sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

தடம் தந்த தந்தை தமிழ்வாணன்! (18)

/

தடம் தந்த தந்தை தமிழ்வாணன்! (18)

தடம் தந்த தந்தை தமிழ்வாணன்! (18)

தடம் தந்த தந்தை தமிழ்வாணன்! (18)


PUBLISHED ON : டிச 20, 2020

Google News

PUBLISHED ON : டிச 20, 2020


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அப்பா கொடுத்த கமிஷன்!

ஒரு மாணவனை, மணமகனாக்கினால் என்னென்ன பிரச்னைகளை அவன் சந்திக்க வேண்டி வரும் என்பதை, நான் உணராதவனில்லை.

கைச்செலவுக்கு, நான் எழுதிச் சம்பாதித்துக் கொண்டிருந்த மாத வருவாயான, 60 ரூபாய் போதுமா... மனைவிக்கு அவ்வப்போது அல்வா (?) மல்லிகைப் பூ (!) வாங்கித் தரவே, இது சரியாகி விடுமே!

மனைவியுடன் திரைப்படம், உணவகம், கடற்கரை, பொருட்காட்சி என்று போனால், செலவுக்கு எங்கே போவதாம்?

மனைவிக்கு, துணிமணிகள் அவ்வப்போது வாங்கித் தரவேண்டாமா... இதையெல்லாம் விடுங்கள், தேனிலவுக்கு போக, சில ஆயிரங்களாவது வேண்டுமே!

இதுபற்றி, அம்மாவிடம் புலம்பியதற்குத் தக்க பலன் கிடைக்கவில்லை.

'அவளுக்கு என்ன வேண்டுமோ நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீ படி...' என்று, பதில் வந்தது.

இதெல்லாம் ஒரு பதிலா... நானாக வாங்கிக் கொடுப்பது போல் வருமா... மாமியாருக்கல்லவா எல்லாப் பெயரும் போய் விடும்!

என் மனக் குமுறலை அறியாதவரா அப்பா... அவர் தான் உளவியல் படிக்காத உளவியல் நிபுணராச்சே!

ஒருநாள் என்னை அழைத்தார்.

'மணிமேகலை பிரசுரத்திற்கு, ஞாயிறு கூட வெளியூர் வாசகர்கள் வந்து ஏமாந்து திரும்புகின்றனர். எனவே, ஞாயிறுகளிலும் அதை திறக்கத் திட்டமிட்டிருக்கிறேன்.

'ஞாயிறு திறந்து வைத்து, விற்பனை செய். 100 ரூபாய்க்கு நீ புத்தகம் விற்றால், உனக்கு, 12.50 ரூபாய், 'கமிஷன்!' என்ன சொல்றே...' என்றார்.

என்னது, எனக்கே கமிஷனா... மகனுடன் வியாபார ஒப்பந்தமா... ஆனால், அதிர்வை மறைத்தபடி, 'சரிப்பா...' என்றேன், சந்தோஷமாய்.

சொந்த நிறுவனத்தைப் பார்த்துக் கொள்ள மகனுக்கே, 'கமிஷன்' தந்த அப்பா யாராவது இருக்கின்றனரா... அவர்கள் எத்தனை பேர்... தெரியாமல் தான் உங்களைக் கேட்கிறேன், வாசகர்களே!

உடன் பிறந்த பங்காளி வேறு இருக்கிறானே! ஆமாம். ரவி, ஒரு ஞாயிறு; நான், ஒரு ஞாயிறு என, வருமானப் பங்கீடு முடிவு செய்யப்பட்டது.

இன்ன வாரம் இன்னாருக்கு என்றும் பட்டியல் போட்டுக் கையில் கொடுத்து விட்டார், அப்பா. அப்படி அமைந்த நாள், சரியாக எனக்கான திருமண வரவேற்பு நாள்.

'நான் பார்த்துக்குறேன். நீ, 'ரிசப்ஷன்' ஏற்பாடுகளை கவனி...' என்றான், ரவி.

