதையும் நான் மறக்கல.''

இதற்கு மேல் பேசினால் விஷயம் ரசாபாசமாகும். இப்போது பிரச்னை அதுவல்ல. மாசத்தில் பத்து, பதினைந்து கல்யாணம் காட்சி என்று வந்தால், எவனால் முடிகிறது அன்பளிப்பு தருவதற்கு.

''அட ராமா... என்னது இது, எல்லாப் பொருட்களையும், தரையில் வாரிப் போட்டுட்டு உட்கார்ந்திருக்கீங்க...'' ஞாயிற்றுக் கிழமை, அதிகாலை வேளையில், வேஷம் போட்டது போல, உடம்பெல்லாம் தூசியை பூசிக் கொண்டு, உட்கார்ந்திருந்த கணவனைப் பார்த்து பதறிப் போனாள் லீலா.

'' என்ன செய்யச் சொல்ற லீலா. மாசக் கடைசி... வரிசையா மூணு கல்யாணம். போக வர ஆட்டோவுக்கே, இருநூறு பிடிக்கும். இதுல மொய்க்கு எங்க போறது. அதான் நமக்கு, 'கிப்ட்'டுங்குற பேர்ல வந்து, ஒரு மண்ணுக்கும் உதவாம, பரண்ல கிடக்குற சாமான்கள்ல தேர்றதை எடுத்து, அன்பளிப்பா கொடுத்துடலாம்ன்னு பாக்குறேன்,'' ஒரு விஞ்ஞானியின் லாவகத்தோடு முகத்தை வைத்துக் கொண்டு சொன்னான்.

லீலாவதிக்கு, இந்த திட்டம் பிடிக்கவில்லை என்றாலும், ஒரே புடவையை, இரண்டு கல்யாணத்திற்கு கட்டிக் கொண்டு போனால், இவளுடைய கவுரவம் அடிபடும் என்பதால், நீலக்கலர் புடவைக்கு ரவிக்கை எடுக்கிற செலவை, அவருடைய தலையில் கட்டியாக வேண்டும் என்பதால் அமைதியாக இருந்தாள்.

எட்டு சுவர் கடிகாரம், ஆறு நைட் லேம்ப், நான்கு சீனரி, பத்து பதினைந்து ப்ளவர் வேஸ்கள், ஆறேழு ஹாட் பேக்குகள், ஏழெட்டு ப்ளாஸ்க்குகள், ப்ளாஸ்டிக் அஞ்சறைப் பெட்டிகள், டிபன் பாக்ஸ் என்று உபயோகப்படாத பொருட்கள் ஏகப்பட்டது கிடந்தது.

''ஏன் லீலாவதி... அந்த நாலடுக்கு கேரியர, மங்களா அத்தையோட சொந்தக்கார கல்யாணத்துக்கு செய்துடலாமா?'' என்று கேட்டான்.

''அய்யோ... பையன் எம்.என்.பி.,ல ஒர்க் செய்யுறான். அமைந்தகரைக்கும், அண்ணா நகருக்கும் போறாப்புல, அமெரிக்காவுக்கும், லண்டனுக்கும் போயிட்டு வர்றான். அவனுக்கு அடுக்கு பாத்திரமும், அலுமினிய தூக்கும் செஞ்சா நல்லாவா இருக்கும்!''

''அன்பளிப்பு தர்றது, நம்ம சக்திக்கு தகுந்தாப்புல இருக்கணுமே தவிர, போலி கவுரவத்துக்கு ஆடி, சூடு போட்ட குதிரை போல ஆயிடக் கூடாது...''

''லெக்சர் குடுக்காம வேலையை பாருங்க.''

''சரி லீலா... இந்த ஹாட்பேக்கை பாரு, உன் தம்பி வீட்டு சொந்தக்கார கல்யாணத்துக்கு செய்துடலாமா... இப்போ போய் கடையில வாங்கினா, இதுவே ஆயிரத்து ஐநூறு தேறும்.''

''இதப்பாருங்க... அதுவும், இதுவும் பேசி என்னை கடுப்பாக்காதீங்க. நீங்க இதெல்லாம் எடுத்து துடைச்சு வைங்க. உங்க சொந்தக்காரர் வீட்டுல விசேஷம் வருமில்ல. அப்போ எடுத்துட்டு போய், 'கிப்ட்'டா செய்யலாம்.''

