PUBLISHED ON : ஜூலை 17, 2022

அன்புள்ள அம்மாவுக்கு —
நான், 23 வயது பெண். எனக்கு, 18 வயதில் ஒரு தங்கை இருக்கிறாள். அம்மா வயது: 43. இப்போது, வேலை பார்த்தபடியே, சி.எம்.ஏ., படித்துக் கொண்டிருக்கிறேன்.
நான், 10ம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது, அப்பா - அம்மாவுக்கு சண்டை வரும். ஆதலால், மாமா - அத்தை வீட்டிற்கு அழைத்துச் சென்றார், அம்மா. அங்கும், அத்தையுடன் சண்டை வரவே, தாத்தா - பாட்டில் வீட்டில் வசித்தோம். பின், அங்கேயும் சண்டை வந்ததால், தனியாக குடியேறினோம்.
அம்மா, விவாகரத்து வாங்கி விட்டார். நான், கல்லுாரி இரண்டாம் ஆண்டு பயிலும்போது, மதுரையில், பிரபல தனியார் துணிக்கடையில் பகுதி நேரம் வேலை பார்த்து சம்பாதித்து, அம்மாவிடம் கொடுப்பேன். பின், கல்லுாரி முடித்து, ஆடிட்டர் ஆபீசில் வேலை பார்த்துக் கொண்டே, படிக்கத் துவங்கினேன். மாலை வேளையில், 'ஹோம் டியூஷன்' எடுப்பேன். அந்த சம்பளத்தையும் அம்மாவிடம் கொடுத்து விடுவேன்.
கல்லுாரியில் பி.பி.ஏ., 2ம் ஆண்டு படிக்கும்போது, என் துறையில் பயிலும் மாணவனை காதலித்தேன். நான், அவனை விட, 10 மாதம் பெரியவள். மிகவும் நல்ல பையன். நான்கு ஆண்டு காதல். என் அம்மாவிற்கு இந்த காதல் பிடிக்கவில்லை. 'இப்படியெல்லாம் சின்ன பையனை கல்யாணம் பண்ணக் கூடாது...' என்றார்.
எவ்வளவோ எடுத்துக் கூறியும் கேட்க மறுக்கிறார். வீட்டில் மது அருந்தி விட்டு கொச்சை வார்த்தையால் திட்டுகிறார். எங்களுக்கு சமைக்காமல் பட்டினி போடுகிறார், அம்மா.
என் காதலன் வீட்டிற்கு சென்று, அவன் அம்மா - அப்பாவிடம், 'உங்க பிள்ளையை கண்டித்து வையுங்கள்...' என்று, சண்டை போடுகிறார். அதனால், என் அம்மாவை காரணம் காட்டி, என்னை வேண்டாம் என்று கூறினர், காதலன் வீட்டினர்.
அவசர அவசரமாக எனக்கு கட்டாய திருமணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளார், அம்மா. அப்பாவிடம் இதுபற்றி கூறியதற்கு, 'உன் கையில் வேலையை வைத்துக் கொள். பிறகு பார்க்கலாம்...' என, பிடி கொடுக்காமல் பேசுகிறார்.
என் அப்பா வயது: 53. டிப்ளமோ இன்ஜினியர், ஒன்பது ஆண்டுகளாக வேலை இல்லாமல் உள்ளார்.
யாரையும் நம்ப முடியவில்லை, அம்மா. தற்போது, என் காதலன் வற்புறுத்தலால், அவருக்கு வேலை கிடைத்த பின் திருமணம் செய்யலாம் என்று, அவர்களது வீட்டினர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.
நான் இப்போது சம்பாதித்து வீட்டு செலவு, தங்கை படிப்பு மற்றும் என் செலவுகளை பார்த்துக் கொள்கிறேன். ஆனால், அம்மாவோ, என் மூலம் கடன் வாங்கிக் கொள்கிறார். நான் திரும்ப கேட்டால், 'தர முடியாது... வீட்டை விட்டு வெளியே போ...' என்கிறார்.
நான் எங்கே போவேன். இப்போது என்னிடம் சேமிப்போ, நகையோ, வேறு சொத்தோ ஏதும் இல்லை. தங்கையை நன்றாக படிக்க வைக்க வேண்டும். என் காதலனை கரம் பிடிக்க வேண்டும். இரு வீட்டு சம்மதத்துடன் திருமணம் செய்ய விரும்புகிறோம். தாய் - தந்தை இருந்தும் அனாதையாய் இருக்கும் எங்களுக்கு, நல்ல வழி கூறுங்கள், அம்மா.
— இப்படிக்கு,
உங்கள் மகள்.
அன்பு மகளுக்கு —
போகும் இடமெல்லாம் சண்டை இழுத்து வரும் சண்டைக்கோழி, அம்மா; ஒன்பது ஆண்டுகளாய் வேலைக்கு போகாத பொறுப்பில்லாத, அப்பா; உன்னை முழுக்க முழுக்க சார்ந்திருக்கும் தங்கை.
உன்னை விட வயதில் இளைய காதலன், உன் பெற்றோரை வைத்து, உன்னை தாழ்வாய் மதிக்கும், காதலனின் பெற்றோர். தினம், 12 மணி நேரம் உழைப்பை கேட்கும், சி.எம்.ஏ., படிப்பு. இவை அத்தனைக்கும் நடுவில் சாகசமாய் கழைக்கூத்தாடுகிறாய், நீ.
இனி, நீ செய்ய வேண்டியவைகளை பார்ப்போம்...
* நீ படித்துக் கொண்டே வேலை பார்ப்பது நல்ல விஷயம். உனக்கு வரும் வருமானத்தில், 10 பைசா கூட அம்மாவுக்கு தராமல், வங்கிக்கணக்கில் போடு. முடிந்தளவு தங்க காசுகள் வாங்கி சேமி
*'உறவினர், நண்பர் யாரிடமும் சண்டை போடக் கூடாது; குடிக்கக் கூடாது. மீறினால், வீட்டை விட்டு வெளியே போ...' என ஆணித்தரமாக, அம்மாவிடம் அறிவித்து விடு. அம்மா வீட்டில் இருந்தால், நீயும், தங்கையும் வெளியேறி, வாடகை வீட்டில் குடியேறுங்கள். எதற்கும் உதவாத தந்தையிடம் பேச்சை தவிர். தங்கையை உன் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள். அவளிடம் எந்த ஒழுங்கீனமும் தொற்றிக் கொள்ளாமல் கண்காணி
* காதலனுடன் அமர்ந்து, தெளிவாக பேசி திட்டமிடு. மூன்று ஆண்டுகள் கழித்து திருமணம் என முடிவெடுங்கள். மூன்று ஆண்டு அவகாசத்தில், சி.எம்.ஏ., படித்து முடித்து, நல்ல வேலைக்கு போ. உன் காதலன், எம்.பி.ஏ., முடித்து, வேலைக்கு போனவுடன் திருமணம் செய்து கொள்ளுங்கள்
* காதலன் வீட்டாரோடு தகவல் தொடர்பை மேம்படுத்து. உயரிய படிப்பு படித்த, நல்ல வேலைக்கு போகும் பத்தரைமாத்து தங்கம், நம் எதிர்கால மருமகள் என்ற, 'இமேஜை' தொடர்ந்து தக்க வை
* மூன்று ஆண்டு இடைவெளிக்கு உட்பட்ட காலத்தில், இருதரப்பு பெற்றோர், உங்களிருவருக்கும் ஏதேனும் பாதகமான முடிவு எடுக்க முற்பட்டால், உடனே பதிவு திருமணம் செய்து கொள்ளுங்கள்
* திருமணத்திற்கு பிறகு நீங்கள் வாழப் போகும் அர்த்தப்பூர்வமான வாழ்க்கை தான், உங்கள் காதலை ஜெயிக்க வைக்கும். குறித்து வைத்துக் கொள். அடுத்த, 10 ஆண்டுகளில், எல்லா பிரச்னைகளும் முடிவுக்கு வரும். உன் வெற்றிக்கு காரணங்களாய், உன் படிப்பும், வேலையும் தலை நிமிர்த்து நிற்கும்.
— என்றென்றும் தாய்மையுடன்,
சகுந்தலா கோபிநாத்.