'அடப் போடா, முடியாது. 5:00 மணி வரை நான், புத்தக வியாபாரம் பார்க்கிறேன். உனக்கு விட்டுத் தரமாட்டேன். கிடைக்கும், 50 - 100ஐ விட்டுவிட, நான் என்ன ஏமாளியா... எனக்கு, இரட்டைச் செலவு இருக்கு தெரியும்ல...' என்றேன்.

திருமண வரவேற்பு ஏற்பாடுகள் நடக்க, 'அப்பா... வீடியோன்னு புதுசா வந்துருக்குப்பா... நடக்கிறதையெல்லாம் திரைப்படம் மாதிரி எடுத்துக் குடுத்துருவாங்கப்பா... 'ரிசப்ஷனு'க்கு வீடியோ வேணும்ப்பா...' என்றேன்.

'தெரியும். நான் திரைப்படம் எடுத்தவன். ஆனா, ரொம்ப, 'காஸ்ட்லி' அது...' என்றார்.

'வாழ் நாள் பதிவுப்பா...'

'உண்மைதான். மறுக்கலை. யார் அவ்வளவு செலவழிக்கிறது?'

'வீடியோ இல்லைங்கிறீங்களாப்பா...'

'ரொம்ப அதிகம்டா. 45 ஆயிரம் ரூபாய் ஆகுமாம். விசாரிச்சுட்டேன். நாம எழுத்தாளர் குடும்பம்டா. அதுக்கெல்லாம் ஆசைப்படக் கூடாது...'

'இல்லப்பா வந்து...'

'சொன்னாப் புரிஞ்சுக்க...' என்று முடித்துக் கொண்டார்.

இதை விட பெரிய அதிர்ச்சி ஒன்றை, என் திருமண வரவேற்பின்போது பரிசாக அளித்தார் பாருங்கள்! பின்னால் சொல்கிறேன்...

நடக்கப் போகிற பிரளயத்தை அறியாத அப்பாவியாக, நான் இயங்கிக் கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் தான் அப்பாவின் ஜோதிடம், ஜாதகம், எண் கணிதம் ஆகிய புத்தகங்கள், சக்கைப்போடு போட்ட நேரம்!

'என் ரேஞ்சு என்ன... படிப்பு என்ன... என்னைப் போய் இப்படிப் பல்லிளித்து, தலையில் கட்டி, 'பில்' போட வைத்து விட்டாரே...' என, நான் ஆரம்பத்தில் எண்ணப் போக, 'எப்படா என் ஞாயிறு வரும்...' என்றாகி விட்டது!

பணம் சம்பாதிப்பது எவ்வளவு கடினமான வேலை, அதன் அருமை என்ன என்கிற பாடங்கள், எங்களுக்கு நடந்து கொண்டிருந்த காலம் அது.

சில வாசகர்கள் வேறு, சும்மா இருக்காமல், 'நீங்க, தமிழ்வாணன் புள்ளை தானே! ஏன் இப்படி, 'பில்' போட்டுக் கொண்டு...' என்று, 'த்சோ... த்சோ...' கொட்டி விட்டு போயினர்.

காசுதான் குறி என்பதால், இதெல்லாம் உரைக்கவே இல்லை.

என் திருமண வரவேற்பு, சென்னை, ஏவி.எம்.ராஜேஸ்வரியில் நடப்பதென முடிவாகி இருந்தது.

நான் எடுத்த முடிவு, மிகத் தவறாகி விட்டது. மாலை, 5:00 மணி வரை, மணிமேகலைப் பிரசுரத்தில், 'பில்' போட்டு விட்டு, 5:30க்கு போய் மண்டபத்தில் இறங்கினால்... ஏகப்பட்ட, 'ப்ரீ பங்சுவல்'காரர்கள்!

என்னவள் வேறு, சரிவர, 'மேக் - அப்' செய்து கொள்ளாமல், பாரதிராஜா பட, 'ஹீரோயின்' மாதிரி, தலையில் ஏகப்பட்ட எண்ணெயை தடவி வந்து நின்றாளே பார்க்கலாம்! (அடி! உனக்கு ஒரு தோழி கூடக் கிடைக்கலையா, 'அட்வைஸ்' பண்ண!)

