PUBLISHED ON : ஜூலை 17, 2022

அ நிறம் | அளவு
மனிதன் மட்டும்!
நிலத்திற்கு பேதமில்லை
உழுதாலும், விதைத்தாலும்
பூத்துக் குலுங்கும்!
நதிகளுக்கு பேதமில்லை
காட்டிலும், மேட்டிலும்
களிநடம் புரிவாள்!
காற்றுக்கு பேதமில்லை
தென்னையிலும், பனையிலும்
தெம்மாங்கு பாட்டிசைக்கும்!
வானிற்கு பேதமில்லை
நீல பட்டாடையில் எந்த
கவிதைக்கும் ஓவியமாகும்!
கல்லறையிலும் கொடி
கட்டும் அரசியல்
காற்று மாசை
சுட்டிக் காட்டுமா!
இல்லாத ஜாதி தாழ்வை
ஒழிக்க இனோவா காரில்
பவனி வரும் பண முதலை!
ஊர் அறிய மணம் செய்து
உலகறிய பிரிவை
கொண்டாடும் குடும்ப மாண்பு!
கோடிகளை குவித்து
கைதானாலும் அவமானத்தையும்
ஏலமிடும் அரசியல்வாதி!
வேடந்தாங்கல் பறவைக்கு
நாடு, மொழி
ஜாதி பேதமில்லை
கூடி மகிழ்கிறது!
நதியை தடுத்து
விண்ணை மண்ணை கெடுத்து
காற்றையும் விலை பேசும்
மனிதன் மட்டும் இனி
திருந்துவது எப்போது?
பாரதி சேகர், சென்னை.
