PUBLISHED ON : ஜூலை 17, 2022

'லயன்ஸ் கிளப்'பின் மகளிர் சங்க தலைவி, ரமா. 'மீட்டிங்'குக்கு செல்ல கிளம்பினாள்; அவளது கணவர் சங்கர், பெரிய தொழிலதிபர். ஓய்வெடுக்க நேரமில்லாமல் மேலும் மேலும் பணம் சம்பாதிக்க, ஓடிக் கொண்டிருந்தார். வீட்டில் தங்குவதே அபூர்வம்.
அன்று, 'மீட்டிங்'கில், ஏழைகளை படிப்பறிவின் மூலம், எப்படி முன்னேற வைக்க முடியும் என்ற தலைப்பில் பேசுவதாக இருந்தாள். ரமாவின் கார், 'கிளப்' வாசலில் நுழைந்ததுமே, பெண்கள் கூட்டம் அவளை வரவேற்றது. உடம்பில் தக தகவென பட்டுப் புடவைகள் மின்ன, வைர நகைகள் டாலடிக்க, தங்கள் கணவர்களின் பணப் பெருமையை பறை சாற்றி நின்றிருந்தனர், அந்த மாதரசிகள்.
ரமாவின் ஆடை, அலங்காரங்களை பாராட்ட, புகழ்ச்சி மழையில் நனைந்தாள்.
மேடையில் ஏறி, ''நாம் ஒவ்வொருவரும், நம் வீட்டு டிரைவர் மற்றும் பணியாளர்களையும், அவர்கள் குழந்தைகளையும் படிக்க வைத்து, அவர்களை உயர்த்த பாடுபட வேண்டும். அவர்கள் வாழ்க்கைத் தரம் உயர்ந்தால், அதைவிட மகிழ்ச்சி தரும் விஷயம், நமக்கு வேறென்ன வேண்டும்?'' என்றாள், ரமா.
உருக்கமான அவளுடைய பேச்சு, நிறைய பேரின் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.
நன்றி சொல்லி புறப்பட்டாள், ரமா. போகும் வழியில், மகன் நரேனை கல்லுாரியிலிருந்து அழைத்துச் சென்றாள்.
''இன்னிக்கு நிகழ்ச்சி எப்படிம்மா இருந்தது,'' கேட்டான், நரேன்.
''ரொம்ப நல்லாயிருந்தது, நரேன். என் பேச்சு எல்லாருக்கும் ரொம்ப பிடித்தது. ஏழை, எளியவர்களின் படிப்புக்கு உதவுவதன் மூலம், அவர்களின் வாழ்க்கை தரத்தை எப்படி உயர்த்தலாம் என்பது பற்றி பேசினேன்,'' என்றாள்.
''உன்னை நினைச்சா எனக்கு ரொம்ப பெருமையாய் இருக்கும்மா,'' என்றான்.
அவர்களின் பேச்சை, அமைதியாக கேட்டுக் கொண்டிருந்தான், டிரைவர் பாண்டியன்.
போன வாரம், அவன் மகனின் கல்லுாரி கட்டணம் கட்டுவதற்காக பணம் கேட்ட போது, ரமா சொன்னது நினைவிற்கு வந்தது. இத்தனைக்கும் தானமாக இல்லை, கடனாகத்தான் கேட்டான்.
'சென்ற ஆண்டு, உன் மகனை கல்லுாரியில் சேர்க்க, 75 ஆயிரம் ரூபாய் வாங்கினாய். பணம் என்ன மரத்திலா காய்க்கிறது?' என்றாள்.
'மேடம், அந்தக் கடனை அடைத்து விட்டேனே...' என்றான், பாண்டியன்.
'அதுக்காக கேட்ட போதெல்லாம் குடுக்க முடியுமா? யோசித்து சொல்றேன். கொஞ்சம் பொறு...' என்றாள், ரமா.
வீட்டில் நுழையும் போதே, ''சுசீலா, சாப்பாடு ரெடியா... உடனே இன்னொரு, 'மீட்டிங்'குக்கு கிளம்பணும்,'' குரல் கொடுத்தபடியே நுழைந்தாள், ரமா.
''ரெடிம்மா. இதோ தட்டு வைக்கிறேன்,'' என்றாள், சுசீலா.
''சுசீலாம்மா, பாட்டி சாப்பிட்டாங்களா? வழக்கமா உட்கார்ற சாய்வு நாற்காலி காலியாயிருக்கே?'' கேட்டான், நரேன்.