நெஞ்சுக்குள் நெம்பி வழிந்த வக்கிரம், வாய் வழியே வார்த்தையாய் துள்ளித் தெறித்து எகிறியது. எந்தப் பிரச்னைக்கும், பேச்சின் மூலமாய் முடிவு காண முற்பட்ட நிலைமை மாறி, இப்போதெல்லாம், எந்தப் பேச்சும் பிரச்னையில் போய் முடிவது தான் குடும்பமாக போய்விட்டது.

கல்யாண மண்டம் நிரம்பி வழிந்தது.

இரு வீட்டாருமே பசையுள்ள இடமென்பதால், கூட்டம் அதிகமாக இருந்தது. முதல் நாள் வரவேற்பிற்கு போய் விட்டு வந்தால், காலையில், முகூர்த்தத்திற்கு அரக்க, பரக்க ஓட வேண்டிய அவசியமில்லை என்பதால், நிறைய பேர் தென்பட்டனர்.

லீலாவதியுடன் சண்டையிட்டு, சண்டையிட்டு தோற்றுப் போய், அவள் விருப்பம் போலவே, 1,500 ரூபாய்க்கு, ஒரு, 'டிஜிட்டல் வாய்ஸ் சீனரி'யை வாங்கி, ஜிகினா பேப்பருக்குள் பொதித்து எடுத்து வந்து இருந்தனர்.

''என்ன மாப்ளே... எப்படி இருக்கீங்க...'' குரல் வந்த திசையில், ரங்கராஜன் மாமா நின்றிருந்தார். லீலாவதிக்கு பெரியப்பா முறை. மதுராந்தகத்தில், வீடு, வாசலோடு மதிப்பு குறையாமல் வாழ்பவர். பார்த்தும் ரொம்ப நாளாகிவிட்டது.

''ஒரே ஊர்ல தான் இருக்கோம். இப்படி ஏதும் விசேஷத்துல பார்த்துக்கிட்டா தான் உண்டு. பெரியம்மா நல்லாயிருக்காங்களா... ஜெயந்தி, பசங்க எல்லாம் எப்படி இருக்காங்க?'' லீலாவதி குசலம் விசாரித்தாள்.

''எல்லாம் ஜம்முன்னு இருக்காங்க லீலா. நீ எப்படி இருக்கே...உன்னை மாப்பிள்ளை நல்லபடியா பாத்துக்குறாரா... உன் வீட்டுல, கல்யாணச் சாப்பாடு எப்ப போடப் போற,'' என்றார் உரிமையாய்.

''ம்க்கும்... அதையேன் பெரியப்பா கேட்குறீங்க. இந்த கல்யாணத்துக்கு வர்றதுக்குள்ளே, வீட்டுல, ஒரு பாரதப்போரே நடந்து ஓய்ஞ்சிடுச்சு.''

மனைவியை முறைத்தான் ஸ்ரீவத்சன். அவள் கண்டு கொள்ளவில்லை.

''விலைவாசி கூடிப் போச்சுங்குறதுக்காக, நம்ம வீட்ல உபயோகம் இல்லாம கிடக்குற பொருளை, தேடிப் பிடிச்சு, ஒருத்தருக்கு அன்பளிப்பு தர்றது நல்லவா இருக்கு. இதை நீங்களே கேளுங்க பெரியப்பா.''

தன் வீட்டு விஷயத்தை, இப்படி அம்பலம் ஏத்துகிறோமே என்ற கவலை அவளுக்கே இல்லாத போது, தனக்கு மட்டும் எதற்கு அதெல்லாம் என்று, ஸ்ரீவத்சன் முடிவெடுத்து விட்டான்...

''அப்படியில்ல மாமா... நீங்களே சொல்லுங்க... அன்பளிப்புங்கறது நம்முடைய வசதிக்கு ஏற்ப தானே தர முடியும். அதவிட்டுட்டு, போலி கவுரவத்துக்காக வேஷம் போட முடியுமா... இது எல்லாவற்றையும் விட, நமக்கு அன்பளிப்பு தர்றவங்க, அது நமக்கு உபயோகப்படுமா, படாதான்னு யோசிக்கறதே இல்ல. நாம மட்டும் ஏன் மத்தவங்க தேவைகளை பத்தி யோசிக்கணும்,'' என்று காட்டமாக கேட்டான் ஸ்ரீவத்சன்.

