sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

தடம் தந்த தந்தை தமிழ்வாணன்! (19)

/

தடம் தந்த தந்தை தமிழ்வாணன்! (19)

தடம் தந்த தந்தை தமிழ்வாணன்! (19)

தடம் தந்த தந்தை தமிழ்வாணன்! (19)


PUBLISHED ON : டிச 27, 2020

Google News

PUBLISHED ON : டிச 27, 2020


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மறக்க விரும்பும் தலை தீபாவளி!

திருவிளையாடல் படத்தில், ஒரு வசனம் வரும். 'சேர்ந்தே இருப்பது?' என, நாகேஷ் கேட்க, 'வறுமையும் புலமையும்...' என்று பதில் கூறுவார், சிவாஜி.

'எழுத்தாளர்கள், வறுமையில் உழலக் கூடாது. அவர்கள், வறுமை, பசி, பஞ்சம், பட்டினி என்று சிரமப்பட்டால், எழுத்தில் வளமை இருக்காது...' என்பார், அப்பா.

எனவே, எனக்கும், ரவிக்கும் அவர் அடிக்கடி சொல்லிக் கொடுத்த பால பாடம், 'எழுத்தாளன் என்பவன், வறுமையை வென்று விட வேண்டும்...' என்பது தான்.

வாழ்வில், நாம் சந்திக்கும் கவலைகள், சிக்கல்கள் ஆகியவற்றுள், 90 சதவிகிதம் பொருளாதாரம் சார்ந்தவையாகத் தான் இருக்கும்.

5 சதவிகிதப் பிரச்னைகள், நம் நாவால் வருபவை.

புறம் பேசுவது, கோபப்படுவது, திமிரெடுத்துப் பேசுவது, நான் யார் தெரியுமா என்ற வீராப்பு ஆகியவற்றால், நாம் சந்திக்க நேரும் துன்பங்கள் பலப்பல. எனவே, நாக்கைக் கட்டுப்படுத்துங்கள். மீதமுள்ள, 5 சதவிகிதத் துன்பங்கள், தாமாக வருபவை.

இந்தக் கோணத்தில், நாம் பொருளாதாரத்தை வென்று எடுக்க வேண்டும். 'செய்க பொருளை' என்று, வள்ளுவன் கூறவில்லையா?

'இல்லானை இல்லாளும் வேண்டாள். ஈன்றெடுத்த தாயும் வேண்டாள்' என்று, அவ்வை கூறவில்லையா?

எனவே, வாழ்வின் அத்தியாவசியக் கொள்கை, பொருளாதார வல்லமை தான்.

மணிமேகலைப் பிரசுரம் என்ற பெயரை, சரியாகத்தான் வைத்தார்; அள்ள அள்ளக் குறையாத அட்சய பாத்திரம் அது. சென்னை, அண்ணாநகரில் வீடு, தமிழ்வாணன் விவசாயப் பண்ணை என்று, குடும்பத்திற்கு குறை வைக்காத போக்கை, உருவாக்கி விட்டுச் சென்றார், அப்பா.

இவற்றை விட, 'துணிவே துணை' என்ற, அவரது இரு சொல் மந்திரம் அபாரமானது. என்னை, எழுத்துலகில் வளர்த்தார் என்றால், ரவியை, நிர்வாகத் துறையில் வளர்த்தார். ரவியிடம், 16 வயதிலேயே, பெரிய தொகையைக் கொடுத்து, 'கணக்கு எழுதி வைத்துக்கொள்...' என்பார்.

ஆறு மொழி மாற்றப் படங்களும், ஒரு நேரடிப் படமும் (காதலிக்க வாங்க) எடுத்தார். ஜோதிடம் பார்ப்பது, இயற்கை மருந்துகள், தமிழ்வாணனின் தமிழ் பல்பொடி என்றெல்லாம், தம் தொழில் எல்லையை விரிவாக்கினார். எங்களுக்கு, எவ்விதக் குறையும் வைக்கவில்லை.

வாரிசுகளான, எங்கள் நால்வரிடமும் பாசமாக இருந்தார், அப்பா. குறிப்பாக, நாங்கள் ஓரளவு வளர்ந்து வாலிபப் பருவம் எய்திய பிறகு, எங்களை மிகவும் கவனிக்க துவங்கினார்.

மாலை, 6:00 மணிக்குள் நான் வீட்டிற்கு வராவிட்டால், வயதிற்கு வந்த இளம் பெண்ணை, அம்மா - அப்பா தேடுவரே (அந்தக் காலங்க!) அப்படித் தேடுவார்.

'லேனா வந்துட்டானா...' என்று, எழுத்துப் பணிகளுக்கிடையே அம்மாவிடம் கேட்பார்.

இதை விட வியப்பு என்ன தெரியுமா?

என் திருமண வரவேற்பு முடிந்த பிறகு, 'அப்பா... 'ஹனிமூன்' போகணும்பா... 3,000 ரூபாய் வேணும்பா...' என்று கேட்டதும், சிறு அதிர்வு காண்பித்தார்.

நான் ஏதோ கேட்கக் கூடாத கேள்வியைக் கேட்ட மாதிரிப் பார்த்தார்.

சிறிது யோசித்தவராய், 'எங்க போகணும்கிறே?'

'ஊட்டி, கொடைக்கானல். இப்படி எங்கயாச்சும்...'

'நீங்க ரெண்டு பேரும் சின்னப் பிள்ளைங்க. அவ்வளவு துாரமெல்லாம் வேண்டாம்...'

'அப்பா... எங்கப்பா போகட்டும்?'

'வேணும்ன்னா, மாமல்லபுரம் போயிட்டு வாங்க...'

'என்னது... மாமல்லபுரமா?' (அது சரி, நாங்க சின்னப் பிள்ளைங்களா... அப்புறம் எதுக்குப்பா படிக்கும்போதே கலியாணம் பண்ணி வச்சீங்க.) கேட்க முடியவில்லை அப்பாவிடம்.

தொண்டைக் குழிக்குள் போட்டு அமுக்கிக் கொண்ட வாக்கியங்கள் இவை.

ஒரு வழியாக, மாமல்லபுரத்தை ஏற்றேன். மாமல்லபுரத்தில், தமிழ்நாடு சுற்றுலா போக்குவரத்தின் கடற்கரை ஹோட்டல் இருக்கிறது. இதில், அறை எடுத்து மனைவியுடன் தங்கினேன்.

அன்று மாலையே, ஹோட்டலின் வரவேற்பறையிலிருந்து அழைப்பு வந்தது.

'உங்க அப்பா பேசுறாங்க...'

'என்னது... அப்பாவா...'

'ஆமாம்...'

'லேனா... நீயும், மனைவியும் பாதுகாப்பா இருக்கீங்களா?'

'ஆமாப்பா. அரசு ஹோட்டல்; ஒண்ணும் பயமில்லைப்பா...'

'சரி சரி, ஜாக்கிரதையா இருங்க. அறை எண் என்ன?'

(எதுக்கு இதெல்லாம் கேட்கிறார்?)

சொன்னேன்.

மறுநாள் காலை, எங்கள் அறைக் கதவு தட்டப்படும் ஓசை கேட்க, சர்வர் உணவு எடுத்து வந்திருக்கிறாராக்கும் எனத் திறந்தால், அறை வாசலில் அம்மா, அப்பா!

'என்னப்பா இது... இங்கே?'

'உங்களை அனுப்பிச்சுட்டு, எங்களுக்கு மனசு, மனசா இல்லை. அதான் தேடி வந்துட்டோம்...'

தெரியாமல் தான் கேட்கிறேன், வாசகர்களே...

மகன் - மருமகளைத் தேனிலவுக்கு அனுப்பிவிட்டு, பின்னாலேயே தேடி வந்த அப்பா - அம்மா எங்காவது உண்டா... இப்படி எவர் வாழ்விலாவது நடந்திருக்குமா?

என் தலை தீபாவளி நாள் மறக்க விரும்பும் ஒன்று.

என் மனைவி, மகப்பேறுக்காக அம்மா வீடு சென்று விட, அப்பாவிற்கு உடம்பிற்கு முடியாமல் போக, (முதல், 'ஹார்ட் அட்டாக்!') 'நான் போகலைப்பா... எனக்குத் தலை தீபாவளி முக்கியமில்லை... உங்களோடு இருந்து, உங்களைப் பார்த்துக் கொள்கிறேன்...' என்றேன்.

'வேண்டாம், வேண்டாம்... தலை தீபாவளிக்கு, நீங்க ரெண்டு பேரும் வெவ்வேற இடத்துல இருக்கக் கூடாது. எனக்கு ஒண்ணுமில்லை. சரியாயிடுவேன். நீ காரைக்குடியில் தான் இருக்கணும்...' என்றார்.

எந்நாளும் இல்லாத திருநாளாய், வாசல் வரை வந்து வழியனுப்பி விட்டு, உள்ளே போனார்.

அது தான், அவரை நான் பார்க்கும் கடைசி முறை என்று, நான் கனவிலும் கருதினேன் இல்லை!

இருவருக்கும் நண்பராக இருந்தது எப்படி?

'மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., மற்றும் நடிகர் திலகம் சிவாஜிகணேசன் இருவருடனும் எப்படி உங்களால் நெருக்கமாக இருக்க முடிகிறது...' என்று, தமிழ்வாணனிடம் நிருபர் ஒருவர் கேட்டார்.

அப்போது, 'இருவருமே பத்திரிகையாளர்களை மதிப்பவர்கள். இவர்களை பற்றி எழுதும்போது, அதில் சார்பு கருத்து இருக்காது. இது மட்டுமல்ல, இருவரிடமும் பேசும்போது, மற்றவரைப் பற்றி நான் பேசுவது இல்லை...' என்றார்.

(அடுத்த இதழில் நிறைவடைகிறது)

லேனா தமிழ்வாணன்






      Dinamalar
      Follow us