PUBLISHED ON : ஜூலை 17, 2022

'நல்லதைக் கேள், நல்லதே நினை, நடக்கும்...' என்பர், பெரியோர். அதன்படி, 20ம் நுாற்றாண்டின் துவக்கத்தில் நடந்த வரலாறு, இது:
கடந்த, 1904ல், திருவண்ணாமலையில் இருந்த மகான் ஒருவர், சற்று தொலைவில் உள்ள கானிலப்பாடி என்ற ஊருக்குச் சென்றார். அவர் தங்குவதற்காக, அருகில் இருந்த மேடமலை எனும் சிறுமலையில், குடில் அமைத்துத் தந்தனர், ஊர் மக்கள்.
அந்தக் குன்றில், முருகப் பெருமானின் திருக்கை வேல் மட்டும் வைத்து, மக்கள் வழிபாடு செய்து வந்தனர். கோவில் இல்லாமல் வேல் மட்டும் இருந்ததைப் பார்த்தார், மகான்.
உடனே தன் அருகில் இருந்த அடியாரான சண்முகம் என்பவரை அழைத்து, 'அப்பா... எப்படியாவது முயற்சி செய்து, இந்தக் குன்றில், முருகன் கோவில் ஒன்றைக் கட்ட வேண்டும்...' என்றார்.
அதைக்கேட்ட சண்முகமும், 'அப்படியே சுவாமி...' என்றார்.
சொல்லி விட்டாரே தவிர, சண்முகத்திற்கு வழி ஏதும் தெரியவில்லை.
முருகனிடமே, 'அடியவர் இச்சையில் எவை எவை உற்றன, அவை தருவித்தருள்பவன் நீ. அப்பா, முருகா... அந்தப் பெரியவர் சொன்னபடி, உனக்காக இங்கே ஓர் கோவில் கட்ட அருள் புரியப்பா...' என முறையிட்டு, வேண்டினார், சண்முகம்.
அடியவரின் ஆவல் நிறைவேறாமல் போகுமா? அதற்கு, ஒரு வழி பிறந்தது.
சண்முகத்தின் மாமியார் வீட்டுச் சொத்தில் ஒரு பகுதி, அவருக்கு கிடைத்தது. அதை அறிந்ததும், சண்முகத்திற்கு மெய் சிலிர்த்தது.
'சண்முகனைத் தேடி வந்த இந்தச் செல்வம், எனக்கு உரியதல்ல; சண்முகப் பெருமானுக்கே உரியது...' என்றவர், சொன்னது மட்டுமல்ல, அப்படியே செயல்படுத்தவும் செய்தார்.
வந்த சொத்தை விற்று, குன்றின் மேல் குமரக்கடவுளுக்குக் கோவில் ஒன்றை அமைத்தார்.
மகானின் விருப்பமும், அவர் வாக்கைக் கேட்ட சீடர் விருப்பமும் நிறைவேறியது. அந்த மகானின் திருநாமம், சற்குரு சுவாமிகள்.
நல்லதைக் கேட்போம், நல்லதை நினைப்போம், நாம் தேடும் அனைத்தும் நம்மைத் தேடி வர, இறைவன் அருள் புரிவார்.
பி. என். பரசுராமன்
ஆன்மிக தகவல்கள்!
துளசியை பார்த்தால், ஐஸ்வர்யம் பெருகும். துளசி செடிக்கு தண்ணீர் விட்டால் நோய் விலகும். பெண்கள் மூன்று முறை சுற்றினால், சுமங்கலி பாக்கியம் கிடைக்கும்.