இவர்களுடைய விவாதத்தில் கலந்து கொள்வது போல, இன்னும் ஓரிரு உறவினர்கள், நாற்காலியை நெருக்கிப் போட்டு, அருகில் வந்து அமர்ந்து கொண்டனர்.

''பாத்தீங்களா பெரியப்பா... இவர் பேசுறதை... நாம, நாலு இடத்துக்கு போய் வந்தா தானே, நம்ம வீட்டு விசேஷத்திற்கு, நாலு பேரு வருவாங்க. இன்னக்கி நாம நூறு ரூபாய் செஞ்சா தானே, நாளைக்கு அது ஐநூறா திரும்ப வரும். இது, இவருக்கு புரியுதான்னு பாருங்க.''

பெரியப்பா முகத்தில் புன்னகை மாறவில்லை. இருவரையும் மாறி, மாறி பார்த்தார் கனிவாக.

''லீலா... பெரியப்பா இப்படி சொல்றேன்னு, தப்பா நினைக்காதம்மா... உதவியாய் இருந்தாலும், அன்பளிப்பாக இருந்தாலும் விளைவுகளை கருதி, செய்ய கூடாதம்மா. அன்பளிப்புகள் தர நினைக்கிறது நல்ல விஷயம் தான். ஆனா, அதுக்குப் பின்னால, அது வட்டியோட திரும்பி வரும்ன்னு, நீ போடுற கணக்கு தான் தப்பு.''

எல்லார் முன்னிலையிலும் பெரியப்பா அப்படி சொல்ல, லீலாவதிக்கு ரொம்பவும் தர்மசங்கடமாகி விட்டது.

''அப்படியில்ல பெரியப்பா அது வந்து...''

''லீலா, நான் ரெண்டு விஷயத்துல ரொம்பவும் கண்டிப்பா இருக்கேன்... நான் யாருக்காவது அன்பளிப்பு தர்றதா இருந்தா, பணத்தை தவிர வேறு எதையும் தர்றதில்லை. காரணம், நாம குடுக்கிற தொகை எத்தனை சிறிசாக இருந்தாலும், அதை அவங்க பயன்படுத்தியே ஆவாங்க... வீணாக பரணில் தூக்கி வீச மாட்டாங்க.

''ரெண்டாவது, என் வீட்டுக்கு அன்பளிப்பா வர்ற பொருட்களில், நமக்கு உபயோகப்படாதுங்கற பொருட்களை, தேவை இல்லாம வச்சி பாதுகாக்காம, உடனடியாக முதியோர் இல்லங்களுக்கோ, அல்லது தேவைப்படுற மத்தவங்களுக்கோ, பட்டுவாடா செஞ்சுடறேன். இதனால், ஒரு பொருள், உபயோகப்படாம வீணாய் அழிஞ்சு போறதுல இருந்து தடுக்கிற மன திருப்தி.

''உங்களால முடிஞ்சா, நீங்களும் இந்த முறையை பின்பற்றலாம். அன்பளிப்பு, எந்த கட்டத்திலேயும், அன்பு, 'அழி'ப்பா, ஆகக்கூடாது. முடிஞ்சதை அன்போடு செய்யுங்க. அப்போ தான் வாங்குறவங்களுக்கும் நிம்மதி; செய்ற உங்களுக்கும் நிம்மதி. எப்பவும் மொய், மெய்யா இருக்கணுமே தவிர, பொய்யா இருக்கக் கூடாது. நமக்கு வந்த பொருட்களில் தேவைப்படாததை பொறுக்கி, மத்தவங்களுக்கு அன்பளிப்பா செஞ்சுட்டு, அதுக்கு மரியாதை வரும்ன்னு எதிர்பார்க்காதீங்க,'' பெரியப்பா சொல்லி முடிக்க, அவர் பேச்சில் உள்ள நியாயத்தை உணர்ந்து, மனம் தெளிவுற அமர்ந்திருந்தனர் லீலாவதியும், ஸ்ரீவத்சனும்.

***

ஜாஸ்மின்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us