தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திண்ணை!

திண்ணை!

திண்ணை!


PUBLISHED ON : ஜூலை 17, 2022

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 17, 2022


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இந்தியாவின், 14வது ஜனாதிபதியான, ராம்நாத் கோவிந்த் ஓய்வு பெற போகிறார். சுப்ரீம் கோர்ட்டில், வக்கீலாக பணிபுரிந்தவர்; பீகார் கவர்னராகவும் இருந்துள்ளார். அடுத்த ஜனாதிபதி யார் என்பதற்கான தேர்தல் நாளை நடைபெற இருக்கிறது.

இந்தியாவின் முந்தைய ஜனாதிபதிகளைப் பற்றி பார்ப்போம்...

* டாக்டர் ராஜேந்திர பிரசாத் 1950 - 1962: இரண்டு முறை ஜனாதிபதியாக பதவி வகித்த பெருமை இவருக்கு உண்டு. வெள்ளையனே வெளியேறு - 1942; உப்பு சத்தியாகிரகம் - 1930 உட்பட, பல போராட்டங்களில் முக்கிய பங்கேற்று, சிறை சென்றவர். பாரத ரத்னா விருதை பெற்றவர்களில், ராஜேந்திர பிரசாத்தும் ஒருவர்.

* டாக்டர் ராதாகிருஷ்ணன் 1962 - 1967: இரண்டு முறை துணை ஜனாதிபதியாக இருந்து, பிறகு ஜனாதிபதியாக உயர்ந்தவர், டாக்டர் ராதாகிருஷ்ணன். ஆசிரியர் மற்றும் தத்துவ ஞானி. 'தத்துவ ஞானிகளுக்கு கிடைத்த கவுரவம், டாக்டர் ராதாகிருஷ்ணன் ஜனாதிபதி பதவியை பெற்றது...' என, பிரபல தத்துவ ஞானி, பெர்டிராண்ட் ரஸ்ஸல் பாராட்டியுள்ளார்.

* டாக்டர் ஜாகிர் ஹுசைன்: பதவியில் இருக்கும்போதே இறந்த ஜனாதிபதி, இவர். மிக குறுகிய காலமான, மே 13, 1967 - மே 3, 1969 வரை ஜனாதிபதியாக இருந்தவரும், இவர் தான்!

* வி.வி.கிரி 1969 - 1974: ஜனாதிபதி ஜாகிர் ஹுசைன் இறந்தபோது, மே 3ம் தேதி, ஆக்டிங் ஜனாதிபதியாக பதவியேற்றார், வி.வி.கிரி. ஜூலை 20, 1969ல், ஆக்டிங் ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்து, சுயேச்சையாக ஜனாதிபதி தேர்தலில் நின்றார். அதுமட்டுமல்ல, சுயேச்சையாக ஜெயித்த முதல் ஜனாதிபதி என்ற பெருமையும் பெற்றார். இவர் எழுதிய, 'மை லைப் அண்ட் டைம்ஸ்' என்ற சுயசரிதை நுால், மிக பரபரப்பாக பேசப்பட்டது.

* பக்ருதீன் அலி அகமத் 1974 - 1977: இந்தியாவில், இந்திரா அவசர நிலை பிரகடனப் படுத்தப்பட்டபோது, பதவி வகித்தவர், பக்ருதீன் அலி அகமது. அரசியல் தவிர, சங்கீதம், நுண் கலைகள், கவிதை மற்றும் விளையாட்டுகளிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார்.

* நீலம் சஞ்சீவ ரெட்டி 1977 - 1982: எதிர்ப்பு இல்லாமல் தேர்வு பெற்ற முதல் ஜனாதிபதி. 64 வயதில் தேர்வு பெற்றதன் மூலம், மிக இள வயது ஜனாதிபதி என்ற பெருமையும் பெற்றார். தன் சம்பளத்தில், 70 சதவீதம் வேண்டாம் என, மறுத்து விட்டவர்; ராஷ்டிரபதி பவனில் தங்காதவர்.

* கியானி ஜெயில்சிங் 1982 - 1987: முதலில் பஞ்சாப் முதல்வராக இருந்தவர். 'கியானி' என்றால் நன்கு கற்றவர் என்று பொருள். சீக்கிய கொள்கைகள், தத்துவங்களை கரைத்து குடித்தவர். சீக்கியர்களின் புத்தகமான, 'குரு க்ராந்த் சாகிப்'பை முழுவதுமாக விளக்கும் திறன் பெற்றவராக திகழ்ந்தார்.

* ஆர்.வெங்கட்ராமன் 1987 - 1992: முதலில் துணை ஜனாதிபதியாக இருந்து, பிறகு ஜனாதிபதி ஆனவர். இவருடைய பதவி காலத்தில், நான்கு பிரதமர்களை கண்டவர். நரசிம்மராவ், சந்திரசேகர், ராஜிவ் மற்றும் வி.பி.சிங்.

* டாக்டர் சங்கர் தயாள் சர்மா 1992 - 1997: இந்திய பல்கலை கழகங்களில் இவர் பெயரில் தங்கப் பதக்கம் வழங்கப்படுகிறது. சிறந்த கல்வியாளர்.

* கே.ஆர்.நாராயணன் 1997 - 2002: கேரளாவிலிருந்து ஜனாதிபதி பதவி பெற்ற முதல் பிரபலம். ஏராளமான புத்தகங்களை எழுதியுள்ளார். துணை ஜனாதிபதி பதவியிலிருந்து உயர்ந்தவர்.

* டாக்டர் அப்துல் கலாம் 2002 - 2007: விஞ்ஞானியாக இருந்து, ஜனாதிபதி ஆனவர். பத்ம பூஷண், பத்ம விபூஷண் மற்றும் பாரத ரத்னா விருதுகளை பெற்றவர். பொதுமக்களிடம், தன்னுடைய எளிமையால் மிகவும் பிரபலமானவர்.

* பிரதிபா பாட்டீல் 2007 - 2012: வக்கீல் மற்றும் ராஜஸ்தானின் கவர்னராக இருந்தவர். இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதி.

* பிரணாப் முகர்ஜி 2012 - 2017: வேலையில் மிகுந்த அக்கறை கொண்டவர். தினமும், 18 மணி நேரம் உழைப்பவர். பத்திரிகையில் பணிபுரிந்த அனுபவம் உண்டு; புத்தகங்களும் எழுதியுள்ளார்.

* ஐந்து ஏக்கரில் அமைந்துள்ள ராஷ்டிரபதி பவன், உலகிலுள்ள மிகப்பெரிய ஜனாதிபதி மாளிகைகளுள் இதுவும் ஒன்று. இதில் மொத்தம், 340 அறைகள் உள்ளன.

* ராஷ்டிரபதி பவனில் நுழையும் கேட்டின் எண்: 35. முதலில் ராஷ்டிரபதி பவனின் பெயர், 'வைஸ்ராய் ஹவுஸ்' என்றிருந்தது. இந்திய முதல் ஜனாதிபதி டாக்டர் ராஜேந்திர பிரசாத் பதவி ஏற்றது முதல், ராஷ்டிரபதி பவன் என அழைக்கப்படுகிறது.

* இதுவரை பதவியேற்றுள்ள, 14 ஜனாதிபதிகளில், 6 பேர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள், ஒருவர் - ஜனதா கட்சி, மற்றொருவர் - பா.ஜ., மற்றவர்கள் பொது வாழ்விலிருந்து வந்தவர்கள்.

* கடந்த, 1977ம் ஆண்டு வரை, ஜனாதிபதி தேர்தல், மே மாதத்தில் நடந்தது. அதன்பின், ஜூலை மாதத்துக்கு மாற்றப்பட்டது.

நடுத்தெரு நாராயணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us