தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : செப் 20, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 20, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெண்களுக்கு வலை விரிக்காதீர்!

சமீபத்தில், பல்பொருள் அங்காடிக்கு சென்றிருந்தேன். ஒவ்வொரு பொருளாக தேடித் தேடி எடுப்பது, சற்று சிரமமாக இருந்தது. அதோடு, வயதாகி விட்டதால், சாதாரணமாக நடக்கவே சற்று சிரமமாக இருந்தது.

என் மீது, யாராவது எதிர்பாராது இடித்து, நான் தடுமாறி விட்டால் விபரீதமாகி விடுமே என நினைத்து, அங்கிருந்த இளம் பெண் ஊழியரிடம், என்னிடமிருந்த, 'லிஸ்ட்'டை காண்பித்து, 'இவற்றை எடுத்து தர முடியுமா...' என்று கேட்டேன்.

'நீங்க, இப்படி ஓரமாக இருங்கள். நான் எடுத்து வந்து தருகிறேன்...' என்று கூறி, உதவினாள்.

எல்லாவற்றையும் விரைவில் எடுத்துக் கொடுத்த அவளுக்கு, நன்றி கூறி, 'பரவாயில்லையே... உன் வீட்டில், உனக்கு சின்ன வயசுலேயே திருமணம் செய்து வைத்து விட்டனரே... தீர்க்க சுமங்கலியாய் இரு...' என, வாழ்த்தினேன்.

அவள் உடனே, 'என் கழுத்தில் டாலர் கட்டியுள்ள மஞ்சள் கயிறும், உச்சி பொட்டும், இங்கு வேலை செய்கிற சில வக்கிர ஆண்களின் பருந்து பார்வையிலிருந்து தப்பிக்க தான். சிலர், திருமணமாகாத என்னை போன்ற சின்ன பெண்களிடம், ஆபாச வார்த்தைகளை கூறி, 'சில்மிஷம்' செய்ய முற்படுவதால் தான், இந்த வேஷம்.

'அத்தை சொல்லித் தந்த ஐடியா. அதோடு, எனக்கு, தாய் மாமாவுடன் நேற்று நிச்சயதார்த்தம் நடந்து விட்டது; இன்னும் ஒரு மாதத்தில் திருமணம். மஞ்சள் கயிற்றில், டாலருக்கு பதில் மாங்கல்யம் ஏறிவிடும். பெங்களூரு சென்று விடுவேன்...' என்று கூறி, நகர்ந்து விட்டாள்.

அவள் கூறியதை கேட்டதும், மனதுக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. பொருளாதார பிரச்னையால் வேலைக்கு வரும் இளம் பெண்களுக்கு, இப்படியொரு பிரச்னையா...

வக்கிர புத்தியுள்ள ஆண்களே... உங்களுடன் பணிபுரியும் சக இளம்பெண்களுக்கு, விளையாட்டாக கூட வலை விரிக்காதீர்.

- என். கிருஷ்ணமூர்த்தி, சென்னை.

பயனுள்ள பயிற்சி!

சில நாட்களுக்கு முன், விடுமுறை நாளில், தோழியை சந்திக்க, அவள் வீட்டிற்கு சென்றிருந்தேன். வரவேற்ற தோழி, என்னை சமையலறைக்கு அழைத்துச் சென்றாள். அங்கே, தோழியின் பதின்பருவ மகள், சமையல் செய்து கொண்டிருந்தாள்.

சமையலறையில் ஒரு சேரை போட்டு என்னை உட்கார வைத்த தோழி, மகள் அருகே சென்றாள்.

வெங்காயம், தக்காளி, உப்பு, மஞ்சள், மிளகு என, ஒவ்வொன்றையும் என் தோழியிடம் காட்டி, பின், அவற்றை எடுத்து, சாம்பார், ரசம் என, தயாரித்தாள், தோழியின் மகள்.

தோழியும் அருகிலிருந்து அவ்வப்போது திருத்தங்களை கூறி, சமையல் முடித்து, மகளை அனுப்பி வைத்தாள்.

'என்னடி, 'டிரெயினிங்'கா...' என்றேன்.

'ஆமாம்...' என்றவள், 'ஒவ்வொரு விடுமுறை தினத்திலும், விதவிதமாக சமைக்க சொல்லி தருகிறேன். பதிலுக்கு அவள், 'பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம், ஆன்லைன் பர்சேஸ்' மற்றும் 'நெட் பேங்கிங்' முதலியவற்றை கற்றுத் தருகிறாள்.

'கால மாற்றத்திற்கு ஏற்ப, நாமும் பல விஷயங்களை கற்றுக்கொள்ளா விட்டால், பின்தங்கி விடுவோம். மேலும், மகளும், நானும் தோழிகள் போல பழகுகிறோம்...' என்றாள்.

இதைக் கேட்ட நான், தோழியை மனதார பாராட்டினேன்.

- கே. ஸ்ரீலதா, சென்னை.

சேமிப்பின் அருமை!

சமீபத்தில், எங்கள் வீட்டு வேலைக்கார பெண்மணியின் மகளுக்கு திருமணம் நடந்தேறியது.

கூலி வேலை செய்யும் கணவன், இரண்டு வீடுகளில் வேலை செய்து சம்பாதிக்கும், மனைவி, இருவரால், எப்படி ஒரு திருமணத்தை நடத்தி முடிக்க முடிந்தது என, எனக்கு ஒரே வியப்பு. அவளிடமே கேட்டபோது, அவள் சொன்னது தான் இது:

'வீட்டு வேலை செய்து, மாதம், 6,000 ரூபாய் கிடைக்கிறது. ஆனால், மாதம், 2,000 ரூபாய் மட்டுமே கிடைப்பதாக கணவரிடம் பொய் சொல்லி, 4,000 ரூபாய் சேமித்து விடுவேன். மாதம், 6,000 கிடைக்கிறது என சொன்னால், அவர், கூலி வேலைக்கு போகாமல் இருந்து விடுவார். அவர் கொண்டு வரும் கூலி பணத்தை வைத்து, குடும்பம் நடத்தி விடுகிறேன்.

'என் சேமிப்பில், 2 லட்சம் சேர்ந்திருந்தது. மகளிர் குழு மூலம், 50 ஆயிரம் கடன் கிடைத்தது. உங்களை போன்றோரும், உறவினர் மற்றும் நண்பர்களும், 50 ஆயிரம் ரூபாய் வரை கொடுத்து உதவினர். 3 லட்சம் ரூபாய் செலவில், சிக்கனமாக திருமணத்தை நடத்தி முடித்து விட்டேன்...' என்றாள்.

சேமிப்பு என்ற பழக்கத்தால், மகளின் திருமணத்தை நடத்தி முடித்த, இவளின் கதை, அதிக சம்பளம் வாங்கியும், அனாவசிய ஆடம்பர செலவுகளால், சேமிப்பு இல்லாது, திருமணம் மற்றும் மருத்துவ செலவு சமயங்களில், கடன் வாங்கி அல்லாடும் நம் போன்றோருக்கு, அருமையான படிப்பினை.

சேமித்து, சிறப்பாக வாழ்வோம்!

- அப்ரோஸ் பானு, அரக்கோணம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us