
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தயங்காதே!
அடியெடுத்து நடந்தால் தான்
பயணம் தொடரும்
அமர்ந்தே இருந்து விட்டால்
சோம்பல் தான் படரும்!
விதையிட்டு வளர்த்தால் தான்
விளைச்சல் கிடைக்கும்
புதர் மண்ட விட்டு விட்டால்
வறட்சியில் தான் தவிக்கும்!
எழுத்துக் கூட்ட முயன்றால் தான்
கல்வியறிவு வளரும்
மவுனித்து கிடந்து விட்டால்
அறியாமையில் தான் இடறும்!
கரையெழுப்ப துணிந்தால் தான்
நீர் கூட தேங்கும்
மதியாமல் போய் விட்டால்
உயிர்கள் தான் ஏங்கும்!
தயங்குகிறவன் எப்போதுமே
அடுத்தவருக்கு கை தட்டல் தருகிறான்
துணிந்தவன் எந்நாளுமே
தனக்கான கை தட்டலைப் பெறுகிறான்!
தயங்கிக் கிடந்தால்
பிறரின் வரலாற்றை படிப்பாய்
முயன்று எழுந்தால்
உனக்கான வரலாறு படைப்பாய்!
அ.ப.சங்கர்,
அம்பாபுரம், சிதம்பரம்.