எனக்கு ஒரே, 'ஷாக்!'

'சே... 50க்கும் 100க்கும் ஆசைப்பட்டு, இப்படி நடந்து கொண்டு விட்டோமோ! வாழ்நாளெல்லாம் பார்க்கப் போகும் இந்த வரவேற்புப் படங்கள் முழுக்க, இந்த எண்ணெய்க் கோலத்துடன் தானா... தலை (எண்ணெய்) எழுத்து!'

தலையைச் சரி செய்யலாம் என்றால், எங்களை வாழ்த்த வந்தவர்கள் அனைவரும் படை படையாய் மேடையில் ஏறத் துவங்கி விட்டனர். நான் நெளிந்த நெளியலைச் சொல்லி மாளாது!

இதற்கு ஒருபடி மேலே போய், அப்பா ஒரு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார் பாருங்கள்... அதையும் மறக்கவே முடியாது.

திட்டித் தீர்த்த பச்சையப்பன்கள்!

பச்சையப்பன் கல்லுாரியில் படித்த காலங்களில், எனக்கு ஏகப்பட்ட நண்பர்கள். 'தமிழ்வாணன் புள்ள, என் பிரண்டுடா...' என்று சொல்லிக் கொள்ளச் சேர்ந்துவிட்ட நண்பர்கள் வேறு!

பச்சையப்பன் கல்லுாரி விடுதியில், 'டேய்! லக்ஷ்மணன் ரிசப்ஷனுக்கு, நடிகர் - நடிகையர் எல்லாம் வருவாங்கடா... நாங்களும் வர்றோம்டா...' என்று, அழையா விருந்தாளிகளும் இணைந்துகொள்ள, பெரும்படை சேர்ந்து விட்டது!

வரவேற்பில் பல தரப்பினர் கொண்ட கூட்டம், எக்கித் தள்ளிக் கொண்டிருக்க, இரவு மணி, 8:00 ஆகியும் எவரும் சாப்பிட அழைக்கப்படவில்லை. (பலரும் பலமான செட்டிநாட்டு விருந்தை எதிர்பார்த்திருக்க - வந்தது - அனைவருக்கும் காளி மார்க் பானம் மட்டுமே!)

அப்பா எடுத்த இந்த முடிவில், எனக்கு ஏகப்பட்ட அதிர்ச்சி! என்னிடம் சொல்லவே இல்லை.

'இனிமே எங்கடா சாப்பிடப் போறது... ஹாஸ்டல் வேற மூடியிருப்பாங்களே...' என்று, பச்சையப்பன் நண்பர்கள் ஏகமாய் கடுப்பாகிப் போயினர்!

அடுத்து வந்த மூன்று தினங்கள் வரை, நான் கல்லுாரிப் பக்கம் தலை வைத்துக் கூடப் படுக்கவில்லை என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்!

— தொடரும்

மிரண்டு ஓடிய திருடர்கள்!

கடந்த, 1952ல், சென்னை, சூளைமேட்டில், தமிழ்வாணன் வசித்து வந்த சமயம், 'கல்கண்டு' இதழ் தீபாவளி மலரை முடித்து விட்டு, அதிகாலை, 2:00 மணிக்கு, நுங்கம்பாக்கம் சுடுகாடு வழியாக வீடு திரும்பிய போது, இரண்டு பேர் கத்தியைக் காட்டி மடக்கினர்.

சமயோசிதமாக, 'என்னை உங்களுக்குத் தெரிய வில்லையா...' (நான் தான் தமிழ்வாணன் என்ற தொனியில்) கேட்டிருக்கிறார்.

வழிப்பறித் திருடர்கள் இருவரும், 6 அடி இருந்த இவரை, 'மப்டி போலீஸ்' என்று கருதி, பயந்து ஓடி விட்டனர்.

லேனா தமிழ்வாணன்






      Dinamalar
      Follow us