தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/தடம் தந்த தந்தை தமிழ்வாணன்! (5)

தடம் தந்த தந்தை தமிழ்வாணன்! (5)

தடம் தந்த தந்தை தமிழ்வாணன்! (5)


PUBLISHED ON : செப் 20, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 20, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

செம மாத்து மாத்திய, தந்தை!

என் ஐம்பது ரூபாய் தேவைக்காக, குளிக்கப் போய் விட்ட அப்பாவின், 'பர்ஸை' நோட்டம் விட்டேன். 'பர்ஸ்' இருந்தது. கையில் எடுத்தேன்.

அப்போது தான் குளிக்கப் போன, அப்பா, என் வருகை நேரத்தை கணித்து, சட்டென கதவைத் திறந்து வெளியே வந்து, 'திருட்டு பயலே... இந்தக் காரியத்தை நீ மட்டும் தான் செய்வே. எனக்கு அப்பவே சந்தேகம்...' என்றபடி, செம மாத்து மாத்தினார்.

பேனா பிடிக்கிற அவரது கை, சம்மட்டி பிடிக்கிற கையாக ஆகிப்போனது. அடியா அது, இடி!

நான் கத்தின கத்தில், பலர், எங்கள் வீட்டு வாசலில் திரள, என் புகழ் (?) அக்கம் பக்கத்து வீடுகளில் பரவி விட்டது. அம்மா மட்டும் என்னை விட்டுக் கொடுக்கவில்லை. எனக்கென அப்பாவிடம் சில சமாதானங்களை சொன்னார்.

'தெரியாமல் பண்ணிட்டான். இனிமே இந்தத் தப்பை பண்ண மாட்டான். அவன் வேணும்ன்னு கேட்கிறதை வாங்கிக் குடுத்தா கை ஏன் நீளப் போகுது. புள்ளையை அடிக்காதீங்க. நல்லது கெட்டது தெரியாத வயசு. நீங்களும், 'பர்ஸை' இப்படியா வெளியில் வைக்கிறது...' என்று, அம்மா சொல்ல, அந்த நேரம் சமாதானம் ஆனார், அப்பா.

கொஞ்ச நாளைக்கு என் வாலை சுருட்டி வைத்துக் கொண்டேன். ஆனால், இந்த பாழும் நாக்கிற்கு, நான் அடிமையாகி போனது ரொம்பத் தவறாகி விட்டது.

பையன் திருந்தி விட்டான் என்கிற நம்பிக்கையில், மறுபடி, 'பர்ஸ்' வெளியே எட்டிப் பார்க்க, என் லீலை மீண்டும் ஆரம்பமானது.

இந்தக் காலகட்டத்தில் நான் சற்று வளர்ந்திருந்தேன். தீனி ஆசை குறைந்து, பம்பரம், காற்றாடி என, என் தேவை உலகம் விரிந்தது.

அம்மாவிடம் காசு கேட்பேன், கொடுப்பார். ஆனால், என் தேவை அதிகம். செலின் பிராண்ட் நுால், மாஞ்சா போடக் கடுக்காய், பாட்டில் ஓடு, வஞ்சிரம், மாஞ்சா காய்ச்ச சட்டி, கலர் பாடர் அது இது என, ஒரு மாஞ்சா நுால்கண்டு தயாரிக்க, 15 ரூபாய் தேவை.

அப்போது, கிருஷ்ணன் என்கிற வகுப்பு தோழன், என்னுடன் நெருக்கமானான். போக் சாலையில் (இப்போதைய செவாலியர் சிவாஜி கணேசன் சாலை) அவன் இருந்தான். கொஞ்சம் பொல்லாத்தனம் கொண்டவன். சக மாணவர்கள் வம்பு செய்தால், வாய் பேசாது; கை தான் பேசும். ஆளும் வாட்ட சாட்டமாக இருப்பான்.

ஒருமுறை, 'சிந்தாதிரிப்பேட்டை போகலாம் வா. அங்கு, பர்ஸ்ட் கிளாஸ் மாஞ்சா நுால், பாணாக் காத்தாடி எல்லாம் கிடைக்கும். ஆனா, 15 ரூபா பத்தாது. 50 ரூபாய் கொண்டா. உங்க ஏரியாவுல ஒரு காத்தாடி கூட பறக்காது. அத்தனை காத்தாடியையும், 'டீல்' விட்டு அறுத்து விடலாம். அப்புறம் நீ தான் காத்தாடி கிங்...' என்று ஆசையைக் கிளப்பினான், கிருஷ்ணன்.

ஆசை கண்ணை மறைத்தது. ஏதோ தைரியத்தில், அப்பாவின், 'பர்ஸி'லிருந்து, ஐந்து, 10 ரூபாய்களை உருவி, சிந்தாதிரிப்பேட்டைக்கு நானும், கிருஷ்ணனுமாய் சைக்கிள் ரிக் ஷாவில் போனோம்.

மாஞ்சா, பாணாக் காத்தாடி என, தேவையானவற்றை வாங்கி வந்தபோது, கிருஷ்ணன், என்னை சக்கையாய் ஏமாற்றி, சில நோட்டுகளை அழுத்திக் கொண்டு விட்டது தெரிய வந்தது. கொஞ்சமாகத்தான் மிச்சம் கொடுத்தான்.

அவனோடு மோத முடியாது. யாரிடமும் புகார் செய்ய முடியாது. திருடனுக்கு தேள் கொட்டிய கதை தான்.

காத்தாடி, மாஞ்சாவை எங்களது அந்த சிறிய வீட்டில் எப்படி மறைத்து வைப்பது... தெரிந்தால், ஏது காசு என்கிற கேள்வி வராதா... நண்பன் கிருஷ்ணனின் காத்தாடி, மாஞ்சா என்று சொல்லலாம். நம்புவரா வீட்டில்?

இப்படிப்பட்ட மனப் போராட்டத்துடன் வீட்டை நோக்கி நடந்த நேரத்தில், நாயர் கடை வாசலில் நின்றிருந்தான், தம்பி ரவி.

'வீடே கலவரமா இருக்கு. அப்பா, 'பர்சு'ல, 50 ரூபாய் குறையுதாம். அப்பா, கோபமா இருக்காங்க. வீட்டுக்கு போனா, உனக்கு அடி விழும். அம்மா தான் என்னை இங்க அனுப்பினாங்க. 'லேனா வந்தா, அப்படியே திரும்பிப் போகச் சொல்லு. ராத்திரி, 11:00 மணிக்கு வரச்சொல்லு. அப்பா துாங்கிடுவாங்க. அந்த நேரம் வரலாம்'ன்னு, சொல்லச் சொன்னாங்க...' என்றான்.

'வகையா மாட்டினியா?' என்றது மனது.

முதல் முறையாக பயப் பந்து நெஞ்சுக்கும், வயிற்றுக்குமாய் உருள ஆரம்பித்தது.

தமிழ்வாணன் பற்றி பாடகர் டி.எம்.சவுந்தர்ராஜன்!

'நீங்க ஏன் கறுப்புக் கண்ணாடி போடுறீங்க...' என்று அவரிடம் ஒருமுறை கேட்டேன்.

'மற்றவர்களின் உணர்வை உன்னிப்பாகக் கவனிக்கவும், என் உணர்வுகளை வெளிக் காட்டிக் கொள்ளாமல் இருக்கவும் தான், கறுப்புக் கண்ணாடி அணிகிறேன்...' என்றார்.

வேறு எவரிடமாவது இப்படி இதை எல்லாம் பகிர்ந்து கொண்டிருப்பாரா என்று எனக்குத் தெரியவில்லை.

தொடரும்

லேனா தமிழ்வாணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us