''நரேன் தம்பி, காலையிலிருந்து பாட்டிம்மா வெளில வரவேயில்லை. காபி குடிச்சதோடு சரி. கஞ்சி கூட வேண்டாம்னுட்டாங்க,'' என்றாள்.
''நரேன், நீ போயி பாட்டியை பாரு. எனக்கு ஏற்கனவே லேட்டாயிடுத்து,'' என்றாள், ரமா.
''சரிம்மா, நீ சாப்பிட்டு கிளம்பு. நான் அப்புறமா சாப்பிடறேன்,'' என சொல்லி, பாட்டியின் அறைக்கு சென்றான், நரேன்.
ரமாவின் மாமியார் லலிதாவுக்கு, வயது: 74. எப்பவும் துரு துருவென்று ஏதாவது பண்ணிக் கொண்டிருப்பாள். உடம்பு சரியில்லையென படுப்பதே அரிது.
சுருண்டு படுத்திருந்தாள், பாட்டி.
நெற்றியில் கை வைத்து, ''பாட்டி, என்ன ஆச்சு. உடம்புக்கு முடியலையா... உடம்பு கொதிக்கிறதே. ஏன் சொல்லவே இல்லை? நீனாவுக்கு போன் பண்றேன்,'' என்று போனை எடுத்தான், நரேன்.
அப்போதுதான் உள்ளே நுழைந்தாள், அக்கா நீனா. அக்கா, தம்பி இருவருக்கும் பாட்டி மேல் ரொம்ப ஆசை. சமூக சேவகி அம்மா, தொழிலதிபர் அப்பா. இருவருக்கும் குழந்தைகளை வளர்க்க நேரமிருந்ததில்லை. அவர்களை வளர்த்து, நல்ல பண்புகளை போதித்து, பாசத்தை கொட்டி வளர்த்தவள், லலிதா தான். நீனா, கடைசி ஆண்டு, டாக்டர் படிப்பும்; நரேன், இன்ஜினியரிங்கும் படிக்கின்றனர்.
''நரேன், நீ நகரு. பாட்டியை பரிசோதிக்கணும். அவசியம்னா ஹாஸ்பிடலில் சேர்க்கலாம்,'' எனக் கூறி, பரிசோதித்த நீனா, ''இது, சாதாரண ஜுரம் தான். நாளைக்கு, ரத்த பரிசோதனை செய்யலாம். 'ரிசல்ட்' பார்த்து, என்ன செய்யலாம்ன்னு யோசிப்போம். சுசீலாம்மா, பாட்டிக்கு ஒரு கப் ஹார்லிக்ஸ் கொண்டு வாங்க,'' என்றாள்.
பாட்டியை மெல்ல உட்கார வைத்து, ஹார்லிக்ஸை குடிக்க வைத்தனர். ஊசி போட்டதும், துாங்க ஆரம்பித்தாள், லலிதா.
இரண்டு நாட்களுக்கு பின், குணமாகி மெல்ல எழுந்து வந்தாள், பாட்டி. சுசீலா கொடுத்த காபியை, பருக வைத்தாள், நீனா.
''நீனா, ரெண்டு நாளா நீ சரியா துாங்கலை. கொஞ்சம் ஓய்வு எடுத்துண்டு ஹாஸ்பிடலுக்கு போ. எனக்கு உடம்பிற்கு ஒண்ணுமில்லை,'' என்றாள், லலிதா.
''அக்கா, நீ கிளம்பு. வேண்டுமானால் நான் இன்னிக்கு, 'லீவு' போடறேன்,'' என்றான், நரேன்.
''சுசீலா இருக்கா என்னை பார்த்துக்க. நீங்க, உங்க வேலையைப் பாருங்க,'' என்றாள், லலிதா.
செய்தித்தாள் படித்தபடியே, ''ஜுரமாமே... எப்படிம்மா இருக்கே,'' என்றான், சங்கர்.
எல்லாரும் கிளம்பிச் சென்ற பிறகு, கண்களை மூடினாள், லலிதா. அவள் மனக் கண் பின்னோக்கி பாய்ந்தது. லலிதாவின் கணவர், பள்ளி ஆசிரியர். திருமணமானதும் அவரின் சொற்ப சம்பளத்தில், பெற்றோர் மற்றும் மகன் சங்கர் எல்லாரையும் காப்பாற்றும் பொறுப்பு இருந்தது. ஓய்வு நேரத்தில் டியூஷன் எடுத்து, குடும்பச் செலவை சமாளித்தாள், லலிதா.
லலிதாவின் கணவர் நுரையீரல் பாதிப்பால் இறந்து போனார். இன்ஜினியரிங் முடித்திருந்தான், சங்கர்.
'சங்கர், நீ என்ன செய்வதாக உத்தேசம். 'கேம்பஸ் இண்டர்வியூ'வில் நல்ல வேலை கிடைச்சிருக்கே, போறியா?' கேட்டாள் லலிதா.
'அம்மா, எனக்கு எம்.பி.ஏ., படிக்கணும்ன்னு ஆசை. அஹமதாபாத்தில் கிடைக்க வாய்ப்பு இருக்கு. ஆனால், நிறைய செலவாகும். கஷ்டப்பட்டு முடித்துவிட்டால் வேலையில் முன்னேற முடியும்...' தயங்கியபடி சொன்னான், சங்கர்.
'நீ படிப்பா. செலவை பற்றி கவலைப்படாதே. பணத்துக்கு நான் ஏற்பாடு பண்றேன்...' என்றாள், லலிதா.
நகைகளை விற்று அவனைப் படிக்க வைத்தாள். படிப்பு முடிந்த உடன், பெரிய வெளிநாட்டு கம்பெனியில் வேலை கிடைத்தது. இரண்டே ஆண்டுகளில், தன் திறமையால் படிப்படியாக உயர்ந்தான். அவன் மேலதிகாரி, தன் பெண்ணை அவனுக்கு கொடுக்க ஆசைப்பட்டு, லலிதாவிடம் கேட்டார்.
அழகு, படிப்பு, பண்புடன் இருந்தாள், ரமா. ஆனால், 'பார்ட்டி, கிளப்' என, அடிக்கடி வெளியே போகும் ஒரே ஒரு குறை தான், அவளிடம் இருந்தது. குழந்தைகள் பிறந்த பின்னும், இந்த வழக்கம் தொடர்ந்தது.
நல்லவேளை, சுசீலாவை சீதனமாக தன்னுடன் அழைத்து வந்திருந்தாள், ரமா.
சுசீலாவும், லலிதாவும் குழந்தைகளை வளர்த்தனர். சுசீலாவின் ஒரே பெண், திருமணமாகி சென்னையில் வசித்து வந்தாள். சுசீலாவின் குரல், லலிதாவின் சிந்தனை ஓட்டத்தை கலைத்தது.
''வெறும் வயத்துல மருந்து சாப்பிட முடியாது. வந்து கொஞ்சம் ரசம் சாதம் சாப்பிடுங்கம்மா,'' கூப்பிட்டாள், சுசீலா.
''நீ, உன் பெண் வீட்டுக்கு போகணும்ன்னு சொன்னியே. உன் பேத்தி திருமணத்துக்கு, 10 நாள்தானே இருக்கு,'' கேட்டாள், லலிதா.
''ஆமாம்மா. ரமாம்மா வந்ததும் கிளம்பறேன்,'' என்றாள், சுசீலா.
சாப்பிட்ட பின், தன் அறையில் போய் படுத்துக் கொண்டாள், லலிதா.
சிறிது நேரத்தில், ''சுசீலா, நீ இன்னும் கிளம்பலையா... ராத்திரி சாப்பாடு ரெடியா?'' கேட்டபடி வந்தாள், ரமா.
''அம்மா, எனக்கு கொஞ்சம் பணம் வேணும். பேத்திக்கு தாலிக் கொடி வாங்கணும். சம்பளத்தில் பிடிச்சுக்கங்கம்மா,'' என்றாள், சுசீலா.
''நீங்க எல்லாம் என்ன நினைச்சிண்டிருக்கீங்க? அளவுக்கு மீறி செலவு செஞ்சு கல்யாணம் செஞ்சு வைக்கறீங்க. விரலுக்கு தகுந்த வீக்கம் வேணும். டிரைவர் பாண்டியன் வேற, காலேஜ் கட்டணம் கட்ட பணம் கேக்கறான்,'' என்றாள், ரமா.
சுசீலா மேலே பேசும் முன், எழுந்து போய் விட்டாள், ரமா.
''லலிதாம்மா, நான் கிளம்பறேன். மறக்காமல் மருந்து சாப்பிடுங்கள்,'' என்றாள், சுசீலா.
''சுசீலா, ஒரு நிமிஷம் நில்லு. அவ வெடுக்குன்னு பேசிடுவாள். 25 வருஷமா இந்த வீட்டில் இருக்க. நீ இல்லாமல் நான் தனியே குழந்தைகளை வளர்த்திருக்க முடியாது. அவள் பேச்சை மனசுல வெச்சுக்காதே,'' என்றபடியே, தன் கைகளிலிருந்த இரண்டு வளையல்களை கழற்றி கொடுத்தாள், லலிதா.
''வேண்டாம்மா,'' என, மறுத்தாள், சுசீலா.
''உன் பேத்தியும், நீனாவைப் போல தான். இதை நீ பாட்டியின் ஆசீர்வாதமாக எடுத்துக்கோ, மறுக்கக் கூடாது.''
லலிதாவின் காலில் விழுந்து கும்பிட்டாள், சுசீலா.
இருவரும் வசற்படியில் நின்றிருந்த நீனாவைப் பார்க்கவில்லை. அப்போது ரமாவும் அங்கே வந்தாள்.
ரமா வருவதைப் பார்த்த நீனா, ''சுசீலா, நீ கிளம்பு. உனக்கு நேரமாகிறது,'' என்று அவளை அனுப்பினாள்.
வளையலை கொடுத்ததைப் பற்றி தெரிய வந்ததும், ரமாவுக்கு கோபம் வந்தது. ஆனால், மாமியாரை எதிர்த்து பேச முடியாமல் குமுறினாள்.
''பாட்டியும், பேத்தியும் சேர்ந்து ஏதோ செய்யுங்க,'' என்றாள்.
''அம்மா, எனக்கு உன்கிட்ட கொஞ்சம் பேசணும்,'' ஆரம்பித்தாள், நீனா.
கோபமாக, ''உன் லெக்சரை ஆரம்பி. கேட்க தயாரா இருக்கேன்,'' என்றாள், ரமா.
''அம்மா, 'கிளப்'பில் ஏழை, எளியவர்களை முன்னுக்கு கொண்டு வர எப்படியெல்லாம் உதவணும்ன்னு பேசினாய். நீ, இந்த வீட்டிற்கு வரும்போது உன்னுடன் வந்தவள், சுசீலா. ஒருநாள், ஒரு பொழுது அவளில்லாமல் உன்னால் சமாளித்திருக்க முடியுமா?
''அவள் நம்மிடமிருந்து எதையாவது எதிர்பார்த்தா செய்தாள். ஒரு தாய்க்கும் மேலாக, எங்களுக்கு உணவு பரிமாறி, வயிறு வாடாமல் எங்களை வளர்த்தாள். அவளுடைய பேத்தியின் திருமணத்திற்கு லட்சம் ரூபாய் கொடுக்க நம்மிடம் பணமாயில்லை?
''டிரைவர் பாண்டியன், மகனின் படிப்புக்காக கடனாகத்தான் பணம் கேட்டான். உண்மையிலேயே அவன் மகனை படிக்க வைக்கும் வசதி, நமக்கு இருக்கு. நீதானே பேசினே, 'நம் வீட்டு வேலைக்காரர்களை, டிரைவர் குழந்தைகளை நாம் தான் படிக்க வைத்து, முன்னுக்கு கொண்டு வரணும்'ன்னு. அந்த நியாயம் இப்போ எங்கே போச்சு?
''நானும், நரேனும் பள்ளிக்கூடத்தில் நிறைய பரிசுகள் வாங்கியிருக்கிறோம். நீயோ, அப்பாவோ எங்களின் ஒரு பரிசு விழாவிற்காவது வந்திருக்கிறீர்களா? அப்பா வெளியூரில், நீ சமூக சேவையில். எங்கள் வாழ்வின் ஒவ்வொரு முக்கிய கட்டத்திலும் எங்களுடன் இருந்தது, பாட்டி மட்டும் தான்.
''நாலு பேருக்கு நீங்கள் செய்யும் சேவை தெரிய வரலாம். அதனால் பேரும், புகழும் கிடைக்கலாம். ஆனால், உன் குடும்பத்திற்கு, உன்னை அண்டியிருப்பவர்களுக்கு நீ என்ன செய்தாய் என்று யோசித்துப் பார். என் மேல உனக்கு கோபம் வரலாம். ஆனால், நீ அமைதியாக யோசித்துப் பார்த்தால் உனக்கு புரியும்,'' என்றாள், நீனா.
அமைதியாக அந்த இடத்தைவிட்டு சென்றாள், ரமா.
மறுநாள் காலை, காபியுடன் பாட்டியின் அறையில் அம்மா நின்றிருந்ததைப் பார்த்த நீனா, ஓடி வந்து அணைத்து, கன்னத்தில் முத்தமிட்டாள்.
''எனக்கு வாழ்க்கையை புரிய வைத்ததற்கு நன்றி டீச்சர்,'' என சிரித்தபடி, நீனாவை அணைத்தாள், ரமா.
பானு சந்திரன்
