sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

டைட்டானிக் காதல் (17)

/

டைட்டானிக் காதல் (17)

டைட்டானிக் காதல் (17)

டைட்டானிக் காதல் (17)


PUBLISHED ON : டிச 27, 2020

Google News

PUBLISHED ON : டிச 27, 2020


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முன்கதை சுருக்கம்: பெண் பார்க்க வந்த ராஜாராமனின் மொபைல் எண்ணில் தொடர்பு கொண்ட புவனா, அவனிடம் பேச வேண்டுமென, ஹோட்டல், 'பார்க் ஷெரட்டனு'க்கு வரச் சொன்னாள். குதுாகலத்துடன் புறப்பட்டு வந்தவனின் முகம், கார்த்திகேயனை பார்த்ததும் சுரத்தின்றி போனது-

சொல்ல முடியாத விரக்தி சூழ்ந்து கொண்டது, ராஜாராமனை. புவனாவை சந்திக்கிற ஆசையிலும், குதுாகலமாக புறப்பட்டு வந்தான்.

காரின், 'ஸ்டியரிங்'கை பிடித்து வண்டியை ஓட்டினானே தவிர, மனம், புவனாவிடமிருந்தது. அவளின் அழகில் லயித்து கிடந்தது. அவளை அடைவது மிகப்பெரும் பாக்கியம் என்று நினைத்தான். அவளை அடைந்தால், உலகத்தில் உள்ள அனைத்தும் பெற்ற மாதிரி எனக் கருதினான்.

இதுவரை வாழ்ந்த வாழ்க்கையை எண்ணிப் பார்த்தான். குறை என்பதே இல்லாத வாழ்க்கை. தேவை என்பதை உணராத வாழ்க்கை. எள் என்பதற்கு முன் எண்ணெயாக நிற்கும் பெற்றோர். அவன் வாய் திறந்து கேட்க காத்திராதவர்கள்.

மனதை புரிந்து எல்லாம் செய்பவர்கள். புவனேஸ்வரி விஷயத்தில் கூட, அவன் சொல்வதற்கு முன்பே, குருமூர்த்தி சிவாச்சாரியாரை தேடி வந்து, பெண் பார்க்க குடும்பத்தோடு வந்தார், சாம்பசிவம்.

மன நிறைவாக திரும்பி போயினர்.

நேற்றிரவு புவனாவை பார்த்துவிட்டு வந்தவுடனே, 'ராஜாராமனின் இஷ்டப்படி, மறு மாதமே திருமணத்தை வைத்துக் கொள்ளலாம்...' என்றார், சாம்பசிவம்.

'நீங்களே முடிவு பண்ணினா எப்படி... பொண்ணு வீட்டுக்காரா சவுகரியத்தையும் பார்க்க வேண்டாமா...' என்று கேட்ட மனைவியை, தன் பேச்சால் அடக்கினார், சாம்பசிவம்.

'எனக்கு, ராஜாராமன் தான் முக்கியம். அவனோட ஆசை தான் முக்கியம். பசி எடுக்கறப்ப சாப்பிடணும். அதுக்கப்புறம் இலை நிறைய சாப்பாடு வச்சும் பிரயோஜனமில்ல...'

'அதெல்லாம் சரிதான். நானும் ஒத்துக்கறேன். ஆனா, அவாளும் பணம் பொறட்டணுமில்லையா?'

'ஒரு சல்லிக்காசு வேணாம். கட்டின புடவையோட பொண்ணை அனுப்பட்டும், போறும். எல்லாம் நாம செய்துக்கலாம். நமக்கு இருக்கிறது ஒரே பையன். இன்னொரு பொண்ணோ, பையனோ இருக்கானா என்ன?'

'அதுக்கு, பொண்ணாத்துக்காரா ஒத்துக்கணும் இல்லையா... நமக்கு ஆசை இருக்கிற மாதிரி, அவாளுக்கும் ஆசை இருக்குமில்லையா?'

'அதுவும் சரிதான். நாளைக்கு காலையில் அவர்கிட்ட பேசறேன்...'

நேற்றிரவு வரை எல்லாம் இப்படி நன்றாக போயிற்று. ராஜாராமனை கனவில் மிதக்க வைத்தது. மறுநாள் காலையில், புவனாவிடமிருந்து போன் வந்தபோது கூட, சந்தோஷமாக தான் இருந்தான்; சந்தோஷமாகவே கிளம்பினான்.

ஹோட்டலுக்குள் நுழையும்போதும், உற்சாகமும், புன்னகையுமாகவே வந்தான். புவனாவை பார்த்தபோது கூட, அவன் நினைக்கவில்லை. ஆனால், புவனாவின் அருகில் அவளை ஒட்டினாற்போல் எழுந்து நின்ற அந்த கம்பீரமான இளைஞன், விநாடி நேரத்தில், அனைத்தையும் கலைத்துப் போட்டான்.

'ஐயம், கார்த்திகேயன்...' என்று, கை குலுக்கியபோது, அந்தக் குரல், அதிலிருந்த நம்பிக்கை, உயரம், நிறம், கம்பீரம்... ஏதோ புரிந்தாற் போலிருந்தது, ராஜாராமனுக்கு.

'கடவுளே... அப்படி இருக்கக் கூடாதே...' என்று வேண்டினாலும், மனம், 'அப்படித்தான்...' என்றது.

''ரெஸ்டாரண்டுக்கு போய், சாப்பிட்டுக் கொண்டே பேசலாமா,'' என்று கேட்டான், கார்த்திகேயன்.

'வேண்டாமே... இங்கேயே உட்கார்ந்து பேசலாமே...' என்று சொல்ல நினைத்த, ராஜாராமன், ''சரி,'' என்று தலையாட்டினான்; என்ன பேசப் போறோம் என்பது புரியாதவனாக உடன் நடந்தான்.

மூன்று பேர் அமரும் மேஜையில் உட்கார்ந்து கொண்டனர்.

''என்ன சாப்பிடுகிறீர்கள்?''

''எனக்கு பசி இல்லை,''

என்றான், ராஜாராமன்.

''அவ்வளவு துாரம், 'டிரைவ்' பண்ணி வந்திருக்கிறீர்கள். 3:00 மணிக்கு மேல் ஆகி விட்டது. எப்படி பசிக்காமல் இருக்கும்?'' வற்புறுத்தினான், கார்த்திகேயன்.

''சரி, நீங்கள் சாப்பிடுவதையே எனக்கும், 'ஆர்டர்' பண்ணுங்கள்.''

'ஆர்டர்' பண்ணிவிட்டு, சற்று தீவிரமான குரலில் ஆரம்பித்தான், கார்த்திகேயன்.

''வெல் மிஸ்டர் ராஜாராமன். உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.

''உங்களை இங்கே அழைத்ததற்கு, ஒரு முக்கியமான காரணமிருக்கிறது, ராஜாராமன்.''

''தெரியும்.''

''என்ன தெரியும் உங்களுக்கு?''

''எதுவும் தெரியாது. ஆனால், யூகிக்க முடிகிறது.''

''என்ன யூகித்தீர்கள்?''

''நீங்கள் இருவரும் ஒருவரையொருவர் நேசிக்கிறீர்கள்.''

புவனாவும், கார்த்திகேயனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

''எப்படி யூகித்தீர்கள்?'' கேட்டான், கார்த்திகேயன்.

''அந்த அளவு நான் முட்டாளில்லை; மக்கும் இல்லை. நேற்று, பெண் பார்த்து, இன்று, அந்த பெண் பேச வேண்டும் என்று வரச்சொல்கிறாள். பொதுவாக, பேச ஆசைப்படுவது சகஜம் தான்.

''படித்த பெண். வேலையில் இருக்கிறாள். அவள் நினைப்பது சரிதானே என்று தான் கிளம்பினேன். சந்தோஷமும், உற்சாகமுமாகத்தான் கிளம்பினேன். ஆனால், இங்கு வந்து உங்களை அவளுடன் கூட பார்த்ததும், எனக்கு புரிந்து விட்டது.

''பெண் பார்த்துவிட்டு போனவனிடம் பேச வரும்போது, எந்த பெண்ணும் தன்னோடு இன்னொரு இளைஞனை அழைத்து வரமாட்டாள்... அதுவும் அழகான, கம்பீரமான இளைஞனை...''

''என் அழகைப் பாராட்டியதற்கு மிக்க மகிழ்ச்சி'' என்றான், கார்த்திகேயன்.

''ஆனால், என்னால் ஒன்றைத்தான் புரிந்து கொள்ள முடியவில்லை.''

''சொல்லுங்கள்...''

''விஷயம் இந்த அளவிற்கு இருக்கிறபோது, என்னை ஏன் பெண் பார்க்க வரச் சொன்னார்கள்?''

''இதற்கு, நான் தான் பதில் சொல்ல வேண்டும், மிஸ்டர் ராஜாராமன்,'' என,

முதல் முறையாக பேச ஆரம்பித்தாள்,

புவனா.

''சொல்லுங்கள்...'' என்று, அவளை நேரிடையாக ஏறிட்டான், ராஜாராமன்.

''இந்த விஷயத்தை நான் இன்னும் வீட்டில் சொல்லவில்லை. நம் வீடுகளின் கட்டுப்பாடுகளும், வரைமுறைகளும் உங்களுக்கும் தெரியும். படிப்பதற்கும், வேலைக்கு போவதற்குமே போராடிப் போராடி வெற்றி கண்டவள் நான்.''

''சரி, அதே போராட்டத்தை இதிலும் காட்ட வேண்டியது தானே?''

''இது, மிகவும் சிக்கல் நிறைந்தது. அந்த போராட்டங்களில் பெரியப்பா, சித்தப்பாக்கள், அத்தைகள் என, ஒட்டுமொத்த குடும்பமும், என் பக்கம் நின்றது. ஆனால், இதற்கு ஒருவர் கூட, என் பக்கம் நிற்க மாட்டார்கள். ஒருவர் ஆதரவு கூட கிடைக்காது. அதனால் தான் தயங்குகிறேன். மேலும்...''

''என்ன, சொல்லுங்கள்... என்னிடம் தயக்கம் எதுவும் வேண்டாம். நான் உங்களை பார்த்து, உங்கள் மேல் ஆசைப்பட்டது உண்மை. திருமணம் என்று ஒன்று நடந்தால், அது உங்களுடன் தான் என்று நினைத்தது உண்மை.

''இப்போது, உங்கள் மனதில், வேறு ஒருவர் இருப்பதை தெரிந்து கொண்ட பிறகு, அந்த நேசம் போய் விட்டது என்பது அர்த்தமல்ல. உண்மையான அன்பிற்கு அது அடையாளமும் அல்ல.

''அன்பு கொண்டதெல்லாம் தனக்கு கிடைக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் அதை வெறுத்து ஒதுக்குகிற மிகச் சாதாரண சராசரி மனிதனில்லை, நான். அன்பு கொண்ட நெஞ்சம் எதை விரும்புகிறதோ, அதைத் தேடி தருவது தான் உத்தம குணம் என்பதை புரிந்து கொண்டிருப்பவன்.

''அப்படிப்பட்ட உத்தமமான மனிதனாக தான், நான் இருப்பேன், புவனா. என்னால் முடிந்த அனைத்து உதவிகளையும், உங்களுக்கு ஒரு நல்ல நண்பனாக இருந்து செய்வேன். என்னை, நீங்கள் பரிபூரணமாக நம்பலாம்.''

வாயடைத்து போயினர், புவனாவும், கார்த்திகேயனும். இருவர் நெஞ்சும் உருகிற்று. எப்பேர்ப்பட்ட மனிதன் என்று தோன்றிற்று. இன்னும் கூட இப்படிப்பட்ட மனிதர்களெல்லாம் இருக்கின்றனரா?

கை நீட்டி, அவன் கையை பற்றிக்கொண்டான், கார்த்திகேயன்.

''சார்... நீங்க, தெய்வம் மாதிரி,'' என்றான்.

''பெரிய வார்த்தையெல்லாம் சொல்லி, சாதாரண மனுஷ குணத்தை, தேவ குணமாக்கிடாதீங்க... மனுஷன்கிறவன் இப்படித்தான் இருக்கணும்.''

''ஆனா, இருக்கிறதில்லையே சார்.''

''நாம இருப்பமே சார்.''

''எங்கப்பாவே இல்லையே...'' என்று ஆரம்பித்த கார்த்திகேயன், அனைத்தையும் சொல்லி முடித்தான்.

''கையில் அரிவாளோடு அலையுறார் சார். புவனாவை தான் குறி வைக்கிறாரு. ஜோதி மட்டும் இல்லைன்னா இத்தனை நேரம் நாங்க என்னவாகி இருப்போமோ?''

''உங்க பக்கம் ஜோதின்னா, புவனா பக்கம் நான் இருக்கேன்; கவலைப்படாதீங்க. நான் முன்ன நின்னு இந்த கல்யாணத்தை நடத்தி வைக்கிறேன்.

''புவனா, உங்க அப்பாகிட்ட நானே பேசறேன். நிச்சயமா அவர் சம்மதிக்க மாட்டார். உங்க வீட்டுல யார் சம்மதமும் கிடைக்காது. நான் சொல்கிறபோது, நீ கட்டின புடவையோடு வெளில வர தயாரா இருக்கணும்; இருப்பியா?''

தலையாட்டினாள், புவனா.

''சரி, எனக்கு ரெண்டே நாள் டயம் குடுங்க. தீர்க்கமா யோசிச்சு ஒரு முடிவுக்கு வர்றேன். அதற்குள் அவசரம்னா என்னைக் கூப்பிடுங்க. இல்லாவிட்டால், காரை எடுத்துண்டு எங்க ஊருக்கு, வீட்டுக்கு வந்துடுங்க... எங்களை மீறி ஒருத்தன் நெருங்க முடியாது. இந்தாங்க கார்டு.''

விலாச அட்டையை கொடுத்து விட்டு, ''அப்ப நான் கிளம்பறேன்,'' என்றான்.

அவன் போவதை கண் இமைக்காமல் பார்த்து நின்றனர், புவனாவும், கார்த்திகேயனும்.

இருவரிடமிருந்தும் ஆழமான பெருமூச்சு வெளிப்பட்டது.

தொடரும்

இந்துமதி







      Dinamalar
      Follow us