
அன்புள்ள சகோதரிக்கு —
என் வயது, 60, கணவர் வயது, 70. இரண்டு மகன்களுக்கும் திருமணமாகி, வெளிநாட்டில் வசிக்கின்றனர். மூத்த மகனுக்கு, இரண்டு குழந்தைகள். இளைய மகனுக்கு, 5 - 6 ஆண்டுகளாக குழந்தை இல்லை. நாங்கள் தனியாக வசிக்கிறோம்.
இளைய மகனின் சம்பந்தி வீட்டினர், குழந்தை இல்லை என்று சொல்லி, ஓயாமல் அந்த பெண்ணையும், எங்கள் மகனையும் துன்புறுத்துகின்றனர். என் மகனுடன் இளைய மருமகள் ஒரே சண்டை, ரகளை.
'ஆறு ஆண்டுகளாக சந்தோஷமே இல்லை என்றால், எப்படி அம்மா குழந்தை பிறக்கும்...' என்கிறான், மகன். சிகிச்சை எடுத்தனர்.
'கொரோனா' காலமாக இருப்பதால், அவன் வீட்டிலிருந்தே வேலை செய்கிறான். வேலை செய்ய விடாமல் ஒரே, 'டார்ச்சர்' தான்.
திருமணத்திற்கு முன் வேலைக்கு சென்று கொண்டிருந்தாள், மருமகள். திடீரென்று, அவள் பெற்றோர், 'நீ ரொம்ப மெலிந்து விட்டாய். வேலைக்கு போனால் குழந்தை பிறக்காது...' என்று சொன்னதால், வேலையை விட்டு விட்டாள்.
எங்களிடமோ, மகனிடமோ இதுபற்றி எதுவும் சொல்லவில்லை. கேட்டால், 'ஆம்பிளை தான் சம்பாதிக்க வேண்டும்...' என்கிறாள்.
இந்தியா வந்தால், அடிக்கடி அம்மா வீட்டிற்கு போவதும், அவர்கள், மகள் வீட்டிற்கு வருவதும் அதிகமானது. எங்கள் மகன் பற்றி குறை சொல்வது, அவனை, வீட்டு வேலை செய்யச் சொல்வது என்று ஆரம்பமானவுடன், மனைவியுடன் வெளிநாடு சென்று விட்டான், மகன்.
வீட்டில் ஒரு வேலையும் செய்ய மாட்டாள், மருமகள். எப்போதும், அம்மா - அப்பா மற்றும் அவள் வழி உறவினர்களுடன் மொபைல் போனில் பேச்சு தான். சரியாக சமைப்பதில்லை. குழந்தை இல்லை என்று, ஒரே ஆர்ப்பாட்டம்.
மூஞ்சியை துாக்கி வைத்துக் கொண்டு, 'மாடியிலிருந்து குதித்து விடுவேன்; எங்கேயாவது ஓடி விடுவேன்...' என்று, மகனை பயம் காட்டிக் கொண்டே இருப்பாள்.
இந்தியாவிற்கு வந்தால், அவள் அம்மா, 'உங்கள் ஊர் பட்டிக்காடு. கொசு ஜாஸ்தி, அவளுக்கு சரிப்படாது...' என்று, எங்கள் வீட்டுக்கு அனுப்ப மாட்டாள்.
ஒருமுறை, நாங்கள் எடுத்து கொடுத்த உடைகளை, எங்கள் முன்பே வேலை செய்பவர்களுக்கு அவள் அம்மா கொடுத்ததை பார்த்தேன்.
வெளிநாட்டில் இருந்தாலும், மகளை ஆட்டி வைக்கும் பொம்மையாக நடத்துகிறாள், சம்பந்தி அம்மாள்.
'நம் வாழ்க்கையை நாம் தான் வாழ வேண்டும்...' என்று எத்தனையோ முறை நல்லபடியாக, மனைவியிடம் சொல்லிப் பார்த்துள்ளான், மகன்.
அவளின் பெற்றோர் எனக்கு போன் செய்து, 'உங்கள் மகன், சண்டை போடுகிறான். வீட்டு வேலை எதுவும் செய்வதில்லை. என் மகளுக்கு கை புண்ணாகி விடுகிறது. பாத்திரம் தேய்க்க சொல்லுங்கள்...' என்று, 'அட்வைஸ்' செய்கின்றனர்.
நானும், கணவரும், 20 நாட்கள் போய் இருந்து வரலாம் என்று, மகன் வீட்டிற்கு சென்றோம். 'லாக்டவுணால்' இரண்டரை மாதம் தங்க வேண்டிய நிர்ப்பந்தம். அச்சமயம், மருமகள், எங்களை படுத்திய பாடு சொல்லி மாளாது. அங்கு, அவள் சொல்லும் வேலைகளை கேட்டு, அடங்கி நடக்க வேண்டிய சூழ்நிலைக்கு, நாங்கள் உள்ளானோம்.
அவள் சொல்லும் அளவுபடிதான் சமைக்க வேண்டும். தினமும் பாதி வயிறுதான் சாப்பிட முடியும். மகனுக்கு, வகை வகையாக சாப்பிட பிடிக்கும். ஆனால், மருமகளோ, வெறும் ரசம், ஒரு பொரியல் இருந்தால் போதும் என்பாள்.
இவை எதையும் மகனிடம் சொல்லவில்லை. 'லாக்டவுண்' தளர்வுக்கு பின் நாங்கள், இந்தியா திரும்பினோம்.
'மகளின் வாழ்க்கை நன்றாக இருக்க வேண்டும் என்று, அவளின் பெற்றோர் நினைக்கவில்லை. இப்படியொரு வாழ்க்கை தேவையா...' என்கிறான், மகன்.
மகளுக்கு அடிக்கடி போன் செய்து, நல்ல புத்தி சொன்னாலும் பரவாயில்லை. மாறாக, 'எங்காவது கூப்பிட்டால் போகாதே; அவன் சொல்வது எதையும் செய்யாதே...' என்கின்றனர்.
எங்களுக்கும் வயதாகி கொண்டே போகிறது. கணவரின் ஓய்வூதியம் வருகிறது. எங்களுக்கு ஒன்றும் பிரச்னை இல்லை. மகனின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருக்கிறது. உங்கள் ஆலோசனையை எதிர்பார்க்கும், சகோதரி.
— இப்படிக்கு,
உங்கள் சகோதரி.
அன்பு சகோதரிக்கு —
தற்கால பெண்களில் சிலர், ஆண்களுக்கு சமமாய் அல்லது கூடுதலாய் மூர்க்கமாக பழி வாங்குபவர்களாக, சுயநலவாதிகளாக, ஆடம்பர நேசர்களாக மற்றும் வன்முறையாளர்களாக மாறியுள்ளனர்.
பெண்களும் மாறி விட்டனர்; பெண்களை பெற்ற பெற்றோரும் மாறி விட்டனர். மகளுக்கு, 30 வயதானாலும், திருமணம் செய்து வைக்க அவசரப்படுவதில்லை, பெற்றோர். திருமணத்திற்கு பின் மகளும், மருமகனும் சுதந்திரமாக வாழ அனுமதிப்பதில்லை; படுக்கையறை வரை, மூக்கை நீட்டுகின்றனர்.
சமையல் செய்ய கற்றுக்கொள்வது, ஒரு பெண்ணின் ஆயுதம். சமையல் ஆணிடமோ, 'ஸ்விக்கி' அல்லது 'ஸொமேட்டா'விடமோ போவது, பேராபத்து. சமையல் இல்லாத வீடு, பாழடைந்த மண்டபம்.
எனக்கு தெரிந்த ஒரு பெண் எழுத்தாளர், புதுச்சேரியில் இருக்கிறார். 40 ஆண்டு கால சமையலால், கணவனை தன் ஆளுமையில் கட்டி போட்டு வைத்துள்ளார்.
இக்கால ஆணும், பெண்ணும் கட்டுபாடற்ற தாம்பத்யம் நுகர துடிக்கின்றனர். ஆகவே, மனோ ரீதியாகவே அங்கு மலட்டுத்தன்மை பூத்து விடுகிறது. மருத்துவ ரீதியாய் இருவர் உடலையும் ஆராய்ந்தால், எந்த குறையும் இராது.
'ஒற்றை குழந்தை ஸின்ட்ரோம்' உள்ள தம்பதியர், ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக் கொள்ளக்கூடாது என, முடிவெடுத்திருப்பர். அது, உடலை தாக்கி அவர்களுக்கு எவ்வித கருத்தடை சாதனங்களின் உதவியும் இல்லாமல் இரண்டாவது குழந்தை பிறக்காமல் செய்கிறது.
அடுத்து நீ செய்ய வேண்டியவைகளை பார்ப்போம்...
1. எக்காரணத்தை முன்னிட்டும், இரண்டாவது மருமகள் வீட்டுக்கு போய் தங்காதீர்கள்.
2. சம்பந்தி வீட்டாருடன் பேசுங்கள். ஒரு ஆண்டிற்கு, உன் தலையீடும், சம்பந்தி வீட்டார் தலையீடும் இல்லாமல், இளைய மகன் - மருமகள் குடும்பம் நடத்தட்டும் என, வாய்வழி ஒப்பந்தம் செய்யுங்கள். அந்த ஒரு ஆண்டில் உனக்கு ஒரு பேரனோ, பேத்தியோ பிறக்க, 100 சதவீதம் வாய்ப்பிருக்கிறது.
மனைவி தான் தலையணை மந்திரம் ஓதவேண்டுமா... மகனை தலையணை மந்திரம் ஓத சொல்லி, மருமகளை, அவன் வசப்படுத்த சொல்.
3. வீட்டு வேலைகளை கணவன் பாதியும், மனைவி பாதியும் செய்வதில் தப்பேயில்லை. மகன் பாத்திரம் தேய்த்தால் ஒன்றும் குறைந்து போய்விட மாட்டான்.
4. பெற்றோரின் துாபத்தை கேட்டுகேட்டு அடங்காபிடாரியாய் இருந்தால், 'விவாகரத்து செய்து விடுவேன்...' என, இளைய மகனை மிரட்டச் சொல். தற்கால அடாவடி பெண்கள் பெரும்பாலும், தொடை நடுங்கிகள்; பயந்து போய், வழிக்கு வந்து விடுவர்.
5. ஒரு வீட்டில் கணவனும், மனைவியும் வேலைக்கு போவது, பொருளாதார பாதுகாப்பு. மருமகள் வேலைக்கு போவதும், போகாமலிருப்பதும், மகன் - மருமகள் சேர்ந்து எடுக்க வேண்டிய முடிவு.
6. இருவரையும் முழு உடல் பரிசோதனை செய்ய சொல். இருவரில் யாருக்கு பிரச்னை இருந்தாலும், மருத்துவ ஆலோசனைபடி சரி செய்து விடலாம்.
7. இளைய மகனையும், மருமகளையும் மனநல ஆலோசகரிடம் அனுப்பி, ஆலோசனை பெற சொல்.
8. மருமகளுக்கோ, மகனுக்கோ ஆடை எடுத்து தராதீர்கள். பணமாய் கொடுத்து விடுங்கள்.
9. மகன் அல்லது மருமகளுக்கு திருமண பந்தம் மீறிய உறவு ஏதாவது இருக்கிறதா என ஆராய்.
10. எந்த முயற்சியுமே பலனளிக்காவிட்டால், இளைய மகனின் அனுமதியுடன், சட்டப்படி விவாகரத்து பெற விண்ணப்பி.
— என்றென்றும் பாசத்துடன்,
சகுந்தலா கோபிநாத